Tuesday, October 13, 2009

என்னுடைய பார்வையில் தூர்தர்சன்

ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்றாலே அது தூர்தர்சனாக மட்டுமே இருந்தது. 1959 முதல் தற்போது வரை தன்னாட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு தூர்தர்சன் தன்னுடைய பொன்னாண்டைக் கொண்டாடி வருகிறது. 1982 (தேசிய ஒளிபரப்பு தொடங்கிய ஆண்டு) முதல் 1996 வரையிலான ஆண்டுகள் தமிழகத்தைப் பொறுத்தவரை, தூர்தர்சனின் பொற்காலங்கள் என்று சொல்லலாம். சன் தொலைக்காட்சி 1993 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டாலும், 1996 ஆம் ஆண்டு தேர்தலில்தான் அது தன் ஆக்டோபஸ் கரங்களைப் பரப்பத்தொடங்கியது (ஏன் அந்த்தாண்டு தமிழகத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியப் பங்கே வகித்தது!). அதுவரை தூர்தர்சனே தமிழகத்தில் கோலோட்சியது!.

தூர்தர்சன் தமிழகத்தில் தன்னாட்சி நடத்திய காலங்களில், முழுநேரமும் தமிழ் ஒளிபரப்பு இருக்காது . பகுதி நேரம் மட்டுமே தமிழ் ஒளிபரப்பு இருக்கும். மற்றைய நேரங்களில் ஹிந்தி தான் . அதனுடைய ஒளியும் ஒலியும், ஞாற்றுக்கிழமை தமிழ்த் திரைப்படம்,செவ்வாய்க்கிழமை தமிழ் நாடகங்கள் மிகப் பிரபலமானவைகள். ஒரு தமிழ் திரைப்படத்தில் கூட ராதா ரவி, இனி ஒளியும் ஒலியும்் நிகழ்ச்சியை அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரம்னு ஆக்கிருவோம், எல்லாப் பயலும் நமக்கே ஓட்டக் குத்திருவாய்ங்க என்று கூறுவார் (அதற்க்கு வெகு காலத்திற்குப் பிறகு ஒளியும் ஒலியும்் அரை மணி நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரம் ஆனது வேறு விஷயம :) ) . அந்த அளவிற்கு ஒளியும் ஒலியும் மிகப் பிரபலம் .

ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படங்கள் எவ்வளவு அரதப் பழசாக இருந்தாலும் மக்கள் உட்கார்ந்துப் பார்த்தார்கள். ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் M.G.R படமாக அமைந்துவிட்டால் அவ்வளவுதான். எங்கள் வீட்டில் உட்கார இடம் கிடைக்காது. ஊரில் உள்ள மொத்த ஜனமும எங்கள் வீட்டில் கூடிவிடும். அந்தச் சமயத்தில் நாங்கள் இருந்த ஊரில் மிகச் சில வீடுகளில் தான் தொலைக்காட்ச்சிப் பெட்டி இருந்தது. தொலைக்காட்ச்சிப் பெட்டி இருந்த மற்ற வீடுகள் சற்றுப் பணக்கார வீடுகள் ஆதலால், மக்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் வீட்டில் கூட்டம் அதிகமாகி விட்டால்,எங்கள் அப்பா தொலைக்காட்ச்சிப் பெட்டியை எடுத்து வீட்டிற்கு வெளியே காம்பௌன்டில் வைத்துவிடுவார்கள். அவ்வளவு மக்களை வீடு கொள்ளாது!.

தூர்தர்சனின் மற்றொரு அழிக்கமுடியாத அடையாளம் "தடங்கலுக்கு வருந்துகிறோம்!". நிச்சயம் ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது, குறைந்தது இரண்டு மூன்று முறையாவது தடங்கலுக்கு வருந்துவார்கள் ;) .

அக்காலங்களில் தூர்தர்சனை விட்டால் பெரிதாக வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் எதுவும் கிடையாது. மக்கள் எதை ஒளிபரப்பினாலும் பார்த்தார்கள், மொழி புரியாவிட்டலும் கூட!. அப்பொழுது சனிக்கிழமைகளில் ஹிந்தித் திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். நாங்கள் எங்கள் தந்தையின் அருகில் அமர்ந்து அவர் மொழி பெயர்த்துத் தரத் தரப் பார்த்துக்கொண்டிருப்போம். நாங்கள் எல்லாம் சித்ரகார், ரங்கோலிக்குக் காத்திருந்த நாட்களை இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது, சற்றுச் சிரிப்பாகக் கூட வருகிறது (அன்றிலிருந்து இன்று வரை ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறவில்லை ;) ). அந்த அளவு மக்கள் தூர்தர்சனைப் பார்த்தார்கள். ஒருவகையில் தூர்தர்சன் இப்படி தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தது எனலாம் ;).

சனிக்கிழமைகளில் ஒளிபரப்பான மாநில மொழித் திரைப் படங்களில் தமிழின் வரிசைக்காக காத்திருந்த ஞாபகங்கள் இன்னும் பசுமரத்து ஆணி போல் பசுமையாக உள்ளது. பெரும்பாலும் அத்திரைப்படங்கள் விருது பெற்றத் திரைப்படங்களாக இருக்கும். ஆதாலால் அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. இருந்தபோதிலும் அவற்றிர்க்காக காத்திருந்தோம். அந்நாளில் தான் சத்யஜித் ரே என்னும் இயக்குனர் எனக்கு அறிமுகமானார். அவருடைய படங்கள் பெரும்பாலும் சோகமும், அழுகையும்,வறுமையும் கொண்டதாகவே இருக்கும் .

இப்படி அக்காலங்களில் மக்கள் தூர்தர்சனின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வேறு வழியே இன்றிப் பார்த்தார்களா அல்லது விருப்பத்துடன்தான் பார்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியாகிலும் அந்நாட்கள் தூர்தர்சனின் பொற்காலங்கள்.

பிறகு சிறிது சிறிதாக தமிழ் நிகழ்ச்சிகளின் நேரங்கள் அதிகரித்தன. சனிக்கிழமை ஹிந்தி திரைப்படம்,தமிழ் திரைப்படமானது. வெள்ளிகிழமைகளிலும் மேலும் ஒரு தமிழ் திரைப்படம் ஒளிபரப்பானது. பிறகு முழு நேர தமிழ் தூர்தர்சன் ஒளிபரப்பானது, ஒரு நல்ல பெயருடன், பொதிகை!.

எனக்கு தூர்தர்சனில் மிகப் பிடித்த நிகழ்ச்சிகள் அதனுடைய புராணத் தொடர்களும்,வரலாற்றுத் தொடர்களுமே. தூர்தர்சன் மூலமே நான் மகாபாரத்தையும்,ராமாயணத்தையும் அறிந்து கொண்டேன். மேலும் ஒவ்வொரு தொடரின் தலைப்புப் பாடல்களும் மிக அருமையாக இருக்கும். "மஹாாாாா பாாாாரதம்" என்ற அந்த நீண்ட ராகத்தை யாரால் மறக்க முடியும். அந்த வகையில் "சித்தீதீதீ" வகையராப் பாடல்களுக்கு அதுவே முன்னோடி!. ஹனுமானைப் பற்றிய புதிய செய்திகளையும் அதைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்!. ஓம் நமச்சிவாயாவும் என்னுடைய விருப்பத்திற்குரிய தொடராக இருந்தது. இப்படி எனக்கு புராணத்தையும் அதன் மீது ஒரு பிடிப்பையும் ஊட்டியது தூர்தர்சனே!.

தூர்தர்சனின் வரலாற்றுத் தொடர்களும் மிகப் பிரபலம். "Meh Delhi hoon!" . எவ்வளவு ஒரு அருமையான தொடர். "நான் டில்லி மாநகரம் பேசுகிறான் " என்று அத்தொடர் தொடங்குவதே மிக அருமையாக இருக்கும். இத்தொடரின் மூலமே, டில்லி மாநகரின் வரலாற்றையும், அது தசா அவதாரங்கள் எடுத்த நகரம் என்பதையும் அறிந்து கொண்டேன். அதில் தெரிந்துகொண்ட ப்ரித்விராஜ் சௌகான், சம்யுக்தா காதல் என்னவொரு உண்மையான மெய் சிலிர்க்கும் காதல்!. நிச்சயமாக சினிமாவில் கூட நாம் அத்தகைய காதலைக் காண முடியாது. காதல், வீரம், தீரம் இப்படி ஒரு நிஜ கதாநாயகனுக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த வரலாறு ப்ரித்விராஜ் சௌகானுடயது.(முகம்மது கவுரியுடனான முதல் போரில், ப்ரித்விராஜ் சௌகான், காவ்ரியை மன்னித்து விடாமல்விட்டிருந்தாலோ அல்லது காவ்ரியுடனான இரண்டாம் போரில் ப்ரித்விராஜ் சௌகானின் மாமனாரான ஜெயச்சந்திரனின் உதவி கிடைத்திருந்தாலோ ஒருவேளை இன்று இந்தியாவின் நிலைமை மாறி இருக்கலாம் :) ). அதனால் தான் இன்று வட இந்தியாவில் பிறக்கும் பல குழந்தைகளின் பெயர்கள் ப்ரித்விராஜ் என்றிருக்கின்றன!.

தூர்தர்சனில் வந்த சில பயனுள்ள மற்றும் பிரபலமாக அமைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று சுரபி. நிச்சயமாக அதன் பெயருக்கு ஏற்றபடி அது சுரபியாகத்தான் அமைந்திருந்தது. ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு புது செய்தியைத் தருவதாகவோ அல்லது ஒரு புது ஊரைப்பற்றிக் கூறுவதாகவோ அல்லது ஏன் ஒரு புது பதார்த்தத்தைத் தயாரிப்பது பற்றி கூறுவதாகவோ அது அமைந்திருந்தது. Anupam Kher பங்கேற்று நடத்திய ஒரு நிகழ்ச்சி, அறிவை வளர்ப்பதாக அமைந்திருக்கும். அவர் பொது அறிவு சம்பந்தமாக ஒரு கேள்வியைக் கேட்பார்,சரியான பதில் கூறுவோருக்கு தங்கக் காசு பரிசு. அதுவும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. இப்படியாக எனக்கு பொது அறிவு மீது தாகத்தை ஏற்ப்படுத்தியதில், தூர்தர்சனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

தூர்தர்சனில் வந்த விளம்பரங்கள் கூட மிக அருமையாக இருக்கும். சுரபி நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பான AMUL, என்ன ஒரு அருமையான விளம்பரம். AMUL, The taste of India என்று கேட்பதே மிக அருமையாக இருக்கும். அந்த விளம்பரத்தைக் கேட்க்கும்போது AMUL (Anand Milk Union Limited. ஆச்சரியமாக அமுல் என்பதற்கு சமஸ்கிருதத்தில் அமிர்தம் என்று பெயர்! மேலும் AMUL யே இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டது!). இது குஜராத்தின் ஒரு co-operative நிறுவனமாக இருந்தபோதிலும், அது ஏதோ இந்தியாவின் brand ambassador என்பதைப் போலவே தோன்றும் ! அந்நிறுவனமும் தன்னை அவ்வாறே முன்னிருத்திக்கொள்ளவும் செய்யும்!. ஒ மறந்தே விட்டேனே Nirma, Washing powder nirma!. அனைத்து வீடுகளிலும் ஒளித்த விளம்பரம். அந்த விளபரத்தையும், அதில் வந்த அந்த சிறு பெண்ணையும் எப்படி மறக்க முடியும்.

தூர்தர்சனின் மற்றுமொரு மிகப் பெரிய சாதனை தேசிய ஒருமைப்பாட்டை ஊட்டியது. அதில் வந்த "Mile sur mera tumhara" பாடல் என்னவொரு அருமையான பாடல். அதைக்கேட்க்கும் போது இப்பொழுதும் எனக்கு மெய் சிலிர்க்கும். அந்தப் பாடல் ஒளிபரப்பாகும் போது, அதில் வரும் தமிழ் வரிக்காக மிக ஆவலுடன் காத்திருப்போம். ஆகா இந்திய தேசிய ஒருமைப்பாட்டுப் பாடலில் தமிழுக்கும் இடம் இருக்கிறது என்று என்னும்போது மிகப் பெருமையாக இருக்கும்.




அதே போல் அதில் வந்த மற்றுமொரு சிறந்த பாடல் "Baje Sargam". இப்பாடலில் ஒவ்வொரு மாநிலங்களுக்கே உரிய நடனங்களை காணும் போதும் மெய் சிலிர்க்கும். அதிலும் ஒவ்வொரு முறையும் பாரத நாட்டியம் வருவதை மனம் ஆவலுடன் எதிர்பார்க்கும். இத்தகைய நடனங்களையோ அல்லது இசையையோ உணர்ந்து ரசிக்கும் திறமை இல்லாதிருந்தபோதிலும் , நம் இந்தியா இத்துணை சிறப்பும், இத்தகைய பழம்பெருமையும், வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருப்பதை காணும்போது மிக சிலிர்ப்பாக இருக்கும். இவ்வாறாக தேசிய ஒருமைப்பாட்டை ஊட்டுவதில் தூர்தர்சனுக்கு நிகர் தூர்தர்சனே.



தூர்தர்சனின் மற்றுமொரு முக்கியமான அம்சம் அதன் comercial சாராத நிகழ்ச்சிகள். எ.கா : வயலும் வாழ்வும். இந்நிகழ்ச்சியை எத்துனை விவசாயிகள் பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பார்பவர்களுக்கு ஒரு நிச்சயம் அது ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. அதேபோல் வியாபாரம் கருதி அமையாமல், உண்மையான நோக்கத்திற்காக அமைந்த மற்றொரு நிகழ்ச்சி காது கேளாதோருக்கான செய்திகள்.

தூர்தர்சனும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. DD News, DD Sports, DD Loksabha, DD for regional languages போன்றவை அதற்கான சில எடுத்துக்காட்டுகள். இருந்தபோதிலும் satellite channel களுடன் போட்டியிட அது இன்னும் பல படி முன்னேறி வரவேண்டும்.

இப்படி என்னுடைய பாலப் பருவத்தில் என்னைச் செதுக்கிய தூர்தர்சன், பொன் விழா கொண்டாடும் இத்தருணத்தில் மேலும் பல பயனுள்ள நிகழ்ச்சிகள் தருவதற்கும், காலத்துடன் போட்டியிடுவதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

3 comments:

JDK said...

machi...

அருமையான பதிவு ... எங்கள் வீட்டில் கூட ஞாயிறு மாலை டிவியை வெளியில் வைத்துவிடுவார்கள்...


//அதனுடைய ஒளியும் ஒலியும், ஞாற்றுக்கிழமை தமிழ்த் திரைப்படம்,செவ்வாய்க்கிழமை தமிழ் நாடகங்கள் மிகப் பிரபலமானவைகள். //

எதிரொலி, திரைமலர், காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு... இதெல்லாம் விட்டுடியே. ?

//"மஹாாாாா பாாாாரதம்" என்ற அந்த நீண்ட ராகத்தை யாரால் மறக்க முடியும். //

கிருஷ்ணா சீரியல் விட்டுடியே பா :( "கிருஷ்ணன் வந்து விட்டான் " இந்த ஒரு டயலாக் வச்சி 3 episode ஓட்டுவாங்க :)
அப்புறம் chandrakaanta, shaktimaan....ayyo ayyo LOL !!!

//தூர்தர்சனில் வந்த விளம்பரங்கள் கூட மிக அருமையாக இருக்கும்.ஒ மறந்தே விட்டேனே Nirma, Washing powder nirma!. அனைத்து வீடுகளிலும் ஒளித்த விளம்பரம். அந்த விளபரத்தையும், அதில் வந்த அந்த சிறு பெண்ணையும் எப்படி மறக்க முடியும்.
//

ஏம்பா Vicco Vajradanti விட்டுடியே. ? என்னப்பா நீ case போட போறாங்க :)
அப்புறம் அந்த விளம்பரத்தில் வரும் figure கூட சூப்பரா இருக்கும்.!!!


இது எல்லாதையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது அதன் cartoon programmes esp. Tom and Jerry. Sunday morning 7 am. Then Charlie Chaplin, Laurel & Hardy,... Gone are the days :(

ஆனால் ஒரு மந்திரி புட்டுகிட்டா கூட 3 நாள் எழவு மியூசிக் போட்டு மொக்க போடுவாங்க :)


//இருந்தபோதிலும் satellite channel களுடன் போட்டியிட அது இன்னும் பல படி முன்னேறி வரவேண்டும்.//

வந்தா மட்டும் நீ பாக்கவா போரே ??

Anyway Doordarshan'kku வாழ்த்துக்கள்!!!

Haripandi Rengasamy said...

JDK, நீ என்னைய விட தூர்தர்சனை நல்ல பாத்துருக்கனு நினைக்கிறேன் ;). எதிரொலி, திரைமலரை பற்றிக் குறிப்பிடாமல் விட்டதைப் பற்றிக் கூட நான் அவ்வளவாக கவலைப்படவில்லை. "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" ஐப் பற்றி எப்படி குறிப்பிடாமல் விட்டேன்?. எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு, ஒவ்வொரு தடவையும் "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" ஒளிபரப்பாகும் போது ஒரு வித பயத்துடன் பார்ப்பேன், எனக்குத் தெரிந்தவர்கள் எவர் பெயரும் வந்துவிடக்கூடாது என்று !

கிருஷ்ணா சீரியலைப் பற்றிக் குறிப்பிடாததற்கு என்னுடைய ஞாபக மறதி ஒரு காரணம் நண்பா!

சக்திமானை நான் குறிப்பிடாததற்கு காரணம் அது எனக்கு மிகவும் பிடிக்காத தொடர். மேலும் என்னைப் பொறுத்தவரை அது குழந்தைகளைக் கெடுத்த தொடர்.

Vicco Vajradanti விளம்பரம் வந்தாலே, அது எப்படா முடியும் என்று இருக்கும். மேலும் அது அதிகமாக எனக்குப் பிடித்த சுரபி நிகழ்ச்சியின் நடுவில் வேற வருமா, அதனால் எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்தாலே boring ஆ இருக்கும்.

chandrakaanta தொடர் என்னை அதிகம் கவராத தொடர். அதனாலே நான் அதை விட்டுருக்கலாம்!!

எனக்கு பிடிக்குதோ இல்லையோ, தூர்தர்சன் என்று வரும்போது சக்திமான், Vicco Vajradanti, chandrakaanta நிச்சயம் இடம் உண்டுதான். இருந்தபோதிலும் என்னுடைய பதிவானது தூர்தர்சனில் எனக்கு மிகவும் பிடித்த அல்லது என்னைப் பாதித்த நிகழ்ச்சிகளைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன்.

i really forgot about cartoon programs. As you said, i also like the Tom and Jerry, Charli Chaplin, Laurel & Hardy.

Yes buddy you are correct "Gone are the days".

Once again thanks for your wonderful feedback.

நாளும் நலமே விளையட்டும் said...

"நிச்சயம் ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது, குறைந்தது இரண்டு மூன்று முறையாவது தடங்கலுக்கு வருந்துவார்கள் ;) "

highlight!