Wednesday, October 14, 2009

மொழி பெயர்ப்பு

ஒரு மொழிக்கு வளமைச் சேர்ப்பது, அம்மொழியிலேயே சிந்தித்து, அம்மொழியிலேயே எழுதப்படும் நூல்கள் மட்டுமே அல்ல, பிற மொழி நூல்களை ஒரு மொழியானது தன்பால் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொருத்தும் அமைகிறது. ஒரு சிறந்த மொழியானது பிற மொழி நூல்களை, அந்நூல்களுக்கான கருவிற்கு எந்த வித சேதாரமும் இல்லாமல், அதன் கருத்துக்களை தன்பால், பாலுடன் நீர் கலப்பதைப் போல ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு மொழியின் வளமையைப் பொறுத்து மட்டுமே அமைவது அல்ல, அது மொழி பெயர்ப்பாளரையும் சார்ந்தது.

மொழி பெயர்ப்பு என்பது ஒரு விஷயத்தை ஒரு மொழியிலிருந்து பிரதி எடுத்து கொண்டுபோய் பிறிதொரு மொழியில் வைப்பதல்ல. மொழி பெயர்ப்பு என்பது மிகச் சிறந்த கலை. அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. ஏனெனில் அதற்க்கு அந்நூல் எழுதப்பட்ட மொழியிலும், அந்நூல் மொழிப் பெயர்க்கப்படும் மொழியிலும் ஒருவர் புலமை பெற்றிருக்கவேண்டும். இவ்வாறாகா இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருப்பதன் காரணமாகவே ஒருவர் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆகிவிடமுடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மொழியில் இருக்கும், இரு மொழி புலமை வாய்ந்த ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் நிச்சயமாக ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அக்கலை மிகச்சிலருக்கே வாய்த்திருக்கிறது .

பொதுவாக எனக்கு மொழி பெயர்ப்பு நூல்களைப் படிப்பதில் ஈடுபாடு அதிகம். ஏனெனில் அதன் மூலம் நாம் ஒரு புது கலாச்சாரத்தை, புது கருத்துக்களை, புது அறிவைப் பெற முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக மிகச் சில (எனக்குத் தெரிந்த அளவில் :) ) மொழி பெயர்ப்பு நூல்களே சிறந்த நூல்களாக அமைகின்றன. மொழி பெயர்ப்பு நூல்களில் அமைந்த்துவிடும் மிக முக்கியமானதும், ஏன் அதன் அடிப்படையையே குழைத்துவிடுவதுமானதுமான மிகப் பெரியத் தவறு வரிக்கு வரி, ஏன் சில நேரங்களில் வார்த்தைக்கு வார்த்தை அமைந்துவிடும் மொழிபெயர்ப்பு. மேலும் மொழி பெயர்க்கும் போது அந்நூலின் பின்புலத்தையும், அந்நூல் நடக்கும் களத்தையும், காலத்தையும் பற்றிச் சிறு குறிப்பாவது சேர்த்துக் கொடுக்கவேண்டியது மிக அவசியம். இது படிக்கும் வாசகனுக்கு அந்நூலைப் புரிந்துகொள்ள உதவும். இதைவிட மிக அவசியம் இந்நூல் எத்தகைய வாசகர்களுக்கானது என்றத் தெளிவு!

நான் படித்த மொழி பெயர்ப்பு நூல்களில் ஒன்று ரஷ்ய மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட "சகாப்தம் படைத்த ஸ்டாலின்கிராட்" (1*) என்னும் நூல். அந்நாட்களில் ரஷ்ய மொழியிலிருந்து பல இந்திய மொழிகளுக்கு பல நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. அத்தகைய நூல்களில் ஒன்று இந்நூல். இந்நூல், இந்நூலின் ஆசிரியர் சோவியத் யூனியனின் மார்ஷலாக இருந்த வசீலி சுய்க்கோய் எழுதிய ஒரு வரலாற்றுச் சுயசரிதைக் குறிப்பு எனலாம். இந்நூலில் ஆசிரியர் இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட் நகரை எதிரிகளிடம் (நாஜிக்கள்) இருந்து காப்பாற்றப் போராடியதையும், அதில் வெற்றிப் பெற்றதையும் பற்றிக் குறிப்பிடுகிறார். ஸ்டாலின்கிராட் நகரத் தோல்வியிலிருந்தே ஜெர்மனியின் தோல்வி ஆரம்பம் ஆகிறது. 500 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்த நூலை மொழி பெயர்த்தவர் Dr.R.பாஸ்கர். வரலாற்று நூல்களை குறிப்பாக போர் சம்பந்தமான நூல்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற போதிலும், இந்நூல் பெரிதாக என்னைப் கவரவில்லை. அதற்குக் காரணம் இந்நூல் படைபிரிவுகளைப் பற்றியும், அதன் தொழில்நுட்ப விசயங்களைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக விவாதித்தது. அதற்க்கு இந்நூலின் ஆசிரியர் ராணுவ மார்சலாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இந்நூல் ஸ்டாலின்கிராட் வீதிகளில் நடக்கும் போரைப்பற்றியும் அதிகமாக விவாதித்தது. இந்நூல் ஸ்டாலின்கிராட் நகரைப் பற்றி அறிந்த ஒரு ராணுவ வீரருக்கு ஒரு சிறந்த நூலாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளைப் பற்றித் தெரியாத ஒரு சாதாரண வாசகனைக் கவராதது ஆச்சரியம் இல்லை!. மிகக் குறைந்த பட்சம் இந்நூலை மொழி பெயர்த்த ஆசிரியர் ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளின் வரை படத்தையும், ஒரு சாதாரண வாசகனுக்கு அதிகப்படியானது என்று தோன்றக்கூடிய விசயங்களைத் தவிர்த்திருந்த்தும் கொடுத்திருந்தால், இந்நூல் தமிழில் ஒரு மிக நல்ல வரலாற்று நூலாக அமைந்திருக்கும்.

ஒரு நூலை மொழி பெயர்க்கும் போது வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், அது சொல்ல வரும் கருத்துக்களை உள்ளூர உணர்ந்து பின் அதனை மொழி பெயர்த்தால் மிக நன்றாக அமையும். எனக்குத் தெரிந்த வகையில் மொழி பெயர்ப்பு நூல்களில் மிகச் சிறப்பாக அமைந்தது "யயாதி". இது ஒரு புராண நூல். இதன் ஆசிரியர் வி.ஸ.காண்டேகர். யயாதி என்பவன் நகுச மன்னனின் மகன். இவனுடைய மனைவியர் , அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் மகள் தேவயானி மற்றும் அசுர மன்னனின் மகள் சர்மிஷ்டை(2*). இது ஒரு புராண நூல் என்பதற்கு மேலாக எனக்கு அது ஒரு தத்துவ நூலாகவேப்பட்டது. நான் இப்படி கூறுவதற்கு மிகச் சிறந்த உதாரணம் சர்மிஷ்டைக்கு, கசன் எழுதிய வாழ்கையைப் பற்றியக் கடிதம். அக்கடிதத்தில் அவ்வளவு தத்துவங்கள் பொதிந்திருக்கும். பொதுவாக மொழி பெயர்ப்பு நூல்களிலேயே மிகக் கடினமானது தத்துவ நூல்களை மொழி பெயர்ப்பதே. இதில் வரிக்கு வரி, ஏன் சொல்லப் போனால் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்துவிடும் அபாயம் உண்டு. அதையும் தாண்டி இந்நூலை அவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருப்பர் கா.ஸ்ரீ.ஸ்ரீ . இந்நூல் படிக்கும்பொழுது ஒரு மொழி பெயர்ப்பு நூல் போன்றே தெரியாது. ஏதோ தமிழிலேயே முதன் முதலாக எழுதியது போலவேத் தோன்றும். எனக்குத் தோன்றிய வரையில் மொழி பெயர்ப்பாசிரியர்,
இந்நூலின் மூல நூலை முழுவதுமாகப் படித்துணர்ந்து, பின் அதன் கருத்துக்களை மட்டுமே கொண்டுத் தானே, புதிதாகத் தமிழில் எழுதியிருந்த்திருப்பார். அவ்வளவு அருமையாக இருக்கும் இந்நூல்.

இதே மொழி பெயர்ப்பு விதிகள் மொழி மாற்றுத் திரைப்படங்கள், நாடகங்களுக்கும் பொருந்தும் (Here i am speaking about dubbing not remaking!). திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று வரும்போது, இன்னொரு கஷ்டம் கூடவே சேரும், உதட்டசைவிர்க்கேற்ப்ப வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது!. அதுவும் பாடல் காட்ச்சிகள் என்றால் அது அதை விடக் கஷ்டம். எனக்குத் தெரிந்த வரையில் தமிழில் வந்த மொழி பெயர்ப்புத் திரைப்படங்களிலாகட்டும், நாடகங்களிலாகட்டும் மிக மோசமானது, தூர்தர்சனில் ஒளிபரப்பான ஜுனூன் தொடரே. அதில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்திருப்பார்கள். அவ்வளவு மோசமாக இருக்கும்.

இது போல் அல்லாமல் மொழிமாற்றுத் திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பாக அமைந்த திரைப்படங்களும் உண்டு. ஒரு பேட்டியின் போது யாரோ ஒருவர் "சலங்கை ஒலி " த் திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றுக் கூறினார். எனக்கு அவர் கூறும் வரை அத்திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றே தெரியாது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக இருக்கும்.

படிக்கும் வாசகனுக்கோ அல்லது பார்க்கும் ரசிகனுக்கோ, இது ஒரு மொழி பெயர்ப்புப் படைப்பு என்றுச் சொல்லும் வரைத் தெரியக் கூடாது. அதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி!

P.S:

1. அந்நாட்களில் இந்திய, ரஷ்ய நாடுகளுக்கிடையே கலாச்சார ஒற்றுமையை ஏற்ப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் ஒன்று இந்திய, ரஷ்ய மொழி நூல்களை ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது. மேலும் அந்நூல்கள் இலவசம் என்று கூறத்தக்க வகையில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் விற்கப்பட்டன. இந்நூல்கள் ரஷ்யாவிலேயே அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

2. சர்மிஷ்டை கதாப்பாத்திரம் மிகச் சிறப்பாக இருக்கும். எனக்கு ஏதோ அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது, ஏன் "சர்மிஷ்டை" என்ற பெயரின் ஒலியிலேயே ஒர் ஈர்ப்பு இருந்ததைப் போன்று எனக்கு ஒருத் தோற்றம் . யயாதி நூலில் தேவயானியின் கதாப்பாத்திரம் ஒரு வில்லி போன்றும், சர்மிஷ்டையின் கதாப்பாத்திரம் ஒரு பொறுமையான, அழகான பெண்ணின் கதாப்பத்திரமாகவும் அமைந்த்திருக்கும்.

No comments: