Friday, October 9, 2009

எண்ணங்களுக்கும் மணம் உண்டு!


பழைய நினைவுகளை அசைபோடுவதே என்பதே ஒரு மகிழ்ச்சியான செயல்தான். பெரும்பாலும் இச்செய்கைகள் எண்ணப்படுபவைகளாக அமைவதில்லை, தூண்டப்படுபவைகளாகவே அமைகின்றன. ஒரு நாளில் நடைபெறும் ஏதேனும் சிறு செயல்கள் ஒன்றோடொன்று பின்னப்பட்டு பின்னோக்கிச் சென்று பழைய நினைவுகளில் சென்று முடிவடைகின்றன. அவையும் உடனே முடிவடைவதாக இருப்பதில்லை, அந்தப் பழைய நினைவுகள் மேலும் பின்னிப் பிணைந்து மேலும் மேலும் பழைய நினைவுகளைத் தூண்டுகின்றன. ஏதேனும் ஒரு சிறு சம்பவம் தூண்டுகோலாக அமைந்து, எதிலோ ஆரம்பித்து எதிலோ முடியும் நம் எண்ண அலைகளை எண்ணும்போது, மனதைக் கண்டு வியக்கத்தான் தோன்றுகிறது!.

எண்ணங்களைத் தூண்டுவதற்கு ஏதேனும் சம்பவங்கள்தான் வேண்டும் என்பதில்லை, ஏதேனும் ஒரு பாட்டோ, ஒரு பெயரோ அல்லது ஒரு குறிப்பிட்ட மணம் கூட எண்ண அலைகளைத் தூண்டி பழைய நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும். இந்த எண்ண அலைகள் மகிழ்ச்சி அளிப்பவையாகவோ அல்லது சற்று சங்கடம் அளிப்பவையாகவோ கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக என்னுடைய சிறு பிராயத்தில் விடுமுறை நாட்களில் மதுரையில் இருக்கும் எங்களுடைய மாமா மற்றும் பெரியம்மா வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அந்தத் தருணங்கள் மிக மகிழ்ச்சியான தருணங்கள். பொதுவாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிப்பட்ட மணம் உண்டு. அவை அப்பகுதியில் உள்ள மண்,மரம்,செடி மற்றும் அவற்றிலுள்ள பூக்கள் ஆகியவற்றின் ஒரு கலவையான மணமாக இருக்கும். அதே போன்று எங்கள் பெரியம்மா வீடு அமைந்த பகுதிகளிலும் நான் ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகர்ந்திருக்கிறேன். பின் அந்த வீட்டிலிருந்து மாறி சென்னைக்கு என் பெரியம்மா குடி வந்துவிட்டார்கள். அவரைத் தொடர்ந்து நாங்கள்,எங்கள் மாமா என்று ஒவ்வொருவராக சென்னைக்கு குடி பெயர்ந்து, சென்னையே வீடு என்று ஆகிவிட்டது. மதுரையில் இருந்த எங்கள் பெரியம்மா வீட்டையும் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. பின் ஒரு நாள் சென்னையில் ஒரு வீதி வழியே நடந்து வரும்போது ஒரு வாசனையை நுகர்ந்தேன். மதுரையில் நான் என்ன வாசனையை நுகர்ந்தேனோ, அதே வாசனை. ஒரு நிமிடம் நான் சென்னையில் இருப்பதையே மறந்து, மதுரையில் இருப்பதாகவே உணர்ந்தேன். வீட்டிற்கு வந்த பிறகும் என்னால் அந்த எண்ண அலைகளிலிருந்து மீள முடியவில்லை. அந்த எண்ண அலைகள் மேலும் மேலும் பின்னோக்கிச் சென்று அந்த வீட்டில் நாங்கள் விளையாடி மகிழ்ந்த தருணங்கள், மிதி வண்டி பயில கற்றுக்கொண்ட தருணங்கள், இப்படி பலவித எண்ணங்களை தூண்டியது, அந்த கணப் பொழுதில் நான் நுகர்ந்த வாசனை. அந்த இரவு முழுவதும் தூங்கவே இல்லை. ஒரே எண்ண அலைகளாக வந்து மோதிக்கொண்டிருந்தன. மிக மகிழ்ச்சியான ஒரு இரவாக அது அமைந்தது. இப்படியாக மணங்கள் ஒரு நாளின் தன்மையையே தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவைகளாக இருக்கும்.

நாங்கள் மிகச் சிறு வயதில் குடியிருந்த வீட்டில் இரண்டு நந்தியாவட்டை மரங்கள் இருந்தன . இன்றும் கூட நந்தியாவட்டை மலரை நுகரும்போது என் மிகச் சிறு வயதில் நாங்கள் இருந்த அந்த ஊரும் அந்த நாட்களும் ஞாபகம் வருகின்றன.

இப்படி மகிழ்ச்சியான தருணங்களை ஞாபகப்படுத்தும் அதே மணமானது சில சங்கடமான அல்லது ஒரு பயம் கலந்த தருணங்களையும் ஞாபகப்படுத்துகின்றன. அது நான் சென்னைக்கு கல்லூரியில் படிப்பதற்காக வந்த தருணம். நான் சென்னைக்கு புதிது, அதுவும் வீட்டை விட்டு முதல் முதலாக தனியாக வந்த தருணம். அப்பொழுது நான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். எங்கள் விடுதியானது கல்லூரியிலிருந்து 1 km தள்ளி அமைந்த்திருந்தது. விடுதியிலிருந்து கல்லூரிக்கு நடந்துதான் செல்வோம். ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து செல்லும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக செல்வோம். ஏனென்றால் ராக்கிங் பயம்!. ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து விடுதிக்கு செல்வது என்பதே ஒரு பயம் கலந்த சம்பவமாகவே இருக்கும். இன்று எந்த சீனியரிடம் எப்படி மாட்டுவோமோ என்று பயமாகவே இருக்கும். அந்த விடுதிக்குச் செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மணம் இருக்கும். எட்டு வருடம் கழித்து இன்றும் கூட அந்த வழியாகச் செல்லும் போது, அந்த மணத்தை நுகரும்போது ஒரு பதற்றம் கலந்த பயமானது ஒரு கணமேனும் என்னுள் எட்டிப் பார்க்கிறது!.

இதே போன்று சில காரணங்களால் ரோஜா மலரின் மணமும், சில ஊதுபத்திகளின் மணமும் எனக்குப் பிடிக்காது. நிச்சயமாக என்னுடைய கல்யாண மாலை ரோஜா மாலையாக இருக்காது! ;)

இப்படி ஒவ்வொரு சம்பவமும் குறிப்பாக உங்களைப் பாதிக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவற்றிருக்கென்று தனி மணத்தையோ அல்லது ஏதேனும் ஒரு மணத்துடன் தொடர்போ கொண்டிருக்கின்றன. அந்த மணமானது ஏதேனும் ஒரு பொழுது எட்டிப் பார்க்கும்பொழுது, உங்களையும் அறியாமல் அந்த சம்பவங்களும் எட்டிப் பார்க்கின்றன.

இப்படியாக சம்பவங்கள் ஏதேனும் ஒரு மணத்துடன்தான் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை, அவை வேறு ஏதேனும் ஒன்றுடனோ, ஏன் ஒரு பாட்டுடனோ கூட தொடர்பு கொண்டிருக்கலாம். நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது வெளிவந்த ஒரு படத்திலிருந்த "வாடி வாடி நாட்டுக்கட்டை" பாடல் மிகப் பிரபலம். ஆனால் அது எனக்குப் பிடிக்காது. காரணம், அச்சமயம் நான் என்னுடைய முதல் செமஸ்டருக்காக சிறிது பயத்துடன் படித்துக்கொண்டிருந்த தருணத்தில் அதிகமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் (நான் படிக்கும் போது எப்பொழுதும் ஏதேனும் வானொலியோ அல்லது தொலைக்காட்ச்சியோ ஓடிக்கொண்டிருக்க வேண்டும்!). ஆகையால், அந்தப் பாடல் கேட்க்கும் போது என்னுடைய முதல் செமஸ்டர் ஞாபகமும்,அத்துடன் அந்த முதல் செமஸ்டர ஏற்ப்படுத்திய பயமும் இன்றும் எட்டிப் பார்க்கும். ஆதலால் அந்தப்பாடலுக்கு என்னுடைய playlist இல் இன்று இடம் கிடைக்காமல் போய்விட்டது !.

இப்படியாக நமது எண்ணங்கள் ஒன்றோடொன்ரோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றுருடன் தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. They are behave just like an atom bomb. A single ignition creates chain reactions!.

ஆக எண்ணங்களுக்கும் மணம் உண்டு! ்

photo courtesy :http://www.merello.com/images/Photos%20Sketches/art_paintings_art_exhibitions_modern_still_lifes.merello._flores_amarillas.jpg.jpg

1 comment:

Unknown said...

O god... simple but amazing.... Whatever u have told isvery true. This just reminds me of the day when we sold our house in Chromepet. I stay very close to that now also. But everytime I see taht home, some sort of pain comes to my heart :(