Sunday, May 13, 2012

லீலை



நான் ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்ச படம் . சும்மா இல்ல 4 வருசமா பாக்கணும்னு நினச்சது. 2008 ல இருந்து அப்பப்ப படத்தோட stills மட்டும் வரும். ஆனா படம் வந்தது 2012 தான் :(.

 நான் ஒரு படம் பாக்கணும்னு தேர்ந்தெடுத்தா அதுக்கு முக்கிய காரணமாகவும், பல நேரங்கள்ல ஒரே காரணமாகவும் இருப்பது என்னனா , ஹி ஹி ஹி  ஹீரோயின்தாங்க :).  நாலு வருசத்துக்கு முன்னாடியே ஸ்டில்ல பாத்தப்பயே  பச்சக்குன்னு இருந்துச்சு. பேருதான் கொஞ்சம் வாயில நுழைய மாட்டேங்குது , அது என்னங்க , ஆம் மானசி பரேக். பொண்ணு அவ்ளோ கியூட்டா , துறு துறுன்னு அவ்ளோ அருமையா இருக்கு. படத்துல Software Engg ஆம். கேக்க நல்லாத்தான் இருக்கு :) . சும்மா சொல்லக் கூடாதுங்க ஹீரோவும் நல்லாத்தான் இருக்கான். பேரு ஷிவ் பண்டிட். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே North Indian models. இந்த பொண்ணு ஹிந்தி சீரியல்ல கொஞ்சம் நடிச்சுருக்கு. ஷிவ் பண்டிட்ட நான் ஏற்கனவே Airtel விளம்பரத்துல பாத்துருக்கேன்.

2008 ல இந்தப் படம் எடுக்கும்போதுதான் அதே தயாரிப்பாளர் மாஸ்கோவின் காவிரி( அட நம்ம சமந்தாவோட முத படம்ங்க. Gore Gore song அ மறக்க முடியுமா!  ) படத்தையும் எடுத்தாரு. அந்த படம் ஒழுங்க்கா போகலைங்குறதால 2010 லயே முடிஞ்சுட்ட இந்த படம் release ஆக இந்த delay. அதோட படத்துப் பேரு மேல வேற case.

லீலை, பேரு நல்லாத்தான் இருக்கு. லீலைங்குற வார்த்தைக்கு  soft ஆன romantic meaning உம் எடுத்துக்கலாம், கொஞ்சம் hard ஆன sexy meaning உம் எடுத்துக்கலாம். ஆனா இப்பலாம் அந்த வார்த்தைக்கு sexy meaning தான் அதிகமா கொடுக்கப்படுது. நம்ம ஹீரோ கார்த்திக் அந்த மாதிரிலாம் லீலைகள் புரியிறவர் இல்லைங்குறதால , just லீலைங்குற அந்த படத்தலைப்புக்காக இவ்ளோ மெனக்கெட்டுருக்க வேணாம்.
சரி ரொம்ப நேரமா முன்னுரையே  கொடுத்துகிட்டு இருக்கோம் . படத்துக்குள்ள போவோம்.

படத்துல நாலே பேருதான் கார்த்திக்(ஷிவ் பண்டிட்), மலர் (மானசி) அப்புறம் அவங்க friends சந்தானமும், சுஜியும்.

 நம்ம ஹீரோ கார்த்திக் ஒரு காதல் மன்னன். பாக்குற பொண்ணுங்கள்ட்ட எல்லாம் 143 சொல்றவரு. காதல் எல்லாம் ஒரு வாரம்தான். அதுக்கப்புறம் டமால். பெரிய காரணம்லாம் இல்ல. 3 paper ல அரியர் வச்சுட்ட. நீ இவ்ளோ மக்குப் பொண்ணா இருப்பனு நான் நினைக்கல, நாம பிரிஞ்சுரலாம். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கார்த்திக்  காதல டுமீல் பண்ணிருராறு. இந்த காதலிகள் லிஸ்ட்ல நம்ம ஹீரோயின் மலரோட friends உம் இருக்காங்க. அதனால நம்ம மலருக்கு , கார்த்திக்னாலே பிடிக்காது. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்காமலேயே phone ல சண்டை போட்டுக்குறாங்க.



அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சு ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமலேயே ரெண்டு பேரும் HCL join பண்ணுறாங்க . ஒரு நாள் நம்ம கார்த்திக் , office la இருந்து தன் friend க்கு phone பண்ணும்போது அது தப்பா மலரோட extn க்கு போறதுல இருந்து ரெண்டாவது innings start ஆகுது. ரெண்டு பேரும் விட்ட இடத்துல இருந்து திரும்பவும் சண்டைய start பண்ணிக்குறாங்க. ஒரு நாள் கார்த்திக்கு மலர் எவ்ளோ அழகுன்னு தெரிய வரும்போதுதான் , தான் பண்ணது (வேற என்ன , அழகான பொண்ணோட போட்ட சண்டைதான் :) ) எவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது. கார்த்திக்குங்குற பேர கேட்டாலே கொல வெறியாகுற மலரோட எப்படி பழகுறதுங்குறத யோசிக்கும்போதுதான், நம்ம ஆளு sundar ங்குற புதுப் பேருல மலர்ட்ட அறிமுகமாகி காதலிக்கிறார்.

கார்த்திக், மலர சந்திக்கிறதுக்கு புதுப் புது  சந்தர்ப்பங்கள ஏற்படுத்துறதும் , சுந்தருங்குற பேருல இருக்குற தன்ன காதலிக்கிறதுக்காக மலர கார்த்திக் போன்ல , 'பசங்கல்லாம் ரொம்ப கெட்டவங்க , சுந்தர நம்பாத, அவன் உன்ன ஏமாத்திருவானு' சொல்றதும் . பின்ன நேர்ல சுந்தரா , போன்ல சொன்னதுக்கு நேர்மாறா ரொம்ப நல்லவனா நடந்து  மலர காதலிக்க வைக்குறதும் செம அருமை.  மலர்ட்ட ரொம்ப நெருக்கமாகி காதலிக்கும் போது , தான் கார்த்திக்தான் தெரிஞ்சா, மலர் தன்ன விட்டு நிரந்தரமா விலகிறுவா, அத தன்னால தாங்க முடியாதுன்னு தானே மலர்ட்ட , நான் உன்கிட்ட இருந்து ஒரு விசயத்த மறச்சுட்டேன் அது தெரிஞ்சா நீ என்ன ஏத்துக்க மாட்ட  அதனால நான் உன்ன விட்டு விலகுறேங்குறதுலையும் நல்லா பண்ணி இருக்காரு. பின்னர் திரும்பவும் போன்ல மலர்ட்ட கார்த்திக்கா , சுந்தரோட நிலைய எடுத்துச் சொல்லி திரும்பவும் சேருறது அருமை .

இந்தப் படத்துல ஒரு logic மீறல்னா , அது மலர் , குரலை வச்சுகூட கார்திக்க அடையாளம் கண்டுபிடிக்க முடியலையாங்குறதுதான். but அதுலாம் படம் பாக்கும்போது பெரிசா தெரியல.



இந்த படம் அவ்ளோ அழகா மனசுல பதியக்காரணம் அந்த சினிமாடோகிராபி. பளிங்கி மாதிரி அவ்ளோ க்ளீனா color full ஆ இருக்கு. என்ன கார்த்திக்கும்,மலரும் HCL ல வேலை பாக்குறாங்கங்குறத்துக்காக ஒரே blue மயமா இருந்துருக்க வேணாம் . டிரெஸ்சிங்க்சும் அவ்ளோ நல்லா இருக்கு. ஒரு சாப்ட்வேர் background அப்படியே சினிமாடோகிராபில கொண்டு வந்துருக்குறது அவ்ளோ அழகு.

ஒரு கிளி , ஒரு கிளி பாட்டும் ஜில்லென்று ஒரு கலவரம் பாட்டும் அருமை.

நிச்சயமா எந்த ஒரு negative பாதிப்பும்( '3' பாத்த கலவரம் இன்னம் அடங்கல :(  )  இல்லாம அழகா நிம்மதியா படம் பாத்துட்டு சந்தோசமா வெளிய வரலாம்.

இந்த படம் பாத்ததுல ஒன்னு தெரிஞ்சது , Girls like cheating but that should be sweet cheating :) .

பி.கு:

தியேட்டர்ல என் பக்கத்துல வந்து உட்காந்தவன் ரெண்டே நிமிசத்துல என்னடா படம்னு எந்துருச்சுப் போய்ட்டான். போயிட்டு அர மணி நேரம் கழிச்சு வந்து உட்காந்தவன்,கொஞ்ச நேரத்துலையே படத்துல இருக்குற ஹீரோ , ஹீரோயின் , Software பொண்ணுங்க, பசங்கன்னு ஒரே கிழியா கிழிச்சான். பாவம் அவனுக்கு என்ன கொடும நடந்துச்சோ :(.

Sunday, April 22, 2012

Ok Ok - Ok


SMS, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜேஷ் படம் என்பதால் நல்ல தைரியத்துடன் சென்ற படம் . படத்தோட review உம் நல்லாதான் இருந்தது . அதனால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சென்றேன். மற்ற இரண்டு படங்களைப் போல் இதுவும் கலகலப்புக்கென்றே அமைந்த படம் .

உதயநிதிக்கு முதல் படம், இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.

சரண்யா எப்பயும் போல் முழுதாக score பண்ணுகிறார்.

ஹன்சிகா மோத்வானி - பாப்பா குண்டா இல்ல ரொம்பவே குண்டாவே இருக்கு. பாட்டுலலாம் தத்தக்கா பித்தக்கானு ஓடும்போது நல்லா  தெரியுது, பாப்பா இந்த உடம்ப வச்சுகிட்டு ரொம்பவே கஷ்டப்படுதுன்னு . குஷ்பு மாதிரி இருக்கீங்கன்னு சொல்றது நல்லாத்தான் இருக்கு ஆனா வந்த புதுசுல  குஷ்பு கூட இந்த அளவு குண்டா இல்ல. கொஞ்சம் உடம்ப குறைம்மா.

சந்தானத்த சந்தன பொட்டோட  பார்த்தசாரதியா பாக்குறதுதான் கொஞ்சம்  கஷ்டமா இருக்கு. பாஸ் உங்களுக்கு கீழ இறங்கி பேசுற SMS மாதிரி ரோலுதான் ரொம்ப செட் ஆகுது பாஸ்.

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாட்ட தவிர வேற எந்த பாட்டும் ஞாபகம் வர அளவுக்கு பெரிசா இல்ல.

மனம் , SMS ஜீவா இந்த படத்துல நடிச்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்னு நினைக்குறத தவிர்க்க முடியல. இந்த மாதிரி ரோலுக்கு ஜீவா SMS ல ஒரு இலக்கணமே படைச்சுட்டார். படம்  நிச்சயம் பாக்கலாம் , ஆனா SMSஅ மனசுல வச்சுருந்தா கொஞ்சம் ஏமாற்றம்தான்.

தண்ணீர் இல்லா தேசம்


இந்த வெயில் காலத்துல வெளில போனா தண்ணி குடிக்க ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புளையும் கடை கடையா தண்ணி தேடி ஓட வேண்டியதா இருக்கு. அப்பலாம் தோணும் இப்ப முக்குக்கு முக்கு இருக்குற கடைல தண்ணி பாட்டில் வாங்கி தண்ணி குடிச்சுப்போம். ஆனா அந்த காலத்துல மக்கள் கால்நடையா இந்த உலக சுத்தி வந்தப்ப எங்க தண்ணிக்குப் போயிருப்பாங்கன்னு . ஆனா நிச்சயமா அந்த காலம் இன்று போல் இருந்ததில்ல. அப்பலாம் எந்த ஊருக்குப் போனாலும் எந்த வீட்டிலையும் தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்கும். இல்லனா ஊர் ஊர்ல இருக்கும் ஆறு, குளம்னு எங்கயும் தண்ணி மொண்டு குடிச்சு தாகத்த தீத்துக்குவாங்க . ஆனா இப்ப அப்படியா!. அப்பலாம் தண்ணிய பத்துன பயம் இல்லாம இருந்துச்சு . அய்யயோ தண்ணி நல்லா இல்லையே , இப்படி திறந்த ஏரி , குளத்துல இருக்குற தண்ணிய குடிக்கலாமாங்குற பயம் இல்ல.

இப்பலாம்  எங்கயும் திறந்த வெளியா இருக்குற ஆறு , குளத்துல யாரும் தண்ணி மொண்டு அப்படியே குடிக்கிற மாதிரி பாக்க முடியல. ஆனா அது எல்லாம் இந்த கொஞ்ச காலமாதாங்க. எனக்குத் தெரிஞ்சு பதினஞ்சு, இருபது வருசத்துக்கு முன்னாடி கூட இப்படி இல்ல .  ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பா எங்கள குடும்பத்தோட வட இந்தியா டூர் கூட்டிட்டுப் போனாங்க. 23 நாள் டூர் , அதுவும் ப்புல்லா பஸ்ல!. ஒரே பஸ்ல எங்களோட இன்னும் 45 பேர் வந்தாங்கா. திருநெல்வேலில  ஆரம்பிச்சு , சிம்லா வரைக்கும் போய் திரும்பி அதே பஸ்ல திருநெல்வேலி திரும்புனோம்!. அப்ப நாங்க குடிச்சதெல்லாம் வெறும் ஆத்துத் தண்ணி. போற வழி எல்லாம் இருக்குற ஆறுகள்ள இருந்த தண்ணி . அப்பலாம்  திறந்த தண்ணி , அசுத்தம் , புது தண்ணினு எந்த பயமும் கிடையாது. ஆனா இப்ப நம்ம வீட்டுக் குழாய்ல வர்ற தண்ணியையே குடிக்க பயப்படுறோம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் திருப்பியும் வட இந்தியா  போயிருந்தேன். அப்ப நான் குடிச்சதெல்லாம் 1 லிட்டர்  ரூபி 15 , 20 ங்குற பாட்டில் தண்ணிதான். 90 கள்ள நாங்க போன அந்த டூர்ல ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நோர்த் இந்தியா ரொம்ப hot ங்குறதால குளிர்ச்சியான தண்ணிக்காக  தோல்ல செஞ்ச ஒரு பையில தண்ணி ரொப்பி அத பஸ்ல ஜன்னலுக்கு வெளில தொங்கப் போட்டுருப்பாங்க. பஸ் போறப்ப வீசுற காத்துல அந்த பை குளுந்து ஜில்லுனு ஆயிரும் . அந்த தண்ணிய எடுத்துக் குடிப்பாங்க. ஆனா அந்த மாதிரி ஒரு அடையாளத்தையே இந்த தடவை அங்க பாக்க முடியல . எங்கயும் பாட்டில் தண்ணிதான். 

நாங்க முத முதலா எப்ப காசு குடுத்து குடிக்க தண்ணி வாங்குநோம்னு எனக்கு இப்பயும் நல்லா ஞாபகம் இருக்கு. அதுவும் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடிதான். அப்ப நாங்க இருந்த புதுக்கோட்டை மாவட்டத்துல இருந்து , ராமநாதபுரம் மாவட்டுதுல இருக்குற முதுகுளத்தூருக்கு வந்தோம். அப்ப நாங்க முதுகுளத்தூருக்கு கிளம்புனப்ப எங்க பக்கத்து வீட்டுக்காரங்கலாம் கேட்டாங்க , ஏங்க புது ஊர்லலாம் குடிக்க தண்ணி எப்படிங்கனு? . அப்ப எங்க அம்மா  , குடிக்க ஒரு குடம் 50 காசுனு வாங்கனும்மாம்னு சொன்னாங்க. அங்க இருக்குறவங்கலாம் , அடி ஆத்தீ, என்னது  குடிக்கிற தண்ணிய காசு குடுத்து வாங்கனுமாம்லன்னு! அவ்ளோ ஆச்சரியப்பட்டாங்க. பாத்துக்குங்க அப்பா  நாங்க வாங்குனது ஒரு குடம் 50 பைசா, இப்ப நாங்க குடிக்கிற தண்ணி 20 ltr 80 ரூபா !. நிச்சயமா சொல்றேன், குடி தண்ணிக்கு காசானு கேட்ட அதே ஊர் இன்னைக்கு காசு கொடுத்து கேன் தண்ணி வாங்கித்தான் குடிப்பாங்க.

இப்ப நாம குடிச்சிட்டு போடுற 1 ltr தண்ணி பாட்டிலலாம், அப்ப பழைய பேப்பர் வண்டிக்காரங்கலாம் கொண்டு வருவாங்க . அந்த ஒரு காலி பாட்டில் 2 ரூபா. அப்ப உங்களுக்கு எப்படிங்க இந்த பாட்டிலலாம் கிடைக்குதுன்னு கேட்டா அவங்க , இதலாம் பணக்காரங்க 15 ரூபா , 20 ரூபான்னு வாங்கி குடிக்கிறது . அவங்கட்ட இருந்து இதை நாங்க வாங்கிட்டு வரும்வோம்னு சொல்லும்போது என்னது ஒரு லிட்டர் தண்ணி இருபது ரூபையானு  ஆச்சரியமா இருக்கும் .

ஒரு காலத்துல இந்த பாட்டில் தண்ணி , கேன் தண்ணிலாம் Status symbols.  ஆனா இப்ப அது அத்தியாவசியமா(க்கப்பட்டு)கிவிட்டது.

இந்த தண்ணி business ஒரு பணம் காச்சி மரம். கோடிக்கணக்கா பணம் கொழிக்குது. அதனாலதான் உள்ளூர் குடிசைத் தொழிலுல இருந்து உலகில இருக்குற பெரிய MNC வரைக்கும் இதுல ஈடுபடுறாங்க. இதுல பெரிய தொழில் சூச்சுமமே இருக்கு. எப்பயுமே வருசத்துக்கு ஒரு தடவ விக்கிற ஒரு பொருளுல இருந்து கிடைக்கிற பெரிய லாபத்தவிட , தினமும் யூஸ் பண்ற ஒரு  பொருள விக்கிறதுல கிடைக்குற சின்ன லாபம் பெரிசு. ஏன்னா இந்த சின்ன லாபம் நிலையானது, அதோட volume உம் பெரிசு. அதுல செம லாபம் கிடைக்கும். அதுதான் இந்த குடிக்கிற தண்ணி விசயத்துலயும் நடக்குது.

இப்ப இருக்குற business tactics லாம் ரொம்ப தெளிவானது. இப்பலாம் business ல Status ங்குறத விட அதிகமா முன் வைக்கப்படுவதுனா அது மூனு விஷயம்தான்.
  1. Safety
  2. Security
  3. Health Conscious .
ரொம்ப அழகான ஆனா வலிமையான tactics. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆள் அரவமற்ற  ஒரு மலைப்பாங்கான ஒரு இடத்துக்கு என் friends ஓட போயிருந்தோம். அப்ப அங்க சின்னதா ஒரு ஓடை தெளிவான நீரோட  ஓடிக்கிட்டு இருந்துச்சு. அத பாத்ததும் ஆசையாகி நான் போயி கொஞ்சம் தண்ணி அள்ளிக் குடிச்சேன். அப்ப என் மனைவி, ஏங்க அந்த தண்ணிலாம் குடிக்காதீங்க , அது என்ன தண்ணியோனு சொன்னப்ப நான் அதிர்ந்து போயிட்டேன்.  ஆள் அரவமற்ற இடத்துல இருக்குற  இந்த ஓடத் தண்ணி தெளிவானது, சுத்தமானது ஏன் சொல்லப் போனா கடைல கிடைக்குற பல பாட்டில் தண்ணிலாம் விட ரொம்ப ஆரோக்கியமனதுன்குறது ரொம்ப நல்லாவேத் தெரியும் . ஆனா அதையும் தாண்டி எழுற இந்த Health Conscious இருக்குல, அதுதான் business tactics, இப்படி மக்கள பயப்பட வச்ச அந்த விளைவுதான் அதோட மாபெரும் வெற்றி.


ஆனா இப்படி தயாரிக்குற தண்ணியும் ஆரோக்கியமானதாங்குறதும் விவாததிற்குரியது .


சின்ன வயசுல்லாம்  நினைச்சுக்குவேன், நாமும்  பெரிய பணக்காரனா ஆகி இப்படி தண்ணி பாட்டில்ல தண்ணி வாங்கி குடிக்கனும்னு. ஆனா இப்படி  நாம தினமும் குடிக்கிற அந்த தண்ணியையே காசு குடுத்து வாங்குற இந்த நிலைமை உருவாக்கப்பட்டத நினச்சு வெக்கப்படுறேன்.

லட்சக்கணக்கான வருடங்களா இந்த பூமியில் ஜீவராசிகள் குடிச்சுகிட்டு இருந்த தண்ணிய  நம்மால குடிக்க முடியாம செஞ்ச, அந்த குடி தண்ணியையே காசு குடுத்து வாங்குற மாதிரி செஞ்ச இந்த அதி பயங்கர மாற்றத்த நான் வெறுக்குறேன். இப்படி லட்சக்கணக்கான வருடமா நல்லா இருந்த தண்ணி கேட்டுப் போனது வெறும் 15 , 20 வருசத்துலதான். என்ன கொடும இது .


என்னடா இவன் அந்த காலத்துல (அந்த காலம்னா ரொம்ப காலம் இல்லங்க வெறும் 15,20 வருசம்தான்!), ஆத்துல தண்ணி மொண்டு குடிச்சேன் இப்ப  வேறு வழி இல்லாம பாட்டில்  தண்ணி குடிக்கிறேன்னு புலம்புறான் . சுத்தமான பாட்டில் தண்ணிய வளர்ச்சியோட அடையாளமா ஏத்துக்காத பழம் பிற்போக்குவாதியா இருக்குனான்னு நினைக்காதீங்க. நான் எந்த கவலையும் இல்லாம குடிச்ச அந்த சுத்தமான ஆத்துத் தண்ணிய அசுத்தமாக்குனது, அந்த அசுத்தத சரி பண்ணாம அந்த அசுத்தத்த மூலதனமா வச்சு பணம் பண்ணுறத எதோட அடையாளம்னு முதலில் புரிஞ்சுக்கோங்க .

இப்படி ஒரு மனுஷனுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்னான தண்ணியையே காசு கொடுத்து வாங்க வச்சதுக்கு நம்ம அரசாங்கம்தான் வெக்கப்படனும். இன்னும் கொஞ்ச நாள் ஆனா உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனையே காசு கொடுத்து வாங்க வச்சாலும் நாமும் அதையும் எதிர்க்காமல்,  இதலாம் வளர்ச்சியின் கூறுகள்னு சொல்லி ஏத்துகத்தான் போறோம். அந்த காலம் ரொம்ப தூரம் இல்ல. 
Photo Courtesy : http://naturalsociety.com/the-bottled-water-deception/


Friday, February 24, 2012

மறக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம்

உலகின் மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் இந்த உலகையே மாற்றி அமைத்திருக்கின்றன. அது வரலாற்றின் பக்கங்களின் நினைவு தெரிந்து கி.மு 1850களில்  அமைந்த உலகின் முதல் மாபெரும்  பேரரசான எகிப்து பேரரசு முதல் கடைசியாக அமைந்த பிரிட்டிஷ் பேரரசு வரை வரலாற்றையே மாற்றி அமைத்தன. கி.மு 1850 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மாபெரும் பேரரசுகள் இந்த உலகை ஆண்டன. ஆனால் அவற்றில் பெரிதும் நினைவில் நிற்பவை எகிப்து,ரோம்,அசோகர் தலைமையிலான மௌரிய, முகலாய, சீனாவின்  மிங், ஸ்பானிய, பிரிட்டிஷ் என மிகச் சில சாம்ராஜ்ஜியங்களே . இதில் பெரிதும் மறக்கப்பட்ட சாம்ராஜ்ஜியம் என்றால் அது மங்கோல் சாம்ராஜ்ஜியமாகும். இந்த சாம்ராஜ்ஜியம் உலகில் இதுவரை அமைந்த சாம்ராஜ்ஜியங்களில் பிரிட்டிஷிற்கு அடுத்து உலகின் மிக அதிக நிலப்பரப்பை ஆண்ட சாம்ராஜ்ஜியம் ஆகும். அதன் உச்சபட்ச காலகட்டத்தில் அது 2.4 கோடி சகிமீ ஆண்டது . அதாவது உலகின் நிலப்பரப்பில் 16% ஆகும். பிரிட்டிஷ்ஷார் ஆண்டது 3.3  கோடி சகிமீ அதாவது  உலகின் நிலப்பரப்பில் 22% ஆகும். அதிலும் மங்கோல் சாம்ராஜ்ஜியம் ஆண்டது உலகின் தொடர்ச்சியான நிலப்பரப்பாகும். அந்த வகையில் அதுவே உலகின் மிகப் பெரியது. இதிலும் பிரிட்டிஷ்ஷார் ஆண்டது பழைய உலகம் மற்றும் புதிய உலகம் எனப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவையும் சேர்த்து. ஆனால் மங்கோல் ஆண்டது அவர்கள் காலத்தில் அறியப்பட்டஒரே உலகமான  பழைய உலகம் எனப்படும் ஆசியா,ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் ஆகும். அதாவது அன்றைய உலகில் 35% ஆகும்.  இந்த வகையில் பார்த்தால் அது எவ்வளவு பெரியது என்பது தெரிய வரும். ஆனால் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் முற்றிலும் மறக்கப்பட்டது. அதற்கு ஒரே காரணம் செங்கிஸ்கான். ஆமாம் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது செங்கிஸ்கான்தான். 

இந்த உலகின் வரலாற்றில் அதிகம் நினைவு கூறப்படும் தலைவர்களில் மிக முக்கியமானவர்கள் என்றால் அது அலெக்சாண்டரும் , செங்கிஸ்கானும் ஆவர். ஆனால் அலேக்சாண்டரால் அதிகம் நினைவு கூறப்படும் ரோம் சாம்ராஜ்ஜியம் அளவிற்கு செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் நினைவு கூறப்படுவதில்லை. அதற்கும் முக்கிய காரணம் செங்கிஸ்கான்தான். ஆமாம் இந்த உலகம் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசர் என்று எண்ணும் அதே சமயம் அது  செங்கிஸ்கானை வெறும் காட்டுமிராண்டித்தனமான ஒரு மாபெரும் கொள்ளைகூட்டத் தலைவன் போன்றே எண்ணுகிறது. 

 ஏனென்றால் அலெக்சாண்டர் நாடு பிடிக்கும் வெறி கொண்ட ஒரு நாட்டின் அரசராக பார்க்கப்படவில்லை. அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு தன்னிடம் தோற்ற இந்திய மன்னனான போரஸை அவர் நடத்திய விதம். போரில் தோற்ற போரஸ் தன்னை ஒரு மன்னனுக்குரிய அந்தஸ்துடன் நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டரிடம் கூறிய பொழுது அவர் அவனின் வீரத்தைப் பாராட்டி அவனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால் செங்கிஸ்கான் பெயரைக் கேட்டாலே இந்த உலகம் நடுங்கியது. பெர்சிய(இன்றைய ஈரான்)*1  படையெடுப்பின் போது செங்கிஸ்கானின் 50,000 வீரர்கள் இணைந்து கொன்ற மக்களின் எண்ணிக்கை 12 லட்சம். அதாவது ஈரான் சமவெளியில் இருந்த மக்களில் 3/4 பங்கு. இப்படி எங்கு படையெடுத்தாலும் பேரழிவு. மங்கோல் பேரரசு தான் ஆண்ட 270 வருடங்களில் கொன்ற மக்களின் மொத்த எண்ணிக்கை 3 லிருந்து 6 கோடி. அதாவது அன்றைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7 லிலிருந்து 17 % ஆகும். 

இப்படி செங்கிஸ்கான், வெறி கொண்ட காட்டுமிராண்டித்தனமான ஒரு தலைவனாகவே பார்கப்பட்டான். ஏன் செங்கிஸ்கானின் வழி வந்த முகலாயர்களே தங்களை செங்கிஸ்கானின் வழித் தோன்றலாக கூறிக் கொள்ளாமல் , தங்களை துருக்கிய தலைவனான தைமூரின்*2 வழித் தோன்றலாக கூறிக் கொண்டனர் 

  மங்கோலியர்களின் வாழ்க்கை கிட்டத்தட்ட குதிரையிலேயே பிறந்து , குதிரையிலேயே வளர்ந்து , குதிரையிலேயே முடிந்தது. அவர்கள் அளவிற்கு சிறந்த குதிரை வீரர்கள் கிடையாது. அங்கு சிறுவர்களை 4 , 5 வயதிலேயே குதிரையில் ஏற்றிவிடுவார்கள். மங்கோலியாவின் கடினமான காலநிலை அவர்களை முரடர்களாக ஆக்கியது. அந்த முரட்டுத்தனத்தின் மீதான பயம்தான் சீனாவை மங்கோலியாவிலிருந்து பிரிக்க மிகப் பெரிய சீனப் பெரும் சுவரை கட்ட வைத்தது . 

செங்கிஸ்கானிற்கு முன் மங்கோலியர்கள் பல இனக் குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டார்கள். செங்கிஸ்கான்தான் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களின் தலைவனாகி மாபெரும் மங்கோல் பேரரசை அமைத்தான்.அப்பொழுதுதான், அதிகபட்சம் சீனா வரை அறியப்பட்ட அவர்கள், உலகம் முழுவதும் தெரிந்தார்கள்.

 கான் என்று முடிவதாலேயே அதிகம் பேர் செங்கிஸ்கானை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவன் முஸ்லிம் இல்லை . சொல்லப் போனால் செங்கிஸ்கான் , இஸ்லாமின் பொற்காலம் எனப்படும் காலிபாக்களின் ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்தவன். அவன்  மங்கோலியாவைச் சார்ந்த ஒரு உள்ளூர் மதத்தைச் சார்ந்தவன். அவன் அதிக சமய சகிப்புத் தன்மை கொண்டவனாக இருந்தான். அதனாலையே அவன்  இந்த நாடு அந்த நாடு என்றில்லாமல் அனைத்து நாடுகளின் மீதும் படையெடுத்தான்.

மங்கோல் சாம்ராஜ்ஜியம் மேற்கே போலந்திலிருந்து கிழக்கே பசிபிக் பெருங்கல்டல் வரையிலும் , வடக்கே சைபீரியாவிலிருந்து தென் கிழக்கே தாய்லாந்த் வரையிலும் , தென் மேற்கே மத்திய கிழக்கு நாடுகள் வரையிலும் பரவியிருந்தது.  செங்கிஸ்கானிற்கு பின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் 4  சாம்ரஜ்ஜியங்களாக  பிரிந்தது. 

 உலகம் செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக பார்த்த போது, மங்கோலியா அவனை தங்களின் இணையற்ற தலைவனாக பார்த்தது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்த வரலாற்றை எல்லாம் எழுதுபவர்கள் எல்லாம் மேற்கு உலகத்தவர்கள். அதனால் அவர்கள் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசராகக் காட்ட செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக சித்தரிக்கிறார்கள், மேலும் இந்த உலகமே மேன்மை அடைந்த பிறகு நடந்த முக்கியமாக மேற்கு  உலக நாடுகளிடையே  நடந்த உலகப் போர்களில்தான் இது வரை இல்லாத பேரழிவாக வெறும் 11 ஆண்டுகளில் 5.5 கோடி முதல் 13.5 கோடி மக்கள் இறந்தார்கள். அப்படி எனும் போது செங்கிஸ்கானை மட்டும் கொலைகாரனாக சித்தரிப்பது தவறு என்பது ஆகும்.  

1. பெர்சிய படையெடுப்பிற்கு முன் செங்கிஸ்கானின் எண்ணத்தில் இருந்தது பெர்சியா மற்றும் இந்தியா. நல்லவேளையாக அவன் தேர்ந்தெடுத்தது பெர்சியா. தப்பியது இந்தியா !
2. செங்கிஸ்கானுக்கு தைமூர் ஒன்றும் குறைந்தவனில்லை, அவனுடைய படையெடுப்பில் டெல்லி மாநகரமே அழிந்தது

Sunday, February 19, 2012

இந்தியாவும் அதன் அயலுறவுக் கொள்கைகளும்

சென்ற வாரம் நம்மளுக்கு மிக அருகில் இருக்கும் மாலத்தீவில் பல போராட்டங்களுக்குப் பிறகு அதிபர் பதவி விலகினார் . அதுக்கப்புறம் அவர், என்னைய துப்பாக்கி முனையில்தான் பதவி விலக வைத்தார்கள் என்று சொல்ல, பெரிய பிரச்சினை. இவ்வளவு போராட்டங்களையும் எப்பயும் போல இந்தியா ரொம்ப மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தது. அதுக்கு அப்புறம் அமேரிக்கா இந்த விசயத்துல தலையிட ஆரம்பிச்சதும்தான் இந்தியா கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு தன்னுடைய வெளியுறவுத்துறை செயலாளரை அங்கு அனுப்பி வைத்தது.

பொதுவாக இந்தியா தன்னுடைய ராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையில் பெரிதாக எதுவும் சாதித்ததில்லை. அதற்கு என்று பெரிதாக சிறந்த நட்பு நாடுகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடனேயே பெரிதாக அதற்கு நல்ல உறவு இல்லை. இதைதான் சீனா " இந்தியா தூரம் இருப்பவர்களுடன் நட்பாகவும் அருகில் இருப்பவர்களுடன் விரோதத்துடனும் உள்ளது " என்று கூறுகிறது. இப்படி பக்கத்தில் உள்ளவர்களுடன் விரோதத்தையும் தூரத்தில் உள்ளவர்களுடன் நட்பையும் கொண்டிருப்பது , இந்தியாவே தேடிக்கொண்டதா இல்லை அதற்கு அப்படி இயல்பாக அமைந்ததா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இப்படி ஆனது அதன் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த தோல்வியே ஆகும். சில நேரங்களில் எனக்கு இது நம் மக்கள் எப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விரோதத்துடன் இருக்கும் மனோநிலையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது ;). ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா தூரத்தில் உள்ளவர்களுடனும் பெரிதாக நட்பு கொண்டிருக்கவில்லை.

இப்படி அமைவதற்கு முக்கிய காரணம் இந்தியா எந்த ஒரு விசயங்களிலும் பெரிதாக ஆக்டிவாக இருந்ததில்லை. எப்படி அடுத்த நாடுகளின் விசயங்களில் அதிகமாக மூக்கை நுழைப்பது தவறோ அதே போல் பக்கத்து நாடு பிரச்சினையில் இருக்கும் போது அதை கண்டும் காணாமல் இருப்பதும் தவறு. சில விசயங்களில் இந்தியா ஆக்டிவாக இருந்திருக்கிறது, இல்லை என்று சொல்ல வில்லை . எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் பிரிவினையை சொல்லலாம். அந்த பிரிவினையின் போது இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது ஆனால் அதற்கடுத்து அது பங்களாதேஷுடன் மிகச் சிறப்பான நல்லுறவை மேற்கொள்ளவில்லை. இன்று பங்களாதேஷில் பல பேர் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள். சில நேரங்களில் அது முன்னெடுத்த பல செயல்கள் அதற்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டு இலங்கைக்கு இந்தியா அனுப்பிய அமைதிப் படை நடவடிக்கை. இந்தியா எந்த நோக்கத்திற்காக அங்கு அமைதிப் படையை அனுப்பியதோ அது நிறைவேறவில்லை. அந்த அமைதிப் படை இந்தியா திரும்பிய போது அது இலங்கை , இலங்கைத் தமிழர்கள் என்ற இரு தரப்பாலும் வெறுக்கப்பட்டே அனுப்பப்பட்டது.

தெற்காசிய நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்த இந்தியா முன்னின்று அமைத்த SAARC கூட்டமைப்பு பெரிதாக எதையுமே சாதிக்கவில்லை. அது யூரோப்பியன் யூனியன் (EU) போலவோ, இல்ல தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியான ASEAN போலவோ , இல்லை வர்த்தகத்துக்காக அமைந்த OPEC போலவோ, இல்லை ராணுவ கூட்டணியாக அமைந்த NATO போலவோ வெற்றி பெறவில்லை. இப்படி SAARC பெரிதாக சாதிக்காமல் இருப்பதற்கு அதில் இருக்கும் பெரிய, வலுவான நாடு என்ற முறையில் இந்தியாவிற்குதான் பொறுப்பு அதிகம். இந்திய - பாகிஸ்தான் போர்களின் போதோ, இல்லை இந்திய சீன போரின்போதோ, இல்லை பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த படுகொலைகளின் போதோ , இல்லை இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப் படுகொலைகளை தடுப்பதற்கோ SAARC பெரிதாக எதையும் சாதிக்கவில்லை . சரி நம்மளுக்குள் சண்டை போடும்போதுதான் SAARC எதையும் செய்யவில்லை , குறைந்தபட்சம் சம்பந்தம் இல்லாத வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சினைகளிலாவது அது ஏதாவது சாதித்தா என்றால், இல்லை.

இந்தியா தன்னுடைய அண்டை வீட்டுக்காரர்களுடன் ஒழுங்கான உறவு பேணாததாலேயே இன்றும் , இனி வரும் காலங்களிலும் அது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது/ சந்திக்கப் போகிறது. இன்று நம்மைச் சுற்றி இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு , மியான்மர் இப்படி அனைத்து நாடுகளும் இந்தியாவை விட சீனாவிற்கே நட்பு நாடுகள். Pearl Necklace என்ற பதத்தின் பேரில் சீனா, இந்தியாவை சுற்றி வளைக்கிறது. இன்று சீனா, பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு , பாகிஸ்தான், மியான்மர் இப்படி நம்மை சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளிலும் அது ஒரு துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த துறைமுகங்களில் சிலவற்றில் தன்னுடைய கடற்படையை நிறுத்துமோ என்ற கவலையையும் தருகிறது . இங்கு கவனிக்கவும் அமெரிக்கா, ரஷ்யாவை விட ரஷ்யாவிற்கு ஏவுகணை தளம் அமைக்க இடம் கொடுத்த தன் அண்டை நாடான கியூபாவைக் கண்டே அதிகம் பயப்பட்டது.

எப்பொழுதும் நம் பக்கத்து நாட்டிற்குள் அடுத்த நாடு நுழைஞ்சா நம்மளுக்குத்தான் பிரச்சினை. இந்த விசயத்தில் அமெரிக்காவும் சீனாவும் அதற்கு இடம் கொடுத்ததில்லை. சமீபத்தில் இந்தியா , வியட்நாமுடன் எண்ணெய் எடுக்க ஒப்பந்தம் செய்த போதே சீனா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் நம் நாட்டிற்குள் நாம் எங்கோ இருக்கும் அமெரிக்காவையும், சீனாவையும் விடுகிறோம்.

சரி அண்டை நாடுகளுடந்தான் இப்படி, தூர தேசங்குளுடனாவது இந்தியா உறவுகளை மேற்கொள்கிறதா என்றால், இல்லை. இன்று அமெரிக்காவை விட சீனாவே அதிக உறவுகளை மேற்கொள்கிறது. இன்று சீனா நுழையாத நாடே கிடையாது. அது பக்கத்திலுள்ள ASEAN னிலிருந்து அயல்தூரத்தில் இருக்கும் ஆப்ரிக்கா, தென் அமேரிக்கா வரை அனைத்து நாடுகளுடனும் உறவை மேற்கொள்கிறது. அது ஆப்ரிக்காவில் இருக்கும் கனிம வளங்களுக்காகட்டும், இல்லை தென் அமெரிக்காவில் இருக்கும் இயற்கை வளங்களுக்காகட்டும் அது தற்பொழுது இந்தியாவை விட நிறைய உறவுகளைக் கொண்டுள்ளது.

இந்த விசயங்களில் எனக்கு அமெரிக்காவையும் , சீனாவையும் ரொம்ப பிடிக்கும். அவை தங்களுக்கு வேண்டிய நாடுகளை அணி சேர்த்துக் கொண்டும் , வேண்டாத நாடுகளை அண்ட விடாமலும் இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது அமேரிக்கா, ரஷ்யா என்ற எந்த ஒரு அணியுடன் சேராமல் இருக்க அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை அமைத்தது. அது அமெரிக்க, ரஷ்ய அணிகளுக்கு சிறந்த மாற்றாக இருந்திருக்க வேண்டும் . ஆனால் அது நம்ம ஊர் அ.தி.மு.க, தி.மு.க அணிகளுக்கு எதிரான மூன்றாவது அணி போலவே இருந்தது. பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த அணியில் முக்கிய உறுப்பு நாடாக இருந்த இந்தியாவே கிட்டத்தட்ட ரஷ்ய அணியில்தான் இருந்தது.

இப்படி நம் வெளியுறவுக் கொள்கை நமக்கு பெரிய பலன்களை எதுவும் கொடுக்கவில்லை . சொல்லப் போனால் இந்தியா , தனக்கு உலக அரங்கில் கிடைத்த பல வாய்ப்புகளை வீணடித்துள்ளது. இன்னும் சில நேரங்களில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை இந்தியாவிற்கே வினையாகவும் அமைந்துள்ளது.

பிரச்சினை என்னவென்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் இன்னும் நேரு காலத்திலேயே இருக்கிறது. அது எதனால் என்றுதான் தெரியவில்லை. நேருவின் கொள்கைகள் சாகா வரம் பெற்றவை, அவை என்றும் வெற்றி பெற்றவை என்று காட்டுவதற்கான அடமா என்று தெரியவில்லை . அதனால் தான் அணியே இல்லாத உலகில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு இன்றும் உள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி. யாருமே இல்லாத கடைல யாருக்குத்தான் டீ ஆத்துராங்களோ தெரியல :(

இப்படி வெற்றியடையாத வெளியுறவுக் கொள்கையுடன் நாம் Global Power என்ற அடைமொழிக்கும், ஐநாவில் Veto அதிகாரத்துடன் கூடிய நிரந்தர அந்தஸ்துக்கும் ஆசைப்படுகிறோம்.

சாணக்கியர் வாழ்ந்த நாடு ஆனால் சுதந்திர இந்தியாவிற்குத்தான் வெளியுறவுக் கொள்கைகளில் ராஜதந்திரி என்னும் நபர் இன்னும் கிடைக்கவில்லை :( .

Friday, August 19, 2011

அன்னா கசாரே என்னும் வினையூக்கி (Catalyst)

இன்று இணையத்தில் இரண்டு விதமானவர்களைக் காணலாம். ஒன்று அன்னா கசாரே ஆதரவாளர்கள். இன்னொருவர் அன்னா கசாரே எதிர்பாளர்கள். அன்னா கசாரே மத்திய அரசை எதிர்த்துதான் இந்த போராட்டம் நடத்துகிறார், அதனால் மத்திய அரசும், காங்கிரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் அவரை எதிர்கிறார்கள். ok. ஆனால் அவரை எதிர்க்கும் அல்லது அவரது போராட்டத்தைப் பற்றி அதிக கிண்டலும் கேலியும் கொண்டு பேசும் இன்னொரு பிரிவினர் நம் கூடையே இருக்கிறார்கள். அதுவும் இளைஞர்கள்.

இன்று இணையத்தில் குறிப்பாக facebook இல் இத்தகையவர்களை அதிகம் காண முடிகிறது. இப்பொழுது நாம் இணையத்தில் அன்னா கசாரே குறித்த பல status message களை காண முடியும் .

"அன்னா கசாரேயை ஆதரிக்கலனா என்னையும் ஊழல்வாதின்னு சொல்லிருவாங்கன்னு பயமா இருக்கு .."

"இவ்வளவு பேசும் அன்னா கசாரே இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார் .."

"நானும் கொஞ்சம் காசு கொடுத்தா , ராம்லீலா மைதானத்துல எனக்கு முதவரிசை இடம் கிடைக்குமா ..."

இன்னும் பல ...

அன்னா கசாரேயை எதிர்க்கும் மத்திய அரசும் , காங்கிரசும் எனக்கு பெரிதாக தெரியவில்லை . ஏனென்றால் அவர் போராட்டம் நடத்துவதே அவர்களை எதிர்த்துதான். அதனால் அவர்கள் அவரை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அன்னா கசாரேயின் போராட்டத்தைப் பற்றி மாற்றிப் பேசும் இந்த இணைய இளைஞர்களைத்தான் பெரிதாக எனக்குத் தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் நம்மிடையே இருப்பவர்கள். இவர்களின் கருத்து மற்ற எல்லாரையும் விட எளிதாக , விரைவாக மக்களிடையே சென்று அவர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனக்கு இந்த இளைஞர்களைப் பற்றி பொதுவாக ஒன்று புரியவில்லை, இவர்கள் நிஜமாகவே அன்னா கசாரே போராட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்களா இல்லை அனைவரும் அவரை ஆதரிக்கின்றனர் நாம் அவரை எதிர்த்தால் நாம் தனியாகத் தெரிவோம் என்று எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை.

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கருத்து ஒரு சமூகத்தில் எந்த அளவு , எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் .

இவர்கள் கேட்கும் சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது . ஜன்லோக்பால் வந்துவிட்டால் அனைத்தும் மாறிவிடுமா ? என்று கேட்கிறார்கள். நியாயம்தான். அனைத்தும் மாறிவிடும் என்று யாராலும் உறுதி கொடுக்க முடியாது. ஆனால் மக்கள் இன்று எதைத் தின்றாலாவது பித்தம் தெளியாதா என்பதைப் போல எப்படியாவது இந்த ஊழல் ஒழியாதா என்று எண்ணுகின்றனர். அதற்கான ஒரு முன் முயற்சி , முதல் முயற்சியாக இதைக் கொள்ளலாம்.

அதைப் போல ஜெயப்ரகாஷ் நாராயணனால் முடியாததையா இவர் செய்து விடப் போகிறார் என்கின்றனர். சரி ஜெய்பிரகாஷ் நாராயணனால் முடியாததால் மற்றவர்கள் முயற்சி செய்யக் கூடாதா? . மேலும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தை விட இன்று இந்த ஊழல் எதிர்ப்பு மிக அவசியம். ஜெய் பிரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தில் இந்தியா ஒன்றும் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு அல்ல. நாம் அன்று சோத்துக்கே பலரை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளரும் நாடு. இன்னும் 30, 40 வருடங்களில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக ஆகப் போகிற நாடு. இத்தகைய காலகட்டத்தில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழலான 1.75 லட்சம் கோடி ஊழல் இந்தியாவில் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தானியங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் பெருச்சாளிகள் அதிகம் வரும் , அதைப் போல அதிக பணம் புழங்கும் இடத்தில்தான் அதிக ஊழல் பெரிச்சாளிகள் வரும். அதற்கு கடிவாளம் போடத்தான் இந்த ஜன்லோக்பால்.

ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் ஒன்று கூறுவார்கள். ஜனநாயகம் தான் best என்று நாங்கள் கூறவில்லை. இன்று இருக்கும் மற்ற முறைகளில் இது better . Thats all. அதே போன்று தான் ஜன் லோக்பால் மட்டுமே தீர்வு அல்ல அல்லது அதுதான் best என்று இல்லை. இது ஒரு தீர்வு . இருப்பதில் ஓரளவுக்கு நல்ல தீர்வு .

அதைப் போல அன்னா கசாரேயை ஆதரிப்பவர்களை தனி மனித துதிபாடிகள் என்கின்றனர். எப்பொழுதுமே எந்த ஒரு பெரும் செயலுக்கும் leader என்று ஒருவர் தேவைப்படுகிறார். எதற்கும் முன்னெடுத்து செல்ல ஒரு முதல் காலடி தேவைப்படுகிறது. அந்த காலடியாகத்தான் அன்னா கசாரேயை மக்கள் பார்கிறார்கள். இங்கு மக்கள் யாரும் அன்னா காசரேயை ஊழலை ஒழிக்க வந்த அனாதரட்சகராக பார்கவில்லை. எதற்கும் ஒரு முன்னெடுப்பு எதற்கும் ஒரு lead. அவ்வளவுதான்.

இங்கு பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று எதிர் பார்க்கும்போது ஒருவர் கிடைத்திருக்கிறார். அவரை மக்கள் ஆதரிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொச்சையாக சொல்லப் போனால் நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா :( .அவ்வளவுதான் .

அடுத்து ஒரு கேள்வி இவர் என்ன பெரிய ஒழுங்கா?. இதே கேள்விதான் பாபா ராம்தேவ் விசயத்திலும் கேட்டார்கள். பாபா ராம்தேவ் முயற்சி வெற்றி பெறவில்லை . இப்பொழுது மக்கள் அன்னா கசாரேயை ஆதரிக்கும்போதும் அதே கேள்வி கேட்கிறார்கள். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் இங்கு அன்னா கசாரயையோ அல்லது பாபா ராம்தேவையோ ஆதரிக்கவில்லை. மக்கள் இங்கு ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறார்கள். இப்பொழுதும் அன்னா கசாரே நல்லவர் இல்லை , அவரும் ஊழல்வாதி என்று கூறப்படலாம் அல்லது அது நிஜமாகவே இருக்கலாம். இவர்களால் பாபா ராம்தேவையும் , அன்னா கசாரேயையும் தான் தோற்கடிக்க முடியுமே தவிர மக்களை அல்ல. இன்னும் சிறிது காலத்தில் இன்னொருவர் வருவார். மக்கள் ஆதரவு ஆவருக்கு கிடைக்கும். இப்படி ஏதோ ஒரு காலகட்டத்தில் மக்கள் வெற்றி பெறுவார்கள்.

நம்முடைய சுதந்திரப் போராட்டத்திற்கும் இதே வரலாறுதான் உண்டு . மக்கள் பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்கு போராடினார்கள். பல காலகட்டங்களில் பல தலைவர்கள் உருவானார்கள். பல தலைவர்களும் எதிர்கப்பட்டார்கள், பழி தூற்றப்பட்டார்கள். பல தலைவர்களும் தோற்கடிக்கப்பாட்டார்கள். ஆனாலும் பிற்பாடும் பல தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களையும் மக்கள் ஆதரித்தார்கள். கடைசியில் காந்தி என்று ஒருவர் வந்தார். மற்றவர்களைப் போல் மக்கள் ஆதரவைப் பெற்றார். சுதந்திரம் கிடைத்தது. இங்கு மக்கள் காந்தியை ஆதரிக்கவில்லை. அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத்தான் ஆதரித்தார்கள். காந்தி ஒரு leader . அவ்வளவுதான். இதுதான் உலக வரலாறும் கூட.

இங்கு காந்தி , அன்னா கசாரே எல்லாம் ஒரு வினை ஊக்கி(Catalyst). அவ்வளவுதான். என்ன காந்தியும் அன்னா கசாரேயும் ஒன்றா என்கிறீர்களா? என்ன இருந்தாலும் காந்தியும் ஒரு மனிதர்தானே.


P.S:

1. நான் இங்கு அன்னா கசாரே போராட்டத்தை கேலி செய்பவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி கடைசியில் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்களை பற்றி முடித்திருக்கின்றேன். அது எப்படியோ எழுத எண்ணி மன ஓட்டத்தில் வேறு எங்கோ சென்று முடிந்திருக்கின்றது. ஆகவே அன்னா கசாரேயின் போராட்டத்தை கேலி மட்டும் செய்வதே தங்கள் நோக்கம் என்று எண்ணுபவர்களை எல்லாம் நான் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் என்று கூறவில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

Thursday, August 11, 2011

என்று தெளியும் இந்த நாடு ?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் வளங்களைப் பொறுத்தது. இந்த வளங்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் குறிக்கும். சில நாடுகள் ( எ.கா தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்) மிகுந்த இயற்கை வளங்களையும் குறைந்த மனித வளத்தையும் கொண்டும், சில நாடுகள் (எ.கா ஜப்பான்) அதிக மனித வளத்தையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டும் வளர்கின்றன. மிகக் குறைந்த நாடுகளே சமச்சீரான இயற்கை வளங்களையும் , மனித வளத்தையும் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா.

இந்தியா அளவிற்கு மனித வளத்தையும் , இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடுகள் மிகச் சிலவே. எ.கா அமெரிக்கா, சீனா போன்றவை மற்ற சில.
ஆனால் அந்த வளங்களை ஒரு நாடு எந்த அளவிற்கு முறையாக பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தலைமுறை முன்னேற்றம் உள்ளது. அதுவே அதனுடைய முதிர் தன்மையைக் ( Maturity) காட்டும்.

இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்களில் கனிம வளங்களும் அடக்கம். ஒரு நாட்டிற்கு கனிம வளங்கள் மிக முக்கியமானது. உலக அளவில் இந்திய நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 3 வது இடமும் , பாரைட் உற்பத்தியில் 2 வது இடமும் , இரும்புத்தாது உற்பத்தியில் 4 வது இடமும், பாக்சைட் மற்றும் crude steel உற்பத்தியில் 5 வது இடமும் , மாங்கனீசு தாது மற்றும் அலுமினியம் உற்பத்தியில் முறையே 7 மற்றும் 8 வது இடமும் வகிக்கிறது.
இவ்வளவு வளங்கள் இந்தியாவில் உள்ளன.

ஆனால் இவ்வளவு வளங்களால் இந்தியாவிற்கு பயனா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம் . ஏனெனில் இவ்வளங்களில் மிகப் பெரும்பான்மை வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக இரும்புத் தாதை எடுத்துக்கொள்வோம். உலக அளவில் இரும்புத்தாது அதிக அளவு இருக்கும் நாடுகளிலும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளிலும் இந்தியா மிக முக்கியமானது . உலக அளவில் இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா 4 வது இடம் வகிக்கிறது. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுவும் முக்கியமாக சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் steel உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான steel ஆலைகளுக்கு தீனி போட இந்திய இரும்புத்தாது மிக அவசியம்.

சீனாவிற்கு , ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து அதிகமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்தனைக்கும் சீனாதான் இரும்புத்தாது உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. அது ஒரு ஆண்டுக்கு 800 million metric ton தயாரிக்கிறது. அதுவும் பத்தாமல் வருடத்திற்கு 245 mmt தயாரிக்கும் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா உற்பத்தி செய்யும் இரும்புத்தாதில் 50% மேல் சீனாவிற்கே செல்கிறது.

உலக மார்கெட்டில் ஜூனில் 1 Ton இரும்புத் தாதின் (Iron ore) விலை Rs 7,500. இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது 1 ton இரும்பு தாதிற்கு தனியார் சுரங்கங்களுக்கு கிடைக்கும் விலை Rs 7,500 . அதற்கு அவை அரசிற்கு செலுத்தும் royalty 1 டன்னிற்கு வெறும் Rs 125 (2009 முன் அது வெறும் Rs 29 :( . மேலும் இந்தியாவில் இருக்கும் இரும்புத்தாது சுரங்கங்கள் உட்பட அனைத்து சுரங்கங்களின் எண்ணிக்கை 2854 .அவற்றில் 755 யே அரசின் வசம் உள்ளது மீதி 2099 சுரங்கங்கள் தனியார் வசம் உள்ளன. ).

பொறுக்கவும் இப்பொழுது ஒன்றை நினைத்து பாருங்கள் ஒரு சாதாரண மனிதன் அவன் நிலத்தில் மண்ணிற்கு கீழே இருந்து இருந்து புதையல் எதுவும் எடுத்தால் அவை அனைத்தும் அரசிற்கே சொந்தம். அதில் அவனுக்கு பங்கு எதுவும் கிடையாது. ஆனால் அதே மண்ணிற்கு கீழே புதையலாக இருக்கும் கனிமங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தும் royalty வெறும் 1.6% தான் :( .

சரி at least ஏற்றுமதி செய்யும் இரும்புத்தாதை பதப்படுத்தி இரும்பாகவாவது (ஸ்டீல்) ஏற்றுமதி செய்கிறார்களா? அதுவும் கிடையாது. இரும்புத்தாதை இரும்பாக மாற்றினால் அதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் அதில் லாபமும் அதிகம். அதிக வரி மற்றும் அந்நிய செலாவணி கிடைக்கும். அதுவும் நாம் செய்வதில்லை . அனைத்தையும் தாதுகளாகவே ஏற்றுமதி செய்கிறோம்.

பொதுவாக ஒரு நாட்டில் ஒரு கனிம வளம் அதிகமாக கிடைத்தால் பொதுவாக அந்த நாட்டில் அந்த நாட்டு மக்களுக்கு அதன் விலை குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் அரபு நாடுகளிலும் , வெனிசுலா போன்ற நாடுகளிலும் பெட்ரோலின் விலை மிக குறைவு. வெனிசுலாவில் 1ltr பெட்ரோலின் விலை Re 1 தான்! . ஆனால் இந்தியாவில் Rs 70. இந்தியாவில் பெட்ரோலின் விலை மிக அதிகமாக இருக்கக் காரணம் இந்தியாவில் பெட்ரோலியம் அதிகமாக கிடைப்பதில்லை , இந்தியா பெட்ரோலியத்தை மிக அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதனால்தான் உலக மார்கெட்டிற்கு ஏற்றவாறு பெட்ரோலின் விலை மாறுகிறது என்பது இந்திய அரசின் கூற்று.

ஆனால் இரும்பைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது ? இந்தியா உலகிலேயே இரும்புத்தாது உற்பத்தியில் 4 வதாக இருந்த போதிலும் இந்தியாவில் மக்கள் வாங்கும் இரும்பின் விலை உலக மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைதான். அதாவது உலக மார்கெட்டில் இருக்கும் ஒரு டன் இரும்பின்( Steel) விலையான அதே Rs 32,000 (May மாதம்)கொடுத்துதான் இந்திய மக்களும் வாங்குகிறார்கள்( இந்த மாதம் இரும்பு விலை டன்னுக்கு Rs 40,000 தாண்டிருச்சு).

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு தாய் தன் குழந்தையிடம், "வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர் பசும்பாலே 30 ரூபாய் ... நான் உனக்கோ அதைவிட சத்தான தாய்ப்பால் தருகிறேன் .. அதனால் நீ எனக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயாவது தரவேண்டும்" என்பது போல் உள்ளது. கேட்டால் இதற்குப் பெயர்தான் பொருளாதாரம். இதன் மூலம் வருவதுதான் பொருளாதார முன்னேற்றம் . எவ்வளவு மோசமான செயல் இது ?


கனிம வளங்கள் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவை. அதுவும் இரும்பு போன்று தீர்ந்து போகும் கனிம வளங்கள் மிக இன்றியமையாதவை. பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இரும்பை ஏற்றுமதி செய்யலாம். ஏனெனில் அங்கு கனிம வளங்கள் மிக அதிகம் மேலும் அவற்றின் மக்கள் தொகை மற்றும் மக்கள் அடர்த்தி மிக குறைவு ( ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே 2.2 கோடி தான். அதாவது இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகரிக்கும் மக்கள்தொகையின் அளவு . ஆனால் அது இந்தியாவைப் போல 2.5 மடங்கு பெரியது). ஆனால் இந்தியா போன்ற மிக அதிக மக்கள்தொகை கொண்ட , இப்பொழுதான் வளர ஆரம்பித்திருக்கும் நாடுகளுக்கு இரும்பின் அவசியம் மிக அதிகம்.

ஒரு அறிக்கையின் படி உலக இரும்புத்தாதின் தேவை வருடத்திற்கு 2% என்று அதிகரித்தால் உலக இரும்பின் இருப்பு இன்னும் 64 வருடங்களில் தீர்ந்து விடும். ஆனால் இன்று இரும்பின் தேவை வருடத்திற்கு 10% அதிகரிக்கிறது. அதாவது அதிகபட்சம் இன்னும் 40 - 50 வருடங்களில் உலக இரும்பு எல்லாம் தீர்ந்து விடும் . அதற்கு அப்புறம் ஈயம் பித்தளைக்கு போட்ட பழைய இரும்பையே திரும்பி புதுபித்து உபயோகப்படுத்த வேண்டும். அதுவும் அப்ப அந்த பழைய இரும்பையும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன்னா நாம்தான் அப்பொழுது எல்லாத்தையும் ஏற்றுமதி செய்திருப்போமே!. இப்படிப்பட்ட நிலையில் நாம் நம் இயற்கை வளங்களை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுமதி செய்கிறோம்.

இது மட்டுமல்ல சட்ட விரோதமான சுரங்கங்களின் மதிப்பு இங்கு மிக அதிகம். கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இதன் மதிப்பு Rs 16,000 கோடி . இந்தியா முழுவதும் என்றால் இதன் மதிப்பு கிட்டத்தட்ட Rs 50,000 கோடி - Rs 60,000 கோடி. மேலும் இந்த சட்ட விரோத சுரங்கங்கள் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. மேலும் இவை சுற்று சூழல் மாசு கேட்டிற்கும் காரணமாகின்றன. மேலும் சுரங்கங்கள் அமையும் இடம் பெரும்பாலும் காடுகளாகவே உள்ளன. இதனால் அவை காடுகள் அழிப்பிற்கும், விலங்குகள், தாவரங்கள் அழிவதற்கும் காரணமாகின்றன. மேலும் அந்த இடங்களில் வாழும் பழங்குடி இன மக்களையும் வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன.

இப்பொழுது சுரங்கங்கள் அமைச்சகத்திற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கும் இடையே லடாய். அதாவது சுரங்கங்கள் அமைய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் .ஆனால் காடுகள் இருக்கும் இடத்தில் அவற்றை அழித்து விட்டு சுரங்கங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரமாட்டேன் என்கிறது. அதாவது கனிம வளத்தை அழித்து அவற்றை ஏற்றுமதி செய்வதோடு அல்லாமல் காடுகளையும் அழிக்க வேண்டுமாம் :( .