நிறைய பேர் புது வருட முதல் பதிவு அல்லது சென்ற வருடத்தின் கடைசி பதிவாக 2010 ஆம் வருடம் தங்களுக்கோ நாட்டுக்கோ அல்லது எல்லாருக்குமோ எப்படி இருந்தது என்று பதிவு போட்டிருந்தனர். ஒரு பெண் பதிவர் சென்ற வருடம் மிக மோசமான வருடம் என்றும் அது ஏன் என்றால் அந்த வருடத்தில்தான் அவருடைய தம்பி இறந்தார் என்றும் கூறி இருந்தார். எனக்கு அப்பொழுது என் அப்பாவின் ஞாபகம் வந்தது. அப்படிதான் என் அப்பா இறந்த வருடமும் மேலும் என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களை கொண்ட வருடமுமான 2005 ஐப் பற்றி எழுதலாம் என்று தோன்றியது.
2005 ஆம் ஆண்டு புத்தாண்டு எல்லாருக்கும் எல்லா ஆண்டுகளை போலவே எங்களுக்கும் நன்றாகவே ஆரம்பித்தது. ஏனென்றால் அதற்கு முன் எந்த ஆண்டும் எனக்குத் தெரிந்து எங்களுக்கு மோசமாக அமையவில்லை . எல்லா ஆண்டும் எங்க அம்மா அவ்வளவு ஆசையோட புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லுவாங்க. அதேபோல் தமிழ் புத்தாண்டின் பொழுதும் சாமிக்கு முன்னாடி முக்கனிகளையும் , துணிமணிகளையும் , கண்ணாடியையும் வச்சு என்னையும் மதுவையும் காலைல எழுந்தவிடனே கையாள கண்ண பொத்தி சாமியைப் பாக்க கூட்டிட்டுப் போவாங்க. அந்த மாதிரிதான் அந்த 2005 ஆண்டின் ஆரம்பமும் அமைந்தது.
நான் அப்பொழுது சென்னை சேலையூரில் அமைந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். மது காரப்பாக்கத்தில் அமைந்த ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். நாங்கள் சேலையூருக்கு அருகில் கேம்ப் ரோடில் வீடு எடுத்து நான்கு வருடங்களாக தங்கி இருந்தோம். எங்கள் அப்பா அங்கிருந்து அண்ணா சாலையில் அவர் வேலை பார்த்த அலுவலக்கத்துக்கு செல்வார் (அப்பா அப்பொழுது IPS அதிகாரியாக இருந்தார்) . எங்கள் அப்பா அவருக்குப் பிடிக்காத சென்னைக்கு அலுவல் மாற்றி வந்ததும் , மதுவுக்கும், எங்கள் அப்பாவிற்கும் தூரமான சேலையூரில் வீடு எடுத்ததும் எனக்காகத்தான். 2005 இல் நானும், மதுவும் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தோம். அதற்கு முந்திய ஆண்டே எங்கள் அப்பா பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருந்தாலும் ராமநாதபுரத்தில் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் அம்மாவுடன் தங்காமல் எங்களுக்காக சென்னையிலேயே இருந்து எங்களுக்கு சமையல் செய்து போட்டுக்கொண்டிருந்தார். அந்த 2005 ஆம் ஆண்டு எனக்கும் மதுவுக்கும் இறுதியாண்டு (கடைசி செமஸ்டர்) என்பதால் சிறிது பொறுப்பு கூடியிருந்தது. நாங்கள் இருவரும் கேம்பஸில் எல்லாம் செலக்ட் ஆகவில்லை. அதனால் இறுதியாண்டு முடித்து வேலை தேட வேண்டிய நிர்பந்தம். ஒரு வழியாக நானும் மதுவும் கல்லூரி முடித்தோம்.
கல்லூரி முடித்து வேலை தேடி பல இடங்களில் ஏறினோம். மற்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் அந்தாண்டு நிறைய ஓபனிங் இருந்தது . HCL, Infosys போன்ற பெரிய கம்பனிகளில் ஓபனிங் இருந்தது. நாங்கள் என் நண்பர்கள் அனைவரும் இந்த கம்பனிகளில் எல்லாம் எழுத்துத் தேர்வு எழுதினோம். எல்லாத்தையும் விட எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது TCS. ஏனென்றால் எங்கள் நண்பர்களில் பெரும்பான்மையோர் அதில் எழுத்துத் தேர்வில் தேறினோம். எல்லாருக்கும் வடபழனி TCS இல் நேர்முகத்தேர்வு. நான் இதை பெரிதாகக் கூறுவதற்குக் காரணம் TCS interview நான் மிகவும் எதிர்பார்த்த ஒன்று. ஏனெனில் எனக்கு TATA மிகப் பிடித்த கம்பனி. என் அண்ணன் குமார் TCS இல் 5 வருடங்களுக்கு முன் சேர்ந்ததிலிருந்து எனக்கு TCS பைத்தியமே பிடித்திருந்தது எனலாம். என்னையும், இன்னொரு நண்பனையும் தவிர technical round இல் மது உட்பட மற்றவர்கள் வெளியேறிவிட்டனர். நானும் அந்த நண்பனும் மட்டும் TCS கடைசி round இற்கு சென்றோம். அதன் result அடுத்து ஒரு வாரம் கழித்து வெளியிடுவதாக இருந்தது. அதற்குள் நான் சென்னையில் இருந்த அனைத்து கோயில்களுக்கும் சென்றேன். கடைசியில் result எனக்கு -ve. ரொம்பவே உடைந்து போய்விட்டேன். எங்கள் அப்பாவிற்கு நான் உடைந்து போய்விட்டால் தாங்கமாட்டார். என்னைத் தேற்ற எங்கள் அப்பாவும் அம்மாவும் ரொம்பவே போராடினர்.
அதற்கடுத்து எனக்கும் மதுவுக்கும் AdventNet இல் எழுத்துத் தேர்வு இருந்தது. அன்று காலையில் எங்கள் அப்பா என்னிடம் "சிவா, நீ கவலைப்படாத. உன்னை எப்படியும் நேர்முகத் தேர்வுக்கு தயார் பண்ணிவிடலாம். நீ சென்று வா" என்றார். அன்று AdventNet இல் எழுத்துத் தேர்வு எழுதி விட்டு நானும் மதுவும் எங்கள் அண்ணன் கார்த்தியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் அம்மாவிடமிருந்து எங்கள் கார்த்தி அண்ணனுக்கு call வந்தது. இப்படி அப்பாவிற்கு வீட்டு அருகில் accident ஆயிடுச்சு. நீங்கள் கிளம்பி சீக்கிரம் போங்கள் என்றார். பின்னர் நான், மது மற்றும் கார்த்தி அண்ணன் மூவரும் அண்ணனுடைய காரில் சென்றோம் . அங்கு எங்கள் அப்பா அடிபட்டு இருந்த நிலையை நான் என்றும் நினைவு கூற விரும்பவில்லை . பார்க்க முடியாத காட்சியைப் பார்த்தேன். அப்புறம் எங்கள் அப்பாவை சென்னையில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில் சேர்த்தோம். எங்கள் அப்பா மருத்துவமனையில் இருந்த அந்த காலங்களில் எங்களுக்கு உதவியாக இருந்த எவரையும் நான் என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன். என் உறவினர்கள் , என் நண்பர்கள், எங்கள் அப்பாவிற்கு ரத்தம் கொடுத்த அந்த முகம் தெரியாத ஜீவன்கள், அனைவரையும் என்னால் மறக்க முடியாது . எனக்கு அதற்கு முன் ஒரு குணம் உண்டு , அதாவது எனக்கு பிடிக்காத ஒருவர் , நல்ல குணம் இல்லாத ஒருவருடன் நான் எப்பொழுதும் தோழமை வைக்க மாட்டேன். அதை மாற்றியது அந்த incident தான். அதற்கடுத்து 9 நாட்களில் எங்கள் அப்பா இறந்துவிட்டார் .
எங்களின் அப்பாவின் இறப்பு நாங்கள் அனைவரும் எதிர்பாராத ஒன்று. எங்கள் அப்பாவின் இறந்த நாளை விட அதை பின்பற்றி வந்த நாட்கள் தான் கொடுமை. எங்கள் அப்பா இறந்த வீட்டில் நிறைய பேர் இருந்ததால், எங்களுக்கு ஆறுதலாக இருந்தது . அதற்கடுத்து அனைவரும் அவரவர் வீட்டுக்குப் போய் விட்டனர். அதற்கடுத்துதான் எங்களுக்கு உண்மையான வலி தெரிந்தது . இந்த விசயத்தில் எங்கள் அமாவின் துயரம் சொல்லில் அடக்க முடியாதது. ஏனெனில் எங்கள் அம்மா அந்த 9 நாட்கள் மருத்துவமனையில் இருந்தாலும் எங்கள் அப்பா இறக்கவே மாட்டார் என்றே முழுமையாக நம்பினார். ஆனால் எங்கள் அப்பா இறந்தது அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எங்கே நாங்கள் எங்கள் அம்மாவை பற்றி பயந்து விடுவோமோ என்று பயந்ததால் அவர் அவரின் துயரத்தை என்னிடமும், மதுவிடமும் எங்கள் அம்மா சொல்லி அழ முடியவில்லை. மேலும் அவர் அவரது அலுவலக பணியைத் தொடர ராமநாதபுரம் சென்று விட்டார். அங்கு அவரின் தனிமை அவரை நித்தம் நித்தம் கொன்றது.என்னையும் மதுவையும் தேற்றவாவது என் உறவினர்கள் அருகில் இருந்தனர். ஆனால் எங்கள் அம்மாவைத் தேற்ற எவரும் இல்லை. எங்கள் அப்பா இறந்து இந்த வருடத்துடன் 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மன்மதன் அம்பு படத்தில் வரும் வசனத்தைப் போல் "இந்த ஐந்து வருடங்களில் எங்கள் அப்பாவின் இறப்பின் வலி குறைந்துவிட்டது , ஆனால் அதன் சோகம் மட்டும் பாம்பை போல வயித்துக்குள் சுருண்டு எப்பொழுதும் இருக்கிறது".
எங்கள் அப்பா இறந்த வீட்டில் இருக்கும் போது எங்கள் இருவருக்கும் AdventNet இல் இருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் எங்கள் இருவரின் நிலையையும் சொல்லி நேர்முகத்தேர்வை தள்ளிவைக்கச் சொன்னோம். அவர்களும் பெரிய மனது பண்ணி அதனை தள்ளி வைத்தார்கள். இந்த விசயத்தில் AdventNet மிகச் சிறந்த கம்பனி. அவர்கள் அதிகம் மனிதாபிமானம் கொண்டவர்கள். எங்கள் அப்பா இறந்தது ஆகஸ்டு 13 . எனக்கும் மதுவுக்கும் Sep 1 அன்று நேர்முகத் தேர்வு . அதில் நாங்கள் இருவரும் தேறி Sep 5 இல் AdventNet இல் சேர்ந்தோம். எங்களுக்கு இந்த வேலை அந்த நேரத்தில் மிக அவசியமாகத் தேவைப்பட்டது. அந்த வேலை எங்கள் இருவரின் கவனத்தை திருப்ப மிக அவசியமாகப்பட்டது . அந்த வேலைக்காக , நாங்கள் எப்படியும் அந்த வேலையில் சேர , தாங்கள் கூட வேலையில் இல்லாதபோதும் , எங்களுக்கு உதவிய என் நண்பர்கள் மற்றும் என் உறவினர்கள் அனைவரையும் என்னால் மறக்க முடியாது.
எங்களுக்கு வேலை கிடைத்த சந்தோசத்தைக் கூட எங்களால் கொண்டாட முடியவில்லை. அதற்கு முன் நான் எனக்கு வேலை கிடைத்த தருணத்தை என் வீட்டு காம்பௌண்டில் ஏறி ஊருக்கே கேட்கும் அளவிற்கு கத்த வேண்டும் , எங்கள் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் புது துணி மணிகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் , என் முதல் மாத சம்பளத்தில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவ வேண்டும் இப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்று கருதி இருந்தேன். கடைசியில் எங்களுக்கு வேலை கிடைத்தது எங்களுக்கு சந்தோசத்தை கொடுப்பதை விட எங்கள் துயரத்தை மறக்கவே பெரிதும் தேவைப்பட்டது .
ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்தால் அதுவும் எதிர்பாரதவிதமாக இறந்தால் அது அந்த குடும்பத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் . 2005 இல் கல்லூரி இறுதி ஆண்டு முடித்த பிறகு நானும் மதுவும் இந்திய ராணுவத்தில் சேர Common Defence Service exam இல் தேறி அலகாபாத்தில் நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக இருந்தோம் . ஆனால் எங்கள் அப்பா இறந்தபடியால் அங்கு செல்ல முடியாமல் போய் விட்டது . அப்படி அங்கு சென்று தேர்வாகி இருந்தால் எங்களின் வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கும் . அடுத்து அந்த நேரத்தில் நாங்கள் வீடு வாங்க பெரிதும் அலைந்து கொண்டிருந்தோம். எங்கள் அப்பா அத்தகைய தருணத்திலேயே இறந்தார் . அதற்கடுத்து எங்கள் அப்பாவின் இழப்பிலிருந்து மீண்டு வீடு வாங்க வேண்டிய வேலைகளை செய்யவே 2 வருடம் ஆகிவிட்டது. அதற்குள் real estate boom ஆகி நிலம் , வீடு விலைகள் கிட்டத்தட்ட 4, 5 மடங்காகிவிட்டன . அது பொருளாதார நிலையில் மிகப் பெரிய இழப்பு .
அதற்கடுத்து எங்கள் அப்பா இறந்தது எங்கள் குடும்பத்தின் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டி இருந்த தருணம் . அத்தகைய தருணத்தில் அவர் இறந்ததால் நாங்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறினோம்/திணறுகிறோம். அவர் இருந்திருந்தால் எங்கள் வாழ்கை ஓட்டமே மாறி இருக்கும்.
இப்படி 2005 ஆம் ஆண்டு தெரிந்தோ தெரியாமலோ எங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டாக அமைந்தது.
Monday, January 3, 2011
2005 - வாழ்வின் மறக்க முடியாத ஆண்டு
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை கொடிது.
கொடிது கொடிது அம்மை அப்பரின் பிரிவு கொடிது அதனினும் கொடிது இளமையில் அவர்கள் பிரிவு கொடிது.
நீ சொல்லுவது 100% சரி தேவராஜ்
Post a Comment