Wednesday, December 22, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 2

பேரரசர் ராஜராஜ சோழன் :

இன்றும் தமிழகத்தை உலக அளவில் பெருமைபடுத்தக்கூடிய பேரரசன் ராஜராஜ சோழனே ஆவான். இவனுடைய ஆட்சி காலத்தில் தமிழகம் பல சிறப்புகளை பெற்றது. ராஜராஜ சோழன் பல படையெடுப்புகளை மேற்கொண்டு சோழப் பேரரசை விஸ்தீகரித்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது அவனுடைய நிர்வாகத் திறமையே ஆகும். அவன் தன் நாட்டில் நடைபெற்ற சிறு சிறு நடவடிக்கைகளையும் நேரடியாக கண்காணித்தான். உலகிலயே மிகப் பெரிய இந்து சாம்ராஜ்யத்தை இவன் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் அமைக்க அடிகோலினான். இவனுடைய ஆட்சி காலத்திலேயே கப்பற் படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆசியாவிலேயே மிகச் சிறந்த கப்பற்படையை நிர்மாணித்தான். பொதுவாக மௌரிய,மகத, முகலாயப் பேரரசுகள் இந்தியப் பேரரசை மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மாவின் எல்லைவரையே விஸ்தீகரித்தனர் . ஆனால் இவனுடைய ஆட்சி காலத்தில்தான் கடல் கடந்து கிழக்கே இன்றைய மலேயா, இந்தோனேசியா வரை இந்தியப் பேரரசு விரிந்தது. தமிழக கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். மேலும் நாடு முழுவதும் பல சிவாலயங்களை கட்டினான் . மேலும் இவனைப் பற்றி அறிய என் ராஜராஜ பெருவேந்தன் என்னும் பதிவைக் காணவும்.

பேரரசர் அக்பர் :


பேரரசர் ஜலாலுதீன் முகம்மது அக்பர். முகலாயப் பேரரசின் மிகச் சிறந்த பேரரசர். நான் இங்கு அக்பரின் படை எடுப்புகளைப் பற்றியோ அல்லது அவரது வெற்றிகளைப் பற்றியோ பேசப் போவதில்லை . எனக்கு அக்பரைப் பிடிக்கக் காரணம் அவருடைய முன்னோர்களான மற்ற இஸ்லாமிய அரசர்களும் , சுல்தான்களும் இஸ்லாம் தவிர்த்த மற்ற மதங்களின் மீது முக்கியமாக இந்து மதத்தின் மீது வெறுப்பும் , அவற்றை அழிக்க வேண்டும் என்றும் , அவற்றின் வழிபாட்டுத்தலங்களை அழித்துக் கொண்டும் இருந்த போது அக்பர் ஒருவர்தான் மற்ற மதங்களின் மீது சகிப்புத்தன்மையை கொண்டிருந்தார். அக்பரும் ஆரம்ப காலத்தில் சில இந்து கோயில்களை அழித்தார், பின் முஸ்லிம் அல்லாதவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். பின் சிறிது காலம் கழித்து மீண்டும் ஜிஸ்யா வரியை கொண்டு வந்தார் . பின் கடைசியாக அந்த வரியை நீக்கினார். இப்படி இந்துக்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவர் பொதுவாக மற்ற சமயங்களின் மீது சகிப்புத்தன்மை கொண்டிரிருந்தார். இந்துக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அவருடைய அரசவையில் மற்ற முஸ்லிம் மன்னர்களைப் போல் அல்லாமல் நிறைய ராஜபுத்திரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். மற்ற கொடுங்கோல் முஸ்லிம் பேரரசர்களைப் போல் அல்லாமல் அக்பரின் ஆட்சியில் இந்துக்களும் , முஸ்லிம் அல்லாத மற்ற சமயத்தினரும் அமைதியாகவே வாழ்ந்தனர். இந்துகளில் இருந்த பல மூடத்தனங்களுக்கு தடை விதித்தார். அதில் ஒன்று சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். அவர் ஒருகட்டத்தில் இந்துவாக மாறி விடுவாரோ என்று மத்த முஸ்லீம்கள் என்னும் வகையில் அவருடைய சகிப்புத்தன்மை இருந்தது. அவர் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ தீன்-இலாகி என்னும் புது மதத்தை உருவாக்கினார். ஒரு தடவை மராட்டிய சக்ரவர்த்தி சிவாஜி முகலாயப் பேரரசர் அவ்ரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில் அவ்ரங்கசீப் தன் தாத்தா அக்பர் போன்று சமய சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அந்த அளவிற்கு அக்பர் சமய சகிப்புத்தன்மையுடன் இருந்தார்.

நரசிம்ம ராவ் :

இவர் என்னுடைய பட்டியலில் அமைந்திருப்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். நான் இவரை என்னை பரவசப்படுத்தும் மனிதர் என்று கூறுவது சற்று மிகையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய இடம் அளிக்கப்படவேண்டியவர். இவருக்கான உரிய இடத்தை நாம் அளிக்கவில்லை என்பது என்னுடைய எண்ணமாகும். 14 மொழிகள் தெரிந்த வித்தகர். சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்தவர். இருந்தபோதிலும் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாகவும், உலகில் வளர்ந்து வரும் பேரரசாக இருப்பதிற்கு அடிகோலியவர். 1990 களில் இவருடைய அரசு பெரும்பான்மை பெறாத அரசாகவே இருந்தது. அப்படி இருந்தும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய சந்தையை திறந்து விட்டார். சீனா 1970 களின் ஆரம்பத்திலேயே செய்த நடவடிக்கைள் இவராலயே நமக்கு 1990 களில் சாத்தியமானது. இவருடைய பொருளாதார சீர்திருத்தங்களின் பயனையே நாம் இன்று அனுபவிக்கிறோம்.

A.P.J. அப்துல் கலாம் :

மக்களின் ஜனாதிபதி என்று பெயர் எடுத்தவர். ஜனாதிபதிக்கான இலக்கணத்தையே மாற்றியவர். அதுவரை மக்களைப் பார்த்து வெறுமனே கை ஆட்டிச் செல்லும் முந்தய ஜனாதிபதிகளின் வழக்கத்தை மாற்றி மக்களுடன் மக்களாக கலந்தவர். இந்தியாவின் அக்னி ஏவுகணையின் தந்தை. போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக இருந்தவர். இவர் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதனாலையே வாஜ்பாய் தலைமையிலான அரசு இவரை ஜனாதிபதியாக ஆக்கியது. தான் செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கம் ஊட்டியவர். 2020 இல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காண்பவர். ஜனாதிபதி பதவியை கொண்டு நாட்டை முன்னேற்ற தன்னால் ஆன அனைத்து காரியங்களை செய்த ஒரே ஜனாதிபதி. அப்பழுக்கற்றவர். இவருடைய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாத ஒன்று. ஒரு இந்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெற்றவர் . வெளிநாட்டவர்கள் இந்திய பிரதமராகக் கூடாது என்று இவர் கூறியதாலையே சோனியா காந்தி பிரதமராக முடியவில்லை என்று கூறுவோரும் உண்டு.

டாடா
குடும்பம்:


எனக்கு டாடா குடும்பமே ரொம்ப பிடிக்கும். டாடா குடும்பம் நேர்மைக்கு பெயர் பெற்றது. அவர்கள் என்றைக்குமே இந்தியாவையே முன்னிறுத்தியவர்கள். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடிகள். அவர்கள் என்றுமே குறுக்கு வழியில் செல்லாதவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். சிறிது நாட்களுக்கு முன் கூட ரத்தன் டாடா தாங்கள் மீண்டும் விமான சேவை தொடங்க எண்ணியபோது அப்போது விமானத்துறை அமைச்சராக இருந்தவர் எங்களிடம் 15 கோடி லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாததாலையே நாங்கள் விமான சேவை தொடங்குவதை கைவிட்டோம் என்றார். இவ்வாறு டாடா என்றுமே நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் இந்திய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாதது.

மகாகவி
பாரதி :



பாட்டுகொரு பாரதி . தன் தீக்கங்கும் பாடல்களின் மூலம் விடுதலை உணர்வை மூட்டிய மகாகவி. பாரத மாதாவின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களையும் சந்தித்தாலும் தன் சுதந்திர உணர்வில் எந்த ஒரு compromise உம் செய்து கொள்ளாதவர். தன் தாய் மொழியாம் தமிழின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். தன் தமிழ் மொழி மிகச் சிறந்த மொழி என்று ஆழமாக கருதியவர். தெலுகு, பெங்காலி, ஹிந்தி, சமஸ்கிரதம், கட்சி, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர். பல மொழிகளிலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்தவர். அவர் நாட்டுப்பற்றை மட்டும் ஊட்டியதோடல்லாமல் சமுதாயத்தில் விளங்கிய சீக்குகளையும் சாடினார். மிகச் சிறந்த நாட்டுபற்று பாடல்களையும், சமுதாயப் பாடல்களையும், குழந்தைகளுக்கான பாடல்களையும், கர்நாடக சங்கீதத்திற்கான பாடல்களையும் பாடினார். மக்கள் கவிஞராக இருந்த பாரதியின் இறுதி யாத்திரையில் 14 பேரே கலந்துகொண்டது துரதிஷ்டவசமானது.

பாண்டிய
பேரரசர்கள் :


நான் மதுரைக்காரன் என்பதால் எனக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீதும் , மதுரை மண்ணின் மீதும் ஈர்ப்பு உண்டு. தமிழ்நாட்டை ஆண்ட முப்பெரும் வேந்தர்களில் ஒருவர். சங்கம் வைத்து தமிழ் வளர்க்க பாடுபட்டவர்கள். இவர்களின் ஆட்சியில் தமிழ் நன்கு வளர்ந்தது.

Sunday, December 19, 2010

அணு - நான் இன்றி எதுவும் இல்லை



நேற்று எங்கள் அலுவலகத்தில் கிழக்கு பதிப்பகம் தன்னுடைய புத்தக ஸ்டால் அமைத்திருந்தது. சென்ற தடவையே நான் அதிக புத்தகங்களை வாங்கி இருந்தேன். அதனால் இந்த தடவை புத்தக ஸ்டால் செல்ல வேண்டாம் என்று எண்ணி இருந்தேன். சரி என்று கடைசி நிமிடத்தில் ஒரு உந்துதலில் புத்தக ஸ்டால் சென்றேன். பெரும்பான்மையான புத்தகங்கள் தனி மனிதர்களைப் பற்றி இருந்தது. அவற்றை எல்லாம் wikipedia விலேயே படித்துக் கொள்ளலாம் என்பதால் அவற்றில் ஈடுபாடு ஏற்படவில்லை. பிறகு நோட்டம் விட்டுக்கொண்டிருந்த போது இரண்டு புத்தகங்கள் கண்ணில்பட்டன. ஒன்று "அணு" மற்றொன்று இரண்டாம் உலகப் போர். இரண்டுமே நாம் பள்ளி நாட்களில் படித்ததுதான். முக்கியமாக இரண்டாம் உலகப் போரை விக்கிபீடியாவிலேயே எளிதாக படித்துக்கொள்ளலாம்தான். ஆனால் இரவில் படுத்துக்கொண்டு படிப்பதற்கு புத்தகமே எளிது என்பதால் வாங்கலாம் என்று முடிவு பண்ணினேன்.

நேற்று இரவு "அணு" புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய அனுமானம் சரியாகவே இருந்தது. பெரும்பாலும் இந்த புத்தகத்தில் இருந்தது நாம் பள்ளி நாட்களில் முக்கியமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புக் காலத்தில் இயற்பியலில் படித்ததே அதிகம் இருந்தது. இருந்தாலும் கிட்டத்தட்ட refresh செய்து கொள்வது போன்றே இருந்தது.

ஆரம்பகால நூற்றாண்டுகள் ஆசிய நூற்றாண்டுகளாகவே இருந்தன. முக்கியமாக இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டுகளாகவே இருந்தன. இவ்விரு நாடுகளும் பல வழிகளில் முன்னேறி மேற்கத்திய நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தன. மேற்கத்திய நாடுகள் உலோகங்களின் பயனை பற்றி அறிவதற்கு முன்பே இவ்விரு நாடுகளிலும் உலோகங்கள் பயன்பாட்டில் இருந்தன. இப்படியாக இருந்த காலத்தில் ஐரோப்பாவில் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர்கள் அறிவியலின் பாதையில் செல்ல ஆரம்பித்தனர். அதிலிருந்தே ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் வேறுபாடு ஆரம்பித்தது. ஐரோப்பா பல துறைகளில் முன்னேறிக்கொண்டிருந்தது. அவற்றில் முக்கியமானது அணு ஆராய்ச்சி. ஆரம்ப காலத்திலேயே இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அணு என்ற ஒன்று இருப்பதாக ஓர் அனுமானம் இருந்தது. ஆனால் அதன் உண்மையான கட்டமைப்பு எதுவும் அறிவியல் முன்னேறாத அந்த காலத்தில் தெரிந்துருக்கவில்லை .

அணு பற்றிய ஆராய்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்தன. கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டதே அணு ஆராய்ச்சிக்கு ஆரம்பம் எனலாம். அதற்கு யுரேனியம் தன்னியல்பாக கதிர்களை உமிழ்கிறது என்று கண்டறியப்பட்டது ஆரம்பம் எனலாம். பெக்வாரல் என்பவர் யுரேனியம் தன்னியல்பாக கதிர்களை உமிழ்கிறது என்று கண்டறிந்தார். இதற்கடுத்து மேரி க்யூரி யுரேனியத்தில் மேலும் பல ஆராய்சிகள் நடத்தினார். அவர் கதிரியக்கம் உமிழும் மேலும் ஒரு தனிமத்தை கண்டறிந்தார். அது தோரியம் ஆகும். இவரே கதிர்களை தன்னியல்பாக உமிழும் இவ்வியல்புக்கு கதிரியக்கம் (Radio Activity) என்று பெயர் வைத்தார். மேரி க்யூரி மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தி யுரேனியத்தை விட 10 லட்சம் மடங்கு கதிரியக்கத்தை வெளியிடும் ரேடியம் என்னும்தனிமத்தை 1902 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பெக்வாரல், மேரி க்யூரி மற்றும் அவருடைய கணவர் பியர் க்யூரிக்கு 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ரூதர்போர்ட் அணுவைப் பற்றி மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். அவரே அணுவுக்குள் அணுக்கரு (nucleus) என்று ஒன்று உண்டு என்றும் அந்த அணுக்கருவிற்குள் புரோட்டான்கள் உள்ளன என்றும் கண்டுபிடித்தார். மேலும் அணுக்கருவிற்குள் புரோட்டான்கள் மட்டுமே இருப்பதில்லை என்றும் அதையும் தாண்டிய ஒரு பொருள் இருக்கவேண்டும் என்று கருதினார். அதற்கு அவர்நியூட்ரான் என்று பெயரிட்டார். கவனிக்கவும் நியூட்ரான்கள் அப்பொழுது கண்டுபிடிகப்படவில்லை. இது நடந்தது 1911 ஆம் ஆண்டு. அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகே அதாவது 1932 ஆம் ஆண்டில்தான் ரூதர்போர்டின் மாணவரான ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டுபிடித்தார். நியூட்ரான் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் அணுவின் கட்டமைப்பு பற்றி தெரிய வந்தது. அணு என்ற ஒன்றின் நடுவில் அணுக்கரு என்ற ஒன்று இருப்பதாகவும் அந்த அணுக்கருவில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து இருப்பதாகவும் அவற்றை சுற்றி எலக்ட்ரான்கள் வலம் வருவதாகவும் கண்டறியப்பட்டது. ரூதர்போர்ட் அணுவிற்குள் நிறைய காலி இடம் இருப்பதை கண்டறிந்தார். ஒரு அணுவை ஒரு கிமீ விட்டம் கொண்டதாக விரிவுபடுத்தமுடியும் என்று கொள்வோம். அப்படி செய்தாலும் அணுவின் கரு ஒரு கோலி குண்டு அளவிலேயே இருக்கும். கிட்டத்தட்ட எலெக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து அரை கிமீ தள்ளி உள்ளன . அந்த அளவிற்கு அணுவில் காலி இடம் உண்டு.

அணுவானது புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் இழந்து வேறொரு அணுவாக மாறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அணுச்சிதைவு என்று பெயர். இதனையும் கண்டறிந்தவர் ரூதர்போர்டே. இவர் இதனை பிரடரிக் சோடி என்பவருடன் சேர்ந்து இதனை கண்டறிந்தார். இத்தகைய நிகழ்வு எல்லா அணுக்களிலும் இயல்பாக நிகழ்வதில்லை. ரேடியம், யுரேனியம் போன்ற கதிரியக்க தனிமங்களில்தான் நடைபெறுகிறது. இந்த அணுச் சிதைவின்போது ஆல்பா, பீட்டா, காமா ஆகிய மூன்று கதிர்கள் வெளிப்படுகின்றன. ஆல்பா கதிர் இரண்டு புரோட்டான்களையும் , நியூட்ரான்களையும் கொண்டது. ஆக யுரேனியம் ஒரு ஆல்பா கதிரை இழந்து தோரியமாக மாறுகிறது. பீட்டா கதிர் வெறும் எலெக்ட்ரானை மட்டுமே கொண்டுள்ளது. யுரேனியமானது இவ்வாறு ஆல்பா, பீட்டா கதிர்களை உமிழ்ந்து தோரியமாகவும், பின் மேலும் சில மாற்றங்களுக்குப் பிறகு அது ரேடியமாகவும் , பின் அது ரேடானாகவும், பின் அது பொலேனியமாகவும் மாறுகிறது. பின் கடைசியில் அது காரியமாகவும் மாறுகிறது. பின் அதில் மாற்றம் நிகழ்வதில்லை.

அணு இயற்பியலில் முக்கிய இடத்தை வகிப்பவர் ரூதர்போர்ட். 1908 ஆம் ஆண்டு இவர் நோபல் பரிசு பெற்றார். இவருடைய மாணவர்கள் 11 பேர் நோபல் பரிசு பெற்றனர் என்பதிலிருந்து ரூதர்போர்டை பற்றி அறியலாம். ரூதர்போர்ட் அணுவை ஆல்பா கதிர்களை வைத்து தாக்கினார். இதே போன்ற ஆராய்ச்சியில் மேரி க்யூரியின் மகள் ஐரீன் க்யூரியும் அவருடைய கணவர் பிரடெரிக் ஜோலியேவும் பல அணுக்களை ஆல்பா துகள்களை கொண்டு தாக்கினார். இதன் மூலம் பல தனிமங்களின் ஐசோடோப்புகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு செயற்கையாக ஐசோடோப்புகளை உருவாக்கியதால் இருவருக்கும் 1935 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரூதர்போர்டும், ஐரீன் க்யூரியும் அணுக்களை ஆல்பா துகள்களை கொண்டு தாக்கியபோது இத்தாலிய விக்ய்ஞானி என்ரிகோ பெர்மி அணுவைத் தாக்க நியூட்ரான்களை தேர்ந்தெடுத்தார். இது அணு இயலில் முக்கியமான நிகழ்ச்சியாகும். பெர்மி அணுவை குறைந்த வேகம் கொண்ட நியூட்ரான்களை கொண்டு தாக்கியபோது மிகப் பெரிய விளைவு ஏற்பட்டது. ஆனால் பெர்மிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இவருக்கு அடுத்து ஆட்டோ ஹான் என்பவரும் நியூட்ரான்களை கொண்டு அணுக்களை தாக்கினார். அவருக்கும் நடந்தது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. நடந்தது என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டவர் லிசே மைட்னர் என்னும் யூதப் பெண் ஆவார். அவரே இவ்விளைவு அணு பிளப்பு என்று கூறினார். அணுப் பிளப்புக்காக ஆட்டோ ஹானுக்கு 1945 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது பல யூத விக்ய்ஞானிகள் ஹிடலருக்குப் பயந்து அமெரிக்காவில் குடி ஏறினர். அப்பொழுதுதான் அணுவை பிளக்க முடியும் என்றும் , அப்படி பிளப்பின் போது பேராற்றல் வெளிப்படும் என்னும் செய்தி அமெரிக்காவை அடைந்தது. அப்பொழுது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டம் அடைந்திருந்தது. ஆக அணுவைப் பிளப்பதன் மூலம் அணு குண்டு என்ற பேரழிவு ஆயுதத்தை தயாரிக்கலாம் என்ற எண்ணம் உலக அளவில் எழுந்தது. ஆக அமெரிக்காவில் இருந்த விக்ய்ஞானிகள் அணு ஆயுத தயாரிப்பு என்ற நோக்கத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அமெரிக்க விய்ஞானிகளுக்கு ஹிட்லர் அணு குண்டு தயாரிப்பதற்கு முன் அணு குண்டை தயாரித்து விட வேண்டும் என்ற வெறி . அதனால் அவர்கள் அப்பொழுது அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட்டிடம் இதற்கான ஒப்புதல் பெற்றனர் . அதே நேரத்தில் ஜெர்மனியும் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்டது. நார்வேயில் இருந்த ஒரு கன நீர் ஆலையை எப்படியும் கை பற்றிவிட வேண்டும் என்று ஜெர்மனி மிகப் பிரயத்தனப்பட்டது . ஏனெனில் அணு ஆராய்ச்சியில் நியூட்ரான்களின் வேகத்தை குறைப்பதற்கும், மேலும் குளிர்விப்பானாகவும் கன நீர் பயன்பட்டது. அதற்காகவே அப்பொழுது உலகில் இருந்த அந்த ஒரே கன நீர் தயாரிப்பு ஆலையை கைபற்ற ஜெர்மன் பிரயத்தனப்பட்டது. அதனை முறியடிக்க அமெரிக்காவும் , பிரிட்டனும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.

யுரேனியத்தில் ஒரு ஐசொடோப்பான யுரேனியம் - 235 தான் அணுகுண்டு தயாரிப்பதற்கு ஏற்றது. ஆனால் யுரேனியத்தில் யுரேனியம்-235 0.7% இருக்கும். ஆகவே யுரேனியம்-235 ஐ பிரித்தெடுக்க அமெரிக்காவில் ஒரு ஆலை அமைக்கப்பட்டது. உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு 16 ஜூலை 1945 இல் பரிசோதிக்கப்பட்டது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் திருப்பமாக ஜெர்மனி அடி மேல் அடி வாங்கியது. பின் மே 8, 1945 அன்று ஜெர்மனி சரண் அடைந்தது. ஆனால் ஜப்பான் மட்டும் சரணடையாமல் தொடர்ந்து போரிட்டு வந்தது. அதனால் அதன் மீது அணு குண்டு வீசுவதென அமெரிக்க அதிபராக ரூஸ்வெல்ட்டுக்குப் பின் வந்த ட்ரூமன் முடிவெடுத்தார். ஆனால் அதனை எதிர்த்து பல விக்ய்ஞானிகள் அவருக்கு கடிதம் எழுதினர். இருந்த போதிலும் முதல் முதலாக 1945 ஆகஸ்டு 6 ஆம் தேதி ஹிரோஷிமாவின் மீது அன்று அணு குண்டு வீசப்பட்டது. அது யுரேனியம் -235 வகையைச் சார்ந்தது . அதற்கடுத்து மூன்று நாள் கழித்து ஆகஸ்டு 9 ஆம் தேதி நாகசாகியின் மீது அணு குண்டு வீசப்பட்டது. அது புளூட்டோனியம் வகையைச் சார்ந்தது.

நாம் இது வரை பார்த்தது அணுக்கரு பிளவு. ஓர் அணுவை நியூட்ரான் கொண்டு தாக்கும்போது அது இரண்டு அணுக்களாகப் பிரிகிறது . அப்பொழுது ஆற்றல் வெளிப்படுகிறது. இதுவே தத்துவம். இதற்குப் பின் அணுக்கரு இணைவின் மூலமும் ஆற்றல் வெளிப்படும் என்று கண்டறியப்பட்டது. இரண்டு ஹைட்ரஜென் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுவாக மாறும்போது மிகப் பெரிய ஆற்றல் வெளிப்படும் என்று கண்டறியப்பட்டது. அதாவது 2 gm எடை கொண்ட இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணு உருவாவதாக கொள்வோம். இப்படி உருவாகும் ஹீலியம் அணுவின் எடை 4gm ஆக இருப்பதில்லை. அதன் எடை 3.97gm ஆகவே இருக்கிறது. மீதி 0.03 gm ஆற்றலாக வெளிப்படுகிறது. இதுவே அணுக்கரு இணைவின் அடிப்படை. அணுக்கரு இணைவின் மூலம் வெளிப்படும் ஆற்றலானது அணுக்கரு பிளவின் மூலம் வெளிப்படும் ஆற்றலை விட பல மடங்கு அதிகம். சூரியனில் நடைபெறுவது இந்த நிகழ்வே. இதன் மூலமே சூரியனில் ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வாறு இரண்டு ஹைட்ரஜென் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுவாக மாறுவதன் மூலம் ஆற்றல் வெளிப்படும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அணு குண்டு ஹைட்ரஜென் குண்டு எனப்பட்டது . ஹைட்ரஜென் குண்டை முதன் முதலில் பரிசோதித்த நாடு சோவியத் ரஷ்யா . 1961 இல் ரஷ்யாவால் சோதிக்கப்பட்ட ஹைட்ரஜென் குண்டு ஹிரோசிமாவில் வீசப்பட்ட குண்டைப் போல் 6000 மடங்கு சக்தி வாய்ந்தது. இதுவரை உலகில் 500 க்கும் மேற்பட்ட தடவை அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் பின் அணுவை ஆக்க வேலைக்குப் பயன்படுத்த முதல் அணு மின்நிலையம் 1956 ஆம் ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது. இன்றைய அணு உலைகளின் அடிப்படை அணுகரு பிளவு ஆகும். யுரேனியம் அணுவை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது அது இரண்டு அணுவாகப் பிளந்து அதன் மூலம் ஆற்றல் வெளிப்படுகிறது. இப்படி பிளவின் மூலம் மேலும் பல நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை மற்ற யுரேனியம் அணுக்களை தாக்கி மேலும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்படி கட்டுபடுதப்படாத நிலையில் யுரேனியம் அணு பிளக்கும் செயலே அணு குண்டு ஆகும். ஆனால் அணு உலைகளில் இந்த யுரேனியத்தை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலைக் கொண்டு நாம் மின்சாரம் தயாரிக்கலாம். இதுவே இன்றைய அணு உலைகளில் நடைபெறுகிறது.

இன்றைய நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட வகையில் அணுக்கருவை இணைக்க முடியவில்லை. ஆனால் அதனை கட்டுப்படுத்தப்பட்ட வகையில் இணைத்தால் நாம் மின்சாரம் பெறலாம். அணுக்கரு இணைவின் மூலம் வெளிப்படும் ஆற்றலே மிக நல்லது. ஏனெனில் அணுக்கரு பிளவின் மிக முக்கிய அம்சம் கதிரியக்கமாகும். இது மிக ஆபத்தானது. இதற்க்கு அணு உலைகளில் மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. மேலும் எரிந்து முடிந்த யுரேனியமும் மிக ஆபத்தானது. அதனால் அதனை பாதுகாக்கவும் வேண்டி உள்ளது. ஆனால் இத்தகைய ஆபத்துகள் அணுக்கரு இணைவில் கிடையாது. மேலும் அணுக்கரு பிளவிற்கான எரிபொருள் யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை ஆகும். இவை மிக குறைந்த அளவே உள்ளன. அணுக்கரு இணைவிற்கு தேவையான எரிபொருள் மிக சாதாரணமான ஹைட்ரஜன். இது நீர் வடிவில் மிக அதிக அளவு உள்ளது. ஆக கட்டுப்படுத்தப்பட்ட வகையில் அணுக்கருவை இணைத்தால் நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. உலகின் முதல் அணுக்கரு இணைவு உலை தெற்கு பிரான்சில் அமைக்கப்பட்டு வருகிறது. இது ITER (International Thermonuclear Experimental Reactor)எனப்படுகிறது. இதில் சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா , ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்கின்றன.

அணு உலைகள் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆரம்ப காலத்தில் நீர் மூழ்கி கப்பல்கள் டீசல் என்ஜின் கொண்டு இயங்கின. இன்று பல நாடுகள் டீசல் என்ஜின் கொண்டு இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களையே கொண்டிருக்கின்றன. டீசல் என்ஜின் கொண்டு இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களில் பல இடர்பாடுகள் உண்டு. அதாவது டீசல் எஞ்சின்கள் அதிக சத்தம் எழுப்பக் கூடியவை. அந்த சத்தம் வெகு தூரம் நீரில் பரவும் . அந்த சத்தத்தைக் கொண்டு எதிரி நாட்டுக் கப்பல்கள் மிக எளிதாக இந்த நீர் மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழித்து விட முடியும். அதனால் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆபத்தற்ற பாதுகாப்பு பகுதிகளில் இருக்கும்போது தங்களுடைய பாட்டரிகளை recharge செய்து கொண்டு அதை வைத்து நீந்தும். மேலும் டீசல் நிரப்ப அவை அடிக்கடி தாய் நாட்டுக்குச் செல்ல வேண்டும். இத்தகைய இடர்பாடுகள் அணு உலைகளை பயன்படுத்தும் nuclear submarine களில் கிடையாது. இந்த nuclear submarine களில் சிறிய அணு உலைகள் இருக்கும். அவற்றின் மூலம் மின்சாரம் பெற்று நீர் மூழ்கி கப்பல்கள் இயங்கும், மேலும் கடல் நீரிலிருந்து குடி நீரையும் , ஆக்ஜிசனையும் பெற்றுக் கொள்ளும். ஒரு nuclear submarine தனக்குத் தேவையான உணவையும், மருந்துகளையும் நிரப்பிக் கொண்டால் அவை பல ஆண்டுகள் நீரின் மேற்பரப்புக்கு வராமல் நீரில் மூழ்கியே இருக்க முடியும். 1950 களின் மத்தியில் அமெரிக்கா முதல் nuclear submarine ஐ கட்டுவித்தது. இந்தியாவும் தனது முதல் nuclear submarine ஐ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று விமானம் தாங்கி கப்பல்களை இயக்கவும் அணு உலை பயன்படுகிறது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் செயற்கைகோள்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுகின்றன. அதற்காக அவற்றின் இறக்கை போன்ற பகுதிகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற ஒளித்தகடுகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் வெகு தொலைவில் வியாழன், செவ்வாய் போன்ற கோள்களை ஆராய அனுப்பப்படும் விண் ஓடங்களில் மேற்கூறிய முறையை செயல்படுத்த முடியாது. ஏனெனில் அவ்வளவு தொலைவில் சூரிய ஒளி மிகக் குறைவாகவே இருக்கும் . அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது. ஆக அத்தகைய ஓடங்களிலும் அணு உலைகளே பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா செலுத்திய ஒரு விண்வெளி ஓடத்தில் அதிக பட்சமாக 30 கிலோ புளூட்டோனியம் வைத்து அனுப்பப்பட்டது.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் எதிர் பொருள்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய பொருளும் அதன் எதிர் பொருளும் சந்தித்துக் கொண்டால் அவை ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு இறுதியில் வெறும் ஆற்றலே மிஞ்சும். இந்த பிரபஞ்சம் உருவானபோது அது பொருளையும், எதிர் பொருளையும் கொண்டிருந்தது. அத்தகைய பொருளும் எதிர் பொருளும் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் எதிர் பொருள் எல்லாம் மறைந்து இறுதியில் வெறும் பொருளே மிஞ்சியது. அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த வகையில் ஆராய்ச்சி நடத்திய போது விக்ய்ஞானிகள் புரோட்டான்களுக்கு எதிர் பொருளான எதிர் புரோட்டான்களையும், எலக்ட்ரான்களுக்கு எதிர் பொருளான பாசிட்ரான்களையும் , நியூட்ரான்களுக்கு எதிர் பொருளான எதிர் நியூட்ரான்களையும் கண்டறிந்தனர். இந்த எதிர் புரோட்டான்கள் எதிர் மின்னோட்டத்தையும், பாசிட்ரான்கள் நேர் மின்னோட்டத்தையும் கொண்டிருந்தன. எதிர் நியூட்ரான்களும் மின்நூட்டமற்றவையே. விக்ய்ஞானிகள் இவற்றைக் கொண்டு முதன் முதலில் 9 எதிர் ஹைட்ரஜன்களை உருவாக்கினர். ஆனால் அவை அற்ப காலமே உயிர் வாழ்ந்தன. அதாவது ஒரு நொடியில் 4000 த்தில் ஒரு பங்கே உயிர் வாழ்ந்தன. அதற்கடுத்து மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து 50,000 எதிர் ஹைட்ரஜன்களை உருவாக்கினர். இப்பொழுது இத்துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Friday, December 17, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 1

நான் முன்பே கூறியது போல இந்த உலகில் சில மனிதர்களைப் பற்றி பேசும்போதே எனக்கு பரவசம் பொங்கும். அவர்களைப் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றும். அவர்களைப் பற்றிய சிறிய சிறிய செய்திகளும் பரவசம் தரும். எனக்கு முக்கியமாக ஒருவரைப் பிடித்திருக்க வேண்டுமென்றால் அதுக்கு முக்கிய criteria அவர்கள் இந்தியாவிற்காக நல்லது செய்திருக்க வேண்டும் , தாங்கள் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். அத்தகையவர்களே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவிற்காக எதுவும் செய்யாமல் முக்கியமாக தங்களை இந்தியர் என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளாவிட்டால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் ஆனாலும் எனக்குப் பிடிக்காது. அத்தகையோர் பட்டியலே கீழே . இதில் இந்தியர் தவிர வேறு வெளிநாட்டவர் இடம் பெறாததில் வியப்பில்லை. நான் இங்கும் இடும் பட்டியல் வரிசைகிரகமாக இல்லை .

சர்தார் வல்லபாய் படேல் :


இந்தியாவின் இரும்பு மனிதர். தனி மனிதராக இந்தியாவை ஒருங்கிணைத்த மாமனிதர். இவர் இல்லையேல் இந்தியா இன்று துண்டு துண்டாகத்தான் இருந்திருக்கும். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் , முதல் துணை பிரதமராகவும் இருந்தவர். இந்திய பிரிவினையின் போது கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தனி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவற்றில் 565 ராஜ்ஜியங்கள் இந்தியாவில் இருந்தன. அவற்றை எல்லாம் இந்தியாவில் இணைக்க வழிகோலினார். இந்த 565 ராஜ்ஜியங்களில் ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் மட்டும் இந்தியாவில் இணைய மறுத்தன. இவற்றில் ஜுனாகத் பாகிஸ்தானுடன் இணையவும், ஹைதராபாத் தனியாக இருக்கவோ அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ இருந்தன. காஷ்மீர் தனி சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க விரும்பியது. இவற்றில் ஜுனாகத் மற்றும் ஹைதராபாத்தில் சுல்தான்கள் முஸ்லீம்களாகவும் மக்களில் 80% க்கும் மேல் இந்துக்களாகவும் இருந்தனர். ஜுனாகத்தும் ஹைதராபாத்தும் பாகிஸ்தானிலிருந்து வெகு தொலைவில் வேற இருந்தன . இருந்தபோதும் அந்த சுல்தான்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்த தனி ராஜ்ஜியங்களை தங்கள் இஷ்டப்படி பாகிஸ்தானுடனோ , இந்தியாவுடனோ இணையவோ அல்லது தனி சுதந்திரம் பெற்ற நாடாகவோ இருக்க அனுமதித்திருந்தது. இப்படி சட்டம் இந்த சுல்தான்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும் மக்களின் நலனையும் அவர்களின் ஏகோபித்த ஆதரவையும் கருத்தில் கொண்டு சர்தார் இந்த சுல்தாகளை இந்தியாவுடன் இணைய கோரினார். அவர்கள் மறுத்தபோது ராணுவத்தை அனுப்பி அவர்களை வழிக்கு கொண்டு வந்தார். இத்தகைய தைரியம் நேருவிக்கே கிடையாது. நேரு இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் தரமாட்டார் என்பதாலையே நேரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்தபோது acting prime minister ஆக இருந்து ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்பி அதனை இந்தியாவுடன் இணைத்தார்.

பாகிஸ்தான் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்தபோது அதனை தடுக்க உடனே ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று கூறினார். ஆனால் நேருவும் , மவுண்ட்பேட்டனும் காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் இணைவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்வரை காத்திருக்கச் சொன்னார்கள். இந்தியா காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பிய போது பாகிஸ்தானும் காஷ்மீரின் பாதி பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. அப்பொழுது நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்ற போது படேல் அதனை கடுமையாக எதிர்த்தார். படேல் நம் ராணுவத்தை வைத்தே நாம் முழு காஷ்மீரை கைபற்றிவிடலாம் என்று கூறினார். ஆனால் படேலின் எதிர்ப்பையும் மீறி நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்றார். அப்பொழுது ஐநா யார் யார் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துல்லார்களோ அவ்விடங்கள் அவரவருக்கு என்று கூறி விட்டது. அதனால் பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. நேரு மட்டும் படேலின் பேச்சை கேட்டிருந்தால் இந்நேரம் முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும். மேலும் சுதந்திரம் பெற்றபோது இந்திய அரசு பிரிவினைத்தொகையாக 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டி இருந்தது . அத்தொகையை பாகிஸ்தானுக்கு கொடுக்க கூடாது என்று படேல் கடுமையாக எதிர்த்தார் . ஏனென்றால் அப்பணத்தை பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் என்பதால். ஆனால் அப்பொழுது காந்தி அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அதனால் அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டி வந்தது . படேல் சொன்னது போலவே பாகிஸ்தான் அப்பணத்தை இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் பயன்படுத்தியது. இப்படி பல விசயங்களில் படேலின் பேச்சை கேட்காததாலையே இந்தியா இன்றும் கஷ்டப்படுகிறது. படேல் மட்டும் நேருவிற்கு பதிலாக பிரதமராக ஆகி இருந்தால் இந்நேரம் இந்தியா எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். இது நான் மட்டுமே கூறுவது அல்ல இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மற்றும் J.R.D.டாட்டா போன்றோரும் இதே கருத்தை கொண்டிருந்தனர்.

பீல்ட் மார்ஷல் சாம் மானக்சா :

சாம் பகதூர் என்று அழைக்கப்படும் சாம் மானக்சா பஞ்சாப் அமிர்தசரசில் பார்சி பெற்றோருக்குப் பிறந்தார். தன்னுடைய 40 வருட ராணுவ சேவையில் இரண்டாம் உலகப் போர், 1947 இந்தியா பாகிஸ்தான் போர் , இந்திய சீனப் போர் , 1965 இந்திய பாகிஸ்தான் போர் , 1971 வங்கதேசப் போர் ஆகிய போர்களில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போரில் இவருடைய பணி மிகவும் பாராட்டப்பட்டது. மானக்சா இத்தனை போர்களில் பங்கேற்றாலும் அவர் மிகப் பெரிய புகழ் பெற்றது 1971 வங்கதேசப் போர் ஆகும். வங்கதேசப் போரின் போது மானக்சா இந்தியாவின் எட்டாவது ராணுவத் தளபதியாக இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இப்போரில் இந்தியா மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்காலங்களில் நடைபெற்ற போரில் இப்போரே மிக குறுகிய காலத்தில் முடிந்த போராகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிக ராணுவ கைதிகள் சிறைபட்ட போராகும் . கிட்டத்தட்ட 90,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். இவருடைய பணியைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு மிக உயரிய பட்டமான பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளித்தது . இப்பட்டத்தைப் பெற்றவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் பீல்ட் மார்ஷல் கரியப்பா. இன்னொருவர் மானக்சா. மானக்சா 1971 போரின் முடிவில் எந்த அளவிற்கு மக்களிடம் புகழ் பெற்றிருந்தார் என்றால் , அப்பொழுது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எங்கே மானக்சா ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவாரோ என்று பயப்படுமளவுக்கு மானக்சா மக்களிடம் புகழ் பெற்றிருந்தார்.

இந்திரா காந்தி :

இந்தியாவின் அசைக்க முடியாத பிரதமராக இருந்தவர். இந்தியாவின் உறுதியான பிரதமராக இருந்தவர். இந்திரா காந்தி அவருடைய தந்தையான நேருவை விட பல விதங்களில் மாறுபட்டவர். இந்திரா காந்தி நேருவைப் போல் அல்லாமல் பல விசயங்களில் உறுதியான முடிவெடுத்தவர். இந்திரா காந்தியின் பல நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த துணைக்கண்டத்திலேயே மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் பல நடவடிக்கைகளை துணிந்து எடுத்தவர். என்னைப் பொறுத்தவரையில் இந்திய சீனப் போரின் போது நேரு அல்லாமல் இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால் நிச்சயம் அந்தப் போரின் முடிவு மாறி இருந்திருக்கும் அல்லது இத்தகைய படு தோல்வியை இந்தியா பெற்றிருக்காது. வங்கதேசப் போரில் இந்தியா பங்கெடுக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு மிகத் துணிச்சலான ஒன்று. நிச்சயம் நேரு இத்தகைய முடிவெடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற இந்திய பாகிஸ்தானியப் போரிற்கும் இப்போரிற்கும் மிக முக்கிய வித்யாசம் உண்டு. அது என்னவென்றால் இப்போரில் பாகிஸ்தான் முதலில் இந்தியாவுடன் நேரடியாக போர் தொடுக்கவில்லை . இப்போர் முதலில் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போராகவே இருந்தது. மேற்குப் பாகிஸ்தான் , கிழக்குப் பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தது. போர் என்பதைக்காட்டிலும் அட்டூழியம் பண்ணியது. பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் கிழக்கு பாகிஷ்தானிலிருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். பிற நாட்டின் பிரிவினை விரும்பாதது இந்தியாவின் கொள்கையாக இருந்த போதிலும் இந்தியா கிழக்குப் பாக்கிஸ்தானிற்கு ஆதரவாக போரில் இறங்கியது மிக முக்கிய நடவடிக்கையாகும். இப்போரில் நிச்சயம் பாகிஸ்தானிற்கு ஆதரவாக அமெரிக்க என்னும் மிகப் பெரிய பேரரசு போரில் இந்தியாவிற்கு எதிராக குதிக்கும் என்று தெரிந்த போதிலும் இந்தியா இப்போரில் குதித்தது. அமெரிக்காவிற்கு எதிராக அப்போதைய சோவியத் பேரரசின் ஆதரவை பெற்றது இந்திரா காந்தியின் அரசியல் ராஜதந்திரத்தை காட்டியது. இதன் மூலம் பாகிஸ்தான் என்னும் நம் எதிரியை இரண்டாகப் பிரித்தார். பங்களாதேஷ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தினார். பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகியது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை , இனப் படுகொலைகள் என்று வர்ணித்தார். இந்திரா காந்தி மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் மலர்ந்திருக்கும். சோவியத் பேரரசுடன் 20 வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன் மூலம் ராகேஷ் சர்மா விண் வெளிக்குச் சென்றார் . இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்ட தனி ராஜ்ஜிய மன்னர்களுக்கு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்திரா காந்தி பிரதமராக ஆன பிறகு வெள்ளை யானைக்கு தீனி போல அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த பென்சனை நிறுத்தினார்.

அதே போல் இந்திரா காந்தி தீவிரவாதத்திற்கெதிராக மிகத் தீவிர நடவடிக்கை எடுத்தார். அவர் காலத்தில் பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் உருவாகியது. அவர்கள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கி இருந்தனர். அவர்களை அழிக்க ராணுவத்தை பொற் கோயிலிற்குள் செல்ல உத்தரவிட்டார். இதன் மூலம் காலிஸ்தான் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அவரது உயிருக்கே உலை வைத்தது. என்னைப் பொறுத்தவரை இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சினை எல்லாம் எப்பொழுதே முடிந்திருக்கும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்திரா காந்தி 1974 இல் மேற்கொண்ட "புத்தர் சிரித்தார்" என்னும் அணு ஆயுத சோதனையே உலக அளவில் மிக அதிர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தியது. அது உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மேற்கொண்ட அணு ஆயுத சோதனை ஆகும். இத்தகைய சோதனையை செய்ய மிகத் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இந்திரா காந்திக்கு மட்டும்தான் இருந்தது . இது எந்த அளவிற்கு துணிச்சலான பெரிய செயல் என்றால் , அப்பொழுது ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருந்த அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவிற்கு அடுத்து அணு ஆயுத சோதனை செய்த ஒரே நாடு இந்தியாதான். இது எந்த அளவிற்கு உலகில் விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், இந்தியாவின் இந்த சோதனைக்கு அடுத்தே அணு தொழில்நுட்பம் வேறு நாடுகளுக்குச் செல்லமால் இருக்க Nuclear Suppliers Group ஆரம்பிக்கப்பட்டது.

இந்திரா காந்தியைப் பற்றி கடும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. அவரைப் பற்றி முக்கியமான கடும் விமர்சனம் அவருடைய emergency நடவடிக்கையாகும். அதேபோல் ரூபாயின் மதிப்பை குறைத்ததும் மிக தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருடைய emergency நடவடிக்கை சரியான ஒன்றுதான். அக்காலங்களில்தான் இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்காக நடந்தன. என்னைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை உருவாக்கிய பிரதமர்களிலே இந்திரா காந்திதான் மிகச் சிறந்தவர்.

பேரரசர் சாம்ராட் அசோகர்:

உலகிலேயே மிகப் பெரிய இந்தியப் பேரரசை அமைத்தவர் . இவருடைய பேரரசு மேற்கே பெர்சியா (இன்றைய ஈரான்) முதல் கிழக்கே அஸ்ஸாம் வரையிலும் , தெற்கே வட கேரளா , வட ஆந்த்ரா வரையிலும் பரவி இருந்தது. பேரரசர் அசோகரின் ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் ரத்த சரித்திரமே. தான் ஆட்ச்சிக்கு வர தன் அண்ணன்கள் அனைவரையும் கொன்றார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அவருடைய ராணுவம் தன் நாட்டின் எல்லையை விஸ்தீகரிக்க அண்டை நாடுகளின் மீது மிக பயங்கரமான போர்களைத் தொடுத்தது. அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது கலிங்கப்போர் ஆகும். கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா ஆகும். அக்காலத்தில் அக்கலிங்கம் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வரவில்லை. பேரரசர் சந்திரகுப்த மௌரியராலயே அதை மௌரிய பேரரசின் கீழ் கொண்டு வரமுடியவில்லை . அந்நாட்டின் மீது அசோகர் மிகப் பெரிய போர் தொடுத்தார். அப்போரின் முடிவில் கலிங்கம் தோற்றது. ஆனால் அப்போரின் விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்தது. அதனைப் பார்த்து பேரரசர் அசோகர் முற்றிலும் மனம் மாறினார். பௌத்த மதத்தை சார்ந்து அகிம்சாவாதியாக மாறினார். அதற்குப் பின் அவர் இவ்வுலகம் கண்டிராத மிகச் சிறந்த பேரரசராக விளங்கினார். அதற்கடுத்து அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை. தன் அண்டை நாடுகளுடன் மிகச் சிறந்த நல்லுறவை பேணினார்.

அகிம்சாவாதியாக மாறிய அவர் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக அடிமைத்தனம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல், காடு அழித்தலை தடை செய்தார். அவர் மக்களின் மீது மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்தினார். நாடு முழுவதும் மரங்களை நட்டார். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக தன் நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதிகளை அளித்தார். அவர் பௌத்த மதத்துக்கு மதம் மாறினாலும் பின் வந்த முஸ்லிம் மன்னர்களை போல் அல்லாமல் யாரையும் கட்டாயமாக மதம் மாற்றவில்லை. அனைத்து மதங்களையும் தன் மதத்தைப் போலவே எண்ணினார். பிற மதங்களுக்கு செய்யும் தீங்கு தன் மதத்திற்கே செய்யும் தீங்கு என்று கருதினார். பிற உயிரினங்களுக்கு செய்யும் தீங்கு தனக்கே செய்யும் தீங்கைப் போன்றது என்று எண்ணினார். தன் மக்களை ஒற்றுமையுடனும், அன்புடனும் பிற மத சகிப்புத்தன்மையுடனும் வாழுமாறு அறிவுறுத்தினார் . மனித வரலாற்றிலேயே முதல் முறையாக தன் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான முறையிலான உதவிகளை செய்தார். அவை மருத்துவம், பொறியியல், கிணறு வெட்டுதல், மரம் நடுதல் போன்றவையாகும். கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தார். உலக வரலாற்றிலேயே முதலில் அமைந்த நாலந்தா, தக்சசீல பல்கலைக்கழகங்களை அமைத்தார் . இததகைய பேரரசரை இவ்வுலகம் கண்டதில்லை என்பது போல் இருந்தது அவருடைய ஆட்சி . உலகம் இன்று ஏங்கும் மிகச் சிறந்த பேரரசர் அசோகர் ஆவார்.

Thursday, December 16, 2010

மனிதநேயத்தின் கடைசி காலடி சுவடுகள்

ராகவன் அன்று யோகா கிளாசுக்கு ரொம்ப லேட். எப்பொழுதும் விரைவில் கிளம்பி விடுவார் இன்று சற்று கண் அயர்ந்ததால் நேரமாகிவிட்டது. மனைவி பாக்கியத்தை பிடித்து திட்டிக் கொண்டிருந்தார். தான் தான் சற்று அதிக நேரம் தூங்கிவிட்டேன் நீயாவது என்னை எழுப்பி இருக்கக் கூடாதா என்று. அவர் எப்பொழுதும் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாதவர். அன்று ஏனோ சற்று கண் அயர்ந்துவிட்டார். ராகவன் பொதுவாக அதிக நேரம் தூங்கும் பழக்கம் இல்லாதவர். அதனாலேயே பாக்கியம் யோகா கிளாசை விட சற்று நேரம் கண் அயரட்டுமே என்று வேண்டுமென்றே தான் அவரை எழுப்பவில்லை. ராகவனுக்கு ஒரு 65 வயது இருக்கும். பாக்கியத்திற்கு ஒரு 62 வயது இருக்கும். இருவருக்கும் குழந்தை பாக்கியத்தை அந்த இறைவன் அருளவில்லை. இதனாலேயே அவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் குழந்தையாக இருந்தனர். ராகவன் மத்திய அரசுப் பணியில் கிளர்க்காக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று ஐந்து வருடம் ஆகிவிட்டது. ஓய்வு நேரத்தில் எப்பொழுதும் வீட்டில் இருக்க வேண்டாமே என்று பாக்கியம்தான் அவரை யோகா கிளாசில் சேரச் சொன்னாள். ராகவனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் . அவர்கள் அப்பா காலத்திலேயே சென்னையில் குடியேறிவிட்டனர். அவர்கள் அப்பா அம்மாவிற்கு பிறகு அவர்கள் குடியிருந்த வீடு இவருக்கு வந்தது. அவர்கள் வீடு பல்லாவரத்தில் இருந்தது. தினமும் யோகா கிளாசிற்கு கோடம்பாக்கம் செல்வார். அவரின் யோகா கிளாஸ் டீச்சர் அவரின் நண்பரின் நண்பர். அந்த யோகா கிளாஸ் டீச்சர் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். பள்ளி விட்டு ஓய்வு நேரத்தில் அவர் யோகா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

வீட்டிலிருந்து ராகவன் கிளம்பி விட்டார். அப்படியே நடந்து போய்க்கொண்டிருக்கும் போது அன்னைக்குன்னு பாத்து செருப்பு பிஞ்சு போச்சு. ஏற்கனவே பழைய செருப்புதான். அத இனியும் தச்சு போட முடியாது. செருப்பை உதறி விட்டு நடக்க ஆரம்பித்தார். திரும்பி வீட்டுக்கு நடந்து போய் வேற செருப்பு போட்டுக்கிட்டு போகலாமா என்று பாத்தார். ஆனால் இப்பொழுதே யோகா கிளாசுக்கு நேரம் ஆச்சு. 6.30 க்கு ஆரம்பிக்கும் கிளாஸ் எப்படியும் முடிய 7.30 அல்லது 7.45 ஆகிடும். இப்பொழுது வீட்டிலேயே 6.15 ஆச்சு. வீட்டிலிருந்து பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் 15 நிமிச நடை. 6.30 க்கு ட்ரைன பிடிச்சாலும் எப்படியும் கோடம்பாக்கம் போய்ச் சேர 7 ஆகிடும். யோகா கிளாஸ் டீச்சர் வீடு ஸ்டேஷனுக்கு பக்கம் தான். ராகவனுக்கு சக்கர வியாதி இருந்தது. கால்ல ஏதாவது கல்லு எதுவும் குத்தி வெறுங்கால்ல புண்ணு எதுவும் வந்தா ஆறாதேனு கொஞ்சம் பயமாவேற இருந்துச்சு. அவருக்கு யோகா கிளாஸ் அட்டென்ட் பண்றத விட அவர் ஜோட்டு ஆளுங்க அங்க கிளாசுக்கு வருவாங்க. அவங்கள்ள நாலஞ்சு பேரு நெருக்கமா பழக்கம் ஆகிட்டாங்க. அவங்கள பாக்குறதுதான் அவருக்கு முக்கியமாபட்டது. சரின்னு நடைய விறுவிறுன்னு கட்டினாரு. ஸ்டேஷன் போய்ச் சேர்ந்ததும் ட்ரைன் வந்துருச்சு. கொஞ்சம் கூட்டம்தான். செகண்ட் கிளாஸ் கம்பார்ட்மென்டா பாத்து ஏறிக்கிட்டாரு. மன்த்லி பாஸ் எடுத்துருக்கதால டிக்கெட்டுக்கு கியூல நிக்க வேண்டாம். நேர ட்ரைன் ஏறிடலாம். ட்ரைன் ஏறிடனவுடனே உக்கார சீட் கிடைக்குமான்னு பாத்தாரு. கிடைக்கல. சரின்னு நின்னுக்கிட்டே வந்தாரு. ட்ரைன் ரெண்டு மூனு ஸ்டேஷன தாண்டியது. அவரு பக்கத்துல ஒரு 20 வயசுப் பைய்யன் இருந்தான். பாக்க ரொம்ப டீசென்ட்டா இருந்தான். அவன் தோளுல போட்டுருந்த பையப் பாத்தப்ப எதோ என்ஜினீயரிங் காலேஜுல படிக்கிறவன் மாதிரி தெரிஞ்சது. பைய்யன் கொஞ்சம் மேட்டுக்குடி இளைஞனாத்தான் இருந்தான். கண்ண பாக்க பைய்யன் துறு துறுன்னு இருப்பான்னு தோணுச்சு. வாயில்ல ஏதோ பப்புல்கம் போட்டு மென்னுகிட்டு இருந்தான். அவன் பக்கத்துல்ல இன்னொருத்தன் நின்னுக்கிட்டு இருந்தான். அவன பாக்க ஒன்னும் டீசென்டா இல்ல. கொஞ்சம் பொறுக்கி மாதிரி இருந்தான். கொஞ்சம் நேரம் ஆச்சு பாத்தா அந்த பொறுக்கி அந்த பைய்யன் பான்ட் பாக்கெட்டுல இருந்த பர்ஸ எடுக்க கைய விட்டான். ராகவன் ஒரு நிமிஷம் சுதாரிக்கிறத்துக்குள்ள அந்தப் பைய்யன் டக்குனு அவன் கையைப் பிடிச்சிட்டான். திடீர்னு அந்தப் பொறுக்கி தன் முழங்கால்லுல இருந்து சட்டுன்னு ஒரு கத்திய எடுத்துட்டான். கத்தியப் பார்த்ததும் சுத்தி இருந்தவங்க எல்லாம் தள்ளிப் போய்ட்டாங்க. ஆனா அந்தப் பைய்யன் மட்டும் அசரல. அவன் பிடிச்ச பிடியையும் விடல. கண்ணுல மிரச்சி தெரியல. தைரியமா அவன் கைய பிடிச்சிருந்த பிடிய இறுக்கமா பிடிச்சான். டக்குனு அந்த ரௌடி அந்தப் பைய்யன் கையில சரக்குனு ஒரு வெட்டு வெட்டினான். டக்குனு அது கைய்ய கீறுச்சு. அப்பயும் அந்தப் பைய்யன் பிடிய விடல. சரக்குனு அந்த ரௌடி அந்தப் பைய்யன் வயித்துல கத்திய பாய்ச்சிட்டான். ஆழமாத்தான் பாய்ச்சிட்டான். அந்தப் பைய்யன் மெல்ல சரிஞ்சு கீழ விழுந்துட்டான். அந்த ரௌடி உடனே மவனே எவனாவது இவனைத் தொட்டீங்க அவ்ளோதான்னுனான். இவனுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் என்று சொல்லிட்டு பக்கத்துலயே நின்னுக்கிட்டான். கொஞ்ச நேரத்துல அடுத்த ஸ்டேஷன் வரவும் வேகமா இறங்கி ஓடிட்டான். பாத்தா அந்தப் பைய்யன் வண்டில தரையில ரத்த வெள்ளத்துல கிடந்தான். அடிவயித்துல கத்திய பாய்ச்சிட்டதால ரத்தம் நிக்கவே இல்ல. வண்டி ஸ்டேஷன விட்டு கிளம்பிருச்சு. கொஞ்ச நேரத்துல அந்தப் பைய்யன் மயங்கிட்டான். அப்பயும் யாரும் அந்தப் பையன நெருங்கல. கொஞ்ச நேரத்துல ராகவன்தான் மனசு தாங்காம அவன் பக்கத்துல நெருங்கி அவனைத் தூக்கினாரு. பாத்தா ரத்தம் நிக்காம போய்க்கிட்டே இருந்தது. அவனைத் தூக்கி அவரு மடியில வச்சுக்கிட்டாரு. உதவின்னு கூப்பிட்டா யாரும் வரல. ஜனங்கள நினைக்கவே அவருக்கு அருவெறுப்பா இருந்துச்சு. அப்பத்தான் அங்க இருந்த ஒரு முப்பது வயசுப் ஆளு துணைக்கு வந்தான். அவன வச்சுக்கிட்டு தன்னுடைய கர்சீப்ப எடுத்து அந்தப் பையனோட வயித்துல கட்டினாரு. இன்னம் ரத்தம் நிக்கல. இன்னம் ரொம்ப நேரம் ஆச்சுனா பைய்யன் தாங்கமாட்டான்னு தோணுச்சு. கொஞ்ச நேரத்துல அடுத்த ஸ்டேஷன் வந்துருச்சு. வேகமா ராகவன் அந்த 30 வயது ஆளோட இவன தூக்கிட்டு இறங்கினாரூ. அவன தூக்கிட்டு ஸ்டேஷன்ல போகும்போது ஜனங்க வெறுச்சு வெறுச்சு பாக்குறாங்களே தவிர யாரும் உதவிக்கு வரல. அங்க பாத்தா RPF போலீஸ் யாரும் இல்ல. ராகவனும், அந்த முப்பது வயசு ஆளும் அவனைத் தூக்கிட்டு ஸ்டேஷன விட்டு வெளிய வந்தாங்க. அங்க ஒரு ஆட்டோவைப் பிடிச்சு பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டலுக்கு போனாங்க. அங்க முதல்ல அந்தப் பையன சேத்துக்கல. அப்பறம் ராகவன்தான் கெஞ்சிக் கூத்தாடி சேத்துக்க வச்சாரு. அவன் பைய நோண்டிப் பாத்ததுல அவன் செல்போன் கிடைச்சது. அதுல அம்மான்னு இருந்த நம்பருக்கு போன் பண்ணி விசயத்த சொன்னாரு.


அந்த முப்பது வயது ஆளுட்ட வா நாம போய் RPF ல கம்ப்ளைன்ட் கொடுப்போம்னு சொன்னாரு. அதுக்கு அந்த ஆளு போங்க சார் நான் தினைக்கும் இந்த ட்ரைன்ல தான் வேலைக்கு போயிட்டு வர்ரேன். நான் கம்ப்ளைன்ட் பண்ணா அந்த ரௌடி இன்னைக்கு இல்லாட்டியும் இன்னொரு நாளு என்ன குத்திருவான். ஏதோ பாவம் இந்தப் பையன பாக்க பாவமா இருந்துச்சேன்னு வந்தேன். வந்த வேலை முடிஞ்சுருச்சு நான் கிளம்பறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டான். ராகவன்தான் அந்தப் பைய்யன் வீட்டுல இருந்து ஆளுங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி அவங்க வந்ததும் நடந்த விசயத்த எடுத்துச் சொன்னாரு. அந்தப் பையனோட அம்மாவும் அப்பாவும் அவர கை எடுத்துக் கும்பிட்டாங்க. அப்பத்தான் ராகவன் ஒரு அப்பாவோட வலிய உணர்ந்தாரு. அவங்கட்ட வாங்க போய் RPF ல கம்ப்ளைன்ட் பண்ணுவம்னு சொன்னதுக்கு அவங்க வேண்டாம் சார் என் பைய்யன் பொழச்சு வந்ததே போதும். போலீஸ் அது இதுன்னு வேணாம். என் பைய்யன் அந்த ட்ரைன்லதான் தினைக்கும் காலேஜ் போயிட்டு வர்றான். அந்த ரௌடியால இனிமேலும் பிரச்சினை வேண்டாம். நாம இத இத்தோட விட்டுருவம்னு சொன்னாங்க. அவங்கட்ட இருந்து விடை பெற்று ராகவன் வீட்டுக்கு திரும்பி கிளம்பினாரு. வர்ற வழியெல்லாம் மக்களோட மனசு எந்த அளவுக்கு கடினப்பட்டுப் போய்டுச்சுன்னு மனம் வெதும்பிகிட்டே வந்தாரு. வீட்டுக் வந்து சேரும்போது மணி 11. பாக்கியம் என்னவோ ஏதோனு பயந்துகிட்டு வாசலுலயே காத்துகிட்டு இருந்தா. உள்ள போனதும் ராகவன் நடந்ததெல்லாம் ஒன்னு விடாம சொன்னார். அவருக்கு எல்லாத்தையும் விட மக்களின் மனம் எந்த அளவுக்கு கடினப்பட்டிருந்தால் ஒரு பைய்யன் உயிருக்குப் போராடினதப் பாத்துக்கிட்டே இருந்து எந்த உதவியும் செய்யாம இருப்பாங்கனு தோணுச்சு. மக்கள் இவ்வளவு கேவலமா போயிட்டாங்களான்னு அவருக்கு வெறுப்பா இருந்துச்சு. அதுக்கும் மேல அந்த ரௌடி எந்த தண்டனையும் இல்லாம தப்பிக்கிறத அவரால தாங்க முடியல. அத அவரு பாக்கியத்துட்ட சொன்னபோது பாக்கியம் , அந்தப் பைய்யன் பொழச்சுட்டான்ல அது போதும். அந்த ரௌடிய கடவுள் தண்டிப்பார். நீங்க மனசப் போட்டு அலட்டிக்காம தூங்குங்கனு சொன்னா. ஆனா ராகவனுக்குத்தான் தூக்கம் வரல. இப்படியே கடவுள் தண்டிப்பாருனோ இல்ல ரௌடிக்கு பயந்துட்டோ யாரு அவன காட்டிக் கொடுக்காம இருந்தா எப்படின்னு அவருக்கு எண்ணம் ஓடிக்கிட்டே இருந்தது. மறுநாள் பகல் முழுவதும் இதே எண்ணம்தான் . அன்றும் வழக்கம் போல் யோகா கிளாசிற்கு கிளம்பிச் சென்றார். வரும் வழியில் அந்த ட்ரைன் முழுவதும் அந்த ரௌடி இருக்கிறானா என்றே மனம் தேடி அழைந்தது. யோகா கிளாசிலும் அவர் மனம் முழுவதும் இதே எண்ணமாக இருந்தது. யோகா கிளாஸ் முடிந்ததும் அவர் நண்பர்கள் ஏன் இன்று என்னவோ போல் இருக்கிறாய் என்று கேட்டனர். அவர் முந்தின நாள் நடந்ததை கூறினார். அத்துடன் அந்த ரௌடி எந்த தண்டனையும் இல்லாமல் தப்பிப்பதையும் . அவனால் இன்னும் எத்தனை பேருக்கு தீங்கு ஏற்படுமோ என்று தான் கலங்குவதையும் கூறினார். ஒவ்வொருவரும் பயந்துகிட்டு இருந்தா அந்த ரௌடிக்கு தண்டனையே கிடைக்காதுல என்றார். அவர் நண்பர்கள் ஆளுக்கு ஒன்ரொன்று சொன்னனர். சிலர் அவனை போலீசில் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றும் மற்றும் சிலர் எதுக்கு வம்பு அவனை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் கூறினர். ராகவனுக்குத்தான் மனசு ஆறவில்லை. கடைசியில் அனைவரும் சரி RPF இல் சென்று கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று ஒரு மனதாக முடிவுக்கு வந்தனர்.

எல்லாரும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த RPF போலிசை பார்த்து நடந்ததை கூறினர். அதை நன்றாக கேட்ட போலீஸ் ராகவனிடம் உங்களால் அந்த ரௌடியை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டனர் . அதற்கு ராகவன் தன்னால் முடியும் என்று கூறினார். அந்த ரௌடி நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த ட்ரைன்ல ரெகுலரா வர்றவன் மாதிரிதான் தெரியுது . நாளைக்கு நீங்க சம்பவம் நடந்த அன்னைக்கு எத்தன மணிக்கு ட்ரைன் ஏறினீங்களோ அத்தன மணிக்கு நாளைக்கும் ட்ரைன் ஏறுங்க . உங்களோட எங்க போலீஸ் நாலு பேரும் வருவாங்க. நீங்க அவன கைய்ய காட்டிட்டு ஒதுங்கீருங்க. மத்தத எங்க ஆளுங்க பாத்துக்குவாங்கனு சொன்னாங்க. அதே மாதிரி ராகவனும் மறுநாள் அதே மாதிரி 6.30 மணிக்கு ட்ரைன் ஏறினார். அவருடன் நாலு போலிசும் ஏறினாங்க. ராகவன் ட்ரைன் முழுவதும் அலசி ஆராய்ந்தார். அவனைக் காணவில்லை. அன்று முழுவதும் அப்படியே போய் விட்டது. அன்று அவனைக் காணவில்லை . அதனால் போலீஸ் நாம் இன்னும் நான்கு நாள் பார்ப்போம் என்றனர் . ராகவனும் ஒத்துக்கொண்டார். அன்று இரவு வீடு திரும்பினார். எதையும் மறைக்காமல் பாக்கியத்திடம் கூறும் அவர் இதை மட்டும் கூறவில்லை. பாக்கியம் இதைக்கேட்டு பயந்துவிடுவாள் என்பதோடு தன்னை ஒரு வேளை தடுத்துவிடுவாளோ என்றும் எண்ணினார். மறுநாளும் அதே மணிக்கு கிளம்பினார். அன்றும் கிடைக்கவில்லை. மனம் தளராமல் மூன்றாம் நாளும் ட்ரைன் ஏறினார். அந்த ரௌடி பழவந்தாங்கல் ஸ்டேஷனில் ஏறினான். அவனைப் பார்த்ததும் ராகவன் அடையாளம் கண்டுகொண்டார். அருகிலிருந்த போலீசிடம் அடையாளம் காட்டினார். உடனே போலீஸ் அவனை கொத்தாக தூக்கிவிட்டனர். அவன் தன்னை எதற்கு பிடிக்கிறீர்கள் என்று கத்திக் கொண்டே இருந்தான் . போலீஸ் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை. அவனைப் பிடித்துக் கொண்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விட்டனர். அடுத்து ராகவன் தன் வீடு வந்து சேர்ந்தார். அவனைப் பிடித்துக் கொடுத்ததில் மன நிறைவு அடைந்தார். அன்று ஏதோ நிம்மதியாக உறங்கினார்.

தவறின் ஒரு பகுதிக்கு காரணமான ரௌடியைப் பிடித்துக் கொடுத்துவிட்டார். தவறின் மறுபகுதியான எந்த உதவியுமே செய்ய வராத அந்த பொது மக்களை யார் பிடித்துக் கொடுப்பார்.

Wednesday, December 15, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் இடங்கள்

எனக்கு சில விசயங்களை , சில இடங்களை , சில மனிதர்களைப் பற்றி கேட்கும் போது , பார்க்கும் போது மிக பரவசமான நிலை ஏற்படும். அவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் , பார்க்க வேண்டும் என்று தோன்றும் . அவை, அவர்கள் இந்த உலகில் மிக உன்னதமான நிலை வகிப்பவர்கள் கூட. நான் இங்கு என்னை பரவசப்படுத்தும் இடங்களைப் பற்றி மட்டுமே கூறுகிறேன். என்னைப் பரவசப்படுத்தும் மனிதர்களையும் சம்பவங்களையும் தனிப் பதிவுகளில் கூறுகிறேன். நான் இங்கு கூறும் இடங்கள் வரிசைகிரமாக இல்லை . இப்பகுதியில் உள்ள வெளிநாட்டில் அமைந்த பகுதிகள் இந்தியாவில் அமையாமல் வேறுநாட்டில் அமைந்துள்ளனவே என்று நான் அதிகம் வருத்தப்படும் இடங்கள் ஆகும் .

அமேசான் மழைக் காடுகள் :


அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் மிக அதிக பரப்பளவை ஆக்கிரமித்த உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் ஆகும். நான் அமேசான் மழைக்காடுகள் என்று கூறும் போது அது அமேசான் ஆற்றையும் சேர்த்துதான் . நம்மால் அமேசான் காடுகளையும் , அமேசான் ஆற்றையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுதான். அமேசான் பேசின் எனப்படும் பகுதியானது மொத்தம் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்த பகுதி . இவற்றில் 55 லட்சம் சதுர கிலோமீட்டர் அமேசான் மழைக்காடுகளாகும். இந்தப் பகுதியானது மொத்தம் ஏழு நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் 60% மழைக் காடுகள் பிரேசில் நாட்டில் மட்டும் பரவியுள்ளது. உலகில் உள்ள மழைக்காடுகளில் அமேசான் மழைக்காடுகள் மட்டும் பாதி அளவை ஆக்கிரமித்துள்ளன. உலகில் உள்ள உயிரினங்களில் பத்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள மொத்த பறவை இனங்களில் ஐந்தில் ஒன்று இந்தக் காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள பூச்சி இனங்களில் மொத்தம் 25 லட்சம் பூச்சி இனங்கள் இங்குதான் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகள் ஆப்ரிக்கா போன்று மிகப் பெரிய பாலூட்டிகளை கொண்டிருப்பதில்லை. ஏனெனில் யானை போன்ற மிகப் பெரிய பாலூட்டிகள் உலாவ மிகப் பரந்த , அதிக நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . மேலும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலகினங்கள் பாய்ந்து வேட்டையாட மிகப் பெரிய நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . அமேசான் மழைக் காடுகள் அப்படிபட்டவை அல்ல. அவை மிக நெருக்கமான மரங்கள் அடர்ந்த பகுதியாகும். அமேசான் மழைக் காடுகளில் மிகச் சிறிய உயிரினங்களே அதிகம் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகளில் வசிக்கும் மிகப் பெரிய உயிரினங்கள் கருப்பு கைமேன் எனும் முதலை, ஜாகுவார் என்னும் சிறுத்தை போன்ற விலங்கு, கவ்கர் என்னும் சிங்கம் போன்ற விலங்கு , அமேசான் காடுகளுக்கே உரித்தான அனகோண்டா பாம்பு ஆகும். அமேசான் காடுகள் அவற்றிற்கே உரித்தான விஷ தவளைகளையும், பிரான்கா என்னும் பற்களை கொண்ட மீன் இனத்தையும் கொண்டிருக்கின்றன . பிரான்கா பற்றி நிறைய கதைகள் கூறப்படுகின்றன . அதில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரேசிலுக்கு பயணம் செய்த போது அவரைக் கவர வேண்டி பிரேசில் மீனவர்கள் ஒரு மாட்டை பிரான்கா நிறைந்த ஆற்றில் தூக்கிப் போட்டார்களாம். கண நேரத்தில் அந்த மாட்டின் எலும்புக் கூடே மிஞ்சியதாம்.

அமேசான் ஆற்றைப் பற்றிக் கூறுவதென்றால் அதுவே உலகின் மிகப் பெரிய ஆறாகும் . உலகின் இரண்டாவது நீளமான ஆறும் கூட. அமேசான் ஆறு வெளியேற்றும் நீரானது , உலகில் அதனை அடுத்துப் பெரிய ஆறு ஆறுகள் வெளியேற்றும் நீரை விட அதிகம். கோடை காலங்களில் அமேசான் ஆற்றின் அகலம் 1.6 km முதல் 10km வரையாகும். மழைக்காலத்தில் இதுவே 48km வரை நீளும் . அமேசான் ஆற்றின் முகத்துவாரம் 240km அகலம் கொண்டதாகும். அதனாலேயே இது ஆற்று கடல் என்று கூறப்படுகிறது. அமேசான் ஆற்றின் எந்தப் பகுதியும் பாலங்களால் கடக்கப்படுவதில்லை. கோடை காலங்களில் 1,10,000 sqkm நிலமானது நீரால் சூழப்படுகிறது. மழைக்காலத்தில் 3,50,000 sqkm நீரால் சூழப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் அமேசான் வெளியேற்றும் நீரானது மிக அதிக அளவாகும் . ஒரு வினாடிக்கு சராசரியாக 3,00,000 கன மீட்டர் நீரை மழைக்காலங்களில் வெளியேற்றுகிறது . உலகில் உள்ள ஆறுகள் கடலில் கொண்டு சேர்க்கும் நீரில் 20% அமேசான் கொண்டு சேர்க்கிறது.

கோனார்க் சூரிய கோயில் :


கோனார்க் சூரிய கோயில் ஒரிசாவில் அமைந்துள்ள சூரியனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும் . இது 13 நூற்றாண்டை சேர்ந்தது. இது கங்கா அரச பரம்பரையை சேர்ந்த முதலாம் நரஷிம்ஹவர்மனால் சூரிய தேவனுக்கு கட்டப்பட்டது. இக்கோயில் ஒரு தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டது. இது சூரிய கதிரில் உள்ள ஏழு வண்ணங்களை குறிக்கும் வகையில் ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதாகவும் , மிக அழகிய 12 சக்கரங்களை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கோனார்க் சூரிய கோயிலின் மிக அதிக பகுதிகள் வங்காள சுல்தானாக இருந்த சுலைமான் கான் கர்ரானியால் அழிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இக்கோயில் மிக அழகாக உள்ளது. இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் கோனார்க் கோயிலை நேரில் பார்த்துள்ளேன் என்பதில் மிகப் பெருமிதம் அடைகிறேன்.

தஞ்சை பெரிய கோயில் :


தஞ்சை பெரிய கோயில் ராஜராஜனால் 1000 (கிபி 1010) ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது சோழர்களின் கட்டிடக்கலையை காட்டுவதோடு இந்தியாவின் கட்டிடக்கலைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது இதன் வகையில் உள்ள கோயில்களில் உலகிலேயே உயர்ந்த கோயிலாகும். இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றும் தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலுக்கும் நான் சென்றுள்ளேன்.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் :


மதுரை எனக்கு சொந்த ஊர் என்பதாலேயே எனக்கு அந்த ஊரின் மீதும் , அதைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் எனக்கு பரவசம் தரும் . மதுரை மாநகரம் 2500 ஆண்டுகள் பழமையானது. முப்பெரும் வேந்தர்களான பாண்டியர்களின் தலை நகரமாக காலம் காலமாக இருந்த நகரமாகும். இக்கோயில் அந்த ஊரில் அமைந்த மிக அழகிய கோயிலாகும். இக்கோயில் மிகப் பழமையானது என்ற போதிலும் இதனுடைய தற்போதைய வடிவம் 1600 இல் கட்டப்பட்டது. உலகில் உள்ள இந்துக்களின் மிக முக்கிய கோயிலாகும் . இதனுடைய மற்றொரு சிறப்புக்குக் காரணம் இங்கு அம்மன் ஆட்சி நடப்பதாகும். இக்கோயிலில் அம்மனுக்கே அதிக முக்கியத்துவம். உலகில் புதிய ஏழு அதிசயங்களில் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றபோது அதில் முதல் 21 இடங்களுக்குள் வந்த கோயிலாகும். NDTV நடத்திய இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோயிலாகும். உலகில் அதிக சிலைகள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் பதினான்கு கோபுரங்களை கொண்டுள்ளது. இக்கோயில் உலகின் பண்பாட்டுச் சின்னமாக UNESCO ஆல் அறிவிக்கப்படப்போகும் நாளை மிக ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன்.

அங்கோர்வாட் :


அங்கோர்வாட் கோயில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் சூர்யவர்மனால் விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட கோயிலாகும். இது உலகில் உள்ள சமயம் சார்ந்த மிகப் பெரிய கட்டிடமாகும். இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். முதலில் இந்துக் கோயிலாக இருந்த இது பின் புத்த விஹாராக மாற்றப்பட்டது. இது UNESCO வின் உலக பண்பாட்டுச் சின்னமாக 1992 இல் அறிவிக்கப்பட்டது. கம்போடிய நாட்டுக் கொடியில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது. மிக சிதிலமடைந்த நிலையுள்ள இக்கோயிலில் இந்திய அகழ்வாராய்ச்சி துறையானது 1986 முதல் 1992 வரை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. இக்கோயிலுக்குச் செல்லவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும்.

காஸிரங்கா தேசியப் பூங்கா :


காஸிரங்கா தேசியப் பூங்கா இந்தியாவின் அமேசான் என்று கூறலாம் . இது அமேசான் போன்று அதிக அடர்த்தியான காடுகளைக் கொண்டிருக்கவில்லை . நான் ஏன் இதை இந்தியாவின் அமேசான் என்று கூறுகின்றேன் என்றால் இது அமேசான் போன்று இந்தியாவிலேயே அதிக வன உயிரினங்களை கொண்டிருக்கிறது. உலகிலே இருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களில் மூன்றில் இரண்டு இங்குதான் உள்ளது. கிட்டத்தட்ட 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு உள்ளன. இதுவே உலகில் மிக அதிக புலிகளை கொண்டுள்ள பகுதியாகும் . கிட்டத்தட்ட 86 புலிகள் இங்கு உள்ளன. கிட்டத்தட்ட 2000 யானைகளும், 1600 க்கு மேற்பட்ட ஆசிய காட்டு நீர் எருமைமாடுகளையும் கொண்டுள்ளது. இப்பூங்கா 1905 ஆம் ஆண்டு வன உயிரியல் சரகமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவின் மனைவியான மேரி விக்டோரியா உலகின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காஸிரங்காவிற்கு பயணம் செய்த போது அவரால் ஒரு காண்டாமிருகத்தையும் காண முடியவில்லையாம். அவரின் வற்புறுத்தலின் பேரில் கர்சன் பிரபு இப்பூங்காவை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்தாராம். அப்பொழுது 12 காண்டாமிருகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்காவில் இப்பொழுது 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன . இந்தியாவின் பல தேசியப் பூங்காக்கள் தங்கள் வன உயிரினங்களை காப்பாற்ற போராடும் போது இந்தப் பூங்காவே இந்தியாவில் வன உயிரினங்களை அதிகரித்த பூங்காவாகும் . இது ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் ,புலி , யானைகளையும் குறிப்பிடும். இத்தனைக்கும் இப்பூங்கா காண்டாமிருகங்கள் மற்றும் புலிகளின் உறுப்புகள் அதிகம் தேவைப்படும் சீனாவிற்கு மிக அருகில் உள்ளது. இப்பூங்கா UNESCO ஆல் உயிரியல் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.

கைலாயம்:


இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் கைலாயம் செல்ல வேண்டும் என்பதே மிகப் புனித கடமையாகும். உலகின் மிக மூத்த மதமான ஹிந்து மதத்தைச் சார்ந்த எனக்கும் மிக அதிக பரவசமூட்டக் கூடிய இடமாகும். கைலாய மலை நான்கு சமயங்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவை இந்து, புத்தம், ஜைனம் மற்றும் போன் ஆகும். இம்மலையிலிருந்து உலகின் நான்கு முக்கிய ஆறுகள் புறப்பட்டு உலகை நான்கு பகுதிகளாக பிரிக்கின்றது என்பது ஐதீகம். இம்மலை திபெத்தில் உள்ளது . இம்மலையை வலம் வருவது இந்நான்கு சமயங்களிலும் மிக முக்கியமான கடமையாகும். இந்துக்களும் , புத்தர்களும் இம்மலையை clockwise ஆகவும், ஜைனர்களும், போன் மதத்தைச் சார்ந்தவர்களும் counter clockwise ஆகவும் வலம் வருவார்கள். இந்து சமயத்தில் இம்மலை சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் குடி இருக்கும் இடமாகும்.

Friday, December 10, 2010

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா

சமீப காலத்தில் இந்தியாவிற்கு இரண்டு சர்வதேச முக்கிய தலைவர்கள் வந்தனர். அவர்களின் வருகை மிக முக்கியமாகப்பட்டது. ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றொருவர் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி . இருவரின் வருகையுமே இந்தியாவிற்கு முக்கியமான நிகழ்வு. இந்தியாசர்வதேச அளவில் தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்வதோடு சர்வதேச அளவில் தனக்கான உரிமையான இடத்தை பெறத்துடிக்கும் இந்த காலத்தில் இருவரின் வருகையுமே அரசியல் ரீதியாக முக்கியமாகப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. இருந்தபோதிலும் அரசியல் ரீதியான நிகழ்வுகளே உலக அளவில் கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்தியா ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்பதே சர்வதேச அளவில் இந்தியாவின் மிக முக்கியமான கொள்கையாக இருக்கும் இந்த காலத்தில் இருவரின் வருகையுமே மிக முக்கியமாகப்பட்டது.

கடந்த காலங்களில் மிக முக்கிய வெளிநாட்டுத் தலைவர்கள் வருகைக்கும் , தற்போது வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் வருகைக்கும் மிகப் பெரிய மாற்றம் உள்ளது. கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகவே இருந்தது. அதாவது இந்தியா எந்த அளவிற்கு அவர்களிடமிருந்து சமூக முன்னேற்றத்திற்கான சலுகைகள் பெறுவதின் அடிப்படையிலே இருந்தது. அக்காலங்களில் இந்தியா ஒரு மக்கள்தொகை மிகுந்த அதனால் வறுமையும் , பிணியும் பீடித்த , தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்கே வெளிநாட்டின் தேவைகளை எதிர்பார்த்த , தன்னுடைய முன்னேறத்திற்கு வழி தெரியாத ஒரு நாடாகவே பார்க்கப்பட்டது. அக்காலங்களில் இத்தகைய வெளிநாட்டுத் தலைவர்கள் தங்களின் இந்திய வருகையின் மூலம் தங்களை இந்தியாவின் அனாத ரட்சகர்களாகவே காட்டிக்கொண்டனர். ஏதோ அவர்கள் தங்களின் இந்திய வருகையின் மூலம் தங்களை உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட முன்னேற வழி தெரியாத நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு படி அளப்பவர்களாகவும் , தாஜ் மஹால் முன்னால் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். கிட்டத்தட்ட அதில் உண்மையும் இருந்தது.

இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் , மக்கள் தொகையில் இரண்டாவது நாடாகவும், தெற்காசியாவில் மிகப்பெரிய நாடாகவும் இருந்த போதும் இதற்குமுன் எப்பொழுதும் சர்வதேச அளவில் பெரிய நாடாக எண்ணப்பட்டதில்லை. அதற்கு முக்கிய காரணம் அக்காலங்களில் அதிக மக்கள் தொகை ஒரு நாட்டின் பிணியாகவும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடைக் கல்லாகவும் பார்க்கப்பட்டது.

ஆனால் தற்காலத்தில் உலகின் கண்ணோட்டமே மாறுபட்டுவிட்டது. ஒரு காலத்தில் மக்கள் தொகை பிணியாக எண்ணப்பட்ட காலம் போய் இப்பொழுது அது ஒரு நாட்டின் வளமாக எண்ணப்படுகிறது. ஒரு காலத்தில் மக்களுக்கு பணம் செலவழித்து சேவை செய்வது போய் இப்பொழுது சேவைகளின் மூலம் பணம் பண்ணும் தொழிலை உலகம் கற்றுக் கொண்டது. அதனால் சிந்திப்பதற்கு நூறு கோடி மூளைகளையும் , வேலை செய்வதற்கு இரநூறு கோடி கைகளையும் கொண்ட இந்தியாவை உலகம் மிக முக்கிய சந்தையாகப் பார்க்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு படி அளக்க வருகை தந்த வெளிநாட்டுத் தலைவர்கள் இப்பொழுது தங்கள் நாட்டிற்கு படி அளக்க இந்தியா வருகிறார்கள்.

அமெரிக்க அதிபராக இருந்த புஷ் மேற்கொண்ட அணு தொழிநுட்ப ஒப்பந்தமே உலக அளவில் இந்தியாவை ஒரு மிக முக்கிய நாடாக அங்கீகரித்ததின் முதல் படி. அது ஒரு அளவில் பொருளாதார ஒப்பந்தமாக இருந்த போதிலும், இந்தியா NPT யில் கையொப்பம் இடாத போதிலும் இந்தியாவுடனான அந்த அணு ஒப்பந்தம் ஏற்பட்டது அரசியல் ரீதியில் மிக முக்கியமானது. அந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின் பற்றாக்குறையை போக்கும் என்பதோடு இந்தியாவை உலகில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் நாடு என்று அங்கீகரித்த ஒப்பந்தம். புஷ்ஷின் இந்திய வருகையின் போதே அமெரிக்கா , ஐநாவின் பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைப் பெறவில்லை.
புஷ்ஷின் இந்திய வருகைக்குப் பிறகு இந்தியா உலகில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. அத்துடன் அமெரிக்கா இந்தியாவுடன் செய்துகொண்ட இந்த அணு ஒப்பந்தம் போல , தன்னுடைய நட்பு நாடாக பாகிஸ்தான் இருந்த போதும் மேலும் பாகிஸ்தான் வாய் விட்டு தன்னுடன் அதே ஒப்பந்தத்தை செய்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதும் அமெரிக்கா மறுத்துவிட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றி . கடந்த காலங்களில் ரஷ்யாவுடன் நட்பு நாடாக இருந்த இந்தியாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக, இந்தியாவிற்கு ஒரு மாற்றாக அமெரிக்கா பாகிஸ்தானை பார்த்தது. இந்தியாவுடனான இந்த அணு ஒப்பந்தமும், பாகிஸ்தானுடன் அதே போன்று ஒரு ஒப்பந்தம் செய்ய மறுத்ததும் பாகிஸ்தான் என்றுமே இந்தியாவிற்கு ஒரு மாற்று அல்ல என்று அமெரிக்கா புரிந்து கொண்டதின் ஒரு அறிகுறி. இதனாலையே "இந்தியா - பாகிஸ்தான்" பாலிசியாக இருந்த அமெரிக்காவின் பார்வை இந்தியா, பாகிஸ்தான் பாலிசியாக மாறியது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைத்து அமைந்த பாலிசி, இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு பாலிசியாக மாறியது.

கடந்த காலங்களில் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நட்பிற்கும் , தற்காலத்தில் பாகிஸ்தானுடனான அதன் நட்பிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடந்த காலங்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பிற்கு எதிராகவும், தெற்காசியாவில் இந்தியாவிற்கு ஒரு மாற்றாகவும் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நட்பு இருந்தது. ஆனால் தற்போழுது பாகிஸ்தானுடனான் அமெரிக்காவின் நட்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் உதவியைப் பெறவேண்டிய தேவையின் அடிப்படையில் உள்ளது. நிச்சயமாக அமெரிக்கா இன்று பாகிஸ்தானை இந்தியாவின் மாற்றாக கருதவில்லை. இந்தியாவை , சீனாவின் மாற்றாக அமெரிக்கா கருதவே நிறைய வாய்ப்புகள் உள்ளது. அசுர வளர்ச்சி பெற்று வரும் சீனாவிற்கு எதிராக , அதன் அருகிலேயே அதற்கு ஒரு மாற்று அமைவது அமெரிக்காவிற்கு மிக அவசியம். அதுவும் ஒரு ஜனநாயக நாடு அமைவது மிக அவசியம். அதனாலையே இந்தியாவின் மீதான அமெரிக்காவின் பார்வை மாறி உள்ளது. அந்த நட்பு பார்வை அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மிக அவசியம்.

ஒபாமாவின் இந்திய வருகை இரண்டு நாடுகளாலும் முக்கியமாக பார்க்கப்பட்டது. அது இரண்டு நாடுகளுக்கும் பயன் உள்ளதாக அமையவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தது. ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர்களின் வருகை இந்தியாவிற்கு மட்டுமே பயன்னுள்ளதாக அமைந்ததிலிருந்து இப்பொழுது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று எண்ணியதே இந்தியாவை அங்கீகரித்ததின் அடையாளம். ஒபாமாவின் வருகையின் போது அமெரிக்கா இந்தியா ஐநாவின் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினராக ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எந்த அளவு நிறைவேறும் என்று தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் ஒபாமாவின் சீனாவுடன் நெருக்கம் காட்டவேண்டும் என்ற கொள்கை உலகறிந்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரில் பாகிஸ்தானின் ஆதரவு அதற்கு தொடர்ந்து வேண்டும் என்ற நிலை இருக்கும் இந்த நேரத்தில் பாகிஸ்தானை கோபமூட்டக்கூடியதும் , சீனாவிற்கு வெறுப்பை மூட்டக் கூடியதுமான செயலை ஒபாமா செய்வாரா என்ற அவநம்பிக்கை இருந்தது. அதையும் தாண்டி அமெரிக்கா, ஐநா சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தந்தது இந்தியாவிற்கு ஆச்சரியம் அளித்த செயல்தான். ஒபாமா அதற்கும் மேலே ஒரு படி போய் இந்தியா வளரும் நாடு அல்ல , ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடு என்ற சொன்னது இந்தியாவை அங்கீகரித்த செயல்தான். மேலும் ஒபாமா NSG (Nuclear Suppliers Group) இந்தியா சேர ஆதரவு தெரிவித்துள்ளார். ஒபாமாவின் வருகை இந்தியாவிற்கு மட்டுமே பயன் அளிக்கக் கூடியதாக இருந்திருக்கவில்லை , அவருடைய வருகை அமெரிக்காவில் 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மிக முக்கியமானது.

ஒபாமாவின் ஆசிய நாடுகளுக்கான இந்த பயணத்தில் இந்தியாவே முதல் நாடு. மேலும் இந்தப் பயணத்தில் இந்தியாவிலேயே அவர் அதிக நாட்கள் தங்கினார் . ஒபாமாவே தன்னுடைய இந்தப் பயணத்தில் இந்தியாவே முதல் நாடாக அமைந்தது ஒன்று ஏதேச்சையாக அமைந்ததல்ல என்று கூறினார். மேலும் எப்பொழுதும் இந்தியா வரும் அமெரிக்க அதிபர்களின் பயணத்தில் அவர்களின் அடுத்து இறங்கும் இடமாக அமைவது பாகிஸ்தான். இந்தியாவில் ஒரு பேச்சு பேசிவிட்டு பாகிஸ்தான் சென்றவுடன் அதை மாற்றி பேசுவது அவர்களின் வழக்கமாக இருக்கும் . ஆனால் இந்தப் பயணத்தில் ஒபாமா பாகிஸ்தான் செல்லவில்லை. மேலும் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதும் ஒபாமா சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிரதமரே ஆவார். மேற்கூறிய இத்தகைய சம்பவங்கள் ஏதேச்சையாக நடந்திருந்தாலோ அல்லது deliberate ஆக நடந்திருந்தாலோ , அவை இந்தியாவில் முக்கியமாக பேசப்பட்டது.

மும்பையில் ஒபாமா இருந்த பொழுது அங்கு ஒரு கல்லூரி மாணவர் அமெரிக்கா ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்க மாட்டேன் என்கிறது என்ற கேள்விக்கு ஒபாமா நேரடியாக பதிலளிக்கவில்லை. பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றார். பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதம் , தீவிரவாதத்தை அந்த நாடு ஆதரித்ததின் பின் விளைவே என்று அவர் கூறவில்லை. 26/11 சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர் பாகிஸ்தானின் பெயரை அதில் குறிப்பிடவில்லை. இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஆதரவு அமெரிக்காவிற்கு அவசியம். சமீபத்திய wiki leak இணையதளத்தின் செய்திகளே ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டிருக்கும் உள்நாட்டு கட்டுமானப் பணிகளையே அமெரிக்கா ஒரு வேளை விரும்பாத தோற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் இருப்பையும் , ஆப்கானிஸ்தான் அரசிற்கான இந்தியாவின் ஆதரவையும் பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால் அந்த நாடு இந்தியாவிற்கு எதிரானவர்களான தலிபான்களின் தீவிரவாதத்தை கட்டுபடுத்தும் போரில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் முழு மூச்சாக ஒத்துழைப்பை தருவதில்லை என்று அமெரிக்கா எண்ணுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒபாமாவின் அமெரிக்க அரசு பாகிஸ்தானிற்கு எதிரான எந்த ஒரு பெரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் ஒன்றும் அல்ல.

ஒபாமாவின் வருகையைப் போன்று முக்கியமாக கருதப்பட்ட அதிபரின் வருகை பிரான்ஸ் அதிபரான நிகோலஸ் சர்கோசியின் வருகையாகும். என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவை விட பிரான்ஸ் இந்தியாவுடன் சற்று கூடுதல் காலம் நட்பாக இருந்துள்ளது. மேலும் எனக்கு நிக்கோலஸ் சார்கோசியை பிடிக்கும். அவர் double standard லாம் எடுக்கமாட்டார் . தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக கூறுவார். சென்ற ஒலிம்பிக்கின் போது கூட திபெத்திற்கெதிரான நடவடிக்கைகளை சீனா நிறுத்திக் கொள்ளாவிட்டால் பிரான்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை மறுபருசீலனை செய்யும் என்று வெளிப் படையாக கூறினார். இன்றைய சீனாவிற்கெதிராக இப்படி பேச தைரியம் வேண்டும் . அந்த தைரியம் அமெரிக்காவிற்கே இல்லை.

சென்ற முறை சர்கோசி இந்தியா வந்திருந்த பொழுது (அவர் 2007 இல் வந்தார் என்று நினைக்கிறேன்) அவர் பிரான்ஸ் அதிபராக பதவியேற்றிருந்த சமயம். மேலும் அப்பொழுது கார்லா ப்ரூனியுடன் அவருக்கு மணமாகி இருக்கவில்லை. அப்பொழுது அவர் கார்லா ப்ரூனியை காதலித்துக் கொண்டிருந்த சமயம். அதனால் அப்பொழுது அவருடைய இந்திய வருகை ஒரு romance ஆக பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அவருடைய வருகை மிக முக்கியமாக கருதப்பட்டது. இந்தப் பயணத்தில் பிரான்ஸ் இந்தியாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ராணுவம், அணு உலை , கல்வி, பொருளாதாரம் என்று பல துறைகளில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவிற்கு தேவையான ராணுவ விமானங்களை வழங்குவது , மிராஜ் 2000 விமானத்தை மேம்படுத்துவது, பிரான்சில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை , இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதியை அதிகரிப்பது, வானவியல் துறையில் ஒத்துழைப்பது என்று பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன . அதில் முக்கியமானது பிரான்சின் ஒத்துழைப்புடன் மகாராஷ்டிராவில் இரண்டு EPR (European Pressurized Reactor) அணு உலைகளை அமைப்பது மிக முக்கியமான ஒப்பந்தமாகும். அமெரிக்காவைப் போன்று இந்தியாவுடன் அணு தொழிநுட்ப ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் அணு தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் மிக முன்னேறிய நாடு . பிரான்சின் மொத்த உள்நாட்டுத் தேவையில் 80% மின்சாரம் அணு உலைகளின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

அரசியல் ரீதியில் மிக முக்கியமாக கருதப்பட்ட செயல் ஐநாவின் பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்சின் ஆதரவாகும். நிக்கோலஸ் சர்கோசி, ஐநாவின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தந்தது மட்டும் முக்கியமல்ல. இந்த விசயத்தில் அவர் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை. 1 பில்லியனுக்கும் மேலே மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு ஐநாவின் பாதுகாப்புச் சபையின் எந்த ஒரு representative உம் இல்லாதது மிக அநியாயம் ஆகும் என்று கூறினார். மேலும் இந்தியா NSG இலும் இடம் பெறவேண்டும் என்று கூறினார் .

ஒபாமாவின் இந்திய வருகையைப் பற்றி The Hindu நாளிதழ் வெளியிட்ட செய்தி மிக முக்கியமானது . பொதுவாக இந்தியாவிற்கு ஒரு வெளிநாட்டுத் தலைவரின் வருகை எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது பாகிஸ்தானின் reaction ஐ வைத்து தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டு தலைவரின் இந்திய வருகையை பாகிஸ்தான் சற்று கலக்கத்துடன் பார்த்தால் ஓரளவு வெற்றி என்று கொள்ளலாம் , அந்த வெளிநாட்டுத் தலைவர் இந்தியாவில் கூறிய வார்த்தைகளையோ , அல்லது மேற்கொண்ட செயல்களையோ மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் காட்டுக் கூச்சல் போட்டால் அது மிகப் பெரிய வெற்றி என்று கொள்ளலாம். அந்த வகையில் ஒபாமா மற்றும் சர்கோசியின் இந்திய வருகை மிகப் பெரிய வெற்றி .

Friday, November 12, 2010

நானும் சர்வாதிகாரியும்

எனக்கு ரொம்ப சுவாரசியமான கனவுகள் வரும். நேற்று அப்படிதான் ஒரு கனவு வந்தது . அதில் நான் ஒரு பொறியியல் பட்டதாரி. அப்பொழுதுதான் பட்டம் பெற்றிருந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு கீழ் வீட்டில் இரண்டு பட்டதாரிகள் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் Msc Bio Chemistry படித்திருந்தனர். நான் இருந்த நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்தான். நான் அந்த சர்வாதிகாரியை நேரடியாக சந்திக்கும் வரை சர்வாதிகாரத்தின் தன்மை புரியவில்லை. அந்த நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்து பார்த்தது. அந்த ஏவுகணை தன்னுடைய இலக்கில் 160cm மட்டுமே தவறி இலக்கை அடைந்தது. இதை அந்த நாடு மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடியது. இந்த வெற்றியில் அந்த சர்வாதிகாரி இந்த வெற்றிக்கு காரணமானவர்களை நேரில் பாராட்டினான். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் நான் மேலே சொன்ன அந்த இரண்டு Msc பட்டதாரிகள். அதனால் இருவருக்கும் அந்த சர்வாதிகாரி தன் வீட்டில் விருந்து வைத்தான். அவர்களுடன் நானும் அவன் வீட்டிற்க்குச் சென்றேன். அந்த இரண்டு Msc பட்டதாரிகளை அந்த சர்வாதிகாரி மிகவும் பாராட்டினான். அவர்களுடன் நானும் சென்றதால் எனக்கும் அந்த சர்வாதிகாரியின் அறிமுகம் கிடைத்தது. போகப் போக அந்த சர்வாதிகாரியுடன் எனக்கு நெருக்கம் அதிகமானது. கிட்டத்தட்ட நான் அவனுடைய ஜால்ரா போலவே ஆனே ன். எனக்கு பயங்கள் அதிகம் . ஆனால் நான் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அந்த சர்வாதிகாரியிடம் ஒரு சிறந்த வீரனைப் போல் காட்டிக்கொள்கிறேன். இப்படியாகச் செல்கையில் அந்த சர்வாதிகாரி நான் அதிகம் வீரம் கொண்டவன் அல்ல என்று சந்தேகம் ஏற்ப்படுகிறது. அதனால் அவனுக்கு கோவம் ஏற்படுகிறது. இதனால் அவன் எனக்கு சில தேர்வுகள் வைத்து படையில் சேர்க்க எண்ணுகிறான். மிகவும் பயந்தவனான நான் அவனுடைய தேர்வில் முதலில் தோற்று பின் எப்படியோ தேர்ச்சி பெற்று படையில் சேர்கிறேன் . எனக்கு பயங்கள் அதிகம் என்பதால் எனக்கு போர்ப்படையில் சேர இஷ்டம் இல்லை. எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று எண்ணுகிறேன் . அந்த ஊரில் அந்த சர்வாதிகாரி தங்கியிருந்த அரண்மனைக்கு வெளியே மார்கட் இருக்கிறது. அந்த மார்கட்டை முடிவில் ஒரு பாதை செல்கிறது . அந்த பாதையை தாண்டினால் வேறு நாட்டிற்குச் சென்று விடலாம் . ஆனால் யாரேனும் பார்த்துவிட்டால் சர்வாதிகாரியின் முன் நிறுத்தப்படுவோம். உடனே மரண தண்டனைதான். என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்த நேரத்தில் பயத்தில் முழித்து விட்டேன். உடம்பெல்லாம் வேர்த்து விட்டது

அப்பத்தான் தோன்றியது நாம் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு உருப்படியா இல்லனாலும் ஓரளவுக்கு ஒழுங்கா உயிருக்கு உத்தரவாதாம் தர்ற நாட்டுல இருக்கிறோம். ஆனால் ஈரான், வட கொரியா, பர்மா போன்ற சர்வாதிகார நாட்டுளலாம் இருக்கிறவங்களை நினைச்சா பயமா இருக்கு. எனக்கு இந்த கனவே நான் ஈரான் நாட்டில் இருப்பது போன்றே வந்தது. ஏன் சீனாவே அப்படிதான். அங்கு எவரும் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடியாது. ஈரானும் சர்வாதிகார நாடுதான். ஆனால் இருக்கிறதுலயே ரொம்ப மோசமான நாடுகள் வட கொரியாவும் பர்மாவும்தான் . அங்கு நீங்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் சுட்டே கொன்றுவிடுவார்கள். மேற்க் கூறிய நான்கு நாட்டிளையும் சீனாவும் ஈரானுமே பரவா இல்லையான நாடுகள். ஈரானுல தேர்தலுல தில்லு முல்லு பண்ணாலும் தேர்தல்னு ஒன்ன வைப்பாங்க. ஆனா வட கொரியாவும், பர்மாவும் முழுக்க முழுக்க சர்வாதிகார நாடுகள். நான் சில நாட்களுக்கு முன் ஒரு டாகுமெண்டரி படம் பார்த்தேன் . அது முழுக்க உண்மை . அதில் பர்மாவில் வீடியோ கேமேராவே வைத்திருக்க விடமாட்டேன்கிறார்கள். ஏனென்றால் வீடியோ கேமரா இருந்தால் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை உலகிற்கு காட்டி விடுவார்கள் என்று பயம். அந்த அளவிற்கு சர்வாதிகார நாடுகள் . வட கொரியாவில் , நாட்டில் சர்வாதிகார அக்கிரமம் தாங்க முடியாமல் வட கொரிய, தென் கொரிய எல்லையை தாண்ட முனைபவர்களை எல்லாம் சுட்டுக்கொன்று விடுவார்கள்.

இந்த கனவில் பயந்து முழிக்கும் போதுதான் சர்வாதிகாரத்தின் கோர வலி புரிந்தது. என்னாதான் நம் நாட்டில் கொலை, பஞ்சம், ஊழல் மிகுந்திருந்தாலும் குறைந்த பட்சம் நம்மலால் சுதந்திரமாக இருக்க முடிகிறது . ஏன் ஆட்சியைக் கூட எதிர்க்க முடிகிறது.ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பதால் நம் நாட்டில் யாரும் சுட்டுக் கொல்லப்படப் போவதில்லை. சர்வாதிகார நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்க்காக வட கொரியாவிலும் , பர்மாவிலும் இருக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது . அப்பொழுதுதான் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது ஞாபகம் வந்தது. தன்னுடைய சுய லாபத்திற்காக இந்தியா பர்மாவில் நடக்கும் கொடுமைகளை பார்த்தும் பார்க்காமல் இருப்பது போல் இருக்கக் கூடாது. பர்மாவில் ஜனநாயகம் தலையெடுக்க இந்தியா பாடுபடவேண்டும். ஆமாம் நிச்சயம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா வட கொரியாவிலும் , பர்மாவிலும் ஜனநாயகம் தலையெடுக்க பாடுபடவேண்டும் .

பின் குறிப்பு: எனக்கு இப்படி சுவாரசியமான கனவுகள் அடிக்கடி வரும். அப்பொழுதெல்லாம் கனவின் ஊடாகவே நான் நினைத்துக்கொள்வேன். ஆகா இன்று கனவு அருமை. இப்பொழுதே எழுந்திருத்து எழுத வேண்டும் என்று. ஆனால் அப்படி செய்ததில்லை . இன்றுதான் பயத்தில் முழித்ததும் எழுதினேன்.நான் எழுதும் போது மணி நடு இரவு 2!!!.

Tuesday, November 9, 2010

மைனா - திரை விமர்சனம்


தீபாவளி அன்னிக்கு நான், மது மற்றும் JDK மூனு பேரும் வ - குவாட்டர் கட்டிங் படத்துக்குப் போனோம். படத்தின் இயக்குனர்கள் ஓரம்போ படத்தின் இயக்குனர்களான புஷ்கர் & காயத்ரி . அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்புடனே போனோம் . அந்த படத்தோட டிரைலர்சும் வித்யாசமா இருந்ததால கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனா அது எல்லாத்தையும் நாறடிக்கிற மாதிரி படம் செம மொக்கை . ஏன்டா போனோம்னு ஆச்சு. அதுக்கு அடுத்த நாள் மைனா படத்துக்கு மது டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஏற்கனவே ஒரு மொக்க படத்துக்கு போனதால இந்த படம் எப்படி இருக்குமோனு ஒரு பயம் இருந்துச்சு. மேலும் படத்த பற்றிய பல பிரபலங்களோட விமர்சனங்கள் படம் ஏதோ பருத்தி வீரன் போல் இருக்குமோனு ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியது. எனக்கு கோரமான படங்கள் ஒரு பயத்தை ஏற்ப்படுத்தும் . மேலும் படத்தை பார்த்த கமலஹாசன் , படத்தின் கிளைமாக்ஸ் கோரமா இருக்கிறதே அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கூறி இருந்ததால் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது என்று கேள்விப்பட்டதால் படத்திற்கு ஒருவித பதட்டத்துடனே போனேன்.


படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி புதுசு என்பதால் அவர்களைப் பற்றி எதிர்பார்ப்பு இல்லை . மேலும் நான் படம் பார்ப்பதற்கு முன் பாடல்களை கேட்கும் பழக்கம் இல்லாதவன் ஆனதால் பாடல்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்படி படத்தை பற்றிய நேர்மறையான எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி ஒரு வித எதிர்மறையான எதிர்பார்ப்புடனேயே சென்றேன்.


படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் ஜெயிலில் இருந்து தன் மைனாவை பற்றி பின்னோக்கிப் பார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. சின்ன வயதில் மைனாவும்(கதாநாயகி) அவள் அம்மாவும் யாருடைய ஆதரவுமின்றி இருக்கும் போது சுருளியாகிய நம்ம சின்ன வயது கதாநாயகன் அவர்களை கூட்டி வந்து தன்னுடைய ஊரில் இருக்கும் ஒரு பாட்டி வீட்டில் குடி வைக்கிறார். பின்னர் அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார். இப்படியாக சிறு வயதிலிருந்து மைனாவிற்கும் சுருளிக்கும் காதல் ஏற்படுகிறது. இதனை அறியும் மைனாவின் அம்மா அதனை எதிர்க்கிறார் . இதனால் சுருளி மைனாவின் அம்மாவை அடித்து விட்டு ஜெயிலுக்குப் போகிறார். சிறையில் மைனாவிற்கு கல்யாண ஏற்பாடு நடப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிக்கிறார். பின் தன் ஊருக்குச் சென்று தன் காதலியைச் சந்திக்கிறார். அதே சமயம் தப்பிய சுருளியைப் பிடிக்க ஜெயில் சூப்பிரென்டும், அவருடன் ஒரு ஏட்டும் வருகின்றனர். மறுநாள் தீபாவளி. ஜெயில் சூப்பிரென்டுக்கு அது தலை தீபாவளி. அந்த தலை தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்ற கடுப்பு அவருக்கு. இப்படியாக சுருளியின் ஊரை அடையும் சூப்பிரென்டும் ஏட்டும் சுருளியை கைது செய்கின்றனர். சுருளியுடன் மைனாவும் வருகிறார். வரும் வழியில் சூப்பிரண்டு சுருளியை ஆறு மாதம் கஞ்சா கேசில் போடப்போவதாக மிரட்டுகிறார். அதனால் பயந்த சுருளியும் மைனாவும் அவர்களிடமிருந்து தப்பிக்கின்றனர். பின்னர் மீண்டும் சூப்பிரென்டிடம் அகப்படும் அவர்களை ஏட்டு சமாதானப்படுத்தி சுருளி மீது கஞ்சா கேசுலாம் போடமாட்டோம் என்று சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். அவர்கள் போகும் வழியில் மலைப்பாதையில் பேருந்து தலைகுப்புற விழுந்து விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்திலிருந்து சுருளி சூப்பிரென்டையும் , ஏட்டையும் காப்பாற்றுகிறார். அதனால் அவர் மேல் சூப்பிரென்டுக்கும், ஏட்டுக்கும் நல்ல மதிப்பு ஏற்ப்படுகிறது. அதனால் அவர்கள் ஜெயிலை அடைந்ததும் மறுநாள் சுருளியை கோர்டில் ஆஜர்படுத்திய பிறகு சுருளிக்கும் , மைனாவிற்க்கும் கல்யாணம் செய்விப்பதாக சூப்பிரென்டும், ஏட்டும் கூறுகின்றனர். அதே நேரத்தில் சூப்பிரென்டின் மனைவி தலை தீபாவளிக்கு போக முடியாத கடுப்பில் இருக்கிறார். கதையின் முடிவில் சுருளிக்கும், மைனாவிற்க்கும் கல்யாணம் முடிந்ததா இல்லையா . அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.


படத்தின் முக்கால்வாசி கதை சுருளி, மைனா, சூபிரென்டு மற்றும் ஏட்டு இவர்களை சுற்றியே நடைபெறுகிறது. படத்தின் கதை தீபாவளியை சுற்றியே நடைபெறுகிறது . படம் நடைபெறும்போது அதன் ஓட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. இதற்கடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை ஓரளவு நாம் உணர முடிகிறது. படத்தை நம்மை மறந்து பார்க்க முடிகிறது என்றெல்லாம் நான் கூற மாட்டேன். அதுவே படத்தின் இடையில் ஒரு அயற்ச்சியை ஏற்ப்படுத்துகிறது. படத்தின் பலம் அதன் நாயகர்கள் தேர்வு . கதாநாயகனாக நடிக்கும் விதார்த், கதாநாயகி அமலா, சூப்பிரண்டு, மற்றும் ஏட்டாக நடிக்கும் தம்பி ராமையா . அனைவரும் அருமையாக நடிக்கின்றனர். சூபிரென்டு மனைவியாக நடிப்பவர் சில இடங்களே வந்தாலும் அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் காமெடிக்கு தம்பி ராமையா பொறுப்பு. அவருடைய டயலாக் டெலிவரியே மிக அருமையாக இருக்கின்றது. படத்தின் சில காட்சிகள் பருத்தி வீரன் படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. பருத்தி வீரன் போன்ற படங்களின் முடிவுகளும் பருத்தி வீரன் போன்றே இருப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

படத்தின் மிகப் பெரிய பலம், இசை. அனைத்துப் பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் இமான். நம்பவே முடியவில்லை . கையப் பிடி, மைனா மைனா ஆகிய இரண்டு பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. ஜிங்கு சிக்கா பாடல் தாளம் போட வைக்கிறது. கிச்சு கிச்சு தாம்பூலம் பாடல் வெகு நாளுக்குப் பிறகு வந்த சிறார்களைப் பற்றிய அருமையான பாடல்.

நிச்சயம் படம் பார்கலாம் .

Sunday, October 24, 2010

ராஜராஜப் பெருவேந்தன்


தமிழக வரலாற்றில் ராஜராஜ சோழனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். ஒரு வகையில் சொல்லப் போனால் இந்திய அளவிலேயே இல்லை. இது வெறுமனே மிகப் பெரிய பரப்பளவை ஆண்டதால் மட்டுமே இல்லை. சொல்லப் போனால் ராஜராஜனை விட அதிகப் பரப்பளவை ஆண்டது ராஜராஜனின் மகனான ராஜேந்த்ரச் சோழனே. ராஜராஜனுக்கு அதிகப் பரப்பளவை ஆண்டதைவிட மிகப் பெரிய திறமைகள் இருந்தன. சங்ககாலச் சோழர்களுக்குப் பிறகு விஜயாலச் சோழன் காலத்திலிருந்தே சோழர்கள் மீண்டெழ ஆரம்பித்தனர். அதனால் அவர்களின் ஆரம்பகாலத்தில் சிறிதாக இருந்த சோழர்களின் நிலப் பரப்பை விஸ்தீகரிக்க வேண்டிய தேவை இருந்ததால் அவர்களின் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது. ஆகையால் அவர்களால் நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்த சமயம் வாய்க்கவில்லை அல்லது அவர்களை விட ராஜராஜன் சோழன் திறமை வாய்ந்தவனாக இருந்திருக்கிறான்.

விஜயாலச் சோழன் மரபில் ராஜராஜ சோழனுக்கு முன் அதிக காலம் ஆண்டவர்கள் விஜயாலச் சோழன் , முதலாம் ஆதித்யச் சோழன், பராந்தகச் சோழன்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். இவர்களின் காலம் சோழர்களின் வரலாற்றில் முக்கியமானது. சங்ககாலச் சோழர்களுக்கு அடுத்து சோழர்களின் எழுச்சிக்குக் காரணம் விஜயாலச் சோழனே , பின்னர் முதலாம் ஆதித்யச் சோழனின் காலத்தில் சோழப் பேரரசு விரிந்தது. விஜயாச் சோழன் காலத்தில் பல்லவ பேரரசிற்கு உட்பட்ட சோழர்கள் , ஆதித்யன் காலத்தில் பல்லவர்களின் பல பகுதிகள் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. முதலாம் பராந்தகச் சோழனின் காலத்தில் பாண்டியர்களின் பெரும் பகுதிகள் சோழர்களின் கீழ் வந்தது. இலங்கையின் வட பகுதியும் சோழர்களின் கீழ் வந்தது. மேலும் இவன் காலமானது தென்னிந்திய கோயில்கள் வரலாற்றில் பொற்காலம் எனலாம். முதலாம் ஆதித்யன் காலத்தில் தொடங்கிய கோயில்கள் கட்டும் பணி பராந்தகனின் ஆட்சி காலத்தில் உட்சகட்டத்தை அடைந்தது எனலாம்.

பராந்தகச் சோழனுக்குப் பிறகு நடந்த 35 ஆண்டுகளில் பலர் பதவியேற்றனர். அவர்களுக்குப் பிறகு ராஜராஜ சோழன் கிபி 985 இல் அரியணை ஏறினான். அதற்கடுத்து அவன் முப்பதாண்டுகள் ஆட்சி புரிந்தான் . இவனுடைய ஆட்சி சோழர்களின் பொற்காலம் எனலாம். ஆனால் இவனுடைய ஆட்சி பொற்காலம் என்று சொல்வதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . அதற்கு முக்கிய காரணம் இவனுடைய ஆட்ச்சியில் கோயில்கள் அதிகம் கட்டப்பட்டன . மேலும் பழைய கோயில்கள் அதிகம் புனர்பார்க்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டன. ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் அல்ல என்று கூறுபவர்கள் கூறும் காரணத்தில் இதுவே முக்கியமானது. அவர்களின் கூற்றுப்படி மக்களாட்சி உண்மையாக விளங்கியது களப்பிரர்களின் காலம்தான். மேலும் களப்பிரர்கள் மக்களின் உழைப்பை வீணாக்கியதாக கூறப்படும் கோயில்கள் கட்டுதல், சிற்பம் செதுக்குதல் போன்றவற்றில் ஈடுபடவில்லை. அவர்கள் விவசாயத்திலேயே அதிகம் கவனம் செலுத்தினார்கள். முக்கியமாக அவர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய நில தானங்களை எதிர்த்தனர். இதுவே முக்கியமானது. ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் அல்ல என்று கூறுபவர்கள் கூற்றுப்படி வரலாற்று ஆசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி போன்ற பார்ப்பனர்கள் இத்தகைய காரணங்களாலே உண்மையான பொற்காலமான களப்பிரர்களின் ஆட்சியை விடுத்து பார்ப்பனர்களுக்கு ஆதரவாக விளங்கிய ராஜராஜ சோழனின் ஆட்சியை பொற்காலம் என்று கூறுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.


ஒரு நாட்டில் கலை, மொழி வளர்வதோடு அந்த நாடு வெற்றிகரமாக விளங்குவதோடு உள்நாட்டு குழப்பங்கள்,பசி,பட்டினி ஏதும் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழும் காலமே உண்மையான பொற்காலம் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொற்காலம் என்பதற்கான வரையறையாகும். ராஜராஜ சோழனின் ஆட்சி அவ்வாறு விளங்கியதா என்பதையே நாம் இங்கு பார்க்க வேண்டும். ராஜராஜ சோழனின் காலத்தில் கட்டிடகலை சிறப்புற்று விளங்கியது உண்மை. இந்திய அளவில் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை அவனே கட்டினான். மேலும் பல பழைய கோயில்களை புதுப்பித்தான். மேலும் பல படையெடுப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டு பராந்தகச் சோழனின் ஆட்சிக்குப் பிறகு சுருங்கிய சோழர்களின் நிலப் பரப்பை விரிவுபடுத்தினான். அவனுடைய ஆட்ச்சியில் கேரளா உட்பட தமிழகம் முழுவதும் கைப்பற்றினான். மேலும் இலங்கையின் வடபகுதியும் அவனுடைய ஆட்சியின் கீழ் வந்தது. ஆசிய அளவில் மிகச் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த கடற்படையை நிர்மாணித்தான். இவனுடைய ஆட்சியிலேயே கடற்படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. நாட்டில் நடந்த மிகச் சிறிய நிகழ்ச்சிகளையும் நேரடியாக கவனித்தான். இவனுடைய ஆட்சியில் நிர்வாகம் சிறப்புற்று விளங்கியது உண்மை. இவற்றிற்கு எல்லாம் முக்கிய காரணம் ராஜேந்திர சோழன் . ராஜராஜ சோழனுக்கு முக்கிய வரம் அவனுடைய ஒரே மகனான ராஜேந்திர சோழன். மிகச் சிறந்த வீரனான ராஜேந்திர சோழனே ராஜ ராஜனின் தளபதியாவான். ராஜேந்திர சோழனின் தலைமையில் சோழப் படை பல வெற்றிகளை குவித்தது. அதனாலயே ராஜராஜ சோழனால் எந்த கவலையும் அன்றி நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடிந்தது. ராஜ ராஜ சோழன் மன்னர் பதவியேற்பதற்கு உரிய வயதிற்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்தான். அதுவரை அவனுடைய சிற்றப்பனான உத்தமச் சோழனே ஆட்சி புரிந்தான். ராஜ ராஜ சோழனுக்கு மக்களின் பேராதரவு இருந்தது உண்மை. அப்படி இருந்தும் தான் பதவியேற்காமல் தன் சிற்றப்பனை பதவியேற்க அனுமதித்தது ராஜராஜ சோழனின் நற்பண்பை காட்டுகிறது. இத்தகைய காரணங்களாலே ராஜராஜ சோழனுக்கு வரலாற்றில் நற்பெயர் கிடைத்தது.

ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததை குறை கூறுவோர்களும் உண்டு. கண்டராதித்ய சோழன் இறந்தபொழுது அவனுடைய மகனான உத்தமச் சோழன் சிறு பிள்ளை. அதனால் கண்டராதித்ய சோழனின் தம்பியாகிய அரிஞ்சய சோழன் பதவியேற்றான். அவன் மிகச் சிறிய காலமே அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான சுந்தரச் சோழன் பதவியேற்றான். சுந்தரச் சோழனின் மகன்தான் ராஜராஜ சோழன். இதற்கிடையில் உத்தமச் சோழன் பதவியேற்பதற்குரிய வயதை அடைந்தான். மேலும் அவனுக்கு ராஜ பதவியின் மேல் ஆசையும் இருந்தது மேலும் இந்த மன்னர் பதவி தன்னுடைய பிறப்புரிமை என்பதும் அவன் எண்ணம். சுந்தரச் சோழனுக்குப் பிறகு தானே அரியணை ஏறவேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். இத்தகைய காலங்களில் சுந்தரச் சோழனின் முதல் மகனும் ராஜராஜ சோழனின் அண்ணனுமான ஆதித்ய கரிகாற் சோழன் மர்மான முறையில் இறந்துவிடுவான். இதில் உத்தமச் சோழனுக்கு பங்கிருந்ததாக பலரும் சந்தேகப்பட்டனர். எது எப்படியோ தான் பதவியேற்க வேண்டும் என்பதில் உத்தமச் சோழன் உறுதியாக இருந்தான். ஆனால் மக்களின் ஆதரவு என்னவோ அருள்மொழிவர்மனான ராஜராஜ சோழனுக்கே இருந்தது. பின்னர் சுந்தரச் சோழனுக்கும் உத்தமச் சோழனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி சுந்தரச் சோழனுக்குப் பிறகு உத்தமச் சோழன் பதவியேற்பதாகவும் அவனுக்குப் பிறகு ராஜராஜ சோழனும் அவன்பரம்பரையும் பதவியற்பதாகவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் உத்தமச் சோழன் ஏமாற்றப்பட்டதாக எண்ணுவோரும் உண்டு . ஏனெனில் உத்தமச் சோழனே உண்மையில் பதவியேற்றிருக்க வேண்டும் ஆனால் அவன் சிறுவனாக இருந்த காரணத்தாலேயே அரிஞ்சய சோழன் பதவியேற்றான் . ஆகையால் அவன் வயதுக்கு வந்ததும் அவனும் அவன் பரம்பரையும் பதவியேற்பது சரி. ஆனால் சுந்தரச் சோழனுக்கும் உத்தமச் சோழனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உத்தமச் சோழன் மட்டுமே பதவியேற்க வேண்டும் அவனுக்குப் பிறகு சுந்தரச் சோழனின் மகனான ராஜராஜ சோழனும் அவனுடைய பரம்பரையும் பதவியேற்க வேண்டும் என்று ஏற்ப்பட்டதில் உத்தமச் சோழன் ஏமாற்றப்பட்டதாக கூறுவோரும் உண்டு.

எது எப்படியோ இன்றும் தமிழகத்தின் பொற்காலம் என்பது ராஜராஜ சோழனின் காலமே என்று பலராலும் நம்பப்படுகிறது.