Friday, December 10, 2010

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா

சமீப காலத்தில் இந்தியாவிற்கு இரண்டு சர்வதேச முக்கிய தலைவர்கள் வந்தனர். அவர்களின் வருகை மிக முக்கியமாகப்பட்டது. ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றொருவர் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி . இருவரின் வருகையுமே இந்தியாவிற்கு முக்கியமான நிகழ்வு. இந்தியாசர்வதேச அளவில் தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்வதோடு சர்வதேச அளவில் தனக்கான உரிமையான இடத்தை பெறத்துடிக்கும் இந்த காலத்தில் இருவரின் வருகையுமே அரசியல் ரீதியாக முக்கியமாகப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. இருந்தபோதிலும் அரசியல் ரீதியான நிகழ்வுகளே உலக அளவில் கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்தியா ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்பதே சர்வதேச அளவில் இந்தியாவின் மிக முக்கியமான கொள்கையாக இருக்கும் இந்த காலத்தில் இருவரின் வருகையுமே மிக முக்கியமாகப்பட்டது.

கடந்த காலங்களில் மிக முக்கிய வெளிநாட்டுத் தலைவர்கள் வருகைக்கும் , தற்போது வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் வருகைக்கும் மிகப் பெரிய மாற்றம் உள்ளது. கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகவே இருந்தது. அதாவது இந்தியா எந்த அளவிற்கு அவர்களிடமிருந்து சமூக முன்னேற்றத்திற்கான சலுகைகள் பெறுவதின் அடிப்படையிலே இருந்தது. அக்காலங்களில் இந்தியா ஒரு மக்கள்தொகை மிகுந்த அதனால் வறுமையும் , பிணியும் பீடித்த , தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்கே வெளிநாட்டின் தேவைகளை எதிர்பார்த்த , தன்னுடைய முன்னேறத்திற்கு வழி தெரியாத ஒரு நாடாகவே பார்க்கப்பட்டது. அக்காலங்களில் இத்தகைய வெளிநாட்டுத் தலைவர்கள் தங்களின் இந்திய வருகையின் மூலம் தங்களை இந்தியாவின் அனாத ரட்சகர்களாகவே காட்டிக்கொண்டனர். ஏதோ அவர்கள் தங்களின் இந்திய வருகையின் மூலம் தங்களை உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட முன்னேற வழி தெரியாத நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு படி அளப்பவர்களாகவும் , தாஜ் மஹால் முன்னால் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். கிட்டத்தட்ட அதில் உண்மையும் இருந்தது.

இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் , மக்கள் தொகையில் இரண்டாவது நாடாகவும், தெற்காசியாவில் மிகப்பெரிய நாடாகவும் இருந்த போதும் இதற்குமுன் எப்பொழுதும் சர்வதேச அளவில் பெரிய நாடாக எண்ணப்பட்டதில்லை. அதற்கு முக்கிய காரணம் அக்காலங்களில் அதிக மக்கள் தொகை ஒரு நாட்டின் பிணியாகவும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடைக் கல்லாகவும் பார்க்கப்பட்டது.

ஆனால் தற்காலத்தில் உலகின் கண்ணோட்டமே மாறுபட்டுவிட்டது. ஒரு காலத்தில் மக்கள் தொகை பிணியாக எண்ணப்பட்ட காலம் போய் இப்பொழுது அது ஒரு நாட்டின் வளமாக எண்ணப்படுகிறது. ஒரு காலத்தில் மக்களுக்கு பணம் செலவழித்து சேவை செய்வது போய் இப்பொழுது சேவைகளின் மூலம் பணம் பண்ணும் தொழிலை உலகம் கற்றுக் கொண்டது. அதனால் சிந்திப்பதற்கு நூறு கோடி மூளைகளையும் , வேலை செய்வதற்கு இரநூறு கோடி கைகளையும் கொண்ட இந்தியாவை உலகம் மிக முக்கிய சந்தையாகப் பார்க்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு படி அளக்க வருகை தந்த வெளிநாட்டுத் தலைவர்கள் இப்பொழுது தங்கள் நாட்டிற்கு படி அளக்க இந்தியா வருகிறார்கள்.

அமெரிக்க அதிபராக இருந்த புஷ் மேற்கொண்ட அணு தொழிநுட்ப ஒப்பந்தமே உலக அளவில் இந்தியாவை ஒரு மிக முக்கிய நாடாக அங்கீகரித்ததின் முதல் படி. அது ஒரு அளவில் பொருளாதார ஒப்பந்தமாக இருந்த போதிலும், இந்தியா NPT யில் கையொப்பம் இடாத போதிலும் இந்தியாவுடனான அந்த அணு ஒப்பந்தம் ஏற்பட்டது அரசியல் ரீதியில் மிக முக்கியமானது. அந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின் பற்றாக்குறையை போக்கும் என்பதோடு இந்தியாவை உலகில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் நாடு என்று அங்கீகரித்த ஒப்பந்தம். புஷ்ஷின் இந்திய வருகையின் போதே அமெரிக்கா , ஐநாவின் பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைப் பெறவில்லை.
புஷ்ஷின் இந்திய வருகைக்குப் பிறகு இந்தியா உலகில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. அத்துடன் அமெரிக்கா இந்தியாவுடன் செய்துகொண்ட இந்த அணு ஒப்பந்தம் போல , தன்னுடைய நட்பு நாடாக பாகிஸ்தான் இருந்த போதும் மேலும் பாகிஸ்தான் வாய் விட்டு தன்னுடன் அதே ஒப்பந்தத்தை செய்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதும் அமெரிக்கா மறுத்துவிட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றி . கடந்த காலங்களில் ரஷ்யாவுடன் நட்பு நாடாக இருந்த இந்தியாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக, இந்தியாவிற்கு ஒரு மாற்றாக அமெரிக்கா பாகிஸ்தானை பார்த்தது. இந்தியாவுடனான இந்த அணு ஒப்பந்தமும், பாகிஸ்தானுடன் அதே போன்று ஒரு ஒப்பந்தம் செய்ய மறுத்ததும் பாகிஸ்தான் என்றுமே இந்தியாவிற்கு ஒரு மாற்று அல்ல என்று அமெரிக்கா புரிந்து கொண்டதின் ஒரு அறிகுறி. இதனாலையே "இந்தியா - பாகிஸ்தான்" பாலிசியாக இருந்த அமெரிக்காவின் பார்வை இந்தியா, பாகிஸ்தான் பாலிசியாக மாறியது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைத்து அமைந்த பாலிசி, இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு பாலிசியாக மாறியது.

கடந்த காலங்களில் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நட்பிற்கும் , தற்காலத்தில் பாகிஸ்தானுடனான அதன் நட்பிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடந்த காலங்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பிற்கு எதிராகவும், தெற்காசியாவில் இந்தியாவிற்கு ஒரு மாற்றாகவும் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நட்பு இருந்தது. ஆனால் தற்போழுது பாகிஸ்தானுடனான் அமெரிக்காவின் நட்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் உதவியைப் பெறவேண்டிய தேவையின் அடிப்படையில் உள்ளது. நிச்சயமாக அமெரிக்கா இன்று பாகிஸ்தானை இந்தியாவின் மாற்றாக கருதவில்லை. இந்தியாவை , சீனாவின் மாற்றாக அமெரிக்கா கருதவே நிறைய வாய்ப்புகள் உள்ளது. அசுர வளர்ச்சி பெற்று வரும் சீனாவிற்கு எதிராக , அதன் அருகிலேயே அதற்கு ஒரு மாற்று அமைவது அமெரிக்காவிற்கு மிக அவசியம். அதுவும் ஒரு ஜனநாயக நாடு அமைவது மிக அவசியம். அதனாலையே இந்தியாவின் மீதான அமெரிக்காவின் பார்வை மாறி உள்ளது. அந்த நட்பு பார்வை அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மிக அவசியம்.

ஒபாமாவின் இந்திய வருகை இரண்டு நாடுகளாலும் முக்கியமாக பார்க்கப்பட்டது. அது இரண்டு நாடுகளுக்கும் பயன் உள்ளதாக அமையவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தது. ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர்களின் வருகை இந்தியாவிற்கு மட்டுமே பயன்னுள்ளதாக அமைந்ததிலிருந்து இப்பொழுது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று எண்ணியதே இந்தியாவை அங்கீகரித்ததின் அடையாளம். ஒபாமாவின் வருகையின் போது அமெரிக்கா இந்தியா ஐநாவின் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினராக ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எந்த அளவு நிறைவேறும் என்று தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் ஒபாமாவின் சீனாவுடன் நெருக்கம் காட்டவேண்டும் என்ற கொள்கை உலகறிந்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரில் பாகிஸ்தானின் ஆதரவு அதற்கு தொடர்ந்து வேண்டும் என்ற நிலை இருக்கும் இந்த நேரத்தில் பாகிஸ்தானை கோபமூட்டக்கூடியதும் , சீனாவிற்கு வெறுப்பை மூட்டக் கூடியதுமான செயலை ஒபாமா செய்வாரா என்ற அவநம்பிக்கை இருந்தது. அதையும் தாண்டி அமெரிக்கா, ஐநா சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தந்தது இந்தியாவிற்கு ஆச்சரியம் அளித்த செயல்தான். ஒபாமா அதற்கும் மேலே ஒரு படி போய் இந்தியா வளரும் நாடு அல்ல , ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடு என்ற சொன்னது இந்தியாவை அங்கீகரித்த செயல்தான். மேலும் ஒபாமா NSG (Nuclear Suppliers Group) இந்தியா சேர ஆதரவு தெரிவித்துள்ளார். ஒபாமாவின் வருகை இந்தியாவிற்கு மட்டுமே பயன் அளிக்கக் கூடியதாக இருந்திருக்கவில்லை , அவருடைய வருகை அமெரிக்காவில் 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மிக முக்கியமானது.

ஒபாமாவின் ஆசிய நாடுகளுக்கான இந்த பயணத்தில் இந்தியாவே முதல் நாடு. மேலும் இந்தப் பயணத்தில் இந்தியாவிலேயே அவர் அதிக நாட்கள் தங்கினார் . ஒபாமாவே தன்னுடைய இந்தப் பயணத்தில் இந்தியாவே முதல் நாடாக அமைந்தது ஒன்று ஏதேச்சையாக அமைந்ததல்ல என்று கூறினார். மேலும் எப்பொழுதும் இந்தியா வரும் அமெரிக்க அதிபர்களின் பயணத்தில் அவர்களின் அடுத்து இறங்கும் இடமாக அமைவது பாகிஸ்தான். இந்தியாவில் ஒரு பேச்சு பேசிவிட்டு பாகிஸ்தான் சென்றவுடன் அதை மாற்றி பேசுவது அவர்களின் வழக்கமாக இருக்கும் . ஆனால் இந்தப் பயணத்தில் ஒபாமா பாகிஸ்தான் செல்லவில்லை. மேலும் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதும் ஒபாமா சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிரதமரே ஆவார். மேற்கூறிய இத்தகைய சம்பவங்கள் ஏதேச்சையாக நடந்திருந்தாலோ அல்லது deliberate ஆக நடந்திருந்தாலோ , அவை இந்தியாவில் முக்கியமாக பேசப்பட்டது.

மும்பையில் ஒபாமா இருந்த பொழுது அங்கு ஒரு கல்லூரி மாணவர் அமெரிக்கா ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்க மாட்டேன் என்கிறது என்ற கேள்விக்கு ஒபாமா நேரடியாக பதிலளிக்கவில்லை. பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றார். பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதம் , தீவிரவாதத்தை அந்த நாடு ஆதரித்ததின் பின் விளைவே என்று அவர் கூறவில்லை. 26/11 சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர் பாகிஸ்தானின் பெயரை அதில் குறிப்பிடவில்லை. இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஆதரவு அமெரிக்காவிற்கு அவசியம். சமீபத்திய wiki leak இணையதளத்தின் செய்திகளே ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டிருக்கும் உள்நாட்டு கட்டுமானப் பணிகளையே அமெரிக்கா ஒரு வேளை விரும்பாத தோற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் இருப்பையும் , ஆப்கானிஸ்தான் அரசிற்கான இந்தியாவின் ஆதரவையும் பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால் அந்த நாடு இந்தியாவிற்கு எதிரானவர்களான தலிபான்களின் தீவிரவாதத்தை கட்டுபடுத்தும் போரில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் முழு மூச்சாக ஒத்துழைப்பை தருவதில்லை என்று அமெரிக்கா எண்ணுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒபாமாவின் அமெரிக்க அரசு பாகிஸ்தானிற்கு எதிரான எந்த ஒரு பெரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் ஒன்றும் அல்ல.

ஒபாமாவின் வருகையைப் போன்று முக்கியமாக கருதப்பட்ட அதிபரின் வருகை பிரான்ஸ் அதிபரான நிகோலஸ் சர்கோசியின் வருகையாகும். என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவை விட பிரான்ஸ் இந்தியாவுடன் சற்று கூடுதல் காலம் நட்பாக இருந்துள்ளது. மேலும் எனக்கு நிக்கோலஸ் சார்கோசியை பிடிக்கும். அவர் double standard லாம் எடுக்கமாட்டார் . தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக கூறுவார். சென்ற ஒலிம்பிக்கின் போது கூட திபெத்திற்கெதிரான நடவடிக்கைகளை சீனா நிறுத்திக் கொள்ளாவிட்டால் பிரான்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை மறுபருசீலனை செய்யும் என்று வெளிப் படையாக கூறினார். இன்றைய சீனாவிற்கெதிராக இப்படி பேச தைரியம் வேண்டும் . அந்த தைரியம் அமெரிக்காவிற்கே இல்லை.

சென்ற முறை சர்கோசி இந்தியா வந்திருந்த பொழுது (அவர் 2007 இல் வந்தார் என்று நினைக்கிறேன்) அவர் பிரான்ஸ் அதிபராக பதவியேற்றிருந்த சமயம். மேலும் அப்பொழுது கார்லா ப்ரூனியுடன் அவருக்கு மணமாகி இருக்கவில்லை. அப்பொழுது அவர் கார்லா ப்ரூனியை காதலித்துக் கொண்டிருந்த சமயம். அதனால் அப்பொழுது அவருடைய இந்திய வருகை ஒரு romance ஆக பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அவருடைய வருகை மிக முக்கியமாக கருதப்பட்டது. இந்தப் பயணத்தில் பிரான்ஸ் இந்தியாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ராணுவம், அணு உலை , கல்வி, பொருளாதாரம் என்று பல துறைகளில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவிற்கு தேவையான ராணுவ விமானங்களை வழங்குவது , மிராஜ் 2000 விமானத்தை மேம்படுத்துவது, பிரான்சில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை , இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதியை அதிகரிப்பது, வானவியல் துறையில் ஒத்துழைப்பது என்று பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன . அதில் முக்கியமானது பிரான்சின் ஒத்துழைப்புடன் மகாராஷ்டிராவில் இரண்டு EPR (European Pressurized Reactor) அணு உலைகளை அமைப்பது மிக முக்கியமான ஒப்பந்தமாகும். அமெரிக்காவைப் போன்று இந்தியாவுடன் அணு தொழிநுட்ப ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் அணு தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் மிக முன்னேறிய நாடு . பிரான்சின் மொத்த உள்நாட்டுத் தேவையில் 80% மின்சாரம் அணு உலைகளின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

அரசியல் ரீதியில் மிக முக்கியமாக கருதப்பட்ட செயல் ஐநாவின் பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்சின் ஆதரவாகும். நிக்கோலஸ் சர்கோசி, ஐநாவின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தந்தது மட்டும் முக்கியமல்ல. இந்த விசயத்தில் அவர் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை. 1 பில்லியனுக்கும் மேலே மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு ஐநாவின் பாதுகாப்புச் சபையின் எந்த ஒரு representative உம் இல்லாதது மிக அநியாயம் ஆகும் என்று கூறினார். மேலும் இந்தியா NSG இலும் இடம் பெறவேண்டும் என்று கூறினார் .

ஒபாமாவின் இந்திய வருகையைப் பற்றி The Hindu நாளிதழ் வெளியிட்ட செய்தி மிக முக்கியமானது . பொதுவாக இந்தியாவிற்கு ஒரு வெளிநாட்டுத் தலைவரின் வருகை எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது பாகிஸ்தானின் reaction ஐ வைத்து தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டு தலைவரின் இந்திய வருகையை பாகிஸ்தான் சற்று கலக்கத்துடன் பார்த்தால் ஓரளவு வெற்றி என்று கொள்ளலாம் , அந்த வெளிநாட்டுத் தலைவர் இந்தியாவில் கூறிய வார்த்தைகளையோ , அல்லது மேற்கொண்ட செயல்களையோ மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் காட்டுக் கூச்சல் போட்டால் அது மிகப் பெரிய வெற்றி என்று கொள்ளலாம். அந்த வகையில் ஒபாமா மற்றும் சர்கோசியின் இந்திய வருகை மிகப் பெரிய வெற்றி .

2 comments:

Anonymous said...

ஹரி. சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு ஒரு பழமொழி உண்டு. ஒபாமாவின் வருகைக்கு பின்னால் எக்கச்சக்க அரசியல் உண்டு. மற்றபடி ஐ.நா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமா சொல்வது வாயில் கிண்டிய அல்வா தான். அதுக்கு சர்கோசி சொன்னதிலாவது ஒரு அர்த்தம் உண்டு.

Haripandi Rengasamy said...

மீனா, சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஒபாமாவின் இந்திய வருகைக்கு பின் அரசியல் காரணங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். ஒபாமாவின் இந்திய வருகை , இந்தியாவை விட அமெரிக்காவிற்கே அதிக பயனுள்ளதாக இருக்கலாம். இருந்தபோதிலும் இத்தகைய பயணங்களின் மூலம் தங்கள் நாட்டின் தேவையை பூர்த்தி செய்து கொள்வது என்பது இந்தியா மிக முக்கிய நாடு என்று அங்கீகரித்த செயல். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு நாம் முன்னேறிவிட்டோம் என்பது சந்தொசப்படக்கூடிய செயல்தானே.

ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக ஒபாமா ஆதரவு தந்தது எந்த அளவிற்கு நம்ப கூடிய விஷயம் என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால் இன்றைய நிலையில் சீனாவிற்கு எதிரானா ஒரு மாற்று நிச்சயம் அமெரிக்காவிற்குத் தேவை. சரி ஒபாமா சொல்வது வாயில் அல்வா கிண்டுவதாகவே இருக்கட்டும். சும்மாவேனும் இந்தியாவை சந்தோசப்படுத்துவதுவதன் மூலம் அமெரிக்கா ஆதாயம் பெறுவது என்றாலும் , இந்தியா அமெரிக்காவின் ஆதாயத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது என்பதே மிகப் பெரிய விசயம்தான். அதுவே எனக்கு சந்தோசம் அளிக்கக் கூடிய செயல்தான்.

சர்கோசி சொன்னதை நான் என்றுமே சந்தேகரித்ததில்லை :)