Friday, December 17, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 1

நான் முன்பே கூறியது போல இந்த உலகில் சில மனிதர்களைப் பற்றி பேசும்போதே எனக்கு பரவசம் பொங்கும். அவர்களைப் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றும். அவர்களைப் பற்றிய சிறிய சிறிய செய்திகளும் பரவசம் தரும். எனக்கு முக்கியமாக ஒருவரைப் பிடித்திருக்க வேண்டுமென்றால் அதுக்கு முக்கிய criteria அவர்கள் இந்தியாவிற்காக நல்லது செய்திருக்க வேண்டும் , தாங்கள் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். அத்தகையவர்களே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவிற்காக எதுவும் செய்யாமல் முக்கியமாக தங்களை இந்தியர் என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளாவிட்டால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் ஆனாலும் எனக்குப் பிடிக்காது. அத்தகையோர் பட்டியலே கீழே . இதில் இந்தியர் தவிர வேறு வெளிநாட்டவர் இடம் பெறாததில் வியப்பில்லை. நான் இங்கும் இடும் பட்டியல் வரிசைகிரகமாக இல்லை .

சர்தார் வல்லபாய் படேல் :


இந்தியாவின் இரும்பு மனிதர். தனி மனிதராக இந்தியாவை ஒருங்கிணைத்த மாமனிதர். இவர் இல்லையேல் இந்தியா இன்று துண்டு துண்டாகத்தான் இருந்திருக்கும். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் , முதல் துணை பிரதமராகவும் இருந்தவர். இந்திய பிரிவினையின் போது கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தனி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவற்றில் 565 ராஜ்ஜியங்கள் இந்தியாவில் இருந்தன. அவற்றை எல்லாம் இந்தியாவில் இணைக்க வழிகோலினார். இந்த 565 ராஜ்ஜியங்களில் ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் மட்டும் இந்தியாவில் இணைய மறுத்தன. இவற்றில் ஜுனாகத் பாகிஸ்தானுடன் இணையவும், ஹைதராபாத் தனியாக இருக்கவோ அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ இருந்தன. காஷ்மீர் தனி சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க விரும்பியது. இவற்றில் ஜுனாகத் மற்றும் ஹைதராபாத்தில் சுல்தான்கள் முஸ்லீம்களாகவும் மக்களில் 80% க்கும் மேல் இந்துக்களாகவும் இருந்தனர். ஜுனாகத்தும் ஹைதராபாத்தும் பாகிஸ்தானிலிருந்து வெகு தொலைவில் வேற இருந்தன . இருந்தபோதும் அந்த சுல்தான்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்த தனி ராஜ்ஜியங்களை தங்கள் இஷ்டப்படி பாகிஸ்தானுடனோ , இந்தியாவுடனோ இணையவோ அல்லது தனி சுதந்திரம் பெற்ற நாடாகவோ இருக்க அனுமதித்திருந்தது. இப்படி சட்டம் இந்த சுல்தான்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும் மக்களின் நலனையும் அவர்களின் ஏகோபித்த ஆதரவையும் கருத்தில் கொண்டு சர்தார் இந்த சுல்தாகளை இந்தியாவுடன் இணைய கோரினார். அவர்கள் மறுத்தபோது ராணுவத்தை அனுப்பி அவர்களை வழிக்கு கொண்டு வந்தார். இத்தகைய தைரியம் நேருவிக்கே கிடையாது. நேரு இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் தரமாட்டார் என்பதாலையே நேரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்தபோது acting prime minister ஆக இருந்து ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்பி அதனை இந்தியாவுடன் இணைத்தார்.

பாகிஸ்தான் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்தபோது அதனை தடுக்க உடனே ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று கூறினார். ஆனால் நேருவும் , மவுண்ட்பேட்டனும் காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் இணைவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்வரை காத்திருக்கச் சொன்னார்கள். இந்தியா காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பிய போது பாகிஸ்தானும் காஷ்மீரின் பாதி பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. அப்பொழுது நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்ற போது படேல் அதனை கடுமையாக எதிர்த்தார். படேல் நம் ராணுவத்தை வைத்தே நாம் முழு காஷ்மீரை கைபற்றிவிடலாம் என்று கூறினார். ஆனால் படேலின் எதிர்ப்பையும் மீறி நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்றார். அப்பொழுது ஐநா யார் யார் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துல்லார்களோ அவ்விடங்கள் அவரவருக்கு என்று கூறி விட்டது. அதனால் பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. நேரு மட்டும் படேலின் பேச்சை கேட்டிருந்தால் இந்நேரம் முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும். மேலும் சுதந்திரம் பெற்றபோது இந்திய அரசு பிரிவினைத்தொகையாக 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டி இருந்தது . அத்தொகையை பாகிஸ்தானுக்கு கொடுக்க கூடாது என்று படேல் கடுமையாக எதிர்த்தார் . ஏனென்றால் அப்பணத்தை பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் என்பதால். ஆனால் அப்பொழுது காந்தி அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அதனால் அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டி வந்தது . படேல் சொன்னது போலவே பாகிஸ்தான் அப்பணத்தை இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் பயன்படுத்தியது. இப்படி பல விசயங்களில் படேலின் பேச்சை கேட்காததாலையே இந்தியா இன்றும் கஷ்டப்படுகிறது. படேல் மட்டும் நேருவிற்கு பதிலாக பிரதமராக ஆகி இருந்தால் இந்நேரம் இந்தியா எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். இது நான் மட்டுமே கூறுவது அல்ல இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மற்றும் J.R.D.டாட்டா போன்றோரும் இதே கருத்தை கொண்டிருந்தனர்.

பீல்ட் மார்ஷல் சாம் மானக்சா :

சாம் பகதூர் என்று அழைக்கப்படும் சாம் மானக்சா பஞ்சாப் அமிர்தசரசில் பார்சி பெற்றோருக்குப் பிறந்தார். தன்னுடைய 40 வருட ராணுவ சேவையில் இரண்டாம் உலகப் போர், 1947 இந்தியா பாகிஸ்தான் போர் , இந்திய சீனப் போர் , 1965 இந்திய பாகிஸ்தான் போர் , 1971 வங்கதேசப் போர் ஆகிய போர்களில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போரில் இவருடைய பணி மிகவும் பாராட்டப்பட்டது. மானக்சா இத்தனை போர்களில் பங்கேற்றாலும் அவர் மிகப் பெரிய புகழ் பெற்றது 1971 வங்கதேசப் போர் ஆகும். வங்கதேசப் போரின் போது மானக்சா இந்தியாவின் எட்டாவது ராணுவத் தளபதியாக இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இப்போரில் இந்தியா மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்காலங்களில் நடைபெற்ற போரில் இப்போரே மிக குறுகிய காலத்தில் முடிந்த போராகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிக ராணுவ கைதிகள் சிறைபட்ட போராகும் . கிட்டத்தட்ட 90,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். இவருடைய பணியைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு மிக உயரிய பட்டமான பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளித்தது . இப்பட்டத்தைப் பெற்றவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் பீல்ட் மார்ஷல் கரியப்பா. இன்னொருவர் மானக்சா. மானக்சா 1971 போரின் முடிவில் எந்த அளவிற்கு மக்களிடம் புகழ் பெற்றிருந்தார் என்றால் , அப்பொழுது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எங்கே மானக்சா ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவாரோ என்று பயப்படுமளவுக்கு மானக்சா மக்களிடம் புகழ் பெற்றிருந்தார்.

இந்திரா காந்தி :

இந்தியாவின் அசைக்க முடியாத பிரதமராக இருந்தவர். இந்தியாவின் உறுதியான பிரதமராக இருந்தவர். இந்திரா காந்தி அவருடைய தந்தையான நேருவை விட பல விதங்களில் மாறுபட்டவர். இந்திரா காந்தி நேருவைப் போல் அல்லாமல் பல விசயங்களில் உறுதியான முடிவெடுத்தவர். இந்திரா காந்தியின் பல நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த துணைக்கண்டத்திலேயே மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் பல நடவடிக்கைகளை துணிந்து எடுத்தவர். என்னைப் பொறுத்தவரையில் இந்திய சீனப் போரின் போது நேரு அல்லாமல் இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால் நிச்சயம் அந்தப் போரின் முடிவு மாறி இருந்திருக்கும் அல்லது இத்தகைய படு தோல்வியை இந்தியா பெற்றிருக்காது. வங்கதேசப் போரில் இந்தியா பங்கெடுக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு மிகத் துணிச்சலான ஒன்று. நிச்சயம் நேரு இத்தகைய முடிவெடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற இந்திய பாகிஸ்தானியப் போரிற்கும் இப்போரிற்கும் மிக முக்கிய வித்யாசம் உண்டு. அது என்னவென்றால் இப்போரில் பாகிஸ்தான் முதலில் இந்தியாவுடன் நேரடியாக போர் தொடுக்கவில்லை . இப்போர் முதலில் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போராகவே இருந்தது. மேற்குப் பாகிஸ்தான் , கிழக்குப் பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தது. போர் என்பதைக்காட்டிலும் அட்டூழியம் பண்ணியது. பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் கிழக்கு பாகிஷ்தானிலிருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். பிற நாட்டின் பிரிவினை விரும்பாதது இந்தியாவின் கொள்கையாக இருந்த போதிலும் இந்தியா கிழக்குப் பாக்கிஸ்தானிற்கு ஆதரவாக போரில் இறங்கியது மிக முக்கிய நடவடிக்கையாகும். இப்போரில் நிச்சயம் பாகிஸ்தானிற்கு ஆதரவாக அமெரிக்க என்னும் மிகப் பெரிய பேரரசு போரில் இந்தியாவிற்கு எதிராக குதிக்கும் என்று தெரிந்த போதிலும் இந்தியா இப்போரில் குதித்தது. அமெரிக்காவிற்கு எதிராக அப்போதைய சோவியத் பேரரசின் ஆதரவை பெற்றது இந்திரா காந்தியின் அரசியல் ராஜதந்திரத்தை காட்டியது. இதன் மூலம் பாகிஸ்தான் என்னும் நம் எதிரியை இரண்டாகப் பிரித்தார். பங்களாதேஷ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தினார். பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகியது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை , இனப் படுகொலைகள் என்று வர்ணித்தார். இந்திரா காந்தி மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் மலர்ந்திருக்கும். சோவியத் பேரரசுடன் 20 வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன் மூலம் ராகேஷ் சர்மா விண் வெளிக்குச் சென்றார் . இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்ட தனி ராஜ்ஜிய மன்னர்களுக்கு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்திரா காந்தி பிரதமராக ஆன பிறகு வெள்ளை யானைக்கு தீனி போல அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த பென்சனை நிறுத்தினார்.

அதே போல் இந்திரா காந்தி தீவிரவாதத்திற்கெதிராக மிகத் தீவிர நடவடிக்கை எடுத்தார். அவர் காலத்தில் பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் உருவாகியது. அவர்கள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கி இருந்தனர். அவர்களை அழிக்க ராணுவத்தை பொற் கோயிலிற்குள் செல்ல உத்தரவிட்டார். இதன் மூலம் காலிஸ்தான் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அவரது உயிருக்கே உலை வைத்தது. என்னைப் பொறுத்தவரை இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சினை எல்லாம் எப்பொழுதே முடிந்திருக்கும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்திரா காந்தி 1974 இல் மேற்கொண்ட "புத்தர் சிரித்தார்" என்னும் அணு ஆயுத சோதனையே உலக அளவில் மிக அதிர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தியது. அது உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மேற்கொண்ட அணு ஆயுத சோதனை ஆகும். இத்தகைய சோதனையை செய்ய மிகத் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இந்திரா காந்திக்கு மட்டும்தான் இருந்தது . இது எந்த அளவிற்கு துணிச்சலான பெரிய செயல் என்றால் , அப்பொழுது ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருந்த அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவிற்கு அடுத்து அணு ஆயுத சோதனை செய்த ஒரே நாடு இந்தியாதான். இது எந்த அளவிற்கு உலகில் விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், இந்தியாவின் இந்த சோதனைக்கு அடுத்தே அணு தொழில்நுட்பம் வேறு நாடுகளுக்குச் செல்லமால் இருக்க Nuclear Suppliers Group ஆரம்பிக்கப்பட்டது.

இந்திரா காந்தியைப் பற்றி கடும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. அவரைப் பற்றி முக்கியமான கடும் விமர்சனம் அவருடைய emergency நடவடிக்கையாகும். அதேபோல் ரூபாயின் மதிப்பை குறைத்ததும் மிக தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருடைய emergency நடவடிக்கை சரியான ஒன்றுதான். அக்காலங்களில்தான் இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்காக நடந்தன. என்னைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை உருவாக்கிய பிரதமர்களிலே இந்திரா காந்திதான் மிகச் சிறந்தவர்.

பேரரசர் சாம்ராட் அசோகர்:

உலகிலேயே மிகப் பெரிய இந்தியப் பேரரசை அமைத்தவர் . இவருடைய பேரரசு மேற்கே பெர்சியா (இன்றைய ஈரான்) முதல் கிழக்கே அஸ்ஸாம் வரையிலும் , தெற்கே வட கேரளா , வட ஆந்த்ரா வரையிலும் பரவி இருந்தது. பேரரசர் அசோகரின் ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் ரத்த சரித்திரமே. தான் ஆட்ச்சிக்கு வர தன் அண்ணன்கள் அனைவரையும் கொன்றார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அவருடைய ராணுவம் தன் நாட்டின் எல்லையை விஸ்தீகரிக்க அண்டை நாடுகளின் மீது மிக பயங்கரமான போர்களைத் தொடுத்தது. அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது கலிங்கப்போர் ஆகும். கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா ஆகும். அக்காலத்தில் அக்கலிங்கம் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வரவில்லை. பேரரசர் சந்திரகுப்த மௌரியராலயே அதை மௌரிய பேரரசின் கீழ் கொண்டு வரமுடியவில்லை . அந்நாட்டின் மீது அசோகர் மிகப் பெரிய போர் தொடுத்தார். அப்போரின் முடிவில் கலிங்கம் தோற்றது. ஆனால் அப்போரின் விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்தது. அதனைப் பார்த்து பேரரசர் அசோகர் முற்றிலும் மனம் மாறினார். பௌத்த மதத்தை சார்ந்து அகிம்சாவாதியாக மாறினார். அதற்குப் பின் அவர் இவ்வுலகம் கண்டிராத மிகச் சிறந்த பேரரசராக விளங்கினார். அதற்கடுத்து அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை. தன் அண்டை நாடுகளுடன் மிகச் சிறந்த நல்லுறவை பேணினார்.

அகிம்சாவாதியாக மாறிய அவர் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக அடிமைத்தனம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல், காடு அழித்தலை தடை செய்தார். அவர் மக்களின் மீது மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்தினார். நாடு முழுவதும் மரங்களை நட்டார். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக தன் நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதிகளை அளித்தார். அவர் பௌத்த மதத்துக்கு மதம் மாறினாலும் பின் வந்த முஸ்லிம் மன்னர்களை போல் அல்லாமல் யாரையும் கட்டாயமாக மதம் மாற்றவில்லை. அனைத்து மதங்களையும் தன் மதத்தைப் போலவே எண்ணினார். பிற மதங்களுக்கு செய்யும் தீங்கு தன் மதத்திற்கே செய்யும் தீங்கு என்று கருதினார். பிற உயிரினங்களுக்கு செய்யும் தீங்கு தனக்கே செய்யும் தீங்கைப் போன்றது என்று எண்ணினார். தன் மக்களை ஒற்றுமையுடனும், அன்புடனும் பிற மத சகிப்புத்தன்மையுடனும் வாழுமாறு அறிவுறுத்தினார் . மனித வரலாற்றிலேயே முதல் முறையாக தன் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான முறையிலான உதவிகளை செய்தார். அவை மருத்துவம், பொறியியல், கிணறு வெட்டுதல், மரம் நடுதல் போன்றவையாகும். கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தார். உலக வரலாற்றிலேயே முதலில் அமைந்த நாலந்தா, தக்சசீல பல்கலைக்கழகங்களை அமைத்தார் . இததகைய பேரரசரை இவ்வுலகம் கண்டதில்லை என்பது போல் இருந்தது அவருடைய ஆட்சி . உலகம் இன்று ஏங்கும் மிகச் சிறந்த பேரரசர் அசோகர் ஆவார்.

No comments: