இரவு தனக்கே உரித்தான தன்னியல்பைக் கொண்டது. உலகமானது இரவில் வேறொரு போர்வையைப் போர்த்திக் கொள்கிறது. இரவில் காணும் உலகம் முற்றிலும் மாறுபட்டது.அது இரவில் தனக்கென்று ஒரு முக மூடியைப் போர்த்திக் கொள்கிறது. பகலைச் சார்ந்து பலருடைய வாழ்வு இருப்பது போன்று இரவைச் சார்ந்தும் பலருடைய வாழ்வு இருக்கிறது. அது ஒரு தனி உலகம். அது ஒரு மாய உலகம் கூட. இரவு போர்த்திக் கொள்ளும் போர்வை தன்னிகரற்றது.அது சற்று இரக்கமற்றதும் கூட. பகலில் வாழும் உயிர்களுக்கு இரவு அச்சம் தரக்கூடியது. இரவு உலகம் தனிப்பட்ட உயிர்களுக்கானது அங்கே பகல் உயிரினங்கள் சற்று தயக்கத்துடனேயே வரவேற்க்கப்படுகின்றன அல்லது வரவேற்க்கப்படுவதில்லை .
ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் கொண்டிருந்தாலும் இரவு தனிமையானது. ஒற்றைச் சூரியனைக் கொண்டிருந்தாலும் பகல் தனிமையற்றது.
இரவா பகலா எது அதிகமாக வரவேர்க்கப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இரவு எப்பொழுதும் அமைதியானது . அது பகலைப் போல் எப்பொழுதும் கத்திக் கூச்சலிடுவதில்லை. பகலுக்கு காத்திருக்கும் கடமைகள் அளவிற்கு இரவிருக்கு காத்திருப்பதில்லை. ஏனெனில் பகலைச் சார்ந்த பிராணிகள் அளவிற்கு இரவைச் சார்ந்த பிராணிகள் இல்லை . அதனால்தான் விடிவெள்ளி தெரிந்த அளவிற்கு மற்ற நட்சத்திரங்கள் பெயர்கள் கூட தெரிவதில்லை.
இரவு எப்பொழுதும் ஒய்விர்க்கானதாகவே கருதப்படுகிறது. அதனாலயே பகல் அனுபவிக்கப்பட்ட அளவிற்கு இரவு அனுபவிக்கப்படுவதில்லை. நான் என்பது ஒய்வு எடுப்பதற்கும் தூங்குவதற்கும் ஆனதாகவே உள்ளது.
இரவில் தெரியும் மின்மினிப் பூச்சிகள் பகலில் தெரிவதில்லை . அதற்காக அவை பகலில் இல்லாமலே இருப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. அவை பகலிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் கண்ணுக்குத் தெரிவதில்லை. இப்படி இல்லாமலேயே இருப்பவை உலகில் பல .
எனக்குத் தெரிந்து இரண்டு உலகங்களையும் முழுமையாகத் தன்னுள் கொண்ட நகரம் என்றால் அது மதுரைதான். அதனை தூங்கா நகரம் என்றே விழிப்பார்கள். அது எந்த நேரமும் தூங்குவதில்லை. அது எப்பொழுதும் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டே இருக்கிறது. இல்லையேல் யாரேனும் ஒருவர் அதனைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். பகலில் எப்படி அது மக்களை ஏற்றுக்கொள்கிறதோ அதேபோல் இரவிலும் ஏற்றுக்கொள்கிறது.மேலும் அது இரவு வாழ்க்கைக்கென தன்னை தகவமைத்துக்கொள்கிறது .
அந்நகரில் எந்நேரமும் எங்கு சென்றாலும் சுடச்சுட உணவு கிடைக்கும். shift போட்டு கடைகள் அங்கு இயங்கும். சாலையோர இட்லிக் கடைகள் அங்கு பிரபலம். இரவு 6 மணியிலிருந்து 10 மணி வரை சில இட்லிக் கடைகள் இயங்கும், பிறகு இரவு 10 மணியிலிருந்து இரவு 2, 3 மணி வரை சில கடைகள் இயங்கும். வேறு சில கடைகள் இரவு 3,4 லிலிருந்து ஆரம்பித்து காலை 6 மணிவரை மற்றும் சில கடைகள் இயங்கும். இவ்வாறாக மதுரை தன்னை தேடி வருபவர்களை எந்த ஒரு சுழிப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும்.
நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது தனிமையில் படிப்பதற்காக எங்களுடைய டியுசன் சென்டரிலயே என் நண்பன் மீராவுடன் தங்கி படிப்பதுண்டு. அந்த டியுசன் சென்டரில் பேய் இருப்பதாக ஒரு புரளி உண்டு. அதை எங்கள் அம்மாவிடம் கூறியதிலிருந்து, எங்கள் அம்மா என்னை டியுசன் சென்டரில் இரவு வெகு நேரம் தங்க அனுமதிக்கமாட்டார். எப்படியாகிலும் வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்பார். அதனால் எனக்கு தூக்கம் வரும்வரை படித்து விட்டு படுக்க சாமத்தில் வீட்டிற்க்குச் செல்வேன். அப்பொழுது அந்த ஊரே நான் பகலில் பார்த்தது போல் இருக்காது. பேருந்து நிறுத்தத்தில் நான்கைந்து ஆட்டோக்கள் நிற்கும். அவையும் இரவிற்கு என்றே ஒட்டப்படும் ஆட்டோக்கள். அந்த ஆட்டோ ஓட்டுனர்களை பகலில் காண முடியாது. இரண்டு மூன்று போலீஸ் காவலர்கள் நிற்பார்கள். பகலில் பார்க்கும் காவலர்களுக்கும் இரவில் பார்க்கும் காவலர்களுக்கும் ஏதோ மிகப் பெரிய வேறுபாடு இருப்பதாகவேத் தோன்றும். இரவில் அவர்கள் எப்பொழுதும் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்கள். நடுச் சாமத்தில் மிதிவண்டியில் செல்லும் என்னைப் போன்ற இரண்டுகெட்டான் வயசுப் பயல்களைக் கண்டாலே நிறுத்தி விசாரிப்பார்கள். அவர்களிடம் புத்தகத்தை காட்டி படித்துவிட்டு வருகிறேன் என்றால் மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்.
அப்படி ஒரு நாள் படித்துவிட்டு இரவில் என் வீட்டிற்கு சென்றேன். செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தலாம் என்று நினைத்து தேநீர் ஒன்று சொன்னேன். அப்பொழுதான் கவனித்தேன், கடையிலிருந்த பெரும்பான்மையோர் குடித்திருந்தனர். அப்பொழுது அந்த கடையில் நம் ராமாயணம் கதைகளில் வரும் ராட்ட்சசி போன்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையெல்லாம் விரித்துப் போட்டுக் கொண்டு நின்றிருந்தார். அந்த அகால நேரத்தில் நான் ஒரு பெண்மணியை மற்ற ஆண்களுக்கு நிகராக அங்கு அப்படி எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அதற்க்கு மேலாக அவர் குடித்திருந்தார். என்னைப் போன்ற ஒரு பையனையும் அந்த நேரத்தில் அவரும் எதிர்பார்க்கவில்லை போலும். அவர் என்னிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். நான் ஏற்க்கனவே சற்று பயந்து தான் இருந்தேன். ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு விட்டு அட்டகாசமாக சிரிக்க வேறு செய்தார். நான் ரொம்பவே பயந்துவிட்டேன். வீட்டிற்கு வந்த பிறகும் உறக்கம் பிடிக்கவில்லை.
இவ்வாறாக ஒரு சின்னஞ் சிறு பிராணியைக்கூட அந்த மொரட்டு இரவு விட்டுவைக்கவில்லை .
Monday, April 26, 2010
இரவா பகலா
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நண்பரே நல்ல பதிவுகளை இப்போ யாரும் ரசிப்பதில்லை.. எல்லாமே சினிமா மயமாக மாறிவிட்டது... நன்றி
Post a Comment