Thursday, November 5, 2009

கடவுளிடம் காலை நீட்டினேன் !

நான் அன்று வீட்டில் காலை நீட்டி உட்கார்ந்திருந்தேன். நான் காலை நீட்டி உட்கார்ந்திருந்த இடம் சாமி அறையை நோக்கியவாறு இருந்தது. அதைப் பார்த்த என் அம்மா "டேய், சாமிய நோக்கி காலை நீட்டாதடா" என்றார். ஏனென்றால் அது சாமியை அவமதிப்பதாக இருக்கிறதாம். அப்பொழுதுதான் நான் சாமி அறையை நோக்கியவாறு காலை நீட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னுடைய நோக்கம் சாமியை அவமதிப்பதில்லை என்பதால் அது எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. இருந்தாலும் நான் காலை மடக்கிய பிறகுதான் என் அம்மா சமாதானமடைந்தார்.

அதேபோல் நம் சிறு வயதில் ஏதேனும் சிறு புத்தகத்தையோ அல்லது ஏன் ஒரு சிறு தாளையோ மிதித்துவிட்டால், அது சரஸ்வதி என்று சொல்லி அதனை தொட்டுக் கும்பிடச் சொல்லுவார்கள். இன்றும் கூட நான் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன்தான்.

என்னைப் பொறுத்தவரை கடவுள் மரியாதை, அவமரியாதை இவற்றிற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

சிவபெருமான், தன்னைப் பற்றிக் கூறும்போது கூட "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தவன்" என்பார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார், சிவபெருமானின் கண்களிலிருந்து குருதி பெருகுவதைக் கண்டு தன் ஒரு கண்ணைத் தோண்டி சிவபெருமானின் கண்ணில் வைப்பார். அப்பொழுது சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்தும் குருதி வருவதைக் கண்டு தன் மற்றொரு கண்ணையும் தோண்டி வைக்க முயல்வார். சிவபெருமானின் கண் இருக்கும் இடம் அறியத் தன் காலால் சிவபெருமானின் கண் இருக்கும் இடத்தை மிதித்துக்கொள்வார். அதனையே சிவபெருமான் "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தான்" என்று நெகிழ்ச்சியுடன் நயம்படக் கூறுவார்.

ஆக சிவபெருமானே தன்னைக் காலால் எட்டி மிதித்ததை அவமரியாதையாகக் கருதவில்லை.

ஏன் மற்றப் பெருமக்களும் அவமரியாதையாகக் கருதவில்லை. மாணிக்கவாசகப் பெருமான், கண்ணப்ப நாயனாரைப் பற்றிக் குறிப்பிடும் போது,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

நம் உடம்பில் இருக்கும் மற்ற உறுப்புகளைப் போலவே காலும், ஆனால் அதனை மட்டும் அவமரியாதையாகக் கருதுவது ஏனோ என்று தெரியவில்லை.

நான் காலைப் பற்றி இவ்வாறு கூறும்போது என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி, உன்னை யாராவது காலால் மிதித்தால் ஏற்றுக்கொள்வாயா?.

அதற்க்கு என்னுடைய பதில் அவர் எந்த நோக்கத்தோடு மிதித்திருந்தார் என்பதைப் பொறுத்தது.

என்னை மிதிக்கும் ஒருவர் தெரியாமல் மிதித்திருந்தாலோ அல்லது மிதிக்கும் ஒரு செயல், அவமரியாதை என்ற எண்ணம் இல்லாமல் மிதித்திருந்தாலோ, நான் தவறாக எண்ணமாட்டேன் .

கடவுள் என்று வரும்போது மேற்க்கூறியக் கருத்து இன்னும் மாறுபடும்.

ஒருவன் கடவுளை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மிதித்தாலும், அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் கடவுள் அதனைப் பெரிதாக எண்ணமாட்டார். எண்ணவும் கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

அக்பர், பீர்பால் கதைகளில் ஒரு கதை வரும். ஒரு நாள் அக்பர், தன்னுடைய அவையில் வந்து "நேற்று ஒருவன் என்னை நெஞ்சில் ஏறிக் காலால் எட்டி மிதித்தான். அவனை என்ன செய்யலாம்?" என்று கேட்பார். உடனே அவையில் உள்ளவர்கள் எல்லாம் வெகுண்டு எழுந்து, அவன் காலை வெட்ட வேண்டும், அவனைக் கழுவில் ஏற்றவேண்டும், அவன் தோலை உரிக்க வேண்டும் என்று மாறி மாறி சொல்வார்கள். அப்பொழுது பீர்பால் மட்டும் அவன் காலுக்கு பொன்னால் ஆபரணம் அணிவிக்க வேண்டும் என்பார். அப்பொழுது அவையில் உள்ளவர்கள் எல்லாம் திகைத்து என்ன இது என்பார்கள்?. அதற்க்கு பீர்பால், சக்ரவர்த்தியை நெஞ்சில் ஏறி மிதிக்கக் கூடியவர் அவருடைய சிறு குழந்தை அன்றி வேறு யாராக இருக்க முடியும் என்பார்.

ஆக மிதித்தல் என்பது பார்ப்பவரின் கண்களைப் பொருத்தும், அச்செயலைச் செய்பவரின் நோக்கத்தைப் பொறுத்துமே அமைகிறது.

2 comments:

Shankar.Nash said...

Nice thought... its true that all depends on the intention with which it is done. But, at the same time, these kinds of discipline are brought to us, so tat we wil be cautious and not do it unintentionally too...

madu said...

You are style of writing and writing itself improving each and every post. Please so some marketing