லக்ஷ்மி விலாஸ் அரண்மனை
அரண்மனை:
ஒவ்வொரு ராஜாவும் தங்கள் மனப்போக்குப் படி அரண்மனை அமைத்துக்கொண்டனர் . கொல்கட்டா போன்ற நகரங்களில் இருந்த அலங்காரக் கடைகள் இந்த மகாராஜாக்களை நம்பியே இருந்தன. பரோடாவின் அரண்மனை லக்ஷ்மி விலாசின் மதிப்பு இன்றைய நிலையில் 4000 கோடி ரூபாய். அது பங்கின்காம் அரண்மனையைப் போல மூன்று மடங்கு பெரியது !.
ராஜாக்கள் என்றாலே ஊதாரித்தனமாகத்தான் இருக்கவேண்டுமா என்ன?. கஞ்சத் திலகங்களும் இருக்கத்தான் செய்தனர். ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான். மகா கஞ்சத் திலகம். தான் நிஜாம் ஆனதும் தன்னுடைய அப்பாவின் ஆசை நாயகிகளை , எதற்கு செலவு என்று விற்றுவிட்டார் . சில பேரை சில மூட்டை மாங்காய்க்களுக்கு !. நம் நிஜாம் எந்தப் பொருளையும் வீணாக்கமாட்டார்.ஒரு தடவை அவருடைய கைத்தடி உடைந்துவிட்டது. அதை ஒட்டுப் போட்டுப் பயன்படுத்தினார். ஒரு முறை வைசிராய் ஹைதராபாத் வந்திருந்தபோது அதைப் பார்த்து விட்டு புது கைத்தடி ஒன்றை நிஜாமுக்கு பரிசாகத் தந்தார் . அதையும் நம் நிஜாம் மறுக்காமல் வாங்கிக் கொண்டார். ஒரு முறை இந்தியாவின் உள்துறைச் செயலாளராக இருந்த V.P. மேனன் அவரைச் சந்தித்தார். அப்பொழுது இருவரும் புகைப் பிடிக்கத் தொடங்கினர். நம் நிஜாம் ஊரிலேயே மிக மலிவான சார்மினார் சிகரட்டை பிடித்துக் கொண்டிருந்தார். மேனனோ காஸ்ட்லியான சிகரெட். மேனன் ஒரு courtesy க்காக நிஜாமிடம் தன்னுடைய சிகரெட் பெட்டியை நீட்டினார். நம் நிஜாமும் மறுக்காமல் அதிலிருந்து நான்கைந்து சிகரெட் எடுத்து தன்னுடைய சிகரெட் பெட்டியில் வைத்துக் கொண்டார் . அடுத்து இரண்டு நாள் கழித்து மேனன் நிஜாமை திரும்ப சந்தித்த போது நிஜாமின் சிகரெட் பெட்டியில் மேனன் கொடுத்த அதே சிகரெட்கள் அப்படியே இருந்தன !.
இதுதான் வழி என்று இல்லை நம் நிஜாம் பல வழிகளில் சொத்து சேர்த்தார். ஊரில் ஏதாவது புது காரைப் பார்த்துவிட்டால் மறுநாள் அந்தக் கார் நிஜாம் வீட்டில் இருக்கும் . தள்ளிக்கொண்டுவந்துவிடுவார் !. அவரிடம் இப்படி 50 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருந்தன . ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தியது ஒரு ஓட்டை உடைசலான காரைத்தான் !. ஊரில் இருக்கும் யாராவது அவர்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்திற்கு கூப்பிட்டால் மறுக்காமல் கலந்து கொள்வார் . வரும்பொழுது கல்யாணப் பெண் அணிந்திருக்கும் விலை உயர்ந்த நகையைக் கொண்டுவந்துவிடுவார். ஏதேனும் விசேசங்களில் நிஜாம் அனைவருக்கும் முன் சிலருக்கு தன் கையாலேயே மது நிரப்பிக்கொடுப்பார். அவர்களுக்கு பெருமை பிடிபடாது .ஆனால் நிஜாம் அதற்கு முன்பே அவர்களிடம் இதற்கு இவ்வளவு ரேட் என்று பேசி வாங்கிவிடுவார். இப்படி எல்லாவற்றிர்க்கும் ஒரு ரேட். இப்படிப்பட்ட நிஜாமின் புகைப்படத்தை ஒரு தடவை TIME பத்திரிகை தன் அட்டைப்படமாக வெளியிட்டது. ஏனென்றால் அன்றைய நிலையில் அவர்தான் உலகின் முதல் பெரும் பணக்காரர் !.
நம் மகாராஜாக்கள் பொழுதுபோக்கிற்கு அதிகம் விரும்பியது போலோ மற்றும் கிரிக்கெட். நம் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் BCCI உருவாக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர். அவர் ஆதரித்தவர்களில் முக்கியமானவர் லாலா அமநாத்.
மகாராஜா பெண்ணு(களு)டன் அந்தப்புரத்தில் அந்தரங்கமாக இருக்கும்போது திரைக்குப் பின் ஒருவர் சத்தமாக கதை சொல்லிக் கொண்டிருப்பார் . காமக் கதை!. ராஜாவுக்கு mood வரணும்ல அதுக்குத்தான் !. ஒவ்வொரு மகாராஜாவும் அந்தப்புரம் வைத்திருந்தனர் . மகாராஜா என்றில்லை . ஊரின் பெரிய பணக்காரர்கள் , அமைச்சர்கள் தங்கள் அந்தஸ்திற்கேற்ப அந்தப்புரம் வைத்திருந்தனர். ஒரு அந்தப்புரத்தில் 300 பெண்கள் வரை கூட இருந்தனர், மகாராணி , ராணி முதல் ஆசைநாயகிகள் வரை !. ஓவ்வொரு பெண்ணிற்கும் அந்தப் பெண்ணின் அந்தஸ்திற்கேற்ப அவர்கள் அந்தப்புரத்தில் நடத்தப்பட்டனர். மகாராணிக்கு பெரிய ரூம், தங்கத்தட்டில் 30 , 40 வகை பதார்த்த உணவுகள். அடுத்து ராணிகளுக்கு சிறிய ரூம் , வெள்ளித்தட்டில் 15 , 20 பதார்த்த உணவுகள். ஆசை நாயகிகளுக்கு சாதாரணத் தட்டில் 10 பதார்த்த உணவுகள் , இப்படி. அந்தப்புரத்தில் மகாராணிதான் தலைவி. அவர் சொல்படிதான் அனைவரும் கேட்கவேண்டும். அந்தப்புரத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. காவலுக்குக் கூட திருநங்கைகள்தான். மருத்துவர்கள் கூட அந்தப்புரப் பெண்களை பார்க்கக்கூடாது. அந்தப்புரப் பெண்களுக்கு முடியவில்லை என்றால் திரைக்கு பின்னால் உள்ள அவர்களின் கையில் ஒரு நூல் கட்டப்படும் . அந்த நூலைப் பிடித்து நாடி பார்த்து மருத்துவர் மருந்து கொடுப்பார்!. இப்படி முன்னூறு வரைக்கும் அந்தப்புரத்தில் பெண்கள் இருந்ததால் , மகாராஜாவால் பல பெண்களுடன் வருடத்திற்கு ஒரு முறை கூட அவர்களுடன் இருக்க முடியாது . ஏன் பல பெண்களுடன் மகாராஜா வாழ்நாளில் ஒரு முறைதான் கூட இருந்திருப்பார் . இப்படி இருக்கும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்கள் அந்தப்புரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அது மட்டுமல்ல பழைய ராஜா போய் அவர் மகன் புதிய ராஜாவாக வந்தவுடன் பழைய ஆசை நாயகிகள் வெளியேற்றப்பட்டார்கள். ராணிகளுக்கு மட்டும் பென்ஷன் வழங்கப்பட்டது.
மேலே சொன்ன அனைத்து விசயங்களும் அனைத்து சமஸ்தான ராஜாக்களுக்கும் பொருந்துவதில்லை. இந்தியாவில் அன்று 565 சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றில் இந்தியாவை ஆண்ட UK க்கு இணையான நிலப்பரப்பு கொண்ட ஜம்மு காஷ்மீர் முதல் சில கிராமங்களையே உள்ளடக்கிய சமஸ்தானம் வரை இருந்தன.அதனால் மேற்கூறிய அனைத்து விசயங்களும் சமஸ்தானத்தின் சமூக பொருளாதார நிலையையும் தனிப்பட்ட ராஜாக்களின் மனநிலையையும் பொறுத்து அமைந்தன.
இந்த புத்தகத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான சமஸ்தானங்கள் பற்றி தனித்தனி அத்தியாயங்களில் இருக்கும். இந்த அத்தியாயங்கள் அந்த சமஸ்தானத்தில், முக்கியமாக அங்கிருந்த மகாராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகள் பற்றி ஆரம்பிப்பதாக இருக்கும். அடுத்து அந்த சமஸ்தானம் எப்படி உருவானது , அதைத் தோற்றுவித்தவர் யார் என்ற சிறு அறிமுகத்துடன் அதை ஆண்ட மகாராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இருக்கும். அடுத்து அந்த சமஸ்தானத்தைப் பற்றிய சமூக , பொருளாதார நிலை , ராஜாக்கள் செய்த நல்ல , கெட்ட காரியங்கள் பற்றி இருக்கும். கடைசியில் அந்த சமஸ்தானம் இந்திய சுதந்திரத்துடன் இந்தியாவில் இணைவதுடன் முடியும். இந்த புத்தகத்தின் நோக்கமே ராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி விவரிப்பதுதான். இருந்தாலும் அந்த காலத்தில் நடந்த முக்கிய செய்திகளைப் பற்றியும் இருக்கும். எ. கா : ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். அந்த கார் எப்படி உருவானது , அது எந்த அளவிருக்கு சமூக அந்தஸ்தாக விளங்கியது என்று முக்கியமான, நமக்கு அதிகம் தெரியாத விசயங்கள் இருக்கிறது. எனக்கு ராஜாக்களின் சமையலறை நடவடிக்கைகளையும் , அந்தப்புர hierarchy பற்றிச் சொல்லியதும் ரொம்ப பிடித்திருந்தது. இவை நாம் அறியாத விசயங்கள். அதோடு அந்தந்த காலகட்டத்தில் இருந்த பிரிட்டிஷ் கிங் மற்றும் ராணிகளை பற்றியும் வைசிராயகளைப் பற்றியும் நாம் தெரியாத விசயங்கள் உள்ளன .
எனக்குத் தெரிந்து பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த இந்த மகாராஜாக்கள் வாழ்க்கையை அதற்கு முன் வாழ்ந்த மற்ற மகாராஜாக்கள் அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகமே. இவர்களுக்கு தங்களின் மீது பிற ராஜாக்கள் படையெடுத்து வருவார்கள் இல்லை தங்களுக்கு எதிரான புரட்சி பற்றியோ அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு நடக்கும் என்ற கவலையோ இல்லை. பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடந்துகொண்டால் போதும் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள், என்ன கொஞ்சம் செலவாகும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அதனால் ஒரே ஜாலி ஜிம்கானாதான் :).
ஆனால் மகாராஜாக்களின் வாழ்க்கையும் அவர்களின் நடவடிக்கையும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. ராஜாக்களுக்கே உரிய உல்லாசம், டாம்பீகம் போன்ற குணங்கள் பெரும்பாலும் common ஆக இருந்தாலும் அது ஒவ்வொரு ராஜாவைப் பொறுத்து மாறியது. சமஸ்தான வருமானத்தில் தன்னுடைய அழகான குதிரைப்படைக்கே 40% செலவழித்த ராஜாக்கள் மத்தியில்தான் மக்களின் நலனே முக்கியம் என்று வாழ்ந்த ராஜாக்களும் இருந்தனர். அந்தப்புரத்தில் 300 ஆசைநாயகிகள் வைத்துக்கொண்ட மகாராஜாக்கள் இருந்த காலத்தில்தான் ஏகபத்தினி விரதனாக இருந்த ராஜாக்களும் இருந்தனர். வேட்டையில் ஆயிரம் புலிகளைக் கொன்ற ராஜாக்கள் இருந்தபோது வைசிராயே வந்து தன் சமஸ்தானத்தில் இருந்த சிங்கங்களை வேட்டை ஆட அனுமதி கேட்டபோதும் அதை மறுத்த மன்னர்களும் இருந்தனர். இப்படி அனைத்திலும் அனைவரும் தனிப்பட்டு விளங்கினர்.
இப்படி இவர்கள் எவ்வளவு உல்லாசமாக இருந்தாலும் அவர்களால் முழு சுதந்திரத்தோடு இருக்க முடிந்ததில்லை. ராஜாக்கள் தான் விரும்பியபடி எல்லாம் இருக்க முடிந்திருக்கவில்லை. எல்லாவற்றிக்கும் அவர்கள் பிரிட்டிஷின் அனுமதி அல்லது அங்கீகாரம் பெறவேண்டி இருந்தது . ஓவ்வொரு சமஸ்தானமும் அப்பகுதிக்கு என நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி ரெசிடென்ட் என்பவரால் கண்காணிக்கப்பட்டது . அவர் சமஸ்தானத்தில் நடந்த அனைத்து விசயங்களையும் வைசிராய்க்கு செய்திகளாக அனுப்பிக்கொண்டிருந்தார். இவர்கள் உல்லாசப்பயணமாக ஐரோப்பா போவதென்றாலும், தான் விரும்பிய பெண்ணை ராணி என்ற அந்தஸ்துடன் கட்டிகொள்வதற்கும், தன் மகனை அதிகாரப்பூர்வ வாரிசாக அறிவிப்பதற்கும் ரெசிட்டென்ட்டின் அனுமதி வேண்டும். அவர்கள் என்னதான் தலைகீழாக இருந்து தண்ணி குடித்தாலும் தான் விரும்பிய ஐரோப்பிய பெண்ணை ராணியாக அறிவிக்க முடியவில்லை. அந்த ஐரோப்பிய ராணிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் அங்கீகாரம் இல்லை.
ஐரோப்பிய பெண்களை ஆசைநாயகிகளாக மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். இப்படி எல்லா இடத்திலும் அவர்களுக்கு ஒரு செக் இருந்தது.
இருந்தாலும் மகாராஜாக்கள் உல்லாச வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றனர். அதனால்தான் Air India , தன் பயணிகளைத் தான் மகராஜாக்களைப் போல் கவனித்துக் கொள்வேன் என்று காட்ட தன் நிறுவனத்திற்கு 'Maharaja' symbol வைத்தது.
நிச்சயம் இந்த புத்தகம் நாம் அறியாத மகாராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் , சமஸ்தானத்தில் நடந்த முக்கிய நிகழ்சிகளையும் பற்றி அருமையாக கூறுகிறது . வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் நல்ல புத்தகம்.
எனக்கு பிரிட்டிஷ் கால மகாராஜாக்களை விட அதற்கும் முந்தய காலகட்டத்து ராஜாக்களின் தனிப்பட்ட வாழக்கை, அப்பொழுது இருந்த சமூக , பொருளாதார நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அது சற்றுக் கடினம் என்றாலும் குறைந்த பட்சம் medival காலத்து ராஜாக்களைப் பற்றியாவது தெரிந்து கொள்ள ஆசை .
முற்றும்.
1 comment:
மூன்று விமர்சனங்களையும் படித்தேன். நன்றாக இருந்தது. ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் இந்த புத்தகத்தைக் கையில் எடுப்பேன். பில்லிங்க் கவுண்டர் போகும் முன்பு எடுத்த இடத்தில் வைத்துவிடுவேன் :)
இந்த முறையாவது இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது உங்கள் விமர்சனம்.
Post a Comment