சில ராஜாக்களின் உல்லாசம் அளவுக்கு மீறி சென்றது. சில சிறுபிள்ளைத்தனமானது. அப்படித்தான் பரத்பூர் மகாராஜா கிஷன்சிங். ஒரு நாள் அவர் தன்னுடைய கட்டிட எஞ்சினியர்களை கூப்பிட்டார். ஒரு புது நீச்சல் குளம் கட்ட வேண்டும் என்பது கட்டளை. நீச்சல் குளம் பற்றிய design எல்லாம் அவரே போட்டார். நீச்சல் குளத்தின் ஆழம் ரெண்டு அடி இருக்கவேண்டும் என்று கட்டளை இடப்பட்டது. கட்டி முடித்ததும் அதைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. அதற்கு சந்தன படிக்கட்டுகள். பின்னர் நாற்பது அழகான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். படிக்கு இரு பதுமையாக நின்ற அவர்களின் கையில் விளக்குகள் கொடுக்கப்பட்டன. ராஜா குளத்தில் இறங்கியவுடன் பெண்களும் இறங்கினர். ராஜா ஒவ்வொருவரின் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடத் தொடங்கினார். எந்தப் பெண் கடைசியாக தன் கையில் ஏந்திய விளக்கு அணையாமல் பாதுகாக்கிறாளோ அவளே வெற்றி பெற்றவள் . அவளுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது அத்துடன் அன்று ராஜாவின் படுக்கையறையை அலங்கரிப்பதும் அவளே !.
அன்று ராஜாக்கள் , என்றும் உற்சாகம் எங்கும் உல்லாசம் என்று இருந்துருக்கிறார்கள். உற்சாகத்துக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மற்றொரு வழி வேட்டை . ஆனா ஊனாவென்றால் வேட்டைதான். அவர்களின் சமஸ்தானத்தில் இருக்கும் மிருகங்களுக்கு ஏற்ப அவர்களின் வேட்டை விலங்குகள் வேறுபடும். புலி, மான், காண்டாமிருகம், காட்டுப் பன்றி இப்படிப் பல. புலிதான் பிரதானம். அதுவே அவர்களுக்குக் கவுரவம். இவர்கள் தாங்கள் வேட்டை ஆடுவதோடு அல்லாமல் வேட்டைத் திருவிழாவையும் நடத்துவார்கள். அதில் அருகிலிருக்கும் சமஸ்தான அரசர்கள் , பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைவருக்கும் அழைப்பு உண்டு.
பிரிட்டிஷ் அதிகாரிகளை குஷிப்படுத்த அவர்கள் அவ்வப்போது வேட்டைத் திருவிழா நடத்துவார்கள். தங்கள் நாட்டில் வெறும் ஓநாயையும், காட்டுப் பன்றியையும் வேட்டையாடியவர்களுக்கு புலி வேட்டையாட கசக்குமா என்ன?. வைசிராயிலிருந்து உள்ளூர் பிரிட்டிஷ் அதிகாரி வரை, பெரிய மகராஜா முதல் சிறிய ராஜா வரை அனைவரும் புலி வேட்டையாடினார்கள். ஒரு புலியையாவது தங்கள் அரண்மனையில் பாடம் செய்து வைப்பது அவர்களுக்குப் பெருமை. புலி வேட்டை முடிந்ததும் தன் துணைவியுடன் புலி மேல் காலை வைத்து மறக்காமல் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயணன் தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள் , 207 காண்டாமிருகங்கள் , 311 சிறுத்தைகளை வேட்டையாடினார். சர்குஜா மகாராஜா ஆயிரம் புலிகளுக்கு மேல் வேட்டையாடினார்.
புலி போன்ற பெரிய விலங்குகள் மட்டும் அல்ல . மற்றொரு முக்கியமான வேட்டை வாத்து. ஒரு குளத்தில் ஆயிரக்கணக்கான வாத்துகள் விடப்படும். வந்திருக்கும் விருந்தினர்கள் எல்லாம் டுமீல், டுமீல் என்று சுடுவார்கள். எத்தனை வாத்துகள் என்பது போட்டி.
இப்படி புலி வேட்டை ஆடியவர்களின் வாழ்நாள் கனவு ஒன்று இருந்தது அது சிங்க வேட்டை . ஆசியாவிலேயே ஒரே ஒரு இடத்தில்தான் சிங்கம் இருந்தது. அது ஜுனாகத்(கிர் காடுகள்). நாம் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் படித்திருப்போமே, இந்தியாவுடன் சேர மறுத்து பாகிஸ்தானுடன் சேர கையொப்பமிட்ட சமஸ்தானம் ஜுனாகத் என்று. அதே சமஸ்தானம்தான். பிரிட்டிஷ் அதிகாரிகள் , மகாராஜாக்கள் என்று அனைவரும் சிங்க வேட்டை என்றால் ஜுனாகத்துக்கு கிளம்பி விடுவார்கள். ஒரு கட்டத்தில் ஜுனாகத்தில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துவிட்டது . அதற்கடுத்து ஜுனாகத்தின் மகாராஜாக்கள் சிங்க வேட்டைக்குத் தடை விதித்தார்கள். வைசிராயக்குக் கூட அனுமதி இல்லை. இன்று அவர்களால்தான் ஆசியாவிலேயே கிர் காட்டில் மட்டும் இருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை 300 .
ஒரு ராஜாவின் சமயலறையில் உள்ளூர் சமையல் முதல் உலக சமையல் வரை சமைக்கப்பட்டது. குறிப்பாக இந்திய முகலாய சமையல் . ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் ஐரோப்பிய பாணி சமையலும் செய்யப்பட்டது. இதற்கென்று தனி chef கள் இந்தியாவெங்கும் இருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வரவழைக்கப்பட்டனர். காலை, மதியம், இரவு உணவு தயாரிக்க என்று தனித் தனிக் குழுக்கள். அதேபோல் சிறப்பு உணவுக்கு என்று தனிக்குழு. சிறப்பு விருந்துகளில் 100 வகை பதார்த்தங்கள் வரை செய்யப்பட்டன .
ராம்பூர் நவாப் ஹமித் அலிகான் சாப்பாட்டு பிரியர். அவருடைய சமயலறையில் முன்னூறு சமயல்காரர்கள் இருந்தனர். அவர் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு விட்டு ஆற அமர நிறை குறைகளை கூறுவார்.
ஹமித் அலிகான் சாப்பாட்டுப் பிரியர் என்றால் செயலானா சமஸ்தான மகாராஜா துலிப் சிங் , நளபாகன். அவர் இந்தியாவில் எங்கும் சமைக்கப்பட்ட அனைத்து உணவுகளின் செய்முறையையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். அவரை மற்ற ராஜாக்கள் தங்களின் சமையல்கட்டு வரை சென்று வர அனுமதித்தனர். அவர் மற்ற சமஸ்தான சமயல்காரர்களிடம் பக்குவம் பற்றி விசாரிப்பார். கேட்பது ராஜாவாகவே இருந்தாலும் தொழில் ரகசியத்தை சொல்லி விடுவார்களா என்ன?. எதையாவது சொல்லி ஒப்பேற்றுவார்கள். ஆனா நம்ம மகாராஜா தில்லாலங்கடி. அவர் கையோடு கொண்டு சென்ற அஞ்சறைப் பெட்டி போன்ற ஒரு மசாலாப் பெட்டியில் இருக்கும் மசாலாப் பொருள்களைக் கொண்டு சமையல் செய்யச் சொல்லிவிட்டு வெளியே போய் விடுவார். அந்த மசாலாப் பெட்டியில் உள்ள பொருட்கள் எல்லாம் முன்னரே துல்லியமாக எடை போடப்பட்டவை. அதில் குறைவதை வைத்து அவர் உண்மையான பக்குவம் கண்டுபிடித்துவிடுவார் !.
அடுத்து ராஜபுத்திர இளவரசிகள் சமையலறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. ஏனென்றால் அவர்கள் பிறந்த வீட்டின் சமையலைத் தெரிந்து கொண்டாள் புகுந்த வீட்டின் சமையல் பக்குவத்தை மாற்றிவிடுவார்கள் என்பதால் !.
மகாராஜாக்களின் உல்லாசத்திற்கு அளவே இல்லாமல் இருந்திருக்கிறது. தங்களுடைய செல்வாக்கையும் டாம்பீகத்தையும் காட்ட அவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவழித்தார்கள் . அதில் முக்கியமான ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். அந்தகாலத்தில் அவை மிகப் பெரிய தகுதிச் சின்னங்கள். ஒவ்வொரு ராஜாவும் போட்டிப் போட்டுக்கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார்கள். அதிலும் அந்தகார்கள் அவர்களுக்கென்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்டன. உள்வடிவமைப்பு முதல் அந்த கார்களின் நிறம் வரை மகாராஜாக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டன. ஒரு மகாராஜா தன் ராணியின் பிங்க் நிற செருப்பை அனுப்பி அந்த நிறத்தில் கார் வேண்டுமென்றார். சிலர் கார் முழுவதும் வெள்ளியால் செய்து வாங்கிக்கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் கார்களில் தங்கள் அந்தஸ்தைக் காட்ட நம் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் சொந்த விமானம் வாங்கி தன் அந்தஸ்தை உயர்த்திக்காட்டினார். ஆசியாவிலேயே முதல் விமானம் வாங்கியவர் அவர்தான்!.இந்த பூபிந்தர் சிங்கைப் பற்றி கதை கதையா உள்ளது. அதை புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒரு கொசுறு : இந்த பூபிந்தரின் பேரன்தான் அமரிந்தர் சிங் . பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் !.
தொடரும் ...
Photo Courtesy :
www.columbia.edu
ebay
http://www.logoi.com
http://desibbrg.com
bbc.com
4 comments:
very nice to read this blog.
continue this .
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
அமேசானில் கூட கிடைக்கும். அகம் புறம் அந்தப்புரம் என்று தேடிப்பாருங்கள். 1111 ரூபாய் விலை..
Post a Comment