Thursday, August 4, 2011

தர்மம் Vs தொழில் தர்மம்

எந்த ஒரு தொழிலிலும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம். அதை தொழில் தர்மம் என்று சொல்வார்கள். ஒரு டிவியில் அயன் பட விமர்சனத்தின் போது இப்படி கூறினார்கள் "கடத்தல் தொழிலை நேர்மையாக செய்து வரும் பிரபு "( அது என்ன கடத்தல் தொழிலில் நேர்மை என்று புரியவில்லை :( ) . இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம்.
இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் தொழில் தர்மம் என்று ஒன்றை கூறினாலும் அது தர்மத்துடன் ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். சமீபத்தில் "கோ" படம் பார்த்தேன் . அது பத்திரிகை உலகை பற்றி கூறுவதாக இருக்கும். அந்த படத்தில் நக்சலைட்டாக வரும் போஸ் வெங்கட் , ஜீவாவை பார்த்து கூறுவதாக வரும் ஒரு வசனம் அழுத்தமாக இருக்கும். அவர் இப்படி கூறுவார் , "நீ பத்திரிகைகாரன்தானடா, செத்த பொணத்த எழுப்பி கூட நீ செய்தி வாங்கிருவ " என்பார். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த படத்தில் ஜீவாவும், கார்த்திகாவும் தாங்கள் பத்திரிகை தர்மத்தின்படி நடக்கவில்லை என்பதால் தாங்கள் தங்கள் வேலையை ராசினாமா செய்கிறோம் என்பார்கள் . ஆனால் அதை ஏற்க மறுக்கும் அந்த பத்திரிகை ஆசிரியர் நீங்கள் பத்திரிகை தர்மத்தை மீறினாலும் நீங்கள் நாட்டிற்கு நல்லதுதான் செய்துள்ளீர்கள் அதனால் தங்கள் ராசினாமை ஏற்க மாட்டேன் என்பார். அந்த இடம் எனக்கு பிடித்திருந்தது. உண்மையான தர்மத்திற்கு முன் தொழில் தர்மங்கள் என்று கூறப்படும் மற்ற தர்மங்கள் முக்கியமில்லை.

என்னைப் பொறுத்தவரை தர்மம் ஒன்றுதான். இப்படி பத்திரிகை தர்மம் , போர் தர்மம் என்று தனியாக எதுவும் இல்லை. உண்மையான தர்மத்திற்கு முன் மற்ற எதுவுமே முக்கியமில்லை.
சிறிது காலத்திற்கு முன் என்னுடன் வேலை பார்த்த அலுவலர் ஒருவர் சென்னையில் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு முன் சென்ற பைக்கில் ஒரு கணவனும், மனைவியும் அமர்ந்திருக்க்கிறார்கள். அப்பொழுது திடீரென அந்த பைக் விபத்துக்குள்ளாகி அந்த கணவர் தூக்கி வீசப்பட்டு ஒரு பெரிய குழியில் வீசப்பட்டிருக்கிறார். யாருமே அந்த நபரை இறங்கி தூக்கவில்லை. உடனே இந்த நண்பர் அந்த குழிக்குள் இறங்கி அவரை தூக்கி இருக்கிறார். பார்த்தால் தலையில் மிகப் பெரிய அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். சுற்றி கூட்டம் . ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது அங்கு வந்த தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் இந்த நண்பரை பார்த்து, "சார், தலையை கொஞ்சம் இப்படி திருப்பி பிடிங்க சார்" என்றிருக்கிறார். அவருக்கு பத்திரிக்கைக்கு புகைப்படம் எடுக்க வேண்டுமாம். அடிபட்டவரின் முகம் தெரியவில்லையாம். என்ன கொடுமை ? . இப்படியும் மனித ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . கேட்டால் அது அவர்களின் தொழில், கேட்டால் தொழில் தர்மம். எவ்வளவு கேவலம். இப்படித்தான் அந்த தொழில் தர்மத்தை காப்பாற்ற வேண்டுமா? .
இதே போன்றவர்கலாள்தானே இங்கிலாந்து இளவரசி டயானா உயிரிழந்தார். அப்படிதான் பணம் சம்பாதிக்கவும், தொழில் தர்மத்தை காப்பாற்றவும் வேண்டுமா? .

உலகப் புகைப்படங்களில் ஒரு புகைப்படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அது ஆப்பிரிக்காவில் ஒரு சிறுவன் பசிக்கொடுமையால் போராடிக்கொண்டிருப்பான். அவனுக்கு அருகில் ஒரு பிணம் தின்னிக் கழுகு அவனை சாப்பிடுவதற்காக அவன் இறப்பதற்காக காத்திருக்கும். பிணம் தின்னி கழுகுக்கு ஒரு பழக்கம் உண்டு. அது உயிரோடு இருக்கும் தன் இரையை சாப்பிடாது. தன் இரை இறக்கும் வரை அதன் அருகிலேயே காத்திருக்கும். தன் இரையின் இறப்பு நெருங்க நெருங்க அதை நெருங்கி வரும். இந்த புகைப்படம் உலகில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் அது ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமையை எடுத்துரைத்தாலும், ஒரு மனிதனுக்கான தர்மத்தையும் எடுத்துரைத்தது. அப்புகைப்படத்திற்கு உலகின் மிக பெரிய விருதான புலிட்சர் விருது கிடைத்தது. அதே சமயத்தில் அந்த புகைப்பட நிருபர் பற்றி மிகப் பெரிய கண்டனம் உலகெங்கும் எழுப்பியது. அந்த புகைப்பட நிருபர் அந்த பிணம் தின்னி கழுகைப் போல் அந்த சிறுவனுக்கு அருகில் அந்த புகைப்படத்திற்காக காத்திருந்தார் என்று உலகெங்கும் கண்டனம் எழும்பியது. அந்த புகைப்படம் எடுத்த பின் அந்த புகைப்பட நிருபர் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். அதற்கு பிறகு அந்த சிறுவனுக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. அந்த புலிட்சர் பரிசு கிடைத்த சிறிது நாட்களில் அந்த நிருபர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
பிறர் துன்பத்தில் பொருளும் புகழும் பெறுவது எவ்வளவு மோசமானது.
சில காலங்களுக்கு முன் ஒரு தமிழக புகைப்படக்காரரின் பேட்டி ஒன்றைப் படித்தேன் . அவர் உலக அளவில் மிகப் புகழ் வாய்ந்தவர். உலகம் முழுவதும் சுற்றி அரிய புகைப்படங்களை எடுப்பவர். அப்படி ஒரு சமயம் அவர் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு சென்ற போது , ஒரு சிறுமி நிர்வாணமாக வந்துள்ளாள். அவள் தன்னை பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும் , தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறாள். அவளுக்கு வேண்டிய உதவியை அந்த நிருபர் செய்துள்ளார். ஏனோ அந்த சிறுமியை அந்த நிலையில் புகைப்படம் எடுக்க அவருக்கு தோன்றவில்லை. இதை பற்றி அவருடைய நண்பரிடம் கூறியபோது அவர் நண்பர் நீ பத்திரிகை தர்மத்தை மீறிவிட்டாய். அவளை அந்த நிலையில் புகைப்படம் எடுத்திருக்கவேண்டும், நீ உலகப் புகழ் பெற்றிருப்பாய் என்றிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த புகைப்பட நிருபர் அந்த சிறுமியின் நிலையை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றிருக்கிறார்.

மேற்கூறியவற்றில் எது தர்மம் என்பது உங்களுக்கே புரியும்.

2 comments:

Devaraj Rajagopalan said...

இந்த பதிவில் நீ கூறிய கருத்து என்னை கவர்ந்தது. நீ மூன்று எடுத்து காட்டுகள் கூறி உன் தலைப்பை விளக்கி இருந்தாய்.

1. விபத்தில் அடிப்பட்டு உயிருக்கு போராடும் ஒருவரை படம் பிடித்த பத்திரிக்கையாளர்.
2. பசிக்கொடுமையால் உயிருக்கு போராடிக்கொண்டிக்கும் ஒரு சிறுவன் அருகில் ஒரு பிணம் தின்னிக் கழுகு அவன் இறக்கும் தருணத்திற்கு காத்திருக்கும்.
3. தன்னை காப்பாற்றி கொள்ள நினைக்கும் ஒரு சிறுமி.

2 & 3 ( புகைப்படம் எடுக்கும் பத்திரிக்கையாளர் தன் தொழில் தர்மத்தை கடைபிடிப்பது தவறு, நீ சொன்னது போல் தொழில் தர்மம் என்று ஒன்று இல்லை.. அங்கு தர்மத்தை கடைபிடிப்பது சரி )

1 ( அவரின் நோக்கம் எனக்கு புரியவில்லை, அவர் செய்தது தவறு தான், அவரை காப்பாற்ற அங்கு எத்தனை நபர்கள் இருந்தார்கள் என்று தெரியவில்லை. இங்கு நான் இந்தியன் திரைப்பட காட்சி ஒன்றை கூற விரும்புகிறேன். 'இப்படி ஒன்னு நடந்துச்சின்னு தெரியாமலே போய்ட கூடாதுன்னு தான் என்னோட உயிரை இவ்ளோ நேரம் புடிச்சிட்டு இருந்தன்.. உங்க கிட்ட சொல்லிட்டேன், நான் இப்ப சாகரத தடுக்காதிங்க.' அங்கு அந்த விபத்தில் அடிப்பட நபரை காப்பாற்ற நிறைய பேர் கூடி இருந்தால், அந்த பத்திரிக்கை காரை செய்தது சரி என்பேன். நூறு பேர் கூடி இருந்தால் அந்த நூறு பேரும் அவரை காப்பாற்ற நீனைபதில் பயன் இல்லை. அங்கு யாருமே இல்லை (உதவுவதற்கு நிறய பேர் இல்லை) என்றால் அந்த நிருபர் தன் புகைப்பட கருவியை விட்டுவிட்டு உதவ சென்று இருக்க வேண்டும் என்பது மிகவும் சரி.. நீ கூறியதை பார்க்கும் போது அங்கு அந்த நபரை காப்பாற்ற யாரும் இல்லாதது போல் இருந்தது ஆக இவர் செய்ததும் தர்மம் இல்லை)

Nathan SP (நாதன்) said...

Well written da - In life, some of these have become multiple choice question and answers. People choose some wrong choice than the right one and go on to the next question. That is how I feel - and we should always do our best to think good, do good, feel good and live good.

Devraj analysis also good- if no other person is there, there is nothing more important than saving the life of the person. If hundreds are there, he can do it but still can offer his help depending on need or after one snap.