Sunday, October 24, 2010

ராஜராஜப் பெருவேந்தன்


தமிழக வரலாற்றில் ராஜராஜ சோழனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். ஒரு வகையில் சொல்லப் போனால் இந்திய அளவிலேயே இல்லை. இது வெறுமனே மிகப் பெரிய பரப்பளவை ஆண்டதால் மட்டுமே இல்லை. சொல்லப் போனால் ராஜராஜனை விட அதிகப் பரப்பளவை ஆண்டது ராஜராஜனின் மகனான ராஜேந்த்ரச் சோழனே. ராஜராஜனுக்கு அதிகப் பரப்பளவை ஆண்டதைவிட மிகப் பெரிய திறமைகள் இருந்தன. சங்ககாலச் சோழர்களுக்குப் பிறகு விஜயாலச் சோழன் காலத்திலிருந்தே சோழர்கள் மீண்டெழ ஆரம்பித்தனர். அதனால் அவர்களின் ஆரம்பகாலத்தில் சிறிதாக இருந்த சோழர்களின் நிலப் பரப்பை விஸ்தீகரிக்க வேண்டிய தேவை இருந்ததால் அவர்களின் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது. ஆகையால் அவர்களால் நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்த சமயம் வாய்க்கவில்லை அல்லது அவர்களை விட ராஜராஜன் சோழன் திறமை வாய்ந்தவனாக இருந்திருக்கிறான்.

விஜயாலச் சோழன் மரபில் ராஜராஜ சோழனுக்கு முன் அதிக காலம் ஆண்டவர்கள் விஜயாலச் சோழன் , முதலாம் ஆதித்யச் சோழன், பராந்தகச் சோழன்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். இவர்களின் காலம் சோழர்களின் வரலாற்றில் முக்கியமானது. சங்ககாலச் சோழர்களுக்கு அடுத்து சோழர்களின் எழுச்சிக்குக் காரணம் விஜயாலச் சோழனே , பின்னர் முதலாம் ஆதித்யச் சோழனின் காலத்தில் சோழப் பேரரசு விரிந்தது. விஜயாச் சோழன் காலத்தில் பல்லவ பேரரசிற்கு உட்பட்ட சோழர்கள் , ஆதித்யன் காலத்தில் பல்லவர்களின் பல பகுதிகள் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. முதலாம் பராந்தகச் சோழனின் காலத்தில் பாண்டியர்களின் பெரும் பகுதிகள் சோழர்களின் கீழ் வந்தது. இலங்கையின் வட பகுதியும் சோழர்களின் கீழ் வந்தது. மேலும் இவன் காலமானது தென்னிந்திய கோயில்கள் வரலாற்றில் பொற்காலம் எனலாம். முதலாம் ஆதித்யன் காலத்தில் தொடங்கிய கோயில்கள் கட்டும் பணி பராந்தகனின் ஆட்சி காலத்தில் உட்சகட்டத்தை அடைந்தது எனலாம்.

பராந்தகச் சோழனுக்குப் பிறகு நடந்த 35 ஆண்டுகளில் பலர் பதவியேற்றனர். அவர்களுக்குப் பிறகு ராஜராஜ சோழன் கிபி 985 இல் அரியணை ஏறினான். அதற்கடுத்து அவன் முப்பதாண்டுகள் ஆட்சி புரிந்தான் . இவனுடைய ஆட்சி சோழர்களின் பொற்காலம் எனலாம். ஆனால் இவனுடைய ஆட்சி பொற்காலம் என்று சொல்வதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . அதற்கு முக்கிய காரணம் இவனுடைய ஆட்ச்சியில் கோயில்கள் அதிகம் கட்டப்பட்டன . மேலும் பழைய கோயில்கள் அதிகம் புனர்பார்க்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டன. ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் அல்ல என்று கூறுபவர்கள் கூறும் காரணத்தில் இதுவே முக்கியமானது. அவர்களின் கூற்றுப்படி மக்களாட்சி உண்மையாக விளங்கியது களப்பிரர்களின் காலம்தான். மேலும் களப்பிரர்கள் மக்களின் உழைப்பை வீணாக்கியதாக கூறப்படும் கோயில்கள் கட்டுதல், சிற்பம் செதுக்குதல் போன்றவற்றில் ஈடுபடவில்லை. அவர்கள் விவசாயத்திலேயே அதிகம் கவனம் செலுத்தினார்கள். முக்கியமாக அவர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய நில தானங்களை எதிர்த்தனர். இதுவே முக்கியமானது. ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் அல்ல என்று கூறுபவர்கள் கூற்றுப்படி வரலாற்று ஆசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி போன்ற பார்ப்பனர்கள் இத்தகைய காரணங்களாலே உண்மையான பொற்காலமான களப்பிரர்களின் ஆட்சியை விடுத்து பார்ப்பனர்களுக்கு ஆதரவாக விளங்கிய ராஜராஜ சோழனின் ஆட்சியை பொற்காலம் என்று கூறுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.


ஒரு நாட்டில் கலை, மொழி வளர்வதோடு அந்த நாடு வெற்றிகரமாக விளங்குவதோடு உள்நாட்டு குழப்பங்கள்,பசி,பட்டினி ஏதும் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழும் காலமே உண்மையான பொற்காலம் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொற்காலம் என்பதற்கான வரையறையாகும். ராஜராஜ சோழனின் ஆட்சி அவ்வாறு விளங்கியதா என்பதையே நாம் இங்கு பார்க்க வேண்டும். ராஜராஜ சோழனின் காலத்தில் கட்டிடகலை சிறப்புற்று விளங்கியது உண்மை. இந்திய அளவில் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை அவனே கட்டினான். மேலும் பல பழைய கோயில்களை புதுப்பித்தான். மேலும் பல படையெடுப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டு பராந்தகச் சோழனின் ஆட்சிக்குப் பிறகு சுருங்கிய சோழர்களின் நிலப் பரப்பை விரிவுபடுத்தினான். அவனுடைய ஆட்ச்சியில் கேரளா உட்பட தமிழகம் முழுவதும் கைப்பற்றினான். மேலும் இலங்கையின் வடபகுதியும் அவனுடைய ஆட்சியின் கீழ் வந்தது. ஆசிய அளவில் மிகச் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த கடற்படையை நிர்மாணித்தான். இவனுடைய ஆட்சியிலேயே கடற்படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. நாட்டில் நடந்த மிகச் சிறிய நிகழ்ச்சிகளையும் நேரடியாக கவனித்தான். இவனுடைய ஆட்சியில் நிர்வாகம் சிறப்புற்று விளங்கியது உண்மை. இவற்றிற்கு எல்லாம் முக்கிய காரணம் ராஜேந்திர சோழன் . ராஜராஜ சோழனுக்கு முக்கிய வரம் அவனுடைய ஒரே மகனான ராஜேந்திர சோழன். மிகச் சிறந்த வீரனான ராஜேந்திர சோழனே ராஜ ராஜனின் தளபதியாவான். ராஜேந்திர சோழனின் தலைமையில் சோழப் படை பல வெற்றிகளை குவித்தது. அதனாலயே ராஜராஜ சோழனால் எந்த கவலையும் அன்றி நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடிந்தது. ராஜ ராஜ சோழன் மன்னர் பதவியேற்பதற்கு உரிய வயதிற்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்தான். அதுவரை அவனுடைய சிற்றப்பனான உத்தமச் சோழனே ஆட்சி புரிந்தான். ராஜ ராஜ சோழனுக்கு மக்களின் பேராதரவு இருந்தது உண்மை. அப்படி இருந்தும் தான் பதவியேற்காமல் தன் சிற்றப்பனை பதவியேற்க அனுமதித்தது ராஜராஜ சோழனின் நற்பண்பை காட்டுகிறது. இத்தகைய காரணங்களாலே ராஜராஜ சோழனுக்கு வரலாற்றில் நற்பெயர் கிடைத்தது.

ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததை குறை கூறுவோர்களும் உண்டு. கண்டராதித்ய சோழன் இறந்தபொழுது அவனுடைய மகனான உத்தமச் சோழன் சிறு பிள்ளை. அதனால் கண்டராதித்ய சோழனின் தம்பியாகிய அரிஞ்சய சோழன் பதவியேற்றான். அவன் மிகச் சிறிய காலமே அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான சுந்தரச் சோழன் பதவியேற்றான். சுந்தரச் சோழனின் மகன்தான் ராஜராஜ சோழன். இதற்கிடையில் உத்தமச் சோழன் பதவியேற்பதற்குரிய வயதை அடைந்தான். மேலும் அவனுக்கு ராஜ பதவியின் மேல் ஆசையும் இருந்தது மேலும் இந்த மன்னர் பதவி தன்னுடைய பிறப்புரிமை என்பதும் அவன் எண்ணம். சுந்தரச் சோழனுக்குப் பிறகு தானே அரியணை ஏறவேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். இத்தகைய காலங்களில் சுந்தரச் சோழனின் முதல் மகனும் ராஜராஜ சோழனின் அண்ணனுமான ஆதித்ய கரிகாற் சோழன் மர்மான முறையில் இறந்துவிடுவான். இதில் உத்தமச் சோழனுக்கு பங்கிருந்ததாக பலரும் சந்தேகப்பட்டனர். எது எப்படியோ தான் பதவியேற்க வேண்டும் என்பதில் உத்தமச் சோழன் உறுதியாக இருந்தான். ஆனால் மக்களின் ஆதரவு என்னவோ அருள்மொழிவர்மனான ராஜராஜ சோழனுக்கே இருந்தது. பின்னர் சுந்தரச் சோழனுக்கும் உத்தமச் சோழனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி சுந்தரச் சோழனுக்குப் பிறகு உத்தமச் சோழன் பதவியேற்பதாகவும் அவனுக்குப் பிறகு ராஜராஜ சோழனும் அவன்பரம்பரையும் பதவியற்பதாகவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் உத்தமச் சோழன் ஏமாற்றப்பட்டதாக எண்ணுவோரும் உண்டு . ஏனெனில் உத்தமச் சோழனே உண்மையில் பதவியேற்றிருக்க வேண்டும் ஆனால் அவன் சிறுவனாக இருந்த காரணத்தாலேயே அரிஞ்சய சோழன் பதவியேற்றான் . ஆகையால் அவன் வயதுக்கு வந்ததும் அவனும் அவன் பரம்பரையும் பதவியேற்பது சரி. ஆனால் சுந்தரச் சோழனுக்கும் உத்தமச் சோழனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உத்தமச் சோழன் மட்டுமே பதவியேற்க வேண்டும் அவனுக்குப் பிறகு சுந்தரச் சோழனின் மகனான ராஜராஜ சோழனும் அவனுடைய பரம்பரையும் பதவியேற்க வேண்டும் என்று ஏற்ப்பட்டதில் உத்தமச் சோழன் ஏமாற்றப்பட்டதாக கூறுவோரும் உண்டு.

எது எப்படியோ இன்றும் தமிழகத்தின் பொற்காலம் என்பது ராஜராஜ சோழனின் காலமே என்று பலராலும் நம்பப்படுகிறது.

2 comments:

Suppa S said...

Disappointing - didnt expect such a brief coverage.

Haripandi Rengasamy said...

நீங்கள் சொல்லுவது சரிதான் ஜி . ராஜராஜனைப் பற்றி குறைவாகத்தான் எழுதி உள்ளேன். ராஜராஜனைப் பற்றி எழுத அதிகம் உள்ளது. அவை பெரும்பாலும் அவன் மேற்கொண்ட போர்களைப் பற்றியே உள்ளது. எனக்கு அவனிடம் அதிகம் பிடித்த்தது அவனுடைய நிர்வாகத்திறமை. அதைப் பற்றி அதிகம் எழுதி இருக்க வேண்டும். ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புகள் குறைவாகவே இருந்தது அந்த சோழர்கள் புத்தகத்தில். எனக்கு ராஜராஜனின் நிர்வாகத்தைப் பற்றி எழுதவே ஆசை. அதற்க்கு கொஞ்சம் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. நிச்சயம் இவனைப் பற்றி இன்னும் எழுதுகிறேன்.