அப்பா நீங்கள் எங்கள் கரம் பற்றி அழைத்துச் சென்ற தூரம் மிகக் குறைவே. நீங்களும் நாங்களும் சேர்ந்து இருந்த நாட்களே மிகக் குறைவுதானே. அதிலும் பாதி நாங்கள் ஒன்றும் அறியாத சிறு பிராயமே. எங்களுடன் நீங்கள் கழிக்க காலம் மிகக் குறைவாகவே இருந்தது. பின் வரும் காலத்தை முன்னிட்டே விதியானது எங்களை அப்படி பழக்கியதோ. தெரியவில்லை. என்னுடைய பிடிவாதத்தை தாங்கக் கூடிய பொறுமை உங்களிடம் மட்டுமே இருந்தது. நீங்கள் எங்களை எந்த ஒரு பிரச்சினையையும் அதன் முழு பரிமாணத்தை அறிந்து தீர்வு காண விழைவீர்கள். ஆனால் எனக்கோ அவ்வளவு பொறுமை இருக்காது. எனக்கு எப்பொழுதும் பிரச்சினையை தீர்க்க அவசரத் தீர்வே தேவைப்பட்டது. அதையும் பொறுத்து தீர்வு காணக்கூடிய திறமை உங்களுக்கே இருந்தது.
நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள். உங்களைப் பார்த்தே நாங்கள் கற்றுக்கொண்டோம் . முழுவதும் உங்களை அறிய எங்களுக்கு காலமும் போதவில்லை வயசும் போதவில்லை. இன்று நான் உங்களை முழுதும் புரிந்து கொண்டிருக்கிறேன் அப்பா. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என் சிறு பிராயத்தில் நீங்கள் அருகில் இல்லாத அந்த காலங்களில் இனம் தெரியாத பயம் வரும் போது நீங்கள் துவட்டி விட்டுச் சென்ற துண்டை முகர்ந்து உங்கள் வாசம் அறிந்து தைரியம் கொண்டிரிக்கிறேன். இன்று பயம் தெளிய நீங்களும் இல்லை உங்கள் வாசமும் இல்லை . உங்களை போல உங்கள் வாசமும் காற்றுடன் கரைந்துவிட்டது.
இன்று என்னில் இருக்கும் பல குணங்கள் உங்களைப் பார்த்தே வந்தது. பணத்தின் மேல் பற்று வைக்காத தன்மை உங்களைப் பார்த்தே வந்தது. எதிலும் நேர்மை உங்களைப் பார்த்தே வந்தது . இன்னும் பல குணங்களை உங்களிடமிருந்து பெற நீங்கள் பொறுமையாக இல்லை . நீங்கள் எங்களை விட்டுப் போன நாட்களில் எத்தனையோ நாட்கள் தலையணையில் முகம் புதைத்து அழுதுரிக்கிறேன் . தைரியம் சொல்லத்தான் நீங்கள் இல்லை.
அனைத்தையும் நாங்கள் உங்களைப் பார்த்தே தெரிந்து கொண்டோம். நான் நானாக இருப்பதைக் காட்டிலும் நீங்களாக இருந்தால் இன்னும் நன்றாக இருப்பேன் அப்பா. இது தன் சுயத்தை இழக்க விரும்புவனின் பேச்சுதான். அது அப்படியே இருக்கட்டும் . ஏனென்றால் எங்களுக்கு role model யே நீங்கள்தானே. நீங்கள் இன்னும் எங்களுடன் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நன்றாக இருந்திருப்போம். வாழ்கையைப் பற்றிய பயத்தை போக்குவது எப்படி என்று நாங்கள் உங்களைப் பார்த்து கற்றுக்கொண்டிருப்போம். நாங்கள் உங்கள் சொல் பேச்சு கேட்டதை விட நீங்கள் எங்கள் சொல் பேச்சு கேட்டதுதான் அதிகம். அப்பா என்ற அதிகாரம் மிகுந்த இந்த உலகில் நீங்கள் அபூர்வம்.
எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது நான் கல்லூரியில் சேர்ந்த தருணம். என்னை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு என் செலவிற்காக நீங்கள் எனக்காக போஸ்ட் ஆபீசில் பத்தாயிரம் ரூபாய் பணம் வைத்து கணக்குத் தொடங்குனீர்கள். என்னுடைய கல்லூரித் தோழர்கள் பஸ் டிக்கெட்டான 2 ரூபாய்க்கே தங்கள் அப்பாக்களிடம் தொங்கியபோது நீங்கள் என்னை நம்பி பத்தாயிரம் ரூபாய் இருப்பு வைத்தீர்கள். உங்களுக்கு என்றைக்குமே என்மீதும் மது மீதும் நம்பிக்கை அதிகம். அப்படி இல்லாமலா பீரோ சாவியை எங்களிடம் கொடுப்பீர்கள். நாங்கள் என்றைக்குமே உங்களிடம் கணக்குச் சொல்லியதில்லையே. நீங்கள் எனக்கு போஸ்ட் ஆபீசில் கணக்குத் தொடங்கிய பொழுது அந்த போஸ்ட் மாஸ்டர், "சார் நாமினி பேர் பில் அப் பண்ணலையே சார் " என்று கூறிய பொழுது உங்களுக்கு கோவம் வந்துவிட்டது. என்ன இது சின்னப் பைய்யன் அவனுக்கு நாமினியா என்றீர்கள். சும்மா ஒரு பேச்சுக் கூட உங்களால் என் இறப்பை தாங்க முடியவில்லை .ஆனால் நீங்கள் உங்கள் இழப்பை இப்படி எங்களை தாங்க வைத்துவிட்டீர்களே.
நாங்கள் கனவிலும் நீங்கள் எங்களை விட்டுப் போவீர்கள் என்று நினைக்கவில்லை. எனக்கு இன்றும் நல்லா ஞாபகம் இருக்கிறது நீங்கள் எனக்கு ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக்கொடுத்தது. வாலிபப் பருவம் தாண்டியும் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு, உங்களுக்கோ எனக்கு அடி எதுவும் பட்டுவிடக் கூடாது என்ற பயம். உங்களுக்கு எங்கள் இருவரின் மீதும் கரிசனம் அதிகம்.
நாங்களாக என்றும் எங்கள் ரெகார்ட் நோட்டில் படம் வரைந்ததில்லை. அது அனைத்தையும் நீங்களே வரைவீர்கள். உங்களுக்கு ஓவியம் நன்றாக வரும். சில சமயங்களில் நீங்கள் படத்துடன் பாகங்களையும் அதில் குறித்து விடுவீர்கள். அப்பொழுதெல்லாம் நான் உங்கள் கையெழுத்தை ஆசிரியர் கண்டுபிடித்து விடுவார்கள், உங்களை யார் பாகம் குறிக்கச் சொன்னது என்று அதிகப் பிரசங்கித்தனமாக சண்டை போட்டுருக்கிறேன். அப்பொழுதும் நீங்கள் என் மேல் கோபப்படாமல் பொறுமையாக கேட்டுக் கொண்டுரிக்கிறீர்கள். அப்பா என்ற மமதை பிடித்த இந்த உலகில் நீங்கள் அபூர்வம். இன்றும் அந்த ரெகார்ட் நோட்டில் நீங்கள் வரைந்த படங்கள் அழியாமல் உள்ளன . ஆனால் நீங்கள்தான் அழிந்து போய்விட்டீர்கள்.
நீங்கள் எங்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயற்ச்சித்து தோற்றக் கணங்கள் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எனக்கு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வீடு வாங்குவதற்கு நீங்கள் அவ்வளவு முயர்ச்சித்தீர்கள். அதே போன்று ஒரு அழகான வீட்டையும் பார்த்தீர்கள். நான் கூறிய உப்புச் சப்பில்லாத காரணத்தால் அந்த வீட்டை ஒதுக்கி விட்டீர்கள். என் பேச்சையும் பெரிதும் மதித்தது நீங்கள்தான் அப்பா. ஒரு வேளை அந்த வீட்டை வாங்கி இருந்தால் நீங்கள் அந்த விபத்தில் சிக்காமல் இருந்துரிப்பீர்கள். அந்த குற்ற உணர்ச்சி என்னை இன்றும் வதைக்கிறது அப்பா. அப்பா என்ற உலகில் நீங்கள் அபூர்வம்.
நீங்கள் எல்லாவற்றிலும் பெஸ்ட் அப்பா . அலுவலகத்தில் உங்கள் வேலையில் ஆகட்டும், வீட்டில் கணவன் என்ற ஸ்தானத்தில் ஆகட்டும் , சிறந்த அப்பா என்பதில் ஆகட்டும், உங்கள் தம்பிகளுக்கு ஒரு சிறந்த அண்ணன் என்பதிலாகட்டும், உங்கள் அம்மா அப்பாவிற்கு ஒரு சிறந்த மகன் என்பதிலாகட்டும், படம் வரைவதிலாகட்டும் அனைத்திலும் நீங்கள் பெஸ்ட். அப்படிப்பட்ட நீங்கள் சமையலிலும் பெஸ்ட் ஆவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை . retired ஆன பின்னால் நீங்கள் சமையலிலும் சிறந்து விளங்க ஆரம்பித்தீர்கள் . தான் ஈடுபட்ட அனைத்திலும் பெஸ்ட் ஆவது உங்களால்தான் முடியும்.
நீங்கள் செய்யும் அனைத்திலும் ஒரு நேர்த்தி இருக்கும். அதில் ஏதேனும் தவறு நேர்ந்ததால் அதை பற்றியே கூறி கூறி ஆய்ந்து ஓய்ந்து போவீர்கள். ஒரு தடவை அடுப்பில் பால் குக்கரை வைப்பதற்கு பதிலாக தவறுதலாக எண்ணெய் பாக்கெட் இருந்த குக்கரை எடுத்து வைத்து விட்டீர்கள். அதனால் அந்த பாத்திரம் வீணாகி விட்டது .அதனை எத்தனை தடவை என்னிடம் கூறி ஆய்ந்து ஓய்ந்து போனீர்கள். ஒரு சிறு தவறுக்கு கூட வருந்தியதால்தான் உங்களால் அனைத்திலும் பெஸ்ட் ஆக இருக்க முடிந்தது.
நீங்கள் சும்மா ஓய்வாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்பொழுதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள் அல்லது ஏதேனும் ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருப்பீர்கள். இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, நான் உங்களிடம் கேட்டேன் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் நீங்கள் retired ஆன பிறகு என்ன பண்ணுவீர்கள் என்று . அதற்க்கு நீங்கள், நான் சும்மா எல்லாம் இருக்க மாட்டேன், வெளியில் at least ஒரு பெட்டிக் கடை போட்டாவது வேலை பார்ப்பேன் என்றீர்கள் . ஒரு retired IPS அதிகாரி இப்படி கூற ஒரு கர்வமற்ற தன்மை வேண்டும் . அது உங்களிடம் தான் இருந்தது.
மிகப் பொறுமை சாலியான நீங்கள் சாவில் மட்டும் ஏன் அவசரப்பட்டீர்கள்.
We love you my dad. We love you so much. May your soul rest in peace.
பின் குறிப்பு : இது என்னுடைய நூறாவது பதிவு.
Saturday, September 25, 2010
My Dad My Love
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
I know how important the father's role in a family....I wish u to have the great strength to face the life...
Nice writing skills boss.... especially i like two places...
**நான் நானாக இருப்பதைக் காட்டிலும் நீங்களாக இருந்தால் இன்னும் நன்றாக இர...ுப்பேன் அப்பா. இது தன் சுயத்தை இழக்க விரும்புவனின் பேச்சுதான். அது அப்படியே இருக்கட்டும் .**
***இன்று பயம் தெளிய நீங்களும் இல்லை உங்கள் வாசமும் இல்லை . உங்களை போல உங்கள் வாசமும் காற்றுடன் கரைந்துவிட்டது.***
உணர்வுகளுடன் கூடிய 100 வது பதிவிற்கு மணமர்த்த வாழ்துக்கள் !!
மிக்க நன்றி இளங்கதிர்
மிக்க நன்றி சுபாஷ்
நூறாவது பதிப்பை அப்பாவுக்காக எழுதிய அந்த உணர்வுக்கு எனது வாழ்த்துக்கள்.
@ Gokul மிக்க நன்றி நண்பா ... ஆம் என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய அப்பாவைப் பற்றியே இருக்கவேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் நீங்கள்தான் அழிந்து போய்விட்டீர்கள்.
உனது பதிப்பில் நிறைய இடங்களில் உன் தந்தையின் மறைவை பற்றி குறிப்பிட்டு இருக்கிறாய். ஆனால் அவரிடம் இருந்து கற்ற படங்களை, உணர்ந்த உணர்வுகளை உன் சாந்ததியினற்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையை பற்றி குறிப்பிட மறந்துவிட்டாய் போலும். இளம் வயதில் தந்தையை இழக்கும் கொடுமை ஒரு ஆண் மகனை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதை உணர்தவனாக சொல்லுகிறேன், நம்முடைய தந்தையின் உணர்வு பகிர்வுகளை நமது சந்ததிஇக்கு எடுத்துசெல்லும் கடமையினை நம்மால் தட்டி கழிக்க இயலாது. நம் மிது நன்பிக்கை வைத்து தான் அவர்கள் இறைவனடி சேர்த்தார்கள். அவர்கள் நண்பிக்கையை நாம் காப்பது நாம் கடமை.
நீங்கள் சொல்லுவது சரிதான் சுபாஷ். என் தந்தையிடம் இருந்து கற்ற உணர்வுகளை நான் இங்கு பகிரவில்லை அதை என் சந்ததியினருக்கு சொல்ல வேண்டிய கடமையை பற்றியும் கூறவில்லை. நான் என் தந்தையை இழந்து ஐந்து வருடம் ஆனாலும் அதன் பாதிப்பு என்னிடமிருந்து இன்னும் நீங்கவில்லை. இன்றும் தினமும் அப்பா என் கனவில் வருகிறார். இன்னும் என் அப்பா இறந்ததை நான் நம்பவில்லை. ஒவ்வொரு நாள் அப்பாவை கனவிலும் பார்க்கும் போது அவர் இறந்ததை எப்படி நம்ப முடியும். என் ஒரு நாளில் பாதியை கனவில் அப்பாவுடன் கழிக்கிறேன். இள வயதில் அப்பாவை இழப்பது கொடுமை. அது என் எதிரிக்கும் வரக்கூடாது. நான் என் தந்தையின் உணர்வுகளை என் சந்ததியினருக்கு கொண்டு செல்வதைப் பற்றி அதிகம் பேசாததற்கு நான் இன்னும் தந்தை என்னும் ஸ்தானத்தை அடையாதது ஒரு காரணமாக இருக்கலாம் சுபாஷ். இருந்தாலும் நம் தந்தையின் உணர்வுகளை நம் சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் கடமை. நான் இன்று என் தந்தையை இழந்ததை விட என் பிள்ளைகள் ஒரு சிறந்த தாத்தாவை இழந்துவிட்டார்கள் என்றுதான் நான் அதிகம் கவலைப்படுகிறேன். நம் மீது நம்பிக்கை வைத்துதான் நம் அப்பா இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை என் தந்தை என் மீது அதிகம் நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். நான் மனம் விட்டு ஒப்புக்கொள்கிறேன் நான் என் தந்தையின் ஸ்தானத்தை நிறைவேற்ற முடியாது. நான் அதற்க்கு தகுதியானவனும் அல்ல .
Post a Comment