Wednesday, September 15, 2010

என்னதான் நடக்கிறது காஷ்மீரில்?


இந்தியாவிற்கு இப்பொழுது நல்ல நேரம் இல்லை. ஒரு பக்கம் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் மற்றொரு பக்கம் காஷ்மீர் பற்றி எரிகிறது. இரண்டு விவகாரங்களிலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் சரி இல்லை. இங்கு மிக முக்கிய பிரச்சினையே பிரச்சினை இருப்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறது. இன்று காஷ்மீரில் போராடுபவர்கள் நிச்சயம் தீவிரவாதிகள் அல்ல. அவர்களை தீவிரவாதிகள் என்ற நோக்கில் அணுக கூடாது. அவர்கள் இந்திய குடிமக்கள். நம் அரசு சொல்வது போல் கற்கள் ஒன்றும் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. இத்தனை நாட்கள் பார்த்த காஷ்மீர் பிரச்சினை வேறு இப்பொழுது பார்ப்பது வேறு. இத்தனை நாட்களாக இந்தியா துப்பாக்கிகளுடன் சண்டை போட்டது. ஆனால் இன்று சண்டை போடுவதோ கற்களுடன். துப்பாக்கிகளை விட கற்கள் தரும் ரணம் மோசமானவைகள்.

இத்தனை வருடங்களாக இல்லாமல் இந்த வருடம் காஷ்மீரில் தீவிரவாதத்தால் இறந்தவர்களை விட நம் போர்ப்ப்படைகளால் இறந்தவர்கள் அதிகம். இது நிச்சயம் மோசமானது. ஒரு மக்களை நம்மிடம் பிரியாமல் வைக்க அவர்கள் மனதில் முதலில் இடம் பெற வேண்டும். இந்தியா காஷ்மீரில் அதில் வெற்றி பெறவில்லை. பிரச்சினை மிகத் தீவிர முடிச்சு இந்த ஜூன் மாதம் ஒரு இளைஞன் போர்ப்படையால் கொல்லப்பட்டதிலிருந்து ஆரம்பம் ஆயிற்று . அதிலிருந்து இது வரை 80 துக்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.


எப்போதும் இல்லாதவகையில் இன்று வீதியில் இறங்கிப் போராடுபவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள். நேற்று மட்டும் நடந்த போராட்டத்தில் 15 க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிரதமர் இவ்விகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். அதில் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை.

இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் ஜம்மு & காஷ்மீர் , ஜம்மு , காஷ்மீர், லடாக் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. ஜம்முவில் ஹிந்துக்கள் அதிகம், லடாக்கில் புத்த மதத்தை சார்ந்தவர்கள் அதிகம். பிரச்சினை இருக்கும் காஷ்மீரில் அதிகம் வசிப்பது முஸ்லீம்கள். பிரச்சினை இருப்பது காஷ்மீரில்தான், ஜம்முவிலோ அல்லது லடாக்கிலோ எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.

காஷ்மீர் பொருளாதார நிலையில் ஒன்றும் மேல் நிலையில் இல்லை. இந்தியாவில் பிரச்சினை இருக்கும் அத்தனை பகுதிகளையும் எடுத்துக் கொண்டீர்களானால் எந்த பகுதியுமே பொருளாதார நிலையில் சிறந்து விளங்கவில்லை. அது மாவோயிஸ்டுகள் அதிகம் இருக்கும் மத்திய கிழக்கு மாநிலங்களாகட்டும், காஷ்மீரைப் போல பிரிவினைவாதம் அதிகம் தலை தூக்கும் வட கிழக்கு மாநிலங்களாகட்டும், இல்லை இப்பொழுது பிரச்சினை இருக்கும் காஷ்மீராகட்டும், அனைத்தும் பொருளாதார நிலையில் பின்தங்கிய பகுதிகள். இவற்றில் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு எந்த ஒரு காரியமும் செய்யவில்லை. சுதந்திரம் கிடைத்த இந்த 63 ஆண்டுகளில் இப்பொழுதுதான் காஷ்மீருக்கு ரயில் போக்குவரத்தை தொடக்கி உள்ளது இந்தியா. அதுவும் ரயில் போக்குவரத்து காஷ்மீரின் மையப் பகுதியை எட்டவில்லை.

காஷ்மீரில், பாதுகாப்புப் படையால் பிரச்சினை இல்லை என்கிறாயா என்கிறீர்களா , நிச்சயம் பாதுகாப்புப் படையினரால் பிரச்சினை இருக்கிறது. காஷ்மீரில் சமீபத்தில் நிகழ்ந்த போலி என்கவுண்டர்கள் பாதுகாப்புப் படையினரால் பிரச்சினை இருப்பதை காட்டுகிறது. இது நிச்சயம் மிக மோசமான செயல். இப்படி இருந்தால் நாம் எப்பொழுதும் காஷ்மீர் மக்களின் மனதை கவர முடியாது.

சரி பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? . காஷ்மீரின் பொருளாதாரம் மேம்படுத்தப் படவேண்டும். காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் செயல்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும்.
காஷ்மீர் பிரச்சினை என்பது அங்கு இருக்கும் முஸ்லீம்கள் பிரச்சினை மட்டும் அல்ல அங்கு இருந்து வெளியேறிய ஹிந்து பண்டிட்டுகளின் பிரச்சினைகளும் கூட. 1980 களின் இறுதியில் ஏற்ப்பட்ட தீவிரவாத பிரச்சினைகளால் காஷ்மீரிலிருந்து ஹிந்து பண்டிட்டுகள் வெளியேறி தற்போது டில்லியில் வசிக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சினை தீர்ந்தவுடன் அவர்களும் காஷ்மீரில் குடி ஏற்றப்படவேண்டும்.

1 comment:

JDK said...

I would be happy if US supplies arms and ammunition to Pakistan and help them in acquiring Kashmir.