Friday, September 10, 2010

கடவுளும் நானும்



கடவுள் நம்பிக்கை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும் . சிலர் எப்பொழுதும் ஆத்திகராக இருப்பார்கள். சிலர் எப்பொழுதும் நாத்திகராக இருப்பார்கள். சிலர் சில நேரம் நாத்திகராகவும், சில நேரம் ஆத்திகராகவும்இருப்பார்கள் . நானும் அப்படி தான் சில காலங்களில் ஆத்திகனாகவும் சில காலங்கள் நாத்திகனாகவும் இருந்திருக்கிறேன். நான் பத்தாவது படிக்கும் பொழுது மிகத் தீவிர ஆத்திகன். அப்பொழுது என் இஷ்ட தெய்வம் பிள்ளையார். எப்பொழுதும் சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் எனக்கு , என்னை சார்ந்தவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். அது என்னை பயங்கரமாக பாதித்தது. அந்த பயத்திலிருந்து மீள இன்னும் அதிகமாக சாமி கும்பிட்டேன். நம்மை மீறி எதாவது நடந்து விடுமோ என்ற பயம் இருக்கும் காலத்தில் நம்மை நாம் யாரிடமாவது சரண் அடைத்து விடுகிறோம். நான் சரண் அடைந்தது கடவுளிடம்.

பின்னர் என் அப்பா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த பொழுது மீண்டும் ஆத்திகம் அதிகமாக தலை தூக்கியது. அந்த காலங்களில் நான் மருத்துவமனையில் இருந்ததை விட கோயிலிலேயே அதிகம் இருந்தேன். பின்னர் அந்த விபத்தில் எங்க அப்பா இறந்த பிறகு கடவுளின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. நான் எதற்கு கடவுளை கும்பிட வேண்டும் கடவுள் எனக்கு என்ன செய்தார் என்று கேட்க ஆரம்பித்தேன். அப்பொழுது முழு நாத்திகனாக மாறினேன்.

பின்னர் இன்னும் சில காலங்கள் கழிந்த பிறகு மீண்டும் சாமி கும்பிட ஆரம்பித்தேன். ஆனால் இப்பொழுது சிறிது தெளிவு பிறந்திருந்தது. அதோடு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. இவ்வளவு சாமி கும்பிடுகிறோம், பூசை புனஸ்காரம் பண்ணுகிறோம் , இத்தனை பண்ணிய பிறகு கடவுள் இல்லையென்றால் அனைத்துமே வீண்தானே என்ற கேள்வியும் கூட பிறந்தது. அதனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராயத் தொடங்கினேன். இதன் பின் வீட்டில் செய்யும் அனைத்து சாத்திர சம்பிரதாயங்களில் அனைத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.

அம்மாவசை அன்று எங்கள் அப்பாவை வரவேற்க எங்கள் அம்மா செய்யும் அனைத்து செயல்களும் தேவை அற்றது என்றே எண்ண ஆரம்பித்தேன். என்னை பொறுத்தவரை எங்கள் அப்பா இறந்துவிட்டார். அவ்வளவுதான். இதைத் தவிர அம்மாவசை அன்று அப்பா ஆவியாக வருவார், அவரை வரவேற்க வீடு வாசலை சுத்தம் செய்து வாழை இலையில் சாப்பிடுவதெல்லாம் அதிகபட்சம் தூய்மையாக இருக்கவே செய்தது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. இதையும் மீறி கடவுள் இருக்கிறார், எங்கள் அப்பா ஆவியாக இருப்பது உண்மை என்றாலும் மேற்க்கூறிய சம்பிரதாயங்களை செய்யாவிட்டால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் இல்லை. என்னளவில் நான் உண்மையானவனாக பிறருக்கு தீமை செய்யாதவனாக இருந்தாலே, என்னளவில் நான் நாத்திகனாக கூட இருந்திருந்தாலும் கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரைப் பொறுத்தவரையில் நான் ஆத்திகன்தான் .

இந்த சாத்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் கடவுளுக்காக ஏற்ப்பட்டதல்ல. நமக்காகவே ஏற்ப்பட்டது என்று முழுதாக நம்ப ஆரம்பித்தேன். நல்ல நாளில் வீடு கூடி கழுவுவது எதற்கு?. நாம் சுத்தமாக இருப்பதற்கே. கடவுள் வீட்டிற்கு வருவதற்க்கல்ல. அப்படியே கடவுள் இருந்தாலும் அவர் வருவது ஒரு உபகாரணம்தான். நாம் தூய்மையாக ஆரோக்கியமாக இருக்கவேண்டும் .அதுதான் சாத்திர சம்பிரதாயங்களின் நோக்கம். எங்கள் அப்பா இறந்த வீட்டில் நான் சாப்பிடும்பொழுது , நான் சாப்பிடுவதற்கு முன் எங்கள் அப்பாவிற்கு என்று சிறிது சாதம் எடுத்துவைக்கவேண்டும் என்றார்கள். அது எங்கள் அப்பா சாப்பிடுவதற்கு என்று சொன்னாலும் அது உண்மையில் நாய், கோழிக்கு இரை போடவே . இன்றும் அந்த பழக்கத்தை கடைபிடிப்பவன்தான்.

இதேபோல் ஜோசியம் என்று வரும்போது அந்த நம்பிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. கடவுள் நம்பிக்கை என்று வரும்போது ஜோசிய நம்பிக்கை எல்லாம் அதில் மிகச் சிறிய பகுதிதான். எப்படி இந்த ஒன்பது கோள்கள் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இதை எப்படி நம்புவது. அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா. கோள்களின் ஈர்ப்புவிசை ஒவ்வொரு மனிதன் பிறந்த நேரத்தைப் பொறுத்து அவன் மீது தன் ஆட்ச்சியை செலுத்துகிறது என்று கூறினால், நிலவில் இறங்கிய அதன் ஈர்ப்பு விசை அதிகம் பாதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை அல்லவா அது அதிகம் பாதித்திருக்க வேண்டும். ஒன்றும் புரியவில்லை.

இதையும் தாண்டி நம்மை மீறிய ஒரு சக்தி அல்லது கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று எண்ணக்கூடிய சமயங்களும் உள்ளன. இரண்டு சிறிய உயிரணுக்கள் சேர்ந்து பத்தே மாதங்களில் அட்சரம் பிசகாமல் அனைத்து உள்ளுறுப்புகளும் சரியாக உள்ள ஒரு குழந்தை பிறப்பது எப்படி. இதைக்கூட உயிரியலின் அற்புதம் என்று கூறிவிடலாம். இதையும் தாண்டி ஆண் பெண் எண்ணிக்கையின் சமச்சீர் எப்படி பேணப்படுகிறது. 1000 ஆண்களுக்கு குறைந்த பட்சம் 950 பெண்களாவது இருக்கிறார்களே. அது ஏன் 1000 ஆண்களுக்கு 100 பெண்களோ அல்லது 1000 பெண்களுக்கு 100 ஆண்களோ இருக்கக்கூடாது. எப்படி ஒன்றோடொன்று தொடர்பில்லாத இந்த எண்ணிக்கை சமச்சீர் பேணப்படுகிறது.

நம்மை மீறிய சக்தி உள்ளதா?. அப்படி இருந்துவிட்டால் கூட பரவாயில்லை, இல்லாவிட்டால் , கடவுள் இருக்கிறார் என்று எண்ணி நாம் செய்யும் அனைத்து செயல்களும் வீண்தானே.

நிஜமாகவே இப்படி கடவுள் இருக்கிறார் என்று எண்ணி நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வீண்தானா? கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை , கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையை விட நம்மை தீமையிலிருந்து மீட்டுவிடுமா?. கடவுள் இல்லாவிட்டாலும் கடவுள் இருக்கிறார் என்ற போலி நம்பிக்கையில் நாம் செய்யும் அனைத்து செயல்களும் நம்மை தீமையிலிருந்து மீட்டுவிடுமா?. போக்கத்தவனுக்கு ஏதாவதொரு புகலிடம் வேண்டுமே, அது போலி புகலிடமாக இருந்தாலும் பரவாயில்லையா?

கடவுள் என்பது பூமிக்கு மட்டும்தானா? பூமியை மீறிய வாழ்க்கை உலகில் இருக்கிறதா? பூமியைத்தவிர வேறு எங்கேனும் உயிரினங்கள் உள்ளனவா? கடவுள் என்று ஒருவர் இருந்தால் பூமியை மீறிய வாழ்க்கை ஒன்று நிச்சயம் இருக்கவேண்டும். பூமியைத்தவிர வேறு எங்கேனும் உயிரினங்கள் இருக்கவேண்டும். ஏனெனில் சூரியன் தன் வாழ்நாளில் பாதியை முடித்து விட்டது. இன்னும் மீதி வாழ்நாளில் பூமியும் இறந்துவிடும் . பிறகு வாழ்கை எங்கே? பூமி எங்கே ? மனிதன் எங்கே ? பக்தர்கள் எங்கே ?. பக்தன் என்று ஒருவன் இல்லாத கடவுள் உண்டா? உயிரினம் என்ற ஒன்று இல்லாத கடவுள் எதற்கு ?.

கடவுள் நம்பிக்கை இருந்தாலும் கூடவே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற இந்த கேள்வியையும் என்னால் கூடவே வைத்திருக்க முடிந்தது. இயற்பியலில் ஒரு விதி உண்டு. ஒளி, அலை வடிவத்தில் செல்கிறதா இல்லை போட்டான்களாக செல்கிறதா என்று . அதற்க்கு ஒளி இரண்டு வடிவத்திலும் செல்கிறது என்பார்கள் . அதாவது சில தியரங்களை விளக்க ஒளி அலைவடிவத்திலும், மற்ற தியரங்களை விளக்க ஒளி போட்டான்களாக செல்வதாக கொண்டார்கள் . அதே போல்தான் நான் சில கேள்விகளை விளக்க கடவுள் இருக்கிறார் மற்ற கேள்விகளை விளக்க கடவுள் இல்லையென்றும் கொண்டேன் .

Photo Courtesy : http://www.modernartwork.net/wallpaperinterstellar-beingness-web-modern-art-work.jpg

6 comments:

JDK said...

யப்பா டே.. முடியல..இந்த போஸ்ட்'அ படிகரதுக்குள்ள தண்ணி , பூஸ்ட் எல்லாம் குடிச்சிட்டு வரணும் போல..எவ்வளவு பெரிசு (?) ..அதுக்கு நான் பேசாம கடவுள் இருக்குறாரு'நு ஒத்துகிட்டு போயிடரேன் பா !!!

மதுரை சரவணன் said...

//சில நேரம் நாத்திகராகவும், சில நேரம் ஆத்திகராகவும்இருப்பார்கள் . நானும் அப்படி தான் //


பக்ர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Nathan SP (நாதன்) said...

Hari...Super post da. Loved it. Loved Dinesh's Comment as well - super comedy adhu.

Coming to some of your thoughts and questions:-

I agree - majority of sadangu and sambradhaiyum was created for our own good. But it was said as/thru god's ways. So that people will follow it diligently.

Two - Josiyum. Hmm....I see it only on two things da. Most of our activities are the same all through life. MOST of the MOST. And, we have lived enough number of years on this planet to get a good predictable sample. Based on that we can predict little closer to how people born on particular time may behave. That is all.

And, most of our body (human and most living organism) is made up of water. And on Amavasai and pournami, even sea is rough due to gravity pull of moon and other planetary positions change in solar system. Hence it may also affect you. This is the most I can understand and take of it.

Coming to god - you have said it well da. Pookathavanuku thanjam poga kadaval thevai padugirare :)

And - see Kadaval irukraru illaiyo, irukraru ne nambivom. Neeyum Naanum irukum bodhu, avarum irundhitu pogatame ;)

Super post da - loved reading it.

Take care
Nathan

பத்மநாபன் said...

கண், காது, மூக்கு வைக்கும்
பொழுதுதான் ..உண்டு இல்லை விவாதம் எல்லாம் வருகிறது.. ஆற்றலாக பார்க்கும்பொழுது ,
அவனின்று அணுவும் இல்லை ஒரசைவும் இல்லை ( இங்கு அவன் -- ஆற்றல் )

நானும் இப்பொருளில் ஒரு இடுகை ஆரம்பித்து முன்று இடுகையாக தொடர்ந்தது.

Haripandi Rengasamy said...

jdk, ஒரு நாத்திகனை ஆத்திகனா மாத்தினதுல எனக்கு மகிழ்ச்சிதான் நண்பா ;-) ...
மதுரை சரவணனுக்கு எனது நன்றிகள் ...
நண்பா நாதன் ஆளப் பாத்தே ரொம்ப நாள் ஆச்சு .. எப்படி இருக்க ... உன் வருகைக்கு மிக்க நன்றி டா ..
உன்னோட reply ரொம்ப நல்ல இருந்துச்சு ... அம்மாவாசை, பௌர்ணமிக்கு நீ சொல்லும் காரணங்கள் ஓரளவிற்கு பொருந்தி போகுது ... நல்ல விளக்கம் ... ஆனாலும் அந்த நாட்களில் கடைபிடித்த வழக்கங்களை கேள்வி கேட்காமல் இன்றும் கடைபிடிப்பது சரியா என்று எனக்குத் தோன்றவில்லை ... ஜோசியத்தைப் பொறுத்தவரை நாம் இன்று அந்த அளவிற்கு நம்புவதற்கு அதில் சரக்கு இருக்கிறதா என்று எனக்குத் தோன்றவில்லை ... இன்று மருத்துவம் பெரிதும் முன்னேறிவிட்டது ... மருத்துவம் முன்னேறாத அந்த காலங்களில் தூய்மைக்காக கடவுளின் பெயரால் நாம் கடைபிடித்த அத்தனை சடங்கு சம்பிரதாயங்களையும் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா என்பதே என் கேள்வி ... மற்றபடி அம்மாவாசை பௌர்ணமிக்கு நீ கொடுத்த விளக்கம் நன்றாக இருந்தது ...

Haripandi Rengasamy said...

பத்மநாபன் கண் காது மூக்கு வைக்க வேண்டாம் ... வெறுமனே ஆற்றல் என்று கொள்வோம் ... என் கேள்வி அந்த ஆற்றலை தொழ வேண்டுமா ... தொழுவதர்க்கேற்ப அந்த ஆற்றல் உங்களுக்கு துணை புரியுமா ... வேண்டுமென்றால் இங்கு நாம் கீதையை துணைக்கு அழைத்துக் கொள்வோம், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ... கடமையை மட்டும் செய்தால் ஆற்றல் அது பாட்டுக்கு பலனை பார்த்துவிடும் அல்லவா ....