என்னுடைய மற்றும் மதுவுடைய பதின் வயது நினைவுகள் பல ஊர்களைத் தாண்டியது. அதற்க்கு என்னுடைய அப்பாவும் அம்மாவும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததால் நாங்கள் பல ஊர்களில் குடி இருந்ததே காரணமாகும். இப்படியாக எங்கள் வாழ்க்கையும் பல ஊர்களில் அமைந்தது. எங்கள் பதின் வயது நினைவுகளில் மறுக்க முடியாத இடத்தில் எங்கள் மாமா குடியிருந்த மதுரை தல்லாகுளமும் எங்கள் பெரியம்மா இருந்த மதுரை கே.கே.நகரும் இருக்கின்றன. அவை எங்களுடைய இரண்டாவது வீடாக இருந்தன . எங்களுடைய பள்ளி நாட்களின் விடுமுறை காலங்கள் மதுரை வெயிலிலேயே அலைந்து திரிந்தது.
பனையபட்டி சிவன் கோவில்
photo courtesy: http://upload.wikimedia.org/wikipedia/en/9/95/Ppt_Sivan_temple.jpg
எங்களுடைய பதின் வயது நினைவுகள் நான்கு ஊர்களில் ஐந்து பள்ளிகளில் ஏழு வீடுகளில் சுற்றி திரிந்தது. எனக்கு நினைவு தெரிந்து ஆரம்ப காலங்களில் நாங்கள் இருந்த மதுரை அம்மாச்சி வீட்டில் அம்மா அலுவலகம் விட்டு வீடு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்தே கழிந்தது. பின்னர் நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் பனையபட்டிக்கு குடி பெயர்ந்தோம். அந்த வீட்டில் இரண்டு நந்தியாவட்டை மரங்கள் இருந்தன. அந்த காம்பவுண்டில் எங்களுடன் இன்னொரு வீடு இருந்தது. அதில் எங்கள் வயதை ஒத்த அண்ணன் தங்கை இரண்டு பேர் குடியிருந்தனர். விடுமுறை காலங்களில் அந்த நந்தியாவட்டை மரங்களில் ஏறி யார் அதிகம் நந்தியாவட்டை பூக்களைப் பறிப்பது என்ற போட்டியிலேயே கழிந்தது. அப்படி பறித்த பூக்களை மாலையாக தொகுத்து அந்த ஊரில் இருந்த மிக அருமையான சிவன் கோவிலில் உள்ள சிவனுக்கு சாத்துவோம் . அந்த கோவில் ஐயரும் நாங்கள் சிறுவர்களாய் இருந்துகொண்டு பக்தியோடு அளிக்கும் அந்த மாலையை அனைவருக்கும் முந்தி எங்கள் கண் முன்னேயே சிவனுக்கு சாத்துவார். இப்படியாக எங்கள் பக்தியை வளர்த்த இடம் பனையபட்டி. அங்கு இருந்த பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் நான் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடினேன். அதன் நினைவாக ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என்ற குறை இன்று வரை எங்கள் அம்மாவிற்கு உண்டு.
தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாசலபதி திருக்கோவில்
photo courtesy : http://farm1.static.flickr.com/59/152960994_faafb50fdd.jpg
நாங்கள் பனையபட்டியில் இருந்த காலங்களில் நானும் மதுவும் பள்ளி முடிந்து அம்மா அலுவலகம் விட்டு வீடு வரும் வரை தங்கியிருந்த சரஸ்வதி அத்தை வீட்டை மறக்க முடியாது. எங்கள் அம்மா அலுவலகம் விட்டு வர நேரம் ஆகும் என்பதால் நாங்கள் இருவரும் அதுவரை பள்ளியின் அருகில் இருந்த எங்கள் அம்மாவுடன் வேலை பார்த்த சரஸ்வதி அத்தை வீட்டில் தங்கி இருப்போம். இன்றும் என்னால் அந்த வீட்டை மறக்க முடியாது . அவர்களின் வீட்டில் ஆடு மாடு கோழி எல்லாம் இருக்கும். அவற்றுடன் பொழுதைப் போக்கி நேரம் கழிப்பதே எனக்கும் மதுவிற்கும் வேலை. இப்படியாக பிற உயிர்களிடத்தில் அன்பை போதித்தது அந்த வீடுதான்.
இரவு நேரங்கள் எல்லாம் அப்பாவிடம் கதை கேட்பதிலேயே கழிந்தது. இப்படியாக எங்கள் கேள்வி ஞானத்தை வளர்த்தது அந்த ஊர்தான் .
கள்ளழகர் குதிரை பவனி
photo courtesy : http://hindia.in/tamilnews/wp-content/uploads/2010/04/Madurai-festivel.jpg
பிறகு நாங்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு எங்கள் அம்மாவின் பணி நிமித்தமாக மாறிச் சென்றோம். அங்கு இருந்த பெரிய பள்ளிவாசல் பள்ளியில்தான் படித்தோம். அது ஒரு முஸ்லிம் பள்ளி என்பதால் அங்கு வியாழன் வெள்ளிதான் விடுமுறை. அம்மா அப்பா வீட்டில் இல்லாத அந்த நாட்களில் தெருச் சிறுவர்களுடன் பொழுதைக் கழிப்பதே வேலை. அந்த நாட்களில் அந்த ஊரின் மொட்டை வெயில் எல்லாம் எங்கள் தலையில்தான் வீழ்ந்தது. கிரிக்கெட் விளையாட அங்குதான் கற்றுக்கொண்டேன்.
அங்கு எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் என்னுடன் படித்த கண்ணதாசன் குடியிருந்தான். எப்பொழுதும் எனக்கும் அவனுக்கும் இடையில் பெரிய போட்டா போட்டியே நடக்கும். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் வெவ்வேறு பிரிவுகளில் படித்ததால் எனக்கும் அவனுக்கும் இடையே படிப்பு உட்பட அனைத்திலும் போட்டி நடக்கும். படுபாவி அவனும் நல்லா படிப்பான் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். அந்த நாட்களில் அவன் எனக்கு மிகப் பெரிய எதிரி என்றே சொல்லலாம்.அவ்வூரை விட்டுச் சென்றவுடன் அவனுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது . இப்படியாக இருக்கும் பொழுது சென்ற வருடம் மது ஒரு orkut profile அனுப்பி இதைப் பாருடா என்றான். பார்த்தால் அதே கண்ணதாசன். பார்த்தால் மிக சந்தோசமாக இருந்தது . தலைவர் இப்பொழுது நோக்கியா டென்மார்க்கில் வேலை பார்க்கிறார்.
பள்ளியின் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை காலங்களில் மதுரையில் இருக்கும் எங்கள் மாமா பெரியம்மா வீடுகளுக்குச் சென்று விடுவோம். அதே போன்று சித்திரை திருவிழாவும் மே மாதத்தில் வருவதால் அதற்கும் சென்ற மாதிரி ஆகிவிடும். சித்திரைத் திருவிழா பொழுது அழகர் தல்லாகுளம் பிரசன்னா வெங்கடசலபதி கோவிலில்தான் தங்குவார் என்பதால் அக்கோவிலுக்கு மிக அருகிலிருந்த எங்கள் மாமா வீட்டிலிருந்து அந்த விழாவில் கலந்து கொள்வோம். அந்நாட்களில் ஒவ்வொரு மண்டகப்படியாக அழகர் பின் அழைந்து அழகரை தரிசிப்பதே வழக்கம்.
எங்கள் பெரியம்மா வீட்டில் இருந்துதான் நான் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்படி ஓட்டக் கற்றுக் கொண்ட தருணங்களை இப்பொழுதும் நினைத்தாலும் சிரிப்பாக வரும். மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் வண்டி ஓட்ட மட்டும்தான் தெரியும் வண்டியில் ஏறவோ இறங்கவோ தெரியாது . அதற்க்கு ஒருவர் வேண்டும். எங்கள் பெரியம்மா வீட்டில் தான் அப்பொழுது கலர் டிவி இருக்கும், மேலும் அவர்கள் டெக் வைத்திருந்தார்கள். ஆகையால் எங்கள் அம்மா அங்கு வரும் போதெல்லாம் நாங்கள் புதுப் படமாக கேசெட் எடுத்து பார்ப்போம். அப்படி பார்த்ததுதான் புதுப் புது அர்த்தங்கள்,புதிய பாதை போன்ற திரைப்படங்கள். இன்றும் அந்த படங்களைப் பார்த்தால் அந்த வீட்டு ஞாபகம்தான் வரும். இப்பொழுது அவர்கள் அந்த வீட்டை விற்று விட்டு சென்னையே கதி என்று வந்துவிட்டார்கள்.
அதற்கடுத்த நாட்கள் ராமநாதபுரத்தில் கழிந்தன. ராமநாதபுரத்தில் மட்டும் நாங்கள் மூன்று வீடுகளில் குடியிருந்தோம். அந்த நாட்களில் தான் நாங்கள் எங்கள் மாமா பெரியம்மா வீடுகளுக்குச் செல்லாமல் அங்கேயே கழித்தோம். எனக்கு அந்த ஊரில் நாங்கள் தங்கியிருந்த வீடுகளிலேயே மிகவும் பிடித்தது வீட்டு வசதித் துறை வீடுதான் . அது புது வீடாக, விசாலமாக, காற்றோடத்துடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது. அதைச் சுற்றிலும் மழைக்காலங்களில் நீர் தேங்கி விடும் . அந்நாட்களில் அதை நாடி வரும் நீர்ப் பறவைகளைப் பார்ப்பதற்கே மிக சந்தோசமாக இருக்கும். அந்நாட்களில் அந்த ஒதுக்குப்புறமான சாலைகளில் யாருமற்ற நேரங்களில் பள்ளி முடிந்து திரும்பி வரும் வேளையில் மிதி வண்டியில் கை விட்டு ஒட்டி வருவது எனக்குப் பிடித்தமான செயல்களில் ஒன்று.
இப்படியாக என் பதின் வயது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காமல் உள்ளன.
Wednesday, August 11, 2010
பதின் வயது நினைவுகள் ...
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
"இப்படியாக என் பதின் வயது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காமல் உள்ளன. "
இப்படியாக காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சிங்கத்தின் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருத்தன.
நீங்க என்ன சொல்ல வர்றீங்க anony? எனக்கு ஒன்னும் புரியல..
Really superb machi...seems like u've enjoyed ur teenage very much.
Excellent shiva.. Ennaium nalla padikiravanu sonna mudal alu nee thaan da. :)
@ JDK thank you machi .. yes my could not forget my childhood days ..
@ kannathasan எனக்கு நீ எப்பயும் நல்லா படிக்கிற பையன்தான் டா
Post a Comment