Saturday, December 12, 2009

கனவு, மழை மற்றும் நான்

இன்று பகல் பொழுது ஒரு நல்ல தூக்கம். கனவில் முதலை வந்த ஒரு கெட்ட கனவு வந்தது. நாங்கள் ஒரு முதலைப் பண்ணைக்கு செல்வது போலவும் அவற்றுடன் போக்கு காட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபொழுது அம்முதலை எங்களுக்கு முன்னாடி சென்றவரைக் கடிப்பதாகவும் கனவு வந்தது. எனக்கு முதலை ஒரு பிடிக்காத உயிரினம். எனக்குத் தெரிந்து அதுதான் மனிதனுடன் பழகாத உயிரினம். அக்கனவின் முடிவில், அது ஒரு கனவு தான் என்ற புரிதல் ஏற்ப்படவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி அருமையானது. கெட்ட கனவின் முடிவில் ஏற்ப்படும் மகிழ்ச்சி எத்தகையது? நல்லவேளை, இது வெறும் கனவு என்ற புரிதல் தரும் மகிழ்ச்சி மட்டும்தானா?. எனக்கு அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருப்பது போலேயே தோன்றுகிறது. ஒர் உண்மையான திகில் அனுபவத்தை எந்த ஒரு இழப்பும் இல்லாமல் அனுபவித்த உணர்வு தான் அது என்று தோன்றுகிறது.

கனவானது எத்தகையது? . சில நேரங்களில் கனவானது ஒரு நாளின் இயக்கத்தையே தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு நல்ல கனவு அந்த நாளையே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளதாக்கும் அதேபோல் கெட்ட கனவிற்கும் ஒரு நாளைத் தீர்மானிக்கும் சக்தி உண்டு.

கனவானது வித்யாசமானது. கனவில் வரும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதே நேரத்தில் அவை முரண்பட்டதாகவும் இருக்கும். இந்த கனவில் காசு கொடுக்காமல் கிரிக்கெட்டும் பார்த்தேன் ;-). இன்று உண்மையில் ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே T20 ஆட்டம் இருந்தது. இந்த கனவில் சேவக் ஸ்ரீலங்காவிற்க்காக விளையாடினார். நேஹரா இந்தியாவிற்காக விளையாடி 30 ஓட்டங்கள் பெற்றிருந்தார் என்பதிலிருந்து கனவு எந்த அளவு முரண்பட்டது என்பதை அறியலாம் :-). கனவுகள் சில சமயம் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிவுக்கும் சக்தி கொண்டது என்று சொல்வார்கள். கனவின் பலன்களைக் கூற கனவு சாஸ்திரமெல்லாம் உண்டு. என்னுடைய கனவிற்கும் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் உண்டா இல்லையா என்று தெரியவில்லை . ஆனால் தூங்கி எழுந்து பார்க்கும் பொழுது என் கனவில் கண்டபடி 4 விக்கெட்டுகள் உண்மையில் விழுந்திருந்தன. என்ன என் கனவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆனால் உண்மையில் ஸ்ரீலங்கா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ;-). சரி விக்கெட்டுகள் என்ற அளவில் என் கனவு பலித்திருந்தது என்று சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனவுகள் முன் கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதோடு மட்டுமல்லாமல், பல செயல்களுக்கும் கண்டுபிடிப்பிற்கும் காரணமாயிருக்கின்றன. தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாராம். ஆனால் தைக்கும் ஊசிக்கு எங்கு துளை வைக்கவேன்றும் என்று தெரியவில்லையாம். ஒரு நாள் கனவில் அவரை ஆதிவாசிகள் சூழ்ந்து கொண்டு அவரை ஈட்டியால் குத்த வந்தார்களாம். அப்பொழுதுதான் அவர் கவனித்தாராம் அந்த ஈட்டிகளின் முனையில் துளை இருந்ததாம். அதிலிருந்துதான் தைய்யல் இயந்திரங்களின் ஊசியின் முனையில் துளை வைத்தாராம்.

சரி தூக்கம் முடிந்து எழுந்து வந்தால் சரியான மழை பிடித்துக் கொண்டது. அப்பொழுது ஏனோ s.ராமகிருஷ்ணன் எழுதிய "மழை என்ன செய்யும்" என்ற கட்டுரை நினைவிற்கு வந்தது. அவர் கட்டுரையில் இருந்தபடியே நல்ல மழை ஆனால் அது சிறிது நேரமே நீடித்தது. அவர் கூறியபடி நான் கதவைத் திறந்து மழையை வரவேற்க்கவில்லை. மழையில் நனையப் பிடிக்கும் தான் ஆனால் ஏனோ அன்று மனம் மழையை வரவேற்கவில்லை. குளிரவேற செய்தது.

twitter இல் சுருதி ஹாசனும் அஹமத்- ம் இந்த குளிரில் ஹாட் சாக்லேட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியது நினைவிற்கு வந்தது. எனக்கும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. அதனால் pizza corner ஐ அழைத்து ஹாட் சாக்லேட் தருவிக்கலாம் என்று நினைத்தால், ஹாட் சாக்லேட் இல்லையாம். சரி அன்று இரவு pizza உடன் முடிந்தது .

இவ்வாறாக கனவில் ஆரம்பித்து மழையில் நனைந்து pizza வில் முடித்த மனதின் கோர்வையை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.

No comments: