Saturday, February 13, 2016

செல்லங்கள் .....

alt text

சின்ன வயசுல இருந்தே எனக்கு செல்லப் பிராணிகள்னா ரொம்ப பிடிக்கும். ஆனா வீட்டுல அதுக்குலாம் தடா. இருந்தாலும் ரோட்டுல போ நாய்க்குட்டி, பூனைக்குட்டியலாம் பிடிச்சு கொஞ்சிக்கிட்டு இருப்பேன். பொதுவா இந்த லெகான் கோழிப்பண்ணைகளிலாம் பெண் கோழிக்குஞ்சுகளுக்குதான் மதிப்பு. ஏன்னா அதுதான முட்டை போடும். அதுனால இந்த ஆண் கோழிக்குஞ்சுகளலாம் கழிச்சுருவாங்க. அதலாம் சில பேரு போயி வாங்கிட்டு வந்து கலருல முக்கி சின்னப் பசங்கட்ட விப்பாங்க. ஒன்னு, ரெண்டு ரூபா இருக்கும். அப்பலாம் அதிக பசங்கட்ட ரெண்டு ரூபாலாம் இருக்காதுங்குறதால ஒரு சீட்டு இருபது பைசானு , பத்து சீட்டு போட்டு குலுக்கல் முறைல ஒரு கோழிக்குஞ்சு தருவாங்கவீட்டுல மிட்டாய் வாங்க குடுக்குற காச எடுத்துகிட்டு பொட்டிக் கடைக்கு போனா பக்கத்துலேயே இந்த கலர் கோழிக்குஞ்சுகள வச்சுருப்பாங்க. அப்பலாம் சின்னப் பசங்க சங்கமிக்கி இடமா பொட்டிக் கடைகள் இருந்ததாலும் , அங்க வர்ற பசங்ககிட்டதான் காசு இருக்கும்கிற வியாபார வியூகத்தினாலும் பொட்டிக் கடைக்குப் பக்கத்துலதான் இந்த வியாபாரம் நடக்கும் .

என்னதான் வீட்டுல திட்டு கிடைக்கும்னாலும், நானும் மிட்டாய் வாங்கப்  போகும்போது, ஒரு நப்பாசைல சீட்டு வாங்கிருவேன். என் ராசியோ என்னவோ, நான் சீட்டு வாங்கும்போதுலாம் கோழிக்குஞ்சு விழுந்துரும். இத எப்படி வீட்டுக்கு கொண்டு போகுறதுனு யோசன பண்ணிக்கிட்டே நைசா கொண்டு போவேன். ஆனா எப்படியும் இது கத்திக் காட்டிக்கொடுத்துரும். அப்பறம் கெஞ்சிக் கூத்தாடி வச்சிருப்பேன். ஆனா ரெண்டு நாளுதான். அதத் தூக்கி யாராவது பக்கத்து வீட்டுல கொடுத்துருவாங்கஇப்படி அடிக்கடி நடந்ததால, அதுக்கப்புறம் கோழிக்குஞ்சு சீட்டு வாங்க மாட்டேனு ஒபாமா அமெரிக்க தேசிய கீதம் பாடும்போது நெஞ்சுல கை வச்சு சொல்லுற  மாதிரி, உறுதி மொழி எடுத்தாதான் அடுத்து காசே கிடைக்கும்.

எங்க வீட்டுல கொஞ் அதிக நாள் கூட இருந்தது, எங்க அம்மாக்கு தெரிஞ்சவங்க கொடுத்தது கோழிகுஞ்சுதான். அதுக்கு இர போட்டா அது திங்கிறேன் பேர்வழினு, மண்ணக் கீறி இரைய தோண்டுற பழக்க தோசத்துல, இரையக் காலால கீறீ வீடு முழுசும் பரப்பிவிட்டுரும். இப்படி விட்டா அம்மா இதச் சொல்லியே அத மறுபடியும் நாடு சாரி வீடு கடத்திருவாங்கனுநான் கொஞ்சம் என் சிறு மூளையைக் கீறீ, பேஸ்டு அட்ட டப்பால அது தல மட்டும் போற மாதிரி வெட்டி, அதுல இரையைப் போடுவேன்அப்பயும் அது பழக்க தோசத்துல தரையைக் கீறும். அதப் பாத்துட்டு அப்பா , அதுக்கு மண்ணுல திங்கிற பழக்கமே போகப்போதுனு சொல்லுவாங்க. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட என்னால், அது பின்புறம் ஒரு குட்டிப்பையைக் கட்டிவிடுவதில்(yes, for that purpose only), வெற்றி வாகைச் சூட முடியவில்லை. அதனால் அது இங்கிங்கெனாதபடி, வீடு முழுசும் தன் முழுநேரக் கடனைக் கழித்தது (காலைக் கடன்லாம் சொல்லுவது லாஜிக்கலி incorrect. அது முழித்திருக்கும் நேரம் எல்லாம் போய்கிட்டு இருந்தது அல்லது அப்படித்தான் எங்க அம்மாவால் சொல்லப்பட்டது). பின் இதைக் காரணம் காட்டியே எங்க அம்மாவால் அது வீடு கடத்தப்பட்டது.

சரி இதுதான் பிரச்சினைனு , இந்தப் பிரச்சினை இல்லாத, கலர் மீனு வாங்கிட்டு வந்து ஒரு பக்கெட்டுல போட்டு வச்சேன். அதுக்கும் சைவ பட்சினியான எங்க வீட்டில் முறைக்கப்பட்டதுஅதைத்தவிர அப்பப்ப சில பல காரணங்களால் மீன்கள் இறந்து போய் வீட்டில் பிரச்சினையைக் கிளப்பியது ( பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி என்பதால், நான் அடிக்கடி தண்ணி மாத்தாதலால்தான் அந்த மச்ச அவதாரங்கள் இறந்தன என்று எங்க அம்மாவால் குற்றம் சாட்டப்பட்டேன் என்பது இங்கு அவசியமில்லை).

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனா இன்னும் பிற வளர்ப்புப் பிராணிகள் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். ரொம்ப நாளா எனக்கு கிளி வளக்கணும்னு ஆசை. அப்பொழுது என்னுடன் சுந்தர் என்ற நண்பன் படித்துக் கொண்டிருந்தான். கிளி வளக்கணும்கிற ஆசையை அவன்ட ஒரு நாள் சொன்னேன். அதுக்கு அவன் தனக்கு கிளிக்குஞ்சு எடுப்பவர்கள் தெரியும்னும், தான் ஒரு கிளிக்குஞ்சு தர்றதாவும் சொன்னான். அதுக்கு பிரதி உபகாரமா நான், அடுத்து வர்ற பரிச்சைல என் பேப்பர அவன் பாத்து எழுத கொடுக்கணும்கிற தீர்மானம் ஏற்கப்பட்டதுஅடுத்து அந்த அதிசய சம்பவம் ஒரு நாள் மதியப் பொழுதில் நிகழ்ந்தது (ஆம், எங்க வீட்டில் அனைத்து வளர்ப்புப் பிராணிகளும் எங்க அம்மா ஆபீஸ் போயிருக்கும் மதிய நேரங்களிலேயே என்னால் அனுமதிக்கப்படும்). சுந்தர், ஒரு மஞ்சப் பைல நாலஞ்சு கிளிக்குஞ்சுகளோட வந்திருந்தான். அதைப் பார்த்ததும் எனக்கு பக்குனு ஆயிடுச்சு . ஏன்னா அதப் பாத்தா கிளி மாதிரியே இல்ல. கிளிக்கான லட்சணங்களில் அந்த சிவப்பு மூக்கத் தவுத்து வேற ஒன்னுமே இல்ல. கொஞ்சம் கூட முடி இல்லாம கிட்டத்தட்ட ஒரு மாமிச பிண்டம் மாதிரி இருந்துச்சு, அதப் பார்த்ததும் எனக்கு அம்மாட்ட செம அடி வாங்கிருவோமோனு முத தடவ பயம் வந்துருச்சு. ஆனா கண்ணு திறக்காத அதப் பாத்து பாவமாவும் ஆகிருச்சு. சரினு சுந்தர் கொடுத்த ஒன்ன வாங்கி வீட்டுல ஒளிச்சு வச்சுட்டேன். மீதிய அவன் மத்த பிரன்ஸுகிட்ட கொடுக்க கொண்டு போய்ட்டான். இத எப்படியோ கண்டுபிடிச்ச எங்க அம்மாச்சி சாயங்காலம் எங்க அம்மா வந்துதும் சொல்லிட்டாங்க. எங்கடா கிளினு கேட்ட, எங்க அம்மாட்ட அதக் காட்டவும் ஒரே அலரல். அவங்க, இப்படி ரோமமே இல்லாம, கண்ணு தெரியாத ஒன்ன எதிர்பாக்கல. டேய் , இதலாம் பாவம்அதுக்கு ஒன்னு ஆச்சுனா அந்த பாவம் நம்மலதான் சேரும். இப்படி பண்ணிட்டயேனு சொல்லவும், எனக்கே பயம் வந்துருச்சுகண்ணு கூட திறக்காத அத எப்படி வளக்கனும்னு கூட தெரியல. எப்படி சாப்பாடு கொடுக்கணும்னு கூட தெரியல.

அப்ப எங்க வீட்டு பக்கத்துல, ஐடிஐல படிச்சுகிட்டு இருந்த சில அண்ணாக்கள் இருந்தாங்க. அவங்கட்ட கொடுத்து இத கொஞ்ச நாள் வளக்கச் சொல்லுறதுனும்னும், அதுக்கு முடிலாம் முளச்சு தானா சாப்பிட கத்துகிட்டதும் அத வாங்கிக்கிறதுனும்னு எங்க வீட்டில் முடிவு எடுக்கப்பட்டு, அந்த அண்ணாக்களிடம் அடைக்கலமாக திணிக்கப்பட்டது.(திணிக்கப்பட்டது என்பதுதான் சரி, அவர்களிடம் இதைப் பற்றி கேட்கவே இல்ல. அந்த தெருவிலேயே அவர்கள் TV பாக்க அனுமதித்த ஒரே வீடு எங்க வீடுதான் என்பதால், அந்த அதிகாரம் கைக்கொள்ளப்பட்டது). இப்படி அவர்களிடம் திணிக்கப்பட்ட அந்த கிளிக்குஞ்சு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. அது வயதுக்கு வந்த பிறகு (அதாங்க, சாம்பல் கலர் கிளிக்குஞ்சுல இருந்து பச்ச கலர் கிளியா மாறுன பின்னாடி), ஒரு திருநாளில்அம்மாவால் முதன் முதலில் எங்க வீட்டில் ஒரு செல்லப் பிராணி அனுமதிக்கப்பட்டது, அதுவும் அது அசிங்கம் பண்ணா அத நானும் என் தம்பி மதுவும்தான் கிளீன் பண்ணணும்கிற சில பல கண்டிசன்களுடன்.

வீட்டிற்கு வந்த அந்த கிளி ஒரு ஆண் கிளி என்பதால் அதற்கு ராஜூ (ராஜு பாய்லாம் இல்ல. வெறும் ராஜு தான்) என்று பெயரிடப்பட்டது. ராஜூக்காக நானும் மதுவும் ஸ்கூலுல இருந்து மத்தியானம் வந்து சாப்பாடு , தண்ணிலாம் வச்சுட்டு கொஞ்ச நேரம் கூண்டுல இருந்து திறந்துவிட்டு, திரும்பியும் ஸ்கூல் போவோம். கொஞ்ச நாளுலயே ராஜூ எங்க வீட்டுல ஒரு உறுப்பினராகவே ஆயிடுச்சு. அதுவும் நாங்கள் சாப்பிடும் பால், ஃபான்டா, ஐஸ் கிரீம், கரும்பு என அனைத்தும் சாப்பிடும். அதுவும் பால் குக்கர் விசில் சத்தம் கேட்டுட்டாலையே அது குதிச்சு , குதிச்சு கிச்சனுக்கு ஒடும். அது எங்க வீட்டுல ஒரு ஆளா ஆனதை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு பிறந்தநாள் வைத்துக் கொண்டாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அது பிறந்ததாக கருதப்பட்ட ஜனவரி மாதத்தில் வந்த எங்க தாத்தாவின் பிறந்தநாளை ராஜுவின் பிறந்தநாளாக வருடாவருடம் கொண்டாடப்பட்டது.

கொஞ்ச நாளுல எங்க அம்மாவுக்கும் ராஜுவ பிடிச்சுப் போச்சு. எல்லாரையும் போல அதுக்கும் ஒரு task ஒதுக்கப்பட்டது. என்னனா ஜோசியம் பாக்குறது. கிளி ஜோசியம். ஒரு திருநாளில் எங்க அம்மா, எனக்கும் மதுக்கும் எப்ப காதுகுத்துறதுனு ராஜுட்ட கேட்க( அது ஒன்னும் இல்ல, ஒரு நாலஞ்சு தேதிய எழுதிப் போட்டு எடுக்கச் சொல்லுறது. அதுவும் ஏதோ ஒரு பேப்பர எடுத்து திங்க ஆரம்பிச்சுரும். சில நேரம் அது முழுசா கடிச்சுறதுனால, மீதி கிடக்குற பேப்பர வச்சுதான் அது என்னா எடுத்துச்சுனு கண்டுபிடிப்போம்), அதுவும் எடுத்துக் குடுக்க, கர்ம சிரத்தையா எங்களுக்கு காதுகுத்த நாள் குறிக்கப்பட்டது. எப்ப, நான் ஆறாவது படிக்கும்போது. காது குத்திட்டு, அந்த தோடோட ஸ்கூலுக்கு போகமாட்டோம்னு நானும் என் தம்பியும் அடம் பிடிக்க, கொஞ்ச நாளுக்கு தோடு போடடலனா, காது தூர்ந்து போய், நீ காது குத்தலனு கல்யாணத்துக்கு முத நாள் திரும்பையும் காது குத்துவாங்கனு பயமுறுத்திப் பார்த்தாங்க. இருந்தாலும் அன்று தான் கொண்ட மானமே பெரிசுனு காது தோட்ட கழட்டிட்டுதான் நானும் மதுவும் ஸ்கூல் போனோம். அதுக்கு அப்புறம் ஏழு கழுத வயசாகி ஆபிஸ் போன பின்னாடி, காது குத்தி ஒத்தக் காதுல தோடு போடலாம்னு யொசிச்சதெல்லாம் வேற கதை

அடுத்து எங்க வீட்டுக்கு வர்றவங்கலாம் உங்க கிளி பேசுமானு கேட்க ஆரம்பிச்சாங்க .  சரி எல்லார் வீட்டிலயும் கிளி பேசுதே , நம்ம ராஜுவையும் பேச வைக்கணும்னு நாங்களும் முயற்சி பண்ண ஆரம்பிச்சோம் . அதுவும் பக்கத்து வீட்டுல இருந்த கிளிலாம் , வீட்டுக்கு யாரு வந்தாலும் ‘திருட்டுப்பய திருட்டுப்பய’ னு கத்துமாம். அந்த அளவுக்குலாம் வேண்டாம் , சிவானு என் பேரையோ , இல்ல மதுனு தம்பி பேரையோ சொன்னாப் போதும்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சோம்.  அதுவும் ‘சீட்டி’ அடிக்கிறத கொஞ்சம் இழுத்த மாதிரி சொல்லும் . படத்துல வர்ற மாதிரி மிகச் சரியான உச்சரிப்புடன் எதிர்பார்த்த எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் . அதுக்கு மேல எந்த முயற்சியும் கை கூடாததால் அந்த சீட்டியே எங்கள் கிளி பேசியதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  

இப்படி எங்களில் ஒரு ஆளாக இருந்த ராஜு ஒரு நாள் பறந்து போச்சு. திரும்பி வரவே இல்ல.

அதனுடன் செல்லப் பிராணிகளுக்கும் எங்களுக்குமான தொடர்பு அற்று விட்டது என்று இருந்த போது கிட்டதட்ட , 15 வருடங்கள் பிறகு , கழுகுக்கு பயந்த புறா சிபிச் சக்கரவர்த்தியை தஞ்சமடைந்ததைப் போல , காக்கைகளுக்குப் பயந்த ஒரு கிளியானது , எங்களை தஞ்சமடைந்தது. அதுவும் ராஜுவைப் போல ஒரு வளர்ப்புப் கிளிதான். நிச்சயம் வெளியில் விட்டால் பிழைக்காது என்பது தெரிந்தது. சரினு அத காலியாக இருந்த எங்க வீட்டு ஒரு ரூம்ல விட்டொம். அவ்வளவுதான், அந்த ரூம் முழுசும் அதுவே எடுத்துக்குச்சு. யாரையும் உள்ளுக்குள்ள விடுறதே இல்ல. முழு ரூமுக்குள்ளும் பறந்துகிட்டே இருக்கும். எங்க வீட்டுக்கு வந்த எங்க அண்ணன்லாம், டேய் , கொடுக்குற இந்த வாடகைல ஒரு ரூம் முழுசா ஒரு கிளிக்கு குடுத்துருக்கீங்கனு வேற சொல்லிட்டு போனாங்க. அந்த கிளியும் எங்க வீட்டுல ஒரு ஆறு மாசம் இருந்துச்சு. அப்புறம் அந்த கிளிக்காகவே எங்கே வெளிய போனாலும், ராத்திரியே வீட்டுக்கு வந்துருணும். இது ரொம்ப முடியலனு, ஒரு நாள் blue cross கொண்டு போய் கொடுத்துட்டோம். இப்ப கொஞ்ச நாளா எங்க வீட்டுல எந்த செல்லப் பிராணியும் இல்ல. எங்க அம்மாவும் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க.

Image Courtesy : Spanishdict

3 comments:

Dinesh said...

நன்றி பயனுள்ள தகவல் _/\__/\__/\_

Karthik said...

அருமையான பதிவு. சிவா நிறைய எழுதவேண்டும் (6 மாதத்திற்கு ஒருமுறை அல்ல).

செல்லப்பிராணி வளர்க்க விரும்பாத பள்ளிப்பருவம் மிக அரிது. வீட்டில் பெரியோர் அதை பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. "வீட்டில ஏற்கனவே ஒரு நாயை வளத்துகிட்டு தான் இருக்கோம் (நம்மளத்தான்). இதுல இன்னொன்னா?" என்று வாயை அடைத்துவிடுவார்கள். நானும் ஒரு வருடகாலம் பூனையை வளர்த்தேன். ஒரு நாள் குட்டிப்பாம்பை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டது. நான் உட்பட அனைவரும் பீதியானோம். பின்னர் அதை 100 KM தள்ளி தூத்துக்குடிக்கு நாடு கடத்தி இயல்பு நிலைக்கு திரும்பினோம். இந்த பதிவுக்கு பிறகு அதை அசை போட சுகமாக இருக்கிறது. :)

Haripandi Rengasamy said...

Thanks Karthi ...Sure, I would try to write blog as frequent as possible :) ...