Monday, April 15, 2013

இரும்புப் பெண்மணி : மார்கரெட் தாட்சர்

Photograph 

இதுவரை இருந்த ஆங்கிலேய பிரதம மந்திரிகளில் (கிட்டத்தட்ட 1721 களிலிருந்து ) நம்மில் பெரிதும் அறியப்பட்டவர்கள் இரண்டே பேர் . ஒருவர் இரண்டாம் உலகப் போர் புகழ் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றொருவர் மார்கரெட் தாட்சர் . இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த அட்லி பிரபு கூட நம்மில் பலருக்குத் தெரியாது. வின்ஸ்டன் சர்ச்சில் கூட இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரதமராக இருந்ததால் அதிகம் அறியப்பட்டார் என்பதில் அதிகம் ஆச்சரியம் இல்லை. ஆனால் மார்கரெட் தாட்சர் நம்மில் அதிகம் அறியப்பட்ட பிரதமர் என்பது ஆச்சரியம்தான்.

வின்ஸ்டன் சர்ச்சில் என்றால் எப்படி நமக்கு அவருடைய சுருட்டு ஞாபகம் வருதோ அதேபோல் மார்கரெட் தாட்சர் என்றதும் 'இரும்புப் பெண்மணி' என்று அவர் அழைக்கப்பட்டதுதான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு அவர் பல துணிச்சலான முடிவுகள் எடுத்தார்.

மார்கரெட் தாட்சரையும் இந்திரா காந்தியையும் பல விதங்களில் ஒப்பிடத் தோன்றுகிறது . இந்திரா காந்தி எப்படி இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகவும் இதுவரை இந்தியா கண்ட ஒரே பெண் பிரதம மந்திரியாக இருந்தாரோ அதே போல் லேடி தாட்சரும் இங்கிலாந்தின் முதல் மற்றும் இங்கிலாந்தின் கிட்டத்தட்ட முன்னூறு வருட கால பிரத மந்திரிகளின் சரித்திரத்தில் ஒரே பெண் பிரதம மந்திரி . இரண்டு பேருமே இரும்புப் பெண்மணிகள் என்று அறியப்பட்டவர்கள் . இரண்டு பேருமே கிட்டத்தட்ட சமகாலத்தில் ஆண்டவர்கள் . இரண்டு பேருமே போர்க்காலங்களில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். இந்திராகாந்தி எப்படி பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டாரோ அதேபோல் லேடி தாட்சர் அர்ஜென்டினாவுடன் போரில் ஈடுபட்டார். இரண்டு பேருமே அவர்கள் நாட்டை அதிக காலம் ஆண்டவர்களில் ஒருவர். இரண்டு பேருமே எதற்குமே compromise செய்து கொள்ளாதவர்கள். தாங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தவர்கள் . அதனாலையே அவர்கள் இரண்டு பேரும் controversy களிலும் அதிகம் சிக்கினர் என்பதும் வேதனையான உண்மை. இரண்டு பேரைப் பற்றி பேச்சு வரும்போது அவர்களை கடுமையாக எதிர்ப்பவர்கள் அல்லது முழுமையாக ஆதரிப்பவர்கள் என்று இரண்டு சாராரே உண்டு. நடுப்பட்டவர்கள் என்று யாருமே இல்லை. 
 
இந்திராகாந்தி இந்தியர்களாலையே கொல்லப்பட்டபோது லேடி தாட்சரின் மரணத்தை பார்ட்டி வைத்து கொண்டாடுவோரும்  பிரிட்டனில் உண்டு ( 'Ding-Dong . The witch is dead ' என்று சிலர் மார்கரெட் தாட்சரின் மரணத்தைக் கொண்டாடுகின்றனர். லேடி தாட்சரின் இறந்த தினத்தன்று பிறந்த தினம் கொண்ட, ஒரு யூனியனில் தலைவராக இருந்த ஒருவர் இன்றுதான் எனக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது என்றார். லண்டனில் இருந்த ஒரு borough லேடி தாட்சரின் இறப்பிற்கு துக்கம் அனுஷ்டிக்க மறுத்து பிரிட்டிஷ் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட மறுத்துவிட்டது. மரியாதைக்கு பெரிதும் அறியப்பட்ட பிரிட்டிஷாரே,  இப்படி அவரின் மரணத்தை கொண்டாடியது ஆச்சரியத்திற்குரியது மற்றும் வேதனையானது ).

எனக்கு என்னவோ இந்திராகாந்தியைப் போல் மார்கரெட் தாட்சரும் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டதாலையே அவர் இந்தியர்களால் அதிகம் அறியப்பட்டார் என்று தோன்றுகிறது. ஆனால் மார்கரெட் தாட்சருக்கு அந்த பட்டத்தை கொடுத்தது பிரிட்டன் அல்ல. அவரால் அதிகம் வெறுக்கப்பட்ட அவரை அதிகம் வெறுத்த ரஷ்யா ஆகும். அதுவும் அது அவர் பிரதமராக ஆவதற்கு முன் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதே அவ்வாறு அழைத்தது.

 எனக்கு என்னவோ மார்கரெட் தாட்சர் விமர்சனங்களாலையே  அதிகம் அறியப்படுவதாகவே தோன்றுகிறது. லேடி தாட்சரைப் பற்றி கூறும் 'Mrs Thatcher, Milk Snatcher ' சொலவடை சுவாரசியமானது . 1970 களில் அவர் கல்வித்துறை மந்திரியாக இருந்தபோது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச பாலை நிறுத்தியதால் அவர் அவ்வாறு அறியப்பட்டார்.

பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினார் .  அவருடைய காலங்களில் தனியார் மயமாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் முக்கியமானவை British Rails, British Telecom, British Airways. அவருடைய காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்த யூனியன்களின் பலத்தை வெகுவாக ஒடுக்கினார். அதனால் பல வேலை நிறுத்தங்கள் அவர் காலத்தில் நடந்தன.

அவருடைய காலத்தில் அர்ஜென்டினா , British Overseas Territory ஆக இருந்த ஃபாக்லாந்து தீவை ஆக்கிரமித்தபோது பிரிட்டிஷ் படைகளை அனுப்பி அதனை மீட்டார் . ஆனால் இப்படி போரை ஏற்படுத்தாமல் பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே அப்பிரச்சினையை தீர்த்திருக்கலாம் என்று அதற்கு குற்றம் சாற்றப்பட்டார்.
அவரின் மீது கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு பிரிட்டனின் Manufacturing Industry ஐ வளரவிடாமல் தடுத்துவிட்டார் என்பது.
அவர் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உலக அளவில் அறியப்பட்டாலும் அவர் பெண்ணியவாதிகளால் அதிகம் வெறுக்கப்பட்டார். அதற்கு அவர் பெண்ணியத்தை வெறுத்ததும் ஒரு காரணம்! . ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவர் பெண்களுக்காக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாற்றப்பட்டார். 

இப்படி அவர் மீது விமர்சனங்கள் வைத்தாலும் அவருடைய ஆதரவாளர்கள் , அமெரிக்காவைப் போல் பிரிட்டனும் பொருளாதார பெருமந்தத்திற்கு தலைப்பட்ட அக்காலத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளே பிரிட்டனைக் காப்பாற்றின என்கின்றனர். அவர்கள் கூறுவது உண்மை என்று நிரூபிப்பது போல் அவரும் தொடர்ந்து மூன்று முறை மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . மேலும் பிரிட்டனை அதிக காலம் ஆண்ட பிரதமர்களில் அவரும் ஒருவர். அவரின் நடவடிக்கைகளாலேயே பிரிட்டனும் உலக அரங்கில் நிதித் தலைமையகம் என்ற தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொண்டது .
அவர் பிரிட்டனில் மட்டுமல்லாது உலக அளவில் மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார். அவருடைய காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மற்றும் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த கோர்பச்சேவுடனான அவரின் நெருக்கம் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிற்கிடையேயான பனிப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது.

உலக  அரசியல் அரங்கில் பிரபலமடைந்த அனைத்து தலைவர்களைப் போலும் மார்கரெட் தாட்சரைச் சுற்றிலும் சர்ச்சைகள் சுற்றின. ஆன போதிலும் உலக அரங்கில் பெரிதும் அறியப்பட்ட பெண்களில் மார்கரெட் தாட்சர் முக்கியமானவர் என்றால் அது உண்மை .

2 comments:

Bharathi said...

Good information.

vidhya said...

Nenga inum points add panalam. I know you prepared a lot.