Wednesday, April 27, 2011

இந்திய அரசின் வல்லரசு கனவு தகுதியானதா ?

இந்தியத் தலைவர்கள் உலக நாடுகளை எல்லாம் சுற்றி வரும்போது மறக்காமல் அந்த நாடுகளிலிருந்து வாங்கி வரும் உறுதி மொழி நாங்கள் இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக ஆதரவு தருவோம் என்பது . ஆனால் இந்திய அரசு உண்மையிலேயே அதற்கு தகுதியானதா. ஒரு உலக வல்லரசோ அல்லது குறைந்தபட்ச பிராந்திய வல்லரசோ எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுக்க வேண்டும் . ஆனால் இந்திய அரசு எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுத்ததில்லை. இந்திய அரசு எந்த ஒரு விசயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் திணறுவதும் முக்கியமாக முடிவு எடுக்க பயப்படுவதும் கண்கூடான விஷயம் .

ஒரு வல்லரசு உலக விசயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டும். உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குதான் அமெரிக்கா தான் வல்லரசு என்பதை தெளிவாக தெரிவிக்கிறது. அது செய்வது சரியா தவறா என்பது வேறு விஷயம் . ஆனால் எந்த ஒரு உலக நடவடிக்கையிலும் அது தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கும். மேலும் தான் எடுத்த நிலைப்பாடு வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இந்திய அரசு தான் எடுத்த நிலைப்பாடு வெற்றி பெறக்கூட போராட வேண்டாம் . குறைந்தபட்சம் உலக விசயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகவாவது தெரிவிக்க வேண்டும் .

ஆனால் இந்திய அரசு அப்படி நடந்து கொண்டதில்லை . சிறிது காலத்திற்கு முன்பு நடைபெற்ற எகிப்து புரட்சியின்போது கூட இந்திய அரசு கூறிய வார்த்தைகள் "நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்". கடைசி வரை இதையேதான் கூறினார்களே ஒழிய , முபாரக் பதவி விலக வேண்டும் என்றோ அல்லது எகிப்து புரட்சி வெற்றி பெற வேண்டும் என்று தப்பி தவறி கூட கூறவில்லை.

தற்போதைய லிபிய புரட்சியில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று நம் வெளியுறவு அமைச்சர் திருவாளார் S.M. கிருஷ்ணாவிடம் கேட்ட போது அவர் இப்படி திருவாய் மலரினார் "நாம் இத்தகைய சமயங்களில் எந்த ஒரு நிலைப்பாடும் எடுப்பதில்லை" :( . இதை கூறுவதற்கு ஒரு வெளியுறவு அமைச்சர். மேலும் லிபிய புரட்சியை ஆதரித்து ஐநாவில் லிபியாவின் மீது "No fly zone" தீர்மானம் கொண்டுவந்தபோது கூட இந்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இவர்களுக்கு எல்லாம் பயம் எங்கே தாங்கள் ஒருவரை ஆதரிக்க போய் எங்கே மற்றொருவர் வெற்றி பெற்றுவிட்டால் என்ன ஆவது . அதற்க்கு better எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் . புரட்சியின் முடிவில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்தானே அப்பொழுது வெற்றி பெற்றவர்க்கு ஒரு பூங்கொத்து அனுப்பிவிட்டால் போயிற்று.

நான் ஒன்றும் இங்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் எகிப்து மக்களின் மீதோ அல்லது லிபிய மக்களின் மீதோ பரிதாபப்பட்டு முபாரக் மீதோ அல்லது கடாபி மீதோ நடவடிக்கை எடுத்தது என்று கூறவில்லை . இதே நாடுகள்தான் முபாரக்கையும் கடாபியையும் சிறிது காலத்திற்கு முன்பு வரை ஆதரித்தவர்கள் . ஆனால் மக்களின் ஆதரவு மாறியவுடன் தாங்களும் மாறிக்கொண்டார்கள். அதற்க்கு மக்களுக்கு தாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று சாயம் வேறு பூசிக்கொண்டார்கள்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக எதேச்சதிகாரத்திற்கு ஆட்பட்ட இந்தியா மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது எதேச்சதிகாரத்திற்கு எதிராக நடைபெறும் புரட்சிக்கு இயல்பாக ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் புரட்சி வெற்றி பெற்ற பின் கடைசியாக மக்களுக்கு ஒரு பூங்கொத்து அனுப்பினால் அம்மக்கள் நம்மளை மதிப்பார்களா?. நியாயமான புரட்சியின் போது கஷ்டகாலங்களில் ஆதரவு அளித்தவர்களை மக்கள் நினைத்து பார்பார்களா அல்லது வெற்றி பெற்றபின் கடைசியாக வெற்றியில் பங்கு பெற வருபவர்களை மக்கள் வரவேற்க அவர்கள் என்ன மாக்களா ?

இது உலக விசயங்களை பொறுத்தவரை மட்டுமல்ல , ஏன் இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை . இங்கு அருந்ததிராய் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து பேசியபோது ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்ட போது அதற்க்கு நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்படி அருளினார் , "நடவடிக்கை எடுக்காததே ஒரு நடவடிக்கைதான்" . இதை சொல்லுவதற்கு ஒரு மத்திய அமைச்சர்.

நாங்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று கூறும் இவர்கள் எந்த நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற ஆதரவு அளித்தார்கள் ? . நம் நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் பர்மாவில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க இவர்களுக்கு துணிவில்லை. எங்கே அப்படி கொடுத்தால் பர்மா , சீனா பக்கம் போய் விடுமோ என்ற பயம். ஏன் இங்கு இலங்கையில் 1.5 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை எதிர்க்க துணிவில்லை . அப்படி செய்தால் எங்கே இலங்கையும் சீனா பக்கம் போய் விடுமோ என்ற பயம் . அந்த சமயம் நம் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறியது என்ன தெரியுமா , "இலங்கை என்ன வேண்டுமென்றாலும் எங்களைத்தான் கேட்க வேண்டும் . பிற நாட்டை நாட கூடாது". எங்கள் மக்களை அழிப்பதாக இருந்தாலும் அது எங்கள் ஆயுதங்களை கொண்டுதான் அழிக்க வேண்டும் சீனாவை நாடக் கூடாது. இதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஒரு வல்லரசு உலக நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும் (நான் இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் அப்படிதான் நடக்கின்றன என்று கூறவில்லை). ஆனால் இங்கு இந்திய அரசிற்கு தன் மக்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமத்தையே தட்டி கேட்க துணிவில்லை. 500 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதையே இவர்களால் தட்டி கேட்க துணிவில்லை , இவர்கள் எங்கே உலக அக்கிரமங்களை தட்டி கேட்க போகிறார்கள். கேட்டால் மீனவர்கள் எல்லைதாண்டி சென்று விடுகிறார்களே என்ற சப்பை கட்டு வேற. எல்லை தாண்டினாலும் அவர்களை கைது தான் பண்ணலாமே தவிர கொல்ல கூடாது. ஏன் இந்தியாவின் மிகப் பெரிய எதிரி என்று கூறப்படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் மீனர்களை கைது தான் செய்துள்ளதே தவிர இதுவரை ஒரு மீனவரை கூட கொன்றதில்லை.

இந்திய அரசு இதுவரை ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக ஒருதடவை கூட கொடுத்ததில்லை. எப்படியும் ஒரு காலத்தில் எதேச்சதிகாரம் தோற்கத்தான் போகிறது அப்பொழுது வல்லரசாகும் கனவு கொள்ளும் இந்தியாவை எப்படி எகிப்தியரும், லிபியரும் , பர்மியரும், இலங்கை தமிழரும் , ஆப்ரிக்க மக்களும் ஏனைய மத்திய கிழக்காசிய மக்களும் ஏற்றுகொள்வார்கள் என்று பார்போம். இந்திய அரசின் இத்தகைய முதுகெலும்பற்ற நிலைப்பாட்டால் அம்மக்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் அல்லவா தவறாக நினைப்பார்கள்.

இந்திய அரசு உறுதியாக நிலைப்பாடு எடுக்கும் வரை இந்திய அரசின் ஐநா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் ஆவது என்ற எண்ணம் கனவுதான். அங்கு போயும் இவர்கள் தீர்மானங்களின் மீது ஒன்று வெளிநடப்பு செய்வார்கள் அல்லது ஓட்டளிப்பதிலிருந்து விலகி நிற்பார்கள் .இதற்கு எதற்கு இவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அதுவும் வீட்டோ அதிகாரத்துடன் .

இந்த விசயத்தில் இந்திய அரசை பற்றி ஒபாமா இந்திய பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது மிகச் சரி. "அதிகாரம் வேண்டும் என்பவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதிகாரமும் பொறுப்பும் இணைந்து வருபவை" . இந்திய அரசு பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதவரை அதற்க்கு அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கப் போவதில்லை.

பின் குறிப்பு : இப்பதிவில் அனைத்து இடங்களிலும் நான் கவனமாக இந்திய அரசு என்றே குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் இவை அனைத்தும் இப்பொழுதும் இதுவரை இருந்த முதுகெலும்பற்ற அரசுகளின் தவறே . இவை இந்திய திருநாட்டின் தவறோ அல்லது மக்களின் தவறோ அல்ல.

3 comments:

Devaraj Rajagopalan said...

மிகவும் கருத்து நிறைந்து ஒரு அருமையான பதிவு இதை பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்தால் நன்றாக இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.

Haripandi Rengasamy said...

இது இந்த வாரம் விகடன்ல நான் படிச்சதுல பாதிச்சு எழுதுனது.

Anand said...

Kalyannatthukku apram Oru Post -iyum Kanom?