Friday, February 12, 2010

எங்கள் அப்பாவும் அவர் கூறிய கதைகளும்

சின்ன வயதில் எனக்கும் மதுவுக்கும் கிடைத்த மிகச் சிறந்த பாக்கியம் எங்கள் அப்பாவிடம் கதை கேட்கும் பாக்கியம். எங்கள் அப்பாவிற்கு கதை சொல்லும் கலை மிகச் சிறப்பாக வாய்த்திருந்தது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது எங்களுக்கு ஆறு, ஏழு வயதாக இருந்தபோதே நாங்கள் எங்கள் அப்பாவிடம் கதை கேட்க தொடங்கியிருந்தோம். அப்பொழுது நாங்கள் தங்கியிருந்த வீட்டில் மிக நீளமான திண்ணை இருந்தது. அங்கு உட்கார்ந்து இருந்து தான் நாங்கள் கதை கேட்போம். மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் நான், மது மற்றும் எங்கள் பக்கத்து வீட்டு பையன்கள் எல்லாம் அந்த திண்ணையில் எங்கள் அப்பாவைச் சுற்றி கூடிவிடுவோம். எனக்கும் மதுவுக்கும் இதில் பெருமை வேற, எல்லா பையன்களும் எங்கள் அப்பாவிடம் கதை கேட்க வருகிறாகள் என்று. Thanks to Tamilnadu EB dept. அப்பொழுதெல்லாம் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும்.

எங்கள் அப்பா தென்னாலிராமன்,மரியாதை ராமன், விக்ரமாதித்தன் கதைகள்,அரபியக் கதைகள், ஆயிரத்தொரு இரவுக் கதைகள், அக்பர்-பீர்பால் கதைகள் எல்லாம் அவ்வளவு அருமையாக கூறுவாங்க. ஓவ்வொரு கதை சொல்லிமுடித்த பிறகும் அக்கதை சொல்லும் நீதி என்ன என்று கேட்ப்பாங்க . நாங்கள் எங்களுக்கு தோன்றியவரையில் கதையின் நீதியைச் சொல்லுவோம். இப்படியாக கேள்வி அறிவையும், ஒரு சம்பவத்தை புரிந்து கொள்ளும் திறமையையும் ஒரே சமயத்தில் எனக்கும் மதுவுக்கும் வளர்த்தார்கள்.

எங்கள் அப்பா அதிகமாகப் படிப்பார்கள். அவர்கள் கையில் எப்பொழுதும் ஒரு ஆங்கில நாவல் இருக்கும். எங்களுக்கு சிறிது வயது ஆனவுடன் எங்கள் அப்பா அவர்கள் படித்த ஆங்கில நாவல்களையும் மொழி பெயர்த்து கூற ஆரம்பித்தார்கள். இப்படியாக நானும் மதுவும் பெயர் தெரியாத பல ஆங்கில நாவல்களுக்கு சிறு வயதிலேயே அறிமுகம் ஆகியிருந்தோம். எங்கள் அப்பாவிடம் இருந்த திறமைகளில் முக்கியமானது, ஆங்கில நாவல்களை indianise பண்ணி கூறியது. அதாவது கதையின் ஓட்டத்தையும், ஏன் சில நேரம் கதையின் முடிவுகளையும் மிக அருமையாக மாற்றிக்கூறுவார்கள்.

எங்கள் அப்பா கூறும் கதைகளுக்கு சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்களும் அடிமை ஆகியிருந்தார்கள். இன்றும் கூட எங்கள் மாமா, எங்கள் அப்பா கதை சொல்லும் திறமையைப் பற்றி சிலாகிப்பார்கள். எங்கள் அப்பா எங்களுக்கு வளர்த்த இந்த கேள்வி அறிவை நானும் மதுவும் எங்கள் பிள்ளைகளுக்கு வளர்க்கும் அளவிற்கு திறமை கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகமே.

we miss you dad. we miss you so much. we miss you in many ways.

எங்கள் அப்பா சிறு வயதில் எங்களுக்கு கூறிய பல கதைகளும் எங்களுக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. சென்ற வாரம் எங்கள் சித்தப்பா வீட்டிற்குச் சென்ற போது "சோவியத் நாட்டுக் கதைகள்" என்ற புத்தகம் எடுத்து வந்தேன். அதில் எங்கள் அப்பா கூறிய பல கதைகள் இருந்தன. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே.

ஒரு காலத்தில் ஒருவருக்கு ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ஒரு நாள் சகோதர்கள் ஆறுபேரும் நிலத்தை உழுகச் செல்வர். செல்லும்போது தம் தங்கையிடம் மதிய உணவை அனுப்புமாறு கூறிச் செல்வர். அப்பொழுது தங்கை நீங்கள் இருக்கும் இடத்தை எப்படி அறிவது என்று கேட்கும்போது, நாங்கள் செல்லும் வழியில் கோடு கிழித்துச் செல்கிறோம் அதைப் பார்த்து வா என்பர். அக்காலத்தில் அவர்களின் நிலத்துக்கு அருகில் ஒரு பூதம் வசித்து வந்தது. அது அந்த கோட்டை அழித்து விட்டு தன் வீட்டுக்கு கோட்டைப் போட்டுவிடும். அந்த கோட்டைப் பார்த்துச் சென்ற அவர்களின் சகோதரியைச் சிறை பிடித்துவிடும். சாயங்காலம் சகோதர்கள் ஆறு பேரும் தம் தங்கையைக் காணவில்லை என்று அந்த கோட்டு வழியே பார்த்துச் செல்லும்போது அவர்களை பாதாளச் சிறையில் அடைத்துவிடும்.

சிறிது காலத்திற்குப் பிறகு அந்த அப்பா அம்மாவிற்கு இன்னதொரு மகன் பிறப்பான். அவன் பெயர் பொக்கத்தி - கரோஷிக். அவன் மிகப் பெரிய பலசாலியாக வளர்ந்தான். பெரிய பெரிய பாறைகளை எல்லாம் அனாசயமாக தூக்கிவிடுவான். ஒரு நாள் அவன் தம் தாய் தந்தையரிடம், தமக்கு முன் ஏதேனும் சகோதர சகோதரிகள் பிறந்தனரா என்று கேட்பான். அப்பொழுது அவன் தாய் தந்தையர் நடந்த கதையைக் கூறுவர். உடனே பொக்கத்தி - கரோஷிக் தன் சகோதர சகோதரியை மீட்டு வருவேன் என்று கூறி, அதற்க்கு ஆயுதம் வேண்டும் என்று கூறி மிகப் பெரிய இரும்பு பாளத்தை கொல்லனிடம் கொண்டு பொய் கொடுப்பான். கொல்லனும் அவனுக்கு வேண்டி மிகப் பெரிய வாள் செய்து கொடுப்பான். பொக்கத்தி - கரோஷிக் அந்த வாளை எடுத்து வானில் வீசி, அது திரும்பி வரும் போது தன்னை எழுப்புமாறு கூறி தூங்கச் செல்வான் . இப்படியாக அவன் பன்னிரண்டு நாட்கள் தூங்கினான். பதிமூன்றாம் நாள் அந்த வாள் பெரிய சத்தத்துடன் திரும்பி வரும். அவன் தாய் தந்தையர் அவனை எழுப்புவர். அவன் துள்ளி எழுந்து முஷ்டியை நீட்டினான். அப்பொழுது வாள் அவன் முஷ்டியில் பட்டு இரண்டாக உடைந்தது. இந்த வாள் சரிப்படாது என்று கொல்லனிடம் சென்று புதிய வாள் செய்யச் சொன்னான். கொல்லனும் முன்னைக் காட்டிலும் பெரிய வாள் செய்து கொடுப்பான். பொக்கத்தி - கரோஷிக் அந்த வாளை வானில் தூக்கி எறிந்து விட்டு தூங்கச் செல்வான். பதிமூன்றாம் நாள் எழுந்து முஷ்டியை நீட்டுவான். அப்பொழுது அந்த வாள் அவன் முஷ்டியில் பட்டு சிறிது முனை மழுங்கும். இந்தவாள்தான் சரியானதென்று அதை எடுத்துக்கொள்வான். அந்த வாளை எடுத்துக்கொண்டு தன் சாகோதர சகோதரியை மீட்கச் செல்வான். அங்கு அந்த பூதத்துடன் மோதி தன் சகோதர சகோதரிகளை மீட்டு வருவான்.

ஆனால் இவன் சகோதரர்களுக்கு இவன் யாரென்று தெரியாது. அதனால் அவன் மீது பொறாமை கொண்டு அவன் தூங்கும் பொழுது அவனை ஓக் மரத்துடன் சேர்த்து கட்டி போட்டுவிட்டுச் செல்வார்கள். பொக்கத்தி - கரோஷிக் தூங்கி எழுந்ததும் தன்னை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டு தன் சகோதரர்க ள் தனக்குச் செய்த துரோகத்தை எண்ணி வருந்தியபடி நடந்து செல்வான். அப்படி செல்லும் வழியில் அவனுக்கு மலை நகர்த்தி சிவெர்னி - கொராவுடன் நட்பு கிடைக்கும். சிவெர்னி - கொரா மலைகளை நகர்த்தும் திறமை கொண்டவன். இதே போன்று இவர்களுக்கு மரம் பெயர்க்கும் வெர்த்தி-தூபுவுடனும் மீசை முறுக்கி ஆற்றின் வெள்ளம் பிளக்கும் குருத்தி-யூசுவுடனும் நட்பு கிடைக்கும். இவ்வாறாக நால்வரும் சேர்ந்து செல்வார்கள். வழியில் ஒரு குடிசை காலியாக இருக்கும். நால்வரும் அதில் தங்க முடிவெடுப்பார்கள். பொழுது விடிந்ததும் சிவெர்னி - கொராவை சமைக்க சொல்லிவிட்டு மூவரும் வேட்டையாடச் செல்வார்கள். சிவெர்னி - கொரா சாப்பாடு செய்து முடித்ததும் கதவு தட்டப்படும். அப்பொழுது அந்த கதவைத்திறந்து ஒரு குரலிகிழவன் வந்தான். அவன் தாடி ஐந்து அடி நீளத்திற்கு அவன் பின்னால் தொங்கியது. அவன் சிவெர்னி - கொராவை பிடித்து தூக்கி ஆணியிலே தொங்கவிட்டான் . பிறகு அங்கு இருந்தவற்றை அனைத்தையும் சாப்பிட்டு விட்டுச் சென்றுவிடுவான். பிறகு சிவெர்னி - கொரா எப்படியோ ஆணியிலிருந்து இறங்கி சாப்பாடு செய்யும்பொழுது அவன் நண்பர்கள் வந்துவிடுவார்கள். என்ன நீ இன்னும் சாப்பாடு தயாரிக்கவில்லையா என்று கேட்பார்கள். அதற்க்கு சும்மா நேரமாகி விட்டது என்பான் சிவெர்னி - கொரா. இதற்க்கு அடுத்த நாட்களில் வெர்த்தி-தூபுவுக்கும் குருத்தி-யூசுவுக்கும் இதே போன்று நடக்கும்.

நான்காவது நாள் பொக்கத்தி - கரோஷிக் உணவு தயாரிப்பான். அன்றும் அந்த குரலிகிழவன் வருவான். வந்து பொக்கத்தி - கரோஷிக்கை பிடித்து ஆணியில் மாட்ட அவன் சிண்டைப் பிடிக்க முயல்வான். உடனே பொக்கத்தி - கரோஷிக் நீ அப்படிப்பட்டவனா என்று கூறி அவன் தாடியைப் பிடித்து இழுத்துச் சென்று ஓக் மரத்தை இரண்டாகப் பிழந்து அந்தப் பிழவில் கிழவனின் தாடி மாட்டிக்கொள்ளும் படி செய்வான். பின் தன் நண்பர்கள் வந்தவுடன் அவர்களிடம் நடந்ததைக் கூறுவான். அவன் நண்பர்களும் அவனிடம் மற்ற மூன்று நாட்களில் நடந்தவற்றைக் கூறுவார்கள். இப்படிப் பட்ட கிழவனை விடக் கூடாது என்று சொல்லி பொக்கத்தி - கரோஷிக் தன் நண்பர்களுடன் செல்வான். அந்த குரலிகிழவன் ஓக் மரத்தை தாடியுடன் இழுத்துக்கொண்டு தடம் விட்டுச் சென்றிருப்பான். அதைப் பார்த்து நால்வரும் செல்வர். அது ஒரு
குழியைச் சென்றடையும். அந்த குழிக்குள் பொக்கத்தி - கரோஷிக் இறங்குவான். அங்கு ஒரு அழகிய பெரிய மாளிகை இருக்கும். அங்கு ஒரு மிகச் சிறந்த அழகியாகிய ஒரு அரசிளங்குமரி இருப்பாள். அவளிடம் பொக்கத்தி - கரோஷிக் நீ எப்படி இங்கு வந்தாய் என்பான். அதற்க்கு அந்தப் பெண் தன்னை இந்த கிழவன் சிறை பிடித்திருக்கிறான் என்பாள். பொக்கத்தி - கரோஷிக் தான் அவளை மீட்பதாகக் கூறி கிழவனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்வான். பிறகு அந்த மாளிகையில் இருந்த செல்வங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி தான் இறங்கி வந்த கயிற்றில் கட்டி மேலே அனுப்புவான். கடைசியாக இளவரசியை அனுப்பிவிட்டு தான் ஏறக் காத்திருப்பான். அப்பொழுது அந்த மூவரும் எப்படியாவது பொக்கத்தி - கரோஷிக்கை கொன்று விட்டால் தாங்களே இளவரசியையும் செல்வங்களையும் அடையாலாம் என்றெண்ணிக் கொள்வார்கள். இதை எப்படியோ உணர்ந்த பொக்கத்தி - கரோஷிக் கடைசியாக ஒரு பெரிய பாறாங்கல்லை கட்டி அனுப்புவான். நண்பர்கள்பாதி தூரம் அதைத் தூக்கி விட்டுவிடுவார்கள். பாறாங்கல் கீழே விழுந்து நொறுங்கிவிடும். பொக்கத்தி - கரோஷிக் கீழேயே மாட்டிக்கொள்வான்.

பொக்கத்தி - கரோஷிக் அந்த குழிக்குள் நடந்து செல்லும்போது அங்கு ஒரு கழுகுக் கூட்டில் கழுகு குஞ்சுகள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும். அவற்றிக்கு தன் சட்டையை போர்த்தி கதகதப்பு அளிப்பான். கொஞ்ச நேரத்தில் அங்கு வரும் பெரிய கழுகு இதைப் பார்த்து தான் பொக்கத்தி - கரோஷிக்கிற்கு என்ன உதவி செய்ய என்று கேட்கும். அதற்க்கு பொக்கத்தி - கரோஷிக் தன்னை மேலே கொண்டு சேர்க்குமாறு கூறுவான். கழுகும் அவ்வாறே செய்யும். பிறகு பொக்கத்தி - கரோஷிக் மூவரையும் தேடிச் செல்வான். அவர்கள் அரசிளங்குமரியின் அரண்மனையில் இருப்பார். பொக்கத்தி - கரோஷிக் அங்கு சென்றதும் அவர்கள் பொக்கத்தி - கரோஷிக் தங்களைக் கொன்று விடுவான் என்றே நினைத்தனர். ஆனால் பொக்கத்தி - கரோஷிக் தன் சகோதரர்களே தன்னை ஏமாற்றிய பிறகு நீங்கள் எம்மாத்திரம் என்று கூறி அவர்களை மன்னிப்பான். பிறகு அந்த அரசிளங்குமரியைக் கல்யாணம் செய்துகொண்டு நன்றாக வாழ்வான்.

17 comments:

Devaraj Rajagopalan said...

தென்னாலிராமன்,மரியாதை ராமன் இருவரும் ஒன்று தானே ?

நான் ஒரு முறை உங்க வீட்டுக்கு வந்தப்ப நிறைய ஆங்கில நாவல்கள் உங்க வீட்ல பாத்த ஞாவகம் இருக்கு.
நான் உங்க அப்பா புத்தகம் படிப்பதை பார்த்து இருகிறேன்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க அப்பா இப்ப நீ எழதற Blog படிச்சி இருந்த ரொம்ப சந்தோஷ பட்டு இருப்பாங்க..

அப்புறம் இந்த கத ஒரு கட்டு கத மாதிரி இருக்கு.. ஹ்ம்ம் .. கதையோட நியதி என்னனு சொல்லவே இல்லையே ? :)

Haripandi said...

நிச்சயமா நான் blog எழுதறத பாத்திருந்த எங்க அப்பா சந்தோசப்பட்டிருப்பாங்க ... மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகள் வேறு வேறானவை ... கதை கட்டுகதையாகத்தான் இருக்கும் ... இருந்தாலும் எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று இது ... கதை தான் நான் சொல்லுவேன் ....நீதிய படிக்கிறவங்க தான் சொல்லணும் ;) ...

thanks for your comments buddy ...

மதுரை சரவணன் said...

mikka makilchchi . kathaikkum kathai kurum appavirrkkum . kathaikal manathai maarrum viththaikal athikalm. nalla pathivu.

சிநேகிதன் அக்பர் said...

கதை கேட்பது என்றாலே எப்போதும் பிரியம்தான்.

Haripandi said...

@ Madurai Saravanan and Akbar க்கு மிக்க நன்றி . உங்கள் வார்த்தைகள் என்னை அதிகம் எழுத தூண்டுகின்றன.

Shankar.Nash said...

A touching beginning to the post and a touching end to it too.

btw. the story is nice with lots of adventures, twist and turns. And the ending is very Indian :)

கார்த்திகேயன் said...

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பொக்கத்தி-கரோஷிக்கின் கதையை படிக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. நன்றி ஹரிப்பாண்டி.

என் பெரியப்பாவிடம் "நவரத்தின மலை" என்ற பெயர் கொண்ட ருஷ்ய நாட்டுப்புறக் கதைகளின் தொகுதி ஒன்று இருந்தது. அதில் இதைப் போன்ற பல சுவையான கதைகள் இருந்தன. பள்ளி நண்பனொருவனுக்கு படிக்கக் கொடுத்துவிட்டு, திரும்ப வாங்க மறந்து போனேன்.

இன்றும் அந்த நூல் எங்காவது கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். எந்தப் பதிப்பகத்தின் வெளியீடு என்பதை மறந்துவிட்டேன்.

நீங்கள் படித்த "சோவியத் நாட்டுக் கதைகள்" எந்த பதிப்பகத்தின் வெளியீடு?

"நவரத்தின மலை" என்ற நூலை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?

நன்றி

Anonymous said...

//ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பொக்கத்தி-கரோஷிக்கின் கதையை படிக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. நன்றி ஹரிப்பாண்டி.// அதே அதே. எனக்கும் மிகவும் பிடித்த கதை. அந்தப் புத்தகத்தின் அருமை தெரியாமல் என் உறவினர் ஒருவருக்கு என் தங்கை கொடுத்துவிட்டாள். அவர் என்னிடம் இல்லவே இல்லை என சாதித்து விட்டார். இன்னும் நினைக்கும் போதெல்லாம் என் தங்கையைத் திட்டுவது வழக்கம். எங்காவது அதனை வாங்கும் வழி இருந்தால் சொல்லுங்கள். நன்றி ஹரிப்பாண்டி.

சக்தி.

Allinone said...
This comment has been removed by the author.
Allinone said...

Thanks for the story...I still remember the philika,sooriyanin thangai,parakkum kuthirai,ratchatha paravai paal.Once again back to my childhood.Believe or not i still love to read the book...i have read it several times.

Haripandi Rengasamy said...

Sorry Princess . I dont know where to get that book . But if you try in old book shop , you may get. These stories bring us to to our childhood days.

மனோ said...

Hi even i studied that book when i was kid. From fist story onwards" Frog" and her husband onwards each and every story will be good and thrilling . I am searching that book for last 3 years to say those storied to my kids but i am unable to find it. Let me know if anybody comes to know about it. I searched in many old books stores also but dint worked. plz let me know to my email id " Manotheb@gmail.com" I feel my kids should not miss those stories. plz help me. Atleast i wil take ohotocopy and wil send u back . let me know if anybody has that book

மனோ said...

Hi even i studied that book when i was kid. From fist story onwards" Frog" and her husband onwards each and every story will be good and thrilling . I am searching that book for last 3 years to say those storied to my kids but i am unable to find it. Let me know if anybody comes to know about it. I searched in many old books stores also but dint worked. plz let me know to my email id " Manotheb@gmail.com" I feel my kids should not miss those stories. plz help me. Atleast i wil take ohotocopy and wil send u back . let me know if anybody has that book

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

An Awesome post! :) Keep writing.

BTW, antha soviet naatu kathaigalngra booka nanum romba naala theditu irukaen. romba chinna vayasula padichathu. ippo enga kedaikumnu ungaluku theriyuma?

Allinone said...

HI haripandi, finally I found the book. My dad gifted this book to me when i was 10 years old. I thought i lost the book when we shifted our home. Now to my surprise i found it.
நவரத்ன மலை புத்தகம் மாஸ்கோ'வில் 1974'ம் ஆண்டு பதிவிடப்பட்டது.
முகவரி: Radhuga Publishers,17, Zubovsky boulevard,Moscow,USSR.
விற்பனையாளர்கள்:நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் ப்ரைவேட் லிமிடெட்,சென்னை.

I don't some one will sell such a wonderful book. If you wish to read more stories from this book please visit my site http://allinonerhymes.blogspot.com/2012/09/blog-post.html

Thank you so much...

Anonymous said...

நவரத்தின மலை. என் சிறு வயதில் எங்கள் ஊர் கிளை நூலகத்தில் மிகவும் விரும்பி படித்த புத்தகம். தவளை ராணி, கோடரி கூழ், சூனியகாரி கிழவி போன்ற கதைகள் இன்னமும் மனதில் அப்படியே இன்னமும் இருக்கின்றன. அந்த புத்தகம் யாரேனும் வைத்திருந்தால் தெரிவிக்கவும்.


பழைய நியாபகங்கள்

fermin said...

நவரத்தினமலை மிகச்சிறந்த புத்தகம்.