கடல் மோகினியிலிருந்து கிளம்பும் நம் படைத்தலைவன் காஞ்சனா தேவியைப் பார்க்க கடாரம் செல்வான். கடந்த காலங்களில் இளைய பல்லவன் காஞ்சனா தேவியையும் குண வர்மனையும் கடாரத்தில் கொண்டு சென்று விட்டு விட்டு உடனே திரும்பி விடுவான். இப்படியாக ஆறு மாதங்கள் ஓடி விடும். அதற்கு அடுத்து அவன் காஞ்சனா தேவியைப் பார்க்க இப்பொழுதுதான் கடாரம் செல்கிறான் . அவன் கடாரம் செல்லும் வேளையில் அங்கு ஒரு சோழ படைத் தளபதி வந்திருப்பார் . அவர் யாரென்று இளைய பல்லவனுக்குத் தெரியாது. அவன் துறைமுகத்தை அடைந்த வேளையில் அவனை அழைத்து வரச் சொல்லி முத்திரை மோதிரம் ஒன்று வரும். உடனே அவரைக் காண இளைய பல்லவன் செல்வான் . சென்றால் அவனுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கும் . ஏனென்றால் வந்திருப்பது அநபாயச் சோழன். அநபாயச் சோழனை இளைய பல்லவன் அங்கு எதிர் பார்த்திருக்கமாட்டான்.
உண்மையில் குலோத்துங்கச் சோழன் இக்காலகட்டத்தில் சீனா உட்பட தென்கிழக்கு நாடுகளுக்கு சென்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன . ஆகையாலே சாண்டில்யன் அநபாயச் சோழனை இவ்விடத்திற்கு வரவழைத்திருப்பார்.
வந்த அநபாயச் சோழன், வீர ராஜேந்திரச் சோழத் தேவரிடமிருந்து ஓலையுடன் வந்திருப்பான். அவ்வோலையில் ஸ்ரீவிஜய பேரரசில் ஏற்பட்டிருக்கும் அரியணைப் பிரச்சினையை தீர்க்கவும், கலிங்க மரக்கலங்களை அழிக்கும் கொள்ளைக்காரனான இளைய பல்லவனை தகுந்த நேரத்தில் சிறை பிடிக்கவும் ஆணை இருக்கும். இன்று வரை கலிங்கத்துடனும், ஸ்ரீவிஜயத்துடனும் சோழத்திற்கு நேரடி பகை இல்லையென்றும் அதனால் தென் கலிங்க பீமனும் ஸ்ரீவிஜய ஜெயவர்மனும் வீர ராஜேந்திரச் சோழரிடம் முறை இட்டிருப்பார்கள் என்று சாண்டில்யன் கூறுவார்.
இங்கு ஒரு விஷயம் புரியவில்லை கலிங்கத்திற்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் சோழர்களுடன் நேரடி பகை இல்லை என்று கூறும்போது, பீமன் எப்படி அநபாயச் சோழனையும், சோழர்களிடமிருந்து ஓலையுடன் தூதுவனாக வந்த இளைய பல்லவனையும் சிறை பிடித்தான். கலிங்க கப்பல்கள் எப்படி சோழ மரக்கலங்களை சண்டையிட்டு அழித்தன . இவற்றை சோழம் எப்படி ஆட்சேபிக்காமல் போனது.இந்த நிலையில் எப்படி கலிங்கத்திற்கும் சோழத்திற்கும் பகை இல்லையென்று கூறமுடியும்.
இந்நிலையில் நம் படைத்தலைவனை, எதற்கு நீ இங்கு வந்தாய் அதனால் உன்னை கைது வேண்டிய நிர்பந்தத்திற்கு என்னை ஆளாக்கிவிட்டாய் என்று அநபாயச் சோழன் கடிந்து கொள்வார். பின் இளைய பல்லவனை கைது செய்து சோழர்களின் காவலில் வைப்பார் .
இளைய பல்லவன யாரைக் காணக் கூடாது என்று இவ்வளவு தூரம் அமீரையும் மற்றவர்களையும் ஏமாற்றி இங்கு கூட்டி வந்தானோ அந்த மஞ்சளழகியே அங்கு கோட்டைக் காவலனாக இருப்பாள். இதை சற்றும் இளைய பல்லவன் எதிர்பார்த்திருக்கமாட்டான். அவன் அதிரிச்சிக்கும் மேலாக மஞ்சளழகி அவனை வரவேற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பாள். அவன் வருவதை முன் கூட்டியே ஊகித்து மரக்கலங்களை அவனை எதிர்பதற்கு ஏற்ப நிறுத்தி இருப்பாள். மேலும் மலையூர் துறைமுகத்தில் நிற்கும் அவன் மரக்கலங்களை நோக்கி பாறை மற்றும் ஏறி அம்புகளை வீசும் கருவிகளை நிறுவி இருப்பாள்.
இளைய பல்லவன் அக்ஷய முனையை நீங்கிய காலத்தில் ஜெயவர்மன் அக்ஷய முனையை அடைந்து மஞ்சளழகியை தன் மகள் என அனைவர் முன்னும் அறிவிப்பான் . உண்மையில் மஞ்சளழகி ஜெயவர்மனின் மகள் தான் . மஞ்சளழகி ஜெயவர்மனுக்கும் அகுதாவின் தங்கைக்கும் பிறந்தவள் தான் . ஜெயவர்மன் அகுதாவின் தங்கையை கடத்தி வந்திருப்பான். அதனாலே இத்தனை நாட்களும் அவன் அதை மறைத்து வைத்திருப்பான். இப்பொழுதுதான் அதனை வெளியிடுவான். மஞ்சளழகியை தன் மகள் என அறிவித்து அவளை மலையூரைக் காக்க நியமித்திருப்பான். இருந்தபோதிலும் அவளைக் கண்காணிக்க ஒரு துணை கோட்டைத் தலைவனையும் நியமித்திருப்பான் .
இவ்வாறு இருந்த போதிலும் மஞ்சளழகி தன்னுடைய காதலால் தான் இளையபல்லவனை தப்ப வைப்பதாகவும் அதற்க்கு இளையபல்லவன் தன்னைக் கொன்று விட்டு தப்பிச் செல்லும்படியும் கூறுவாள் .
இங்கு ஏற்கனவே அக்ஷய முனையில் மஞ்சளழகி இளைய பல்லவனை தப்ப வைக்கு தன்னை விட்டுச் செல்லும்படி கூறுவதை நினைவு கூற வேண்டும். இத்தகைய காரணங்களால் பெண் ஜென்மமே காதலில் தியாகம் செய்யத்தான் பிறந்ததா என்று தோன்றும். இத்தகைய காரணங்களாலே நமக்கு காஞ்சனா தேவியை விட மஞ்சளழகி மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு விடும் . அவள் பாத்திரத்தின் மேல் ஒரு தீராத பிடிப்பு ஏற்பட்டுவிடும் .
இந்நிலையில் இளைய பல்லவன் அதனை மறுத்து தான் எப்படியும் மலையூர்க் கோட்டையைப் பிடிப்பதாகக் கூறி கோட்டைத் துணைத் தலைவனை தந்திரமாக கடல் புறாவிற்கு அனுப்பி அவனை கைது செய்வான். இப்படியாக மலையூர்க் கோட்டையைக் கைப்பற்றி தன் காவலில் வைப்பான். பின் மலையூரை நீங்கும் போது நம் படைத் தலைவன் அக்ஷய முனையில் மஞ்சளழகியை விட்டு விட்டுச் சென்றது போன்று இங்கும் விட்டு விட்டுச் சென்று விடுவானோ என்கிற பதற்றம் இருக்கும் . நல்ல வேலையாக நம் படைத் தலைவன் அவ்வாறு செய்யாமல் மஞ்சளழகியையும் தன்னுடன் கூட்டிச் செல்லுவான்.
மலையூரில் மஞ்சளழகியும் காஞ்சனா தேவியும் இருக்கும் போது அவர்களுக்கிடையே இளைய பல்லவனை முன்னிட்டு காதல் போர் நடக்கும் . அந்த இடங்கள் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் . இந்த இடத்தில் இருவரும் இளைய பல்லவன் மேல் இருக்கும் காதலையும் அதன் காரணமாக அதை பங்கிட இன்னுமொருத்தி வந்துவிட்டதால் ஏற்ப்பட்ட கோவம் , வெறுப்பு , ஆற்றாமையையும் வெளிப்படுத்தும் இடங்கள் சிறப்பாக இருக்கும் . இந்த இடங்களில் நம் படைத் தலைவன் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பதும் சுவாரசியமாகவும் சிரிப்பாகவும் இருக்கும் .
கடல் புறாவில் மஞ்சளழகியும் காஞ்சனா தேவியும் இருக்கும் போது அவர்களுக்கிடையே தேவையற்ற சண்டையைத் தவிர்க்க இளைய பல்லவன் அவர்கள் இருவரையும் தன்னுடைய இதர இரண்டு மரக்கலங்கலான மஞ்சளழகி, காஞ்சனாவில் சென்று இருக்கும் படிக் கூறுவான். அவன் கூற்றை ஒருத்தி குப்பையில் போடச் சொல்லுவாள் இன்னொருத்தி கடலில் போடச் சொல்லுவாள் . இப்படியாக இருவரும் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருக்கும் .
மீதி கதை அடுத்து.